ஒன்று, தெளிவான சட்டத்தைச் சரியான ஆதாரங்களின் மூலம் நல்ல மூத்த அறிஞர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இரண்டு, அதற்கான வாய்ப்பு அமையாமல் அந்தக் குறிப்பிட்ட விசயம் ஹலாலா, ஹறாமா என்ற சந்தேகம் வந்தால், அதைச் செய்யாமல் விலகி இருக்க வேண்டும்.
நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கும் ஒரு நபிமொழியைக் கேளுங்கள். அதன் விரிவுரையில் ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) போன்ற பலரும் குறிப்பிடுவதின் சுருக்கத்தையும் அடுத்து கீழே எழுதியிருக்கிறேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுகிறார்கள்:
إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ، وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلَا وَإِنَّ حِمَى اللهِ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلَحَتْ، صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ، فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ
அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. தடை செய்யப்பட்டவையும் மிகத் தெளிவானவை. இந்த இரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கிடமானவற்றை தவிர்த்துக்கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் மானம்
மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகிவிடுகிறார். சந்தேகத்திற்கிடமானவற்றில் விழுகிறவர் வேலியோரங்களில் கால்நடைகளை மேய்ப்பவரைப் போலாவார். அவர் வேலிக்குள்ளேயே மேய்ந்துவிட நேரிடும். எச்சரிக்கை! ஒவ்வோர் அரசனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் என்பவை அவனால் தடை செய்யப்பட்டவையாகும்.
எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கின்றது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள், அதுதான் இதயம். (புகாரீ 52, முஸ்லிம் 1599)
அதாவது, ஹலால் தெளிவானது. ஹராமும் தெளிவானது. இந்த இரண்டிலும் கருத்துவேறுபாடுகள் இருக்காது. கருத்துவேறுபாடு இருக்கிறது எனில் அவை சந்தேகத்திற்குரியவை எனும் வட்டத்தில் வந்துவிடும். அப்படியானால் உலகில் அனைவருக்குமே அது தெளிவற்றதாக இருக்கும் என்பது பொருளா? அல்ல. لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ ’அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.’ அவர்களுக்குத்தான் தெளிவானதாக இருக்காது. சிலருக்கு அதில் தெளிவு இருக்கும். எப்படியெனில், அவர்கள் உண்மையான அறிஞர்களாக இருப்பார்கள்; ஆதாரங்களைச் சரியாக அறிந்திருப்பார்கள். பெரும்பான்மையான மக்கள் எதில் சந்தேகத்திலும் குழப்பத்திலும் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களுக்கு இந்தச் சிறுபான்மையான அறிஞர்கள் விளக்கம் தருவார்கள். அவர்களை ரப்பானீகள் என்கிறோம். அதாவது, விவேகமிக்கவர்களாக மார்க்கத்தைத் தெளிவுபடுத்தும் அறிவு கொடுக்கப்பட்டவர்கள். ஹலால் எது, ஹறாம் எது என்று தெளிவுபடுத்துவார்கள்.
நமது பிரச்சினை என்னவெனில், அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு என்போம் ஒரு விவகாரத்தில். ஆனால், நாம் யாரையெல்லாம் அறிஞர்கள் என்று நம்புகிறோமோ, அவர்களை அளவுகோலாக வைத்துதான் இந்த முடிவுக்கே வருகிறோம். தெளிவான ஒன்றில்கூட கருத்துவேறுபாடு இருப்பதாக நம்பிக்கொள்வோம். நமக்கும் நம்மைப் போலவே குழம்பிக் கிடப்பவருக்கும் தெளிவு இல்லை என்பதை வைத்து மார்க்கத்திலேயே அவ்விசயம் தெளிவானது அல்ல என்று பேசிவிடுவோம். நபிமொழியின் கூற்றுப்படி இந்த இடத்தில் நாம், 'சந்தேகமானவற்றில் தெளிவை அறியாத பெரும்பான்மை மக்களில் ஆகிவிடுகின்றோம்' என்பதுதான் உண்மை. எனினும், நபியவர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்துவதில்லை. எல்லை தாண்டுகிறோம். வேலியைத் தாண்டிய விலங்காக நாமே ஆகிவிடுகிறோம். ஏனெனில், நமது உள்ளத்தில்தான் எல்லாப் பிரச்சினைகளுமே. அது சீராகாமல் மற்றவை எப்படி சீராகும்?
குறைந்தபட்சம், தெளிவான அறிவு இல்லாதபோது முதலில் எது பாதுகாப்பான நிலைப்பாடோ, அதன் பக்கமாவது போய்விட வேண்டும். அந்தக் காரியத்தைவிட்டு விலகி நிற்க வேண்டும்; அதை ஆதரிக்காமலும் அதை நியாயப்படுத்தி வாதிக்காமலும் இருக்க வேண்டும். நாமோ தலைகீழாக நடக்கிறோம். அதுதான் தெளிவானதாக இல்லையே என்று தைரியமாகக் கருத்துச் சொல்கிறோம். ‘இது உண்மையாகவே ஹறாமாக இருந்தால், நாளை அல்லாஹ்விடம் நமது நிலைமை என்ன ஆகும்’ என்று அஞ்சுவதில்லை; சிந்திப்பதில்லை. அதை நாம் செய்வது மட்டுமின்றி, அது கூடாது என்று தீர்ப்பளிக்கின்ற தெளிவான அறிஞரைக்கூட விமர்சிக்கின்றோம்.
வாய்மூடி இருக்கவும் தெரியாத நமது மடமையை என்ன சொல்ல!
- உஸ்தாத் MF அலீ