இவர்தான் உங்கள் முன்னோடி!
இவர்தான் உங்கள் முன்மாதிரி!
இவர்தான் உங்கள் வழிகாட்டி!
இவர்தான் உங்கள் கண்குளிர்ச்சி!
இவர்தான் உங்கள் உயிரிலும் மேலான தலைவர்!
வாருங்கள் இந்த உத்தம தலைவரின் நறுமணங்கமழும் வாழ்வில் பக்கங்களிலிருந்து சில துளிகளை அன்னாரது சம கால தோழர்கள் வர்ணிப்பததை படிப்போம்:
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்: ‘நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். (புஹாரி).
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே’ என்று அவர்கள் கூறுவார்கள். (முஸ்லிம்).
ஓருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து இணைவைப்பாளர்களுக்கு எதிராக பிரார்த்திக்குமாறு கேட்டுகொண்டபோது, நபியவர்கள்: ‘நான் சபிப்பவனாக அனுப்பப்டவில்லை மாறாக நான் (அகிலத்திற்கு) அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி).
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய (உடல்) மணத்தை விட சுகந்மான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை’. (முஸ்லிம்).
‘மனிதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து எதை கேட்டாலும் அவர்கள் இல்லை என்று கூறியதில்லை’ என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).
‘மனிதர்களில் மிகப் பெரிய கொடைவள்ளலாகத் திகழ்ந்தவர்கள் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி).
‘நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை’ என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).
‘நபி (ஸல்) அவர்கள் எந்நேரமும் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாவே இருப்பார்கள்’ என முஃமின்களின் தாய் (ஆயிஷா) ரலி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் (புஹாரி).
அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்க முடையவர்களாயிருந்தனர். ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதே போன்றதை அறிவித்து விட்டு, நபி (ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர் களுடைய முகத்தில் தெரிந்து விடும் என்று (அதிகப்படியாக) அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம்).
‘அல்லாஹ்வின் தூதரின் கைகள் எந்த ஒரு அந்நிய பெண்ணின் கையையும் தொட்டதில்லை’ என அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் (புஹாரி).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள். (முஸ்லிம்).
‘நபி (ஸல்) அவர்கள் ஒன்றை கொடுக்கும் போதும், வாங்கும் போதும், மற்றும் தனது அனைத்து காரியங்களிலும் வலதையே முற்படுத்துவார்கள். வலதை முற்படுத்துவதை விரும்புபவர்களாக இருந்தார்கள். (ஸுனன் நஸாஈ).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஒரு மனிதர் தன்னிடம் நபி (ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை) நோக்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம் தான் எங்களிடம் உள்ளது என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், (என் உரிமையை) நிறைவாக எனக்கு அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிக்கட்டும் என்று கூறினார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்து விடுங்கள். ஏனெனில், எவர் (தான் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துகின்றாரோ, அவரே மக்களில் சிறந்தவர் ஆவார்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்).
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார்கள்’. (முஸ்லிம்).
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விட்ட சமயத்தை (நினைவு கூர்ந்து) பேசிய படி, நான் அல்லாஹ்வின் தூதருக்கு சலாம் சொன்னேன். அவர்களின் (பொன்னிற) முகம் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மகிழ்ச்சியடைந் தால் அவர்களுடைய முகம் சந்திரனின் ஒரு துண்டைப் போல் பிரகாசமாகிவிடும். நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சி யடைந்திருப்பதைத் தெரிந்து கொள்வோம். என்று கூறினார்கள். (முஸ்லிம்).
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம்’. (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.) (முஸ்லிம்).
‘அல்லாஹ்வின் தூதர் சிறுவர்களின் பக்கமாக நடந்து சென்றால் அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள். இவ்வாறு செய்வது அவர்களின் வழமையாக இருந்தது’. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி).
‘அல்லாஹ்வின் தூதர் தனது வீட்டில், தனது குடும்பத்தின் பணிகளுக்கு உதவக்கூடியவர்களாக இருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்து விட்டால் தொழுகைக்காக சென்று விடுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி).
‘அல்லாஹ்வின் தனது கிழிந்த ஆடைகளை அவரே தைத்துக்கொள்வார், பழுதுபட்ட தனது செருப்பை அவரே சரிசெய்வார்கள், ஏனைய ஆண்களைப் போன்றே வீட்டு பணிகளில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தார்கள்’. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், அஹ்மத்).
‘அல்லாஹ்வின் தூதர் தனது கரத்தால் யாரையும் அடித்ததில்லை. தனது மனைவியையோ, தனது பணியாளனையோ அடித்ததில்லை. அல்லாஹ்வின் பாததையில் போர் செய்ததைத் தவிர. அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்படும்போது அதற்கு தண்டனையை நிறைவேற்றுவார்களே தவிர தனக்காக யாரிடமும் பிலதீர்த்ததில்லை’. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், (முஸ்லிம்).
‘அல்லாஹ்வின் தூதர் மரணித்தபோது அன்னாரது புனித உடலை யமனின் ஒரு போர்வையால் மூடப்பட்டிருந்தது, அங்கு வந்த அபூபக்கர் (ரலி) அவர்கள், அந்த போர்வையை அகற்றி அன்னாரது நெற்றியை முத்தமிட்டவர்களாக இவ்வாறு கூறினார்கள்: நீங்கள் உயிருடன் வாழ்ந்தபோது மணங்கமழ்ந்தது போன்று மரணித்ததன் பின்பும் மணங்கமளுகிறீர்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி).
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி