நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தைக் கணித்துச் சொல்பவனிடத்தில் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தை (குர்ஆனை) நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (9171)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பளார் : ஸஃபிய்யா (ரலி)
நூல் : முஸ்லிம் (4137)
ஜோதிடத்தை நம்புவது என்பது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய ஒரு காரியம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நாளை நமக்கு என்ன ஏற்படும்? ஏன், அடுத்த வினாடி நமக்கு என்ன ஏற்படும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! அவனைத் தவிர மற்ற எவராலும் மறைவானவற்றை ஒரு போதும் அறிய முடியாது என்றும் ஒரு முஃமின் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஒருவன் ஜோதிடர்களாலோ, பால் கிதாப் பேர்வழிகளாலோ நாளை நடப்பதை அறிய முடியும் என்று நம்பிக்கை வைத்தால் அவனும் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறியவன் தான்.
அல்லாஹ் கூறுகிறான்:
தான், நாளை சம்பாதிக்க வுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல் குர்ஆன் 31 : 34)
வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர
யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
(அல் குர்ஆன் 27 : 65)
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ள வற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதை யானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
(அல் குர்ஆன் 6 : 59)
நாளை நடப்பதை அறிபவன் அல்லாஹ் ஒருவன்தான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன