அன்ஸார் பொருள் விளக்கம்:
அன்ஸார் உதவியாளர்கள் என்ற பொருளில் விளக்கப்படும் இந்தச் சொல் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவுவோரைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
அன்ஸாருல்லா - அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்ற சொற்பிரயோகம் இறை மார்க்கத்திற்காக தம்மை முழுமையாக அற்பணிப்போர் என்ற பொருளில் பிரயோகிக்கப்படும்.
இந்த அடிப்படையில்தான் மதீனாவின் பிரதான இரு கோத்திரங்களான அவ்ஸ், மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள் மக்கா முஸ்லிம்களை அரவணைத்து இறைத் தூதருக்கு அற்பணிப்புடன் உதவிய காரணத்தால் குறிப்பாக அவர்களைக் குறிக்கவும் அல்- அன்ஸார்- உதவியாளர்கள்- என்ற சொல்லை உபயோகித்துள்ளது.
ஈஸா நபி (அலை) அவர்கள் தொடர்பான ஒரு வரலாற்றில் அன்ஸார் என்ற வாசகம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
۞ فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡهُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ ﴾ [ آل عمران: 52]
ஈஸா (அலை) அவர்கள் அவர்களில் உள்ள சிலரிடம் இறை மறுப்புத் தன்மையை உணர்ந்த போது எனக்கு அல்லாஹ்வின் மார்க்க
உதவியாளர்களாக இருக்கப்போவது யார் எனக் கேட்டார். (மார்க்கத்திற்காகத்) தம்மை அற்பணம் செய்தோர் நாம் அல்லாஹ்வின் உதவியாளர்கள் எனக் கூறினர் .
(ஆலு இம்ரான்-52)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰه [الصف : ١٤ ]
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் ( அஸ்ஸஃப்பு :14).
"يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்வான். () உங்கள் பாதங்களையும் அவன் உறுதியாக்கி வைப்பான். ( முஹம்மத்:07)
மார்க்கத்திற்காக உதவி செய்வோர் என்பது
அல்லாஹ்வுக்கு அடி இறைந்து நடப்பது,
அவனது கட்டளைகளுக்கு முன்னுரிமை வழங்குவது,
அவனது மார்க்கத்திற்காக ஒருவர் தன்னை அர்ப்பணம்/ தியாகம் செய்வது,
அதனைப் பாதுகாப்பது போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கின்ற நிலையில் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு உதவி செய்வோர் என அல்லாஹ்வால் பொதுவாக அறிவிக்கப்படுகின்றனர்; என்றால் அல்லாஹ் மார்க்கத்திற்காக உதவி செய்வோரின் சிறப்பு எம்மாத்திரம் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இரு பெரும் கோத்திரங்களாக காணப்பட்ட மதீனா அன்சாரிகள்:
كانت الأنصارُ تَتكوَّنُ مِن قَبيلتَي الأَوسِ والخَزْرجِ، وكان سَعدُ بنُ مُعاذٍ رَضيَ اللهُ عنه سيِّدَ الأَوسِ، وسعْدُ بنُ عُبادةَ رَضيَ اللهُ عنه سيِّدَ الخَزْرَجِ
மதீனா அன்சாரிப் பெருமக்கள் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரங்களாக காணப்பட்டனர்.
(1) ஸஃத் பின் முஆத் (ரழி) அவர்கள் அவ்ஸ் கோத்திரத்தின் தலைவராகவும்,
(2) கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவராக ஸஃத் பின் உப்பாதா (ரழி) அவர்களும் இருந்தனர்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்.
(ஆதாரம்: புகாரி)
தெளிவு:
அன்ஸாரிகளின் இரு பெரும் தலைவர்கள்தான் நபித் தோழர்களான ஸஃத் பின் முஆத் (ரழி) மற்றும் ஸஃத் பின் உப்பாதா (ரழி) ஆகிய இருவரும்.
முஹம்மது நபியின் அரணாக விளங்கிய மதீனா மக்களைத்தான் அல்குர்ஆன் அல்அன்சார் உதவியாளர்கள் என சிறப்பித்து பேசுகின்றது.
இமாம் புகாரி முஸ்லிம் போன்ற அறிஞர்கள்
كتاب فضائل الأنصار / مناقب الأنصار
அன்சாரிகளின் சிறப்புக்கள் என்ற அத்தியங்களில் பல தலைப்புக்களில் அன்சாரிகளின் சிறப்புக்கள் தொடர்பாக ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான ஸஃத் பின் முஆத் (ரழி) அவர்கள் பனு குரைழா கோத்திரம் மோசடி செய்த போது;
ஸஃத் ஏழு வானங்களுக்கும் மேலால் உள்ள அர்ஷின் இரட்சகனின் தீர்ப்பைக் கொண்டு நீயும் தீர்ப்பளித்துள்ளாய் எனக் கூறியதும்,
அவர்கள் மரணித்த போது அர்ஷ் அதிர்ந்த வரலாறும் ஸஃத் ரழிக்கே உரித்தானதாகும்.
இறைத் தூதரின் மதீனா வருகைக்கு நபி (ஸல்) அவர்களுக்கு உற்சாகமூட்டி அவர்கள் மதீனா நகர் வந்த போது அவர்களையும் மற்ற அனைவைரையும் இன்முகத்தோடு வரவேற்று வாழ வைத்த பெருமகனாரான ஏழைகளின் தோழரே ஸஃத் பின் உப்பாதா(ரழி) அவர்கள்.
குர்ஆன் பேசும் பண்பாட்டில் உயர்ந்த சீதேவியான இந்த மக்களின் சரித்திரம் படித்து நாமும் அவர்கள் போல வாழ முயற்சிப்போம்.
رضي الله عن الصحابة كلهم وغفر لهم .
எங்கள் நபியின் தோழர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.
மேலதிக வாசிப்பிற்காக:
-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி