“الحمدلله” அல்ஹம்து லில்லாஹ் எனும் அற்புத வார்த்தை

நாம் அடிக்கடி கூறும் வார்த்தைகளில் ஒன்றே ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்பது. தொழுகையில், தொழுகையின் பின்னர், சாப்பிட்ட பின்னர், என பல சந்தர்ப்பங்களில் இவ்வார்த்தையை நாம் கூறுகின்றோம்.

ஆனாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இச்சிறிய வார்த்தையின் ஆழமான அர்த்தத்தைப் பற்றி நாம் சிந்திப்பது மிகக்குறைவு. அதன் அர்த்தத்தைப் புரிந்து, உணர்வுபூர்வமாக அதனை மொழிபவர்களும் மிகக்குறைவு.

இந்த மிகச்சுருக்கமான வார்த்தை பல அர்த்தங்களைப் பொதிந்துள்ளது. அல்லாஹ்வைப் பற்றியும், இதை உளப்பூர்வமாக மொழிபவரைப் பற்றியும் பல முக்கிய உண்மைகளை இது உணர்த்துகின்றது.

‘அல்ஹம்து’ என்பதை நாம் தமிழில் ‘புகழ்’ என மொழிபெயர்க்கின்றோம். இது சரியான நேரடி மொழிபெயப்பல்ல. மாறாக, ஓர் அண்ணளவான மொழிபெயர்ப்பு மாத்திரமே. அரபு மொழியில் ‘ஹம்த்’ என்ற வார்த்தை, ஒருவர் சுயவிருப்புடன் செய்யும் நல்ல கருமத்திற்காக அவரை கண்ணியப்படுத்தி, நாவினால் புகழ்வதைக் குறிக்கும்.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ‘ஹம்த்’ என்பதற்கு, ‘புகழுக்குரிய ஒருவரை நேசிப்பதுடனும், மகத்துவப்படுத்துவதுடனும் அவரது நல்லறங்கள் பற்றிக் கூறுவதாகும்’ என்கின்றார்கள்.

எனவே, ‘அல்ஹம்த்’ என்பது நாவால் அல்லாஹ்வைப் புகழ்வதை மாத்திரம் குறிக்காது. மாறாக, அவனை நேசித்தல், மகத்துவப்படுத்தல், அவனது அருள்கள், ஆற்றல்களைப் பற்றிப் பேசுதல் என்பனவும் கட்டாயமாக உள்ளடங்கும். எனவேதான், ‘அல்ஹம்த்’ என்றை வார்த்தை பயன்படுத்தப்படத் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரமே என அறிஞர்கள் கூறுவர்.
ஒருவர் இன்னொருவரைப் புகழ, பிராதனமாக இரண்டு காரணிகள் இருக்கலாம்,

அவரது தன்னிகரற்ற ஆற்றல்.
புகழ்பவருக்கு அவர் செய்த அருள்கள்.
உண்மையில் இவ்விரண்டு அம்சங்களும் முழுமையாக அல்லாஹ்விற்கு மாத்திரமே உள்ளன. 

படைப்புக்களிடம் உள்ள ஆற்றல்கள், அல்லது அவர்கள் மக்களுக்கு செய்யும் நலவுகள் அனைத்தும் அல்லாஹ்வின உத்தரவின் பிரகாரமே நிகழ்கின்றன.
ஒரு மனிதன் அல்லாஹ்வின் வல்லமைகள், அல்லாஹ் தனக்கு செய்துள்ள பேருபகாரங்கள் பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவனை அறியாமலேயே ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்ற வார்த்தை வந்துவிடும்.

இதேவேளை, இவ்வார்த்தை அதனை மொழிபவரிடம் பல நல்ல பண்புகள் இருப்பதைக் காட்டுகின்றது, அவற்றில் சில :

1. العدل (நீதம்) ஒரு மனிதன் தனக்கு ஒரு சந்தோசமான நிகழ்வு ஏற்படும் போது, அல்லது அவனது முயற்சி வெற்றியளிக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்கின்றான் என்றால் அந்த சந்தோசத்திற்கான உண்மையாக காரணம் தன் உழைப்பல்ல. அல்லாஹ்வின் அருளே என்கிறான். புகழுக்குத் தகுதியாவனுக்கு மாத்திரம் அதைக் கூறுவதன் மூலம் அதில் நீதமாக நடந்துகொள்கின்றான்.

2. التواضع (பணிவு) எந்தப் பெரிய வெற்றியின் போதும் அதன் பெருமையை தனக்கு இணைத்துப் பெருமையடிக்காமல் அல்லாஹ்வே காரணமானவன் என அவனைப் புகழ்வது பணிவுத்தன்மையின் ஓர் அடையாளமாகும்.

3. الشكر (நன்றி செலுத்தல்) ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் அனைத்து சந்தோசமான நிகழ்வுகளின் போதும் அல்லாஹ்வைப் புகழ்வது அவற்றிற்குக் காரணமாக இருந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதாகும்.

இவை இவ்வார்த்தை பொதிந்துள்ள ஆழமான அர்த்தம் பற்றிய ஒரு சிறு விளக்கமே. 

இவ்வர்த்தையின் உள்ளடக்கத்தை ஒருபோதும் மனிதனால் பூரணமாக விளக்கிட முடியாது. 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

- சுவனப்பாதை
أحدث أقدم