அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அறிந்து கொள்வதன் முக்கியத்துவம்.


அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், உயர்வான பண்புகளையும் அறிவது மிகப் பயனுள்ள, கண்ணியமான, உயர்ந்த அறிவு வகைகளில் ஒன்றாகவும், மிகச் சிறந்த ஒரு நன்னோக்கமாகவும் திகழ்கின்றது. ஏனெனில் அதுவே மக்களுக்கு அவர்களது ரப்பைப் பற்றி அறிமுகம் செய்து கொடுக்கின்றது. அறியப்படுபவற்றில் அவனே மிகச் சிறந்தவன். நாடிச் செல்லப்படுபவர்களில் அவனே மிக மகத்தானவன். இந்த அறிவே மக்களுக்கு அவர்களையும், வானங்கள், பூமி மற்றும் அவற்றில் இருப்பவற்றையும் படைத்தவனைப் பற்றி அறியவைக்கின்றது. அதன் மூலம் அவனை வணங்குதல், நேசித்தல், அஞ்சுதல், மகத்துவப்படுத்தல், கண்ணியப்படுத்தல் போன்ற விடயங்கள் நிகழ்கின்றன.

அல்லாஹ் தன்னை ஒருமைப்படுத்துவதையும், அறிவதையும் மனித சிந்தனைகளிலும், இயல்புகளிலும் பொதுவாக இயற்கையான ஒன்றாக வைத்திருப்பது அவனது ஒரு அருளாகும். ஆனால், அவனது சிந்தனையையும், இயல்பையும் மனித, ஜின் ஷைத்தான்களில் யாராவது சீர்குலைத்துவிட்டாலே தவிர. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ‘இதுவே அல்லாஹ் வழங்கிய இயற்கையாகும். இதன் மீதே மனிதர்களை அவன் படைத்துள்ளான். 

அல்லாஹ்வுடைய படைப்பில் எந்தவொரு மாற்றமும் செய்ய இயலாது. இதுவே நிலையான மார்க்கமாகும். ஆனாலும், பெரும்பாலான மக்கள் (இதை) அறியமாட்டார்கள்.’ (ஸூரா அர்ரூம் : 30) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒவ்வொரு குழந்தையும் இயற்கையாக (இஸ்லாத்தை ஏற்கும் மனநிலையிலேயே) பிறக்கின்றன. அதனது பெற்றோர்களே அதனை யூதனாகவோ, அல்லது கிறிஸ்தவனாகவோ மாற்றுகின்றனர்.’ (ஆதாரம் : புகாரி : 1359)

இது பற்றி இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். ‘அடியார்களுக்கு அல்லாஹ்வை அறிவது, அவனே அவர்களது ஒரே நோக்கமாக இருப்பது என்பவற்றைக் கொண்டே தவிர சந்தோசமோ, சீரான வாழ்க்கையோ, இன்பமோ கிடையாது. அவனை அறிவதே அவர்களது கண்குளிர்ச்சியாகும். எப்போது அவர்கள் அதனை இழக்கின்றார்களோ, கால்நடைகளை விட கெட்டவர்களாக அவர்கள் மாறிவிடுவார்கள். அக்கால்நடைகள் இவ்வுலகில் அவர்களை விட சந்தோசமான ஒரு வாழ்க்கையில் இருப்பதோடு மறுமையிலும் இவர்களை விட அவை தப்பித்துக்கொள்ளும்.’ (முக்தஸர் அஸ்ஸவாஇக் அல்முர்ஸலா 1,47)

ஒரு மனிதனின் நோக்கங்களில் மிக கண்ணியமானது, அவனது எதிர்பார்ப்புகளில் மிக முக்கியமானது அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்ததை அடைவதும், மறுமையில் அவனது கண்ணியமான முகத்தைப் பார்த்து இன்புறுவதுமாகும். ஆனாலும், இந்த நோக்கத்தை அடைவதாயின் அல்லாஹ் தன்னை ஈமான் கொள்வதற்கும், தனக்குக் கட்டுப்படுவதற்கும், தனக்கு மாறு செய்வதைத் தவிர்க்கவும் தன் அடியானுக்கு அருள் புரிவது அவசியமாகும்.

இந்த இறைநம்பிக்கையையும், நல்லமற்களையும் செய்வதாயின் இல்ம் எனும் அறிவு அவசியமாகும். ஏனெனில் அறிவு என்பது பேச்சுக்கும், செயல்களுக்கும் முன்னர் வரவேண்டிய ஒன்றாகும். 

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ‘நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனைப் பயப்படுபவர்கள் (அவனை) அறிந்தவர்களே!’ (ஸூரா பாதிர் : 28)

எந்தவொரு கல்வியினதும் சிறப்பு அது எதனைப் பற்றிப் பேசுகின்றது என்பதைப் பொறுத்ததாக இருப்பதால், மிகச் சிறந்த, கண்ணியமான கல்வியாக இருப்பது அல்லாஹ்வையும், அவனது திருநாமங்களையும், அவனது உயர்வான பண்புகளையும் அறியவைக்கும் கல்வியாகும். ஓர் அடியானின் அல்லாஹ்வுடைய திருநாமங்கள், பண்புகள் பற்றிய அறிவுக்கு ஏற்பவே, அவன் அல்லாஹ்வுக்கு வழிப்படுவது, அவனில் மனஅமைதி அடைவது, அவனை நேசிப்பது, அவனை மகத்துவப்படுத்துவது, கண்ணியப்படுத்துவது என்பவற்றின் பங்கும் காணப்படும்.
அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிவதுதான் ஏனைய அறிவின் வகைகளுக்குமான அடிப்படையாகவும், ஈமானின் அடித்தளமாகவும் உள்ளது. கடமைகளில் முதன்மையானதும் அதுவே. மக்கள் தங்களது ரப்பை அறிந்துகொண்டார்கள் என்றால், அவனை வணங்குவார்கள்.

இமாம் கிவாமுஸ் ஸுன்னா அல்அஸ்பஹானீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், ‘சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். ‘அல்லாஹ் தன் படைப்புகளுக்கு கடமையாக்கிய முதல் கடமை அவனை அறிவதாகும். அவனை மக்கள் அறிந்துகொண்டு விட்டால், அவனை வணங்குவார்கள். அல்லாஹ் கூறுகின்றான். 

‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர உண்மையில் வணங்கப்பட்டத் தகுதியானவன் யாருமில்லை என நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்’ (ஸூரா முஹம்மத் : 19)

எனவே, அல்லாஹ்வுடைய திருநாமங்களையும், அவற்றின் விளக்கங்களையும் அறிந்து, அவனை உரிய விதத்தில் மகத்துவப்படுத்துவது முஸ்லிம்களின் கடமையாகும். ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட விரும்பினால் கட்டாயமாக அவரது பெயர், புனைப்பெயர், தந்தையின் பெயர், பாட்டனாரின் பெயர் என அவரது சிறிய, பெரிய அனைத்து விடயங்களையும் அவரிடம் வினவுவார். அப்படியாயின் எங்களைப் படைத்து, வாழ்வாதராம் தருகின்ற, நாம் அவனது அருளை எதிர்பார்க்கின்ற, கோபத்தைப் பயங்கொள்கின்ற அந்த அல்லாஹ்வுடைய பெயர்களையும், அவற்றின் விளக்கங்களையும் அறிவது மிக முக்கியமாகின்றது.’ (அல்ஹுஜ்ஜா பீ பயானில் மஹஜ்ஜா 1,122)

அல்லாஹ்வை அவனது பெயர்கள், பண்புகள் மூலமாக அறிவதனால் எமது ஈமான், மனவுறுதி என்பன அதிகரிக்கின்றன. ஓரிறைக்கொள்கை உறுதிப்படுத்தப்படுகின்றது. அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு இருப்பதன் இன்பத்தை சுவைக்கமுடிகின்றது.

அஷ்ஷேய்க் ஸிஃதி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ‘ஒரு மனிதன் அல்லாஹ்வைப் பற்றி அறிந்துவைத்திருப்பதற்கேற்பவே அவனது ஈமான் காணப்படும். தனது ரப்பைப் பற்றிய அறிவு அவனிடம் எந்தளவு அதிகரித்துச் செல்கின்றதோ, அந்தளவு அவனுடைய ஈமானும் அதிகரிக்கும். எந்தளவு அது குறைகின்றதோ, அந்தளவு ஈமானும் குறைந்து செல்லும். அதற்கான மிக நெருங்கிய வழி அல்குர்ஆனில் உள்ள அவனது பெயர்களையும், பண்புகளையும் பற்றி சிந்திப்பதாகும். (தப்ஸீர் அஸ்ஸிஃதி 1,24)

அல்லாஹ்வை உண்மையாக அறிந்துவைத்துள்ளவன் தான் அறிந்துள்ள அவனது பெயர்கள், பண்புகளைக் கொண்டு அவன் செய்பவற்றிற்கும், அவன் விதிக்கும் சட்டங்களுக்கும் ஆதாரம் பெற்றுக்கொள்வான். ஏனெனில், அல்லாஹ் தனது பெயர்களுக்கும், பண்புகளுக்கும் ஏற்பவே செயற்படுவான். அவனது அனைத்து செயற்களும் நீதம், அருள், ஞானம் என்பவற்றிற்குற்பட்டவையாக இருக்கும்.

அல்லாஹ்வுடைய பண்புகளுக்கும் மற்றும் அவை வேண்டிநிற்கும் வெளிரங்கமான, உள்ரங்கமான வணக்கவாழிபாடுகளுக்கும் மத்தியில் உள்ள நெருக்கமான பிணைப்பு. 

அது பற்றி இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். ‘ஓர் அடியான் தனது ரப்பு மாத்திரம் தான் தீங்கு செய்பவன், நலவு செய்பவன், கொடுப்பவன், தடுப்பவன், படைப்பவன், வாழ்வாதாரம் அளிப்பவன், மரணிக்கச் செய்பவன், உயிர்பிக்கச் செய்பவன் என்று உறுதியாக அறிவதன் மூலம் அவனது உள்ளத்தில் ‘தவக்குல்’ எனும் வணக்கத்தைக் காண்கின்றான். அவனது வெளிச் செயற்பாடுகளில் அந்தத் தவக்குலின் பயன்களையும், அது வேண்டிநிற்பவற்றையும் காண்கின்றான். எனவே, அனைத்து விதமான வணக்கங்களும் அல்லாஹ்வின் பெயர்களிலும், பண்புகளிலும் உள்ளடங்கிவிடுகின்றன. (இகாஸதுல் லஹ்பான் 1,10)

அல்லாஹ்வுடைய பெயர்கள், பண்புகள் மூலம் அல்லாஹ்வை வணங்குவதால், உள்ளம் ஈடேற்றமடைதல், நடத்தைகள் மற்றும் குணங்கள் பாதுகாக்கப்படல் போன்ற பல நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. மறுபுறம், அவற்றைப் புறக்கணிப்பது உளநோய்களுக்கும், கெட்டபண்புகளுக்கும் ஒரு வாயிலாக அமைந்துவிடுகின்றது.

அல்லாஹ்வுடைய திருநாமங்கள், பண்புகளை அறிந்து, அவற்றைக் கொண்டு அவனை வணங்குவதன் மூலம், சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் விடயத்தில் நாம் எடுக்கும் நிலைப்பாடுகளில் நல்ல பல மாற்றங்கள் ஏற்டுகின்றன. ஓர் அடியான் தனது ரப்பு மிக அறிந்தவன், ஞானமுள்ளவன், யாருக்கும் அநீதி இழைக்காத நீதியானவன் என்று அறிந்துகொண்டால், பொறுமையாக இருந்து பொருந்திக் கொள்வான். மேலும், தனக்கு ஏற்படும் சோதனைகள், துன்பங்கள் அனைத்தும், தன்னால் புரிந்துகொள்ளமுடியாத, அல்லாஹ்வுடைய அறிவுக்கும் நுட்பத்திற்கும் உட்பட்ட நன்மைகளின் சில வகைகளே என உறுதிகொள்வான். அதனால் அவன் மனநிம்மதி அடைவான்.. தனது ரப்பின் பால் அமைதி அடையவான். தன் விவகாரங்களை அனிடமே பொறுப்புச் சாட்டுவான்.

அல்லாஹ்வுடைய திருநாமங்களையும் பண்புகளையும் விளங்கிக்கொள்வது அவனை நேசித்தல், மகத்துவப்படுத்தல், அவனில் ஆதரவு வைத்தல், அவனைப் பயப்படல் போன்றவற்றிற்கான ஒரு வழியாகும். 

இது பற்றி இமாம் அல்இஸ் பின் அப்துஸ் ஸலாம் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், ‘அல்லாஹ்வுடைய திருநாமங்களின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வது, அதன் பயன்களாகிய அவனைப் பற்றிய அச்சம், அவன் மீது ஆதரவு வைத்தல், பயப்படல், நேசித்தல், தவக்குல் வைத்தல் போன்ற பயன்கள் மூலம் அவனை நெருங்குவதற்கான ஒரு வழியாகும். (சஜரதுல் மஆரிப் : 01)

அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் பற்றி சிந்திப்பது அல்லாஹ்வுடைய வேதத்தை சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கு பெரிதும் உதவுகின்றது. அல்லாஹ் தஆலா தனது அல்குர்ஆனை ஆராயுமாறு பின்வறும் வசனத்தின் மூலம் ஏவுகின்றான், ‘இது நாம் உங்களுக்கு இறக்கிய வேதமாகும். (இது) பரக்கத் செய்யப்பட்டது. இதன் வசனங்களை அவர்கள் ஆராய்வதற்காகவும், புத்தியுடையவர்கள் உபதேசம் பெறுவதற்காகவும் (நாம் இறக்கியுள்ளோம்.) (ஸூரா ஸாத் : 29) 

அல்குர்ஆனில் அல்லாஹ்வுடைய பண்புகள், பெயர்கள் தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளதால், அவற்றை ஆராய்வது அல்குர்ஆன் ஆராய்வதற்கான மிக முக்கிய வாயிலாக இருக்கும்.

அல்லாஹ்வுடைய திருநாமங்களையும், பண்புகளையும் அறிந்துகொள்வது அல்லாஹ்வுடன் ஒழுக்கம் பேணுவதையும், வெட்க உணர்வையும் உள்ளத்தில் விதைக்கின்றது.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், ‘உண்மையில் அல்லாஹ்வுடன் ஒழுக்கம் பேணுவதென்பது அவனது மார்க்கத்தை செயற்படுத்துவதும், வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் அம்மார்க்கத்தின் ஒழுக்கங்களைப் பேணுவதுமாகும். 

மூன்று விடயங்களைக் கொண்டு தான் ஒருவன் அல்லாஹ்வுடன் ஒழுக்கம் பேணுவது முழுமையடையும். :
1.)அல்லாஹ்வை அவனது பெயர்கள், பண்புகள் மூலம் அறிவது.
2.) அவனது மார்க்கம், மேலும் அவன் நேசிப்பவை வெறுப்பவை என்பவற்றின் மூலம் அவனை அறிவது.
3.) சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அதைக் கற்கவும், செயற்படுத்தவும் தயாராக இருக்கும், ஏற்றுக்கொள்ளும் தன்மையுள்ள மென்மையான உள்ளம்.

அல்லாஹ்வையும் அவனது திருநாமங்கள் மற்றும் பண்புகளையும் அறிவது ஒரு அடியானுக்கு அவனது குறைகளையும், தவறுகளையும், பிழைகளையும் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டும். எனவே, அவற்றை சீர்திருத்த அவன் முயற்சிப்பான்.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், ‘இறைநிராகரிப்பின் பிரதான அடிப்படைகள் நான்காகும் : பெருமை, பொறாமை, கோபம், இச்சை. இந்த நான்கும் உருவாவது தன்னுடைய ரப்பைப் பற்றியும், தனது உள்ளத்தைப் பற்றியும் மனிதன் அறியாமல் இருப்பதினாலாகும். ஏனெனில், அவன் தனது ரப்பு கண்ணியமான குணாவியல்புகள், பூரணமான பண்புகள் கொண்டவன் என்றும், தான் குறைகளும், தவறுகளும் கொண்டவன் எனவும் அறிந்துகொண்டால் பெருமையடிக்கமாட்டான். அதற்காகக் கோபம் கொள்ளமாட்டான். யாருக்கும் அல்லாஹ் கொடுத்திருப்பதைப் பார்த்துப் பொறாமை கொள்ளமாட்டான்.’ (அல்பவாஇத் : 177)

ஓர் அடியான் அல்லாஹ்வுடைய பெயர்கள், பண்புகளை அறியாமலும், புரியாமலும், சிந்திக்காமலும், அவற்றைக் கொண்டு அவனை வணங்காமலும் இருப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் மோசமான முடிவுகள்:

இவ்வறிவு இல்லாமல் போகும் போது, அல்லது பலவீனமடையும் போது ஏற்படும் விளைவுகளை இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். 

‘அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் அறியாதவன் என்னதான் அறிந்துகொண்டான்? இந்த உண்மையைப் புரியாதவன் வேறு என்ன உண்மையைத் தான் புரிந்துகொள்வான்? அல்லாஹ்வைப் பற்றியும், அவனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வழிவகைகள் பற்றியும், சேர்ந்த பின் அவனுக்குள்ள சிறப்புகள் பற்றியும், அறியாதவன், அவனது பொருத்தத்தைத் தரும் அமல்களை செய்யாதவன். வேறு என்னதான் அறிந்துகொண்டான்? வேறு என்ன நல்ல காரியங்கள் தான் செய்தான்?’ (ஹிதாயதுல் ஹயாரா : 591)

- மேலே உள்ளவை “வலில்லாஹில் அஸ்மாஉல் ஹுஸ்னா” என்ற நூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.


அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்கள் பற்றிய சில முக்கிய குறிப்புக்கள் :

•    அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களை முன்னிருத்தி துஆக் கேட்டல்.

அல்லாஹ்வின் திருநாமங்களை முன்னிறுத்தி துஆக் கேட்பதில், துஆஉல் மஸ்அலா (தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திதல்), துஆஉல் ஸனா (அல்லாஹ்வைப் புகழ்தல்), துஆஉத் தஅப்புத் (அல்லாஹ்வை வணங்குதல்) ஆகிய மூன்று வகைகளும் உள்ளடங்கும். அல்லாஹ் தன் அடியார்களை, தனது திருநாமங்கள், பண்புகள் மூலமாக அறிந்துகொள்ளுமாறும், அவற்றைக் கொண்டு அவனைப் புகழுமாறும் அவற்றை முன்னிறுத்தி உரிய முறையில் அவனை வணங்குமாறும் அழைக்கின்றான். அவ்வாறு வணங்குவதில் மிக முக்கியமானது அவனிடம் அவற்றை முன்னிறுத்தி துஆக் கேட்பதாகும்.

அல்லாஹ் தஆலா தனது பெயர்களினதும், பண்புகளினதும் உள்ளடக்க அர்த்தங்களை விரும்புகின்றான். அவன் அறிந்தவன் (العالم). அறிந்தவர்கள் அனைவரையும் அவன் விரும்புகின்றான். கொடையாளன்(جواد). கொடைகொடுக்கும் அனைவரையும் அவன் விரும்புகின்றான். அவன் அழகானவன்(جميل). அழகை விரும்புகின்றான். அவன் அதிகம் மன்னிப்பவன்(عفوّ). மன்னிப்பையும் மன்னிப்பவர்களையும் அவன் விரும்புகின்றான். அவன் அதிகவெட்கமுள்ளவன்(حيي). வெட்கத்தையும் வெட்கமுள்ளவர்களையும் அவன் விரும்புகின்றான். அதிகம் நன்றி செலுத்துபவன்(شكور). நன்றிசெலுத்துபவர்களை விரும்புகின்றான். அதிகம் பொறுமை காப்பவன்(صبور). பொறுமையாளர்களை விரும்புகின்றான்.

அதனால்தான், ஒவ்வொரு தேவைகளின் போதும், அந்தத் தேவைக்குப் பொருத்தமான பெயர்களைக் கொண்டு அவன் அழைக்கப்படவேண்டும். உதாரணமாக, துஆக் கேட்பவர் இவ்வாறு கூறுவார், ‘யா அல்லாஹ் என்னுடைய பாவங்களை மன்னித்து, எனக்கு அருள் புரிவாயாக! நீ தான் பாவங்களை அதிகம் மன்னிப்பவனாகவும், அருள் புரிபவனாகவும் இருக்கின்றாய்! எனக்கு பாவமீட்சி வழங்குவாயாக! நீயே அதிகம் பாவமீட்சி வழங்குபவனாக இருக்கின்றாய்! மேலும், உனக்கு வாழ்வாதாரம் அழிப்பாயாக! நீயே அதிகம் வாழ்வாதரம் அளிப்பவனாக இருக்கின்றாய்!

•    அல்லாஹ்வுடைய திருநாமங்களை உள்ளடக்கியுள்ள வசனங்கள் அர்த்தம் தெளிவானவைகளா? (முஹ்கம்) அல்லது தெளிவற்றவைகளா? (முதஷாபிஹ்)

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை உள்ளடக்கியுள்ள வசனங்கள் அர்த்தங்கள் மிகத் தெளிவாக உள்ள வசனங்களே! ஏனெனில் அல்லாஹ்வுடைய ‘ரஹ்மான்’ என்ற பெயரிலிருந்து நாம் புரிந்துகொள்ளும் அர்த்தமும், ‘அஸீணஸ்’ என்ற பெயரிலிருந்து நாம் புரிந்துகொள்ளும் அர்த்தமும் ஒன்றல்ல. அதேபோன்று அல்லாஹ்வுடைய திருநாமங்கள் முழுமையான பண்புகளை உள்ளடக்கியிருப்பதும் அவை தெளிவானவை என்பதையும், அவை வெறுமனே அர்த்தம் அற்ற பெயர்கள் மாத்திரமல்ல என்பதையும் உணர்த்துகின்றன. எனவே, அல்லாஹ்வுடைய ‘ஹகீம்’எனும் பெயரினுள் ‘முழுமையான நுட்பம், ஞானம்’என்ற கருத்து உள்ளடங்கியிருப்பதையும், ‘அஸீஸ்’ என்ற பெயரில் ‘பூரணத்துவமிக்க சக்தி, கண்ணியம்’ என்ற கருத்து உள்ளடங்கியிருப்பதை அறிகின்றோம்.

ஆனால், அப்பண்புகளின் யதார்த்தங்கள், விதங்கள் நாடப்பட்டால், அப்போது  உண்மையில் அவை அர்த்தங்கள் புரிந்துகொள்ளப்படமுடியாதவை. அவற்வை அல்லாஹ்வைத் தவிர எந்த மனிதர்களும் அறியமாட்டார்கள். (அல்மின்ஹாஜுல் அஸ்னா 1,26-27)

•    ‘அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உண்டு’ என்ற ஹதீஸின் விளக்கம் :

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘அல்லாஹ்வுக்கு தொன்னூற்றி ஒன்பது திருநாமங்கள் உண்டு. யார் அவற்றை மட்டிடுகின்றாரோ அவர் சுவனம் நுழைந்துவிடுவார்.’ (ஆதாராம் : புகாரி, முஸ்லிம்)

திர்மிதி போன்று சில கிரந்தங்களின் அறிவுப்புகளில் இந்த 99 நாமங்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளன. ஆனாலும், பெரும்பாலான அறிஞர்கள் அவ்வறிவிப்புக்களைப் பலவீனப்படுத்துகின்றார்கள். புகாரி மற்றும் முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் வந்துள்ள, பெயர்கள் குறித்துச் சொல்லப்படாத அறிவுப்புக்களே மிக ஆதாரப் பூர்வமான அறிவிப்பாகும்.

மேலும், இந்த ஹதீஸின் எந்த ஆதாரப் பூர்வமான அறிவிப்பிலும் அல்லாஹ்வுடைய பெயர்கள் தொன்னூற்றி ஒன்பது மாத்திரம் தான் வரையறுத்துக் கூறப்படவில்லை. இது பற்றி இமாம் நவவி அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். ‘இந்த ஹதீஸில் அல்லாஹ்வுடைய பெயர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை என்பதை உலமாக்கள் ஏகோபித்து ஏற்றுக்கொள்கின்றார்கள். இந்த 99 பெயர்களையும் தவிர வேறு பெயர்கள் அல்லாஹ்வுக்கு இல்லை என்பது இதன் அர்த்தமல்ல. மாறாக, இந்த ஹதீஸின் நோக்கம் என்னவெனனில், இந்த தொன்னூற்றி ஒன்பது நாமங்களையும் யார் மனனமிடுகின்றாரோ அவர் சுவனம் நுழைவார் என்பதாகும். எனவே இதன் அர்த்தம் இவற்றை மனனமிடுவதுகொண்டு சுவனம் கிடைக்கும் என்று கூறுவதே ஒழிய, இவ்வெண்ணிக்கையைக் கொண்டு அல்லாஹ்வுடைய பெயர்களை மட்டிடுவது அல்ல.’ (ஷரஹு ஸஹீஹ் முஸ்லிம் 5,17)

இந்த ஹதீஸ் பற்றி இமாம் இப்னு ஹஜர் அளித்துள்ள பெறுமதிமிக்க விளக்கத்தை அவரது பத்ஹுல் பாரி எனும் நூலில் காணலாம் (11/218)

இதுபற்றி இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், ‘அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களை எண்ணிக்கையால் வரையறுக்கவோ, எண்ணிமுடிக்கவோ முடியாது. ஏனெனில், பின்வரும் ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வந்துள்ளது போன்ற, அல்லாஹ் தன்னிடம், தனது மறைவான அறிவில் வைத்திருக்கின்ற சில பெயர்களும் பண்புகளும் உண்டு. அவற்றை அல்லாஹ்வுக்கு நெருக்கமான எந்த மலக்குமோ, அல்லது ரஸூலோ அறியமாட்டார்கள்.

‘யா அல்லாஹ்! உனக்குள்ள அனைத்துப் பெயர்களையும் கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன். அவற்றைக் கொண்டு நீ உனக்கு பெயர் சூட்டியிருப்பாய் அல்லது உனது வேதத்தில் அவற்றை நீ இறக்கியிருப்பாய். அல்லது உனது படைப்புக்களில் யாருக்கேனும் அதைக் கற்றுக்கொடுத்திருப்பாய். அல்லது உன்னிடத்தில், உனது மறைவான அறிவில் மாத்திரம் அதை வைத்திருப்பாய்’ (ஆதாரம் : அஹமத், ஹாகிம், ஸில்ஸிலா ஸஹீஹா)

•    ‘யார் அவற்றை மட்டிடுகின்றாரோ அவர் சுவனம் நுழைவார்’ என்ற நபிமொழியில் ‘மட்டிடுதல்’ என்பதன் அர்த்தம் என்ன?

அறிஞர்கள் அதற்கு சில முக்கிய அர்த்தங்களைக் கூறியுள்ளனர். அவற்றை நிறைவேற்றும் வரை, பூரணமாக அத்திருநாமங்களை மட்டிட்டவர் என்றோ மனனமிட்டவர் என்றோ யாருக்கும் கூறமுடியாது. அவ்வர்த்தங்கள் பின்வருமாறு :

1. அவற்றை எண்ணி, மனனமிட்டு மனதில் வைத்துக்கொள்ளல். மேலும் அல்குர்ஆன், ஸுன்னா ஆதாரங்களில் இருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளல்.

2. அவற்றின் அர்த்தங்களையும், கருத்துக்களையும் புரிந்துகொள்ளல். இந்த ‘புரிதல்’ என்பது ‘இஹ்ஸா’என்ற (ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள) சொல்லின் அர்த்தங்களில் ஒன்றாகும். அரபியில் ஒருவரைப் பார்த்து ‘தூ ஹஸா’ என்று கூறப்பட்டால் அதன் அர்த்தம், ‘விளக்கமும் புரிதலும் உள்ளவர்’ என்பதாகும்.

3. பிரபஞ்சத்திலும், வாழ்விலும், உள்ளத்திலும் இந்த திருநாமங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை இயன்ற அளவு விளங்கிக் கொள்ளல். ஏனெனில், இதனைப் புரிந்துகொள்வதில் மக்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும்.

4. அவற்றை முன்னிறுத்தி அல்லாஹ்விடம் இறைஞ்சுதல், அவற்றின் மூலம் அவனை வணங்குதல். உள்ளத்திலும், நாவிலும், உறுப்புக்களிலும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களை அடைதல் மற்றும் அவற்றைக் கொண்டு அமல் செய்தல்.

எனவே, உதாரணமாக, ‘மேலும் அவன் அதிகம் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்’ என்ற வசனத்தை ஒருவர் ஓதினால், அல்லாஹ் தான் பேசுவதைல்லாம் கேட்டுக்கொண்டிருக்கின்றான். மேலும் காண்கின்றான், எந்தவொன்றும் அவனை விட்டும் மறையமாட்டாது என அறிந்து, இரகசியத்திலும், பரகசியத்திலும் அல்லாஹ்வைப் பயப்படுவான். தனது அனைத்து நிலைமைகளிலும் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருப்பதை நினைவுபடுத்திக்கொள்வான். ‘அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையவன்’ என்ற வசனத்தை ஓதினால், அல்லாஹ்வுடைய அருள் புரிதல் எனும் பண்பை ஞாபகித்துக்கொள்வான். அது அல்லாஹ்வுடைய ஒரு பண்பு என நம்பிக்கை கொண்டு, அவனது அருளில் ஆதரவு வைப்பான். அவனது மன்னிப்பில் நிராசை அடையமாட்டான்.

- சுவனப்பாதை
Previous Post Next Post