திருக்குர்ஆன் நன்மைகள் பெறப்பட வேண்டி ஓதப்படும் ஒரு புனித நூல் மட்டுமல்ல, வாழ்க்கையின் நெறி மனிதநேயம், சகோதரத்துவம், வாழ்வியல், அறிவியல் அன்றாட போதனைகள் என்ற பல வழிமுறைகளை இறை நம்பிக்கையாளர்களுக்கு அது தொகுத்து வழங்குகிறது.
கீழ்காணும் இறை வசனத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை பற்றி சொல்லும் பொழுது அருமருந்தாகவும் ரஹ்மத்தாகவும் (இறையருளாகவும்) இருக்கிறது என்று குறிப்பிடுகிறான்.
وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
(அல்குர்ஆன் : 17:82)
"அத்தா வத்தவா ", الداء و الدواء
(நோயும் நிவாரணையும்) என்ற புத்தகத்தில் அல்லாமா இப்னு கையும் அல்ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் திருக்குர்ஆனை பற்றி சொல்லும் பொழுது குறிப்பாக இந்த வசனத்தை பற்றி அவர்கள் ஒரு அற்புதமான கருத்தை தெரிவிக்கிறார்கள்.
"மினல் குர்ஆனி", என்று சொல்லி இருப்பது அரபு இலக்கணத்தில் கொஞ்சம் என்ற அர்த்தத்தை தரக்கூடிய ஒரு கருத்தில் அருளப்படவில்லை முழுவதும் என்ற ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறது அதாவது முழு குர்ஆனுமே நிவாரணமும் இறையருளும் தான்.
இந்த நிவாரணத்தை பெற நாடுபவர்கள் திருக்குர்ஆனை பொருள் அறிந்து வாசித்து சிந்திக்க வேண்டும் , திருக்குர்ஆன் நிவாரணத்தை தரும் விடயத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறது,அதில் தான் நன்மை இன்னும் தீமையின் பல காரணங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வசனத்தில் நாம் பெரும் இரண்டு வெகுமதிகளான நிவாரணமும் , இறையருளும்
ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வந்துள்ளது.
திருக்குரானை சிந்தித்து வாசித்து அமல் செய்யவில்லை என்றால் நிவாரணத்திற்கு பதிலாக இறை அதிருப்தியும் கோபமும் தான் நம்மை வந்து சேரும்.
அதன் வெளிப்பாடு தான் நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உளரீதியான நோய்களும் உடல் ரீதியான நோய்களும்.
ஆக நமது வெற்றிகளும் மகிழ்ச்சிகளும் திருக்குர்ஆனில் தான் மறைந்திருக்கிறது என்ற இரகசியத்தை விளங்கிக் கொள்வோம்.
இன்று முதல் தினசரி திருக்குர்ஆனை பொருள் அறிந்து வாசித்து அமல் செய்து அந்த சீரான கருத்துக்களை மற்றவர்களுக்கு எத்தி வைப்போம் வாருங்கள் !!!
-உஸ்தாத் இஸ்மாயில் நத்வி