அதிகமாக கேள்விகள் கேட்பதும் தனக்கு தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.

بسم الله الرحمن الرحیم 

சிலர் தர்க்கத்திலேயே தமது வாழ்நாளைக் கழிப்பார்கள். எடுத்ததற்கெல்லாம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பார்கள். மனிதனுடைய அறிவுக்கு எட்டாத, முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் இவ்வாறு துருவித் துருவி கேள்வி கேட்பது விபரீதமாகிவிடலாம். உலகம் எப்போது அழியும்? உயிர் என்றால் என்ன? இந்தச் சமுதாயம் எதுவரை இருக்கும்? என்பன போன்ற வினாக்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். அதிலும் நபி (صلی الله علیه وسلم) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் 'வஹீ' எனும் வேத அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், கடமையாக்கப்படாத ஒன்றைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டு, அதன் காரணமாக அது கடமையாக்கப்படும் நிலை தோன்றிவிடலாம். இதைப் போன்றே, கட்டாயமாக்கப்படாத ஒன்றை வலியக் கட்டாயமாக்கிக்கொண்டு ஒருவர் செயல்பட, அதைக் கண்டும் காணாதவராக நபி (صلی الله علیه وسلم) இருந்துவிட்டால், அனைவர் மீதும் அச்செயல் கட்டாயமாக்கப்படும் நிலையும் அப்போது இருந்தது. ஆகவேதான், இத்தகைய நடவடிக்கைகளுக்கு மார்க்கம் தடை விதித்தது. 

ஆதாரம்: உம்தத்துல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ

 அல்லாஹ் கூறுகிறான்: 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـأَلو عَنْ اَشْيَآءَ اِنْ تُبْدَ لَـكُمْ تَسُؤْكُمْ‌ 

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

[ அல் குர்ஆன், 05:101 ]

 நபி (صلی الله علیه وسلم) அவர்கள் கூறினார்கள்: 

எவர் தடைவிதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவர் ஆவார்.

அறிவிப்பாளர்: சஅத் பின் அபீவக்காஸ் (رضی الله عنه) 
ஆதாரம்: ஸஹீஹ் புகாரீ - 7289

ஸைத் பின் ஸாபித் (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது: 

 நபி (صلی الله علیه وسلم) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசலில் பாயினால் அறை அமைத்துக் கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒரு நாள் நபி ( صلی الله علیه وسلم) அவர்களது குரலை மக்களால் கேட்க முடியவில்லை. ஆகவே, நபி அவர்கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக்கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபி (صلی الله علیه وسلم) அவர்கள் தங்களிடம் வெளியேறி வருவதற்காக கனைக்கலானார்கள். 

ஆகவே (மறுநாள்) நபி (صلی الله علیه وسلم) அவர்கள், "(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்கள் மீது (ரமளானின் இரவுத் தொழுகையான) அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களுடைய அச்செயல் தொடர்ந்துகொண்டே இருந்தது. நீங்கள் தொழுத (இரவுத்) தொழுகை உங்கள் மீது கடமையாக ஆக்கப்பட்டுவிட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. ஆகவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தனது வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர" என்று சொன்னார்கள்

ஆதாரம்: ஸஹீஹ் புகாரீ - 7290

அபூமூசா அல் அஷ்அரீ (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (صلی الله علیه وسلم) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு மக்கள் அவர்களிடம் அதிகமாக கேள்விகள் கேட்டபோது நபி அவர்கள் கோபமடைந்து, "(நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும்) என்னிடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். நபி ( صلی الله علیه وسلم) அவர்கள் "ஹுதாஃபாதாம் உன் தந்தை" என்று சொன்னார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்க, நபி (صلی الله علیه وسلم) அவர்கள் "ஷைபாவால் விடுதலை செய்யப்பட்ட சாலிம்தாம் உன் தந்தை" என்று சொன்னார்கள். (இக்கேள்விகளால்) அல்லாஹ்வின் தூதர் (صلی الله علیه وسلم) அவர்களின்  முகத்தில் தென்பட்ட கோபக் குறியை உமர் (رضی الله عنه) அவர்கள் கண்டபோது, "நாங்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் புகாரீ - 7291

முகீரா பின் ஷுஅபா (رضی الله عنه) அவர்களின் எழுத்தரான வர்ராத் (رحمه الله) அவர்கள் கூறியதாவது: 

முஆவியா (رضی الله عنه) அவர்கள், முஃகீரா பின் ஷுஅபா (رضی الله عنه) அவர்களுக்குக் கடிதம் எழுதி, "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (صلی الله علیه وسلم) அவர்களிடமிருந்து கேட்டதை எனக்கு எழுதி அனுப்புங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முகீரா (رضی الله عنه) அவர்கள் பின்வருமாறு முஆவியா (رضی الله عنه) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்: நபி (صلی الله علیه وسلم) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் எவருமில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; புகழனைத்தும் அவனுக்கே உரியது; அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை; நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வரின் செல்வமும் உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது" என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள்.

மேலும் முஆவியா (رضی الله عنه) அவர்களுக்கு முகீரா (رضی الله عنه) அவர்கள் எழுதினார்கள்: நபி (صلی الله علیه وسلم) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றைப்) பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்குரியதைத் தனக்குத்) தருமாறு கோருவது ஆகியவற்றுக்குத் தடை விதித்தார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் புகாரீ - 7292

இப்னு மஸ்வூத் (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது: 

நான் மதீனாவில் நபி (صلی الله علیه وسلم) அவர்களுடன் ஒரு வேளான் பூமியில் இருந்தேன். நபி (صلی الله علیه وسلم) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி (صلی الله علیه وسلم) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், "இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்" என்று சொன்னார். மற்றொருவர், "நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குச் சொல்லிவிடக் கூடாது" என்று சொன்னார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (صلی الله علیه وسلم) அவர்களிடம் எழுந்து சென்று, "அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்க, நபி (صلی الله علیه وسلم) அவர்கள் சிறுது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், 'அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்துகொண்டேன். ஆகவே, வஹீ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு நபி (صلی الله علیه وسلم) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற, 

وَيَسْـألُوْنَكَ عَنِ الرُّوْحِ‌  قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ 

"நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்"
[ அல் குர்ஆன், 17:85 ]

எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் புகாரீ - 7297
Previous Post Next Post