தும்மல் - இஸ்லாமிய ஒழுங்குமுறை..

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் பெயரால்..

தும்மல் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்குக் கூட ஏற்படக்கூடிய ஒரு செயலாகும். மிருகங்களைப் போன்று மனிதர்களும் தம் தும்மலை அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதால்தான் தும்மும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை இஸ்லாம் சொல்லிக் கொடுக்கின்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் - திர்மிதி - ஹாக்கிம்)

நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் மீது எச்சில்கள் பட வாய்ப்புள்ளது. இது அருவறுப்பையும், பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். அதே போன்று தும்மலால் ஏற்படும் சப்தம் அருகில் உள்ளவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம். இவைகளைத் தவிர்க்கவே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முறையை கடைபிடித்துள்ளார்கள்.

தும்மல் இறைவன் புறத்தில் நின்றும் உள்ளதாகும் என்பது நபி மொழி. அபஹுரைரா (ரலி) (நஸயீ, இப்னு ஹிப்பான், ஹாக்கிம்)

தும்மலை அல்லாஹ் விரும்புகிறான் என்பதும் நபி மொழி - அபூஹுரைரா (ரலி) திர்மிதி.

தும்மும் போது மனிதர்கள் எவ்வளவோ புத்துணர்வு பெறுகிறார்கள். சுவாசக் குழாய்களில் இருக்கும் அடைப்புகள் கூட வெளியேறுகின்றன. தும்மலினால் மனிதர்களுக்கு பல நன்மைகள் விளைவதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கின்றது. இஸ்லாம் தும்மலை விரும்புவதற்கு இப்படி பல காரணங்களைக் கூறலாம்.

தும்மலால் ஏற்படும் இவ்வளவு நன்மைகளும் இறைவன் புறத்திலிருந்து வருவதால் தான் தும்மல் என்ற அந்த சுகத்தைப் பெற்றவர்கள் இறைவனைப் புகழ வேண்டும் என்கிறது இஸ்லாம்.

உங்களில் எவரேனும் தும்மினால் 'அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்' (எல்லா நிலைகளிலும் இறைவனுக்கே புகழனைத்தும்) என்று கூறட்டும். இவ்வாறு கூறியதை செவியேற்கக்கூடியவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) என்று பதில் கூறட்டும். பிறகு தும்மியவர் 'யஃபிருல்லாஹு லீ வலகும'; (இறைவன் உங்களையும் என்னையும் மன்னிப்பானாக!) என பதில் அறிவிக்கட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். (ஹிலால் பின் யஸார் (ரலி) திர்மிதி.)
'யஃபிருல்லாஹு லீ வலகும'; என்பதற்கு பதிலாக 'யஹ்தீகுமல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (இறைவன் எங்களுக்கு நேர்வழி காட்டி உங்கள் நிலைமையை சீர்செய்வானாக) என்று கூறட்டும் என்று நபிமொழி அலி (ரலி), அபூஅய்யூப் (ரலி) வாயிலாக அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அருகில் ஒருவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் கூறினார். நபி (ஸல்) 'யர்ஹமகல்லாஹ்' என்றார்கள். அவர் மீண்டும் தும்மினார். உடனே நபி (ஸல்) இவருக்கு ஜலதோஷம் பிடித்துள்ளது என்றார்கள். ஸலாமா (ரலி) அறிவிக்கும் இந்த செய்தி முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றள்ளது

தும்மியவருக்கு மூன்று முறை பதில் கூறு. தொடர்ந்து தும்மினால் பதில் கூறுவதோ, கூறாமல் இருப்பதோ உன் விருப்பம் என்ற ஒரு நபி மொழி திர்மிதியில் இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் இஸ்ஹாக் என்ற அறிமுகமில்லாதவர் இடம் பெறுவதால் இது பலவீனமான ஹதீஸாகும்.

முஸ்லீம் அல்லாதவர்களுக்கு பதில் கூறலாமா?

நபி (ஸல்) அவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என்று கூற வேண்டும் என்பதை எதிர்பார்த்து யூதர்கள் வேண்டுமென்றே நபி (ஸல்) முன்னிலையில் தும்முவார்கள். யூதர்கள் எதிர்பார்ப்பது போன்று நபி (ஸல்) கூறாமல் 'யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்களை சீர்படுத்துவானாக) என்று கூறி விடுவார்கள்.
(அபூமூஸா (ரலி) அபூதாவூத், திர்மிதி, நஸயீ)
أحدث أقدم