அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள் கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அதை அவனுக்கு அல்லாஹ் சொர்க்கம் செல்லும் வழியாக ஆக்குகிறான். கல்வியைத் தேடுபவரைத் திருப்தியுற்றுத் தங்களின் இறக்கைகளைத் தாழ்த்துகின்றனர்.
நிச்சயமாக வானில் உள்ளோரும் பூமியில் உள்ளோரும் தண்ணீரில் உள்ள மீன்கள் உட்பட அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகின்றனர் .
வணக்கசாலியை விட அறிஞரின் சிறப்பு என்பது நட்சத்திரங்களை விட சந்திரனுக்குரிய சிறப்பு போன்றதாகும்.
நிச்சயமாக அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவார்.
நிச்சயமாக நபிமார்கள் தங்க நாணயங்களுக்கு, வெள்ளி நாணயங்களும் அவர்களை வாரிசாகவில்லை கல்விக்கே வாரிசாகியுள்ளார்கள்.
ஒருவர் கல்வியை எடுத்துக் கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக் கொண்டவர் ஆவார். (அபூதாவூது , திர்மிதி)
இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறும் படிப்பினை:
இந்த உலக வாழ்க்கையில் நாம் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கு வாரிசுகள் இருக்கின்றனர். ஆனால் நபிமார்கள் தங்கள் கல்விக்கு வாரிசுகளாக அறிஞர்களை ஆக்கி உள்ளார்கள்.
அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவிலியிடம் பெருமை அடிக்கவோ, மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கவோ ஒருவன் கல்வியைத் தேடினால் அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான். (திர்மிதி)
எனவே நாம் கல்வியை கற்கும் பொழுது பிறரிடம் பெருமை அடிப்பதற்கும் மற்றும் பல காரணங்களுக்காகவும் நாம் கற்க கூடாது. உண்மையாக அல்லாஹ்விற்கு அஞ்சி அவனை அறிந்து கொள்வதற்கு மட்டுமே கல்வியை கற்க வேண்டும்.
وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَ لْوَانُهٗ كَذٰلِكَ ؕ اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் : 35:28
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖؕ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” அல்குர்ஆன் : 39:9
இந்த வசனத்தில் கல்வியின் முக்கியத்துவமும் கல்வியாளர்கள் எந்த அளவிற்கு அல்லாஹ்விற்கு பயந்து நடப்பார்கள் என்றும், கல்வி கற்றவரும் கல்வி கருக்காதவரும் சமமானவர்கள் கிடையாது என்பதை அறிய முடிகிறது.
இமாம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள் அல்லாஹ்வின் தூதர்(ﷺ) அவர்கள் எங்களுக்கு ஒரு கோடு வரைந்து காட்டி இதுதான் அல்லாஹ்வுடைய பாதை எனக் கூறினார்கள். பின்னர் அந்த கோட்டின் வலப்புறம் இடப்புறமும் பிரிகின்ற கிளை கோடுகளை வரைந்து விட்டு இவையே பிரிவினைகளின் பாதைகள் இவற்றின் ஒவ்வொரு பாதையிலும் சைத்தான் உட்கார்ந்துகொண்டு தன் பக்கம் மக்களை அழைக்கின்றான் என்றார்கள்
பின்னர் இவ்வசனத்தை ஓதினார்கள்
وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ ۚ وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் : 6:153
இமாம் இப்னுல் கைய்யூம் ரஹி கூறுகிறார்கள்:
இதிலிருந்து அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்கும் பாதை ஒன்றே என்பது உறுதியாகிறது. அந்தப் பாதையில் தான் அவனுடைய தூதர்களை அவன் அனுப்பினான் அவனுடைய வேதங்களை இறக்கினான் .
எந்த மனிதரும் இந்த பாதையை அல்லாமல் வேறொன்று கொண்டும் அவனை அடைய முடியாது. மக்கள் எல்லா பாதைகள் வழியாகவும் வந்தால், எல்லா கதவுகள் வழியாகவும் நுழைந்தால். அந்த பாதைகள் அனைத்திலிருந்தும் அவர்கள் தடுக்க படுவார்கள். இந்த ஒரு பாதையில் வந்தவர்களை தவிர (இப்படிப்பட்ட பாதையில் வந்தவர்கள்தான் சஹாபாக்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள்). ஏனென்றால் அந்த ஒரு பாதைதான் அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்கும் பாதை
அபான் இப்னு உஸ்மான் (ரலி)கூறினார்கள் ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம்
நேரான பாதை எது? எனக் கேட்டார் அதற்கு அவர்கள் "எங்களை அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் அந்தப் பாதையின் ஒரு பகுதியில் விட்டுச் சென்றார்கள் அதன் மறு பகுதி சுவர்க்கத்தில் சேர்ப்பதாக உள்ளது. அதன் வலப்புறமும் இடப்புறமும் விசாலமான பல பாதைகள் உள்ளன. அங்கு சிலர் இருந்துகொண்டு அவ்வழியே வருபவர்களை அழைக்கின்றனர் யார் நேரான பாதையில் செல்கிறாரோ , அவரை அது சுவர்க்கத்தில் சேர்க்கும் என்று கூறிவிட்டு பின்வரும் 6:153 வசனத்தை ஓதினார்கள்.
இதே வசனத்தை தான் நாம் மேலுள்ள ஒரு ஹதீஸின் வாயிலாக பார்த்தோம்.
இப்படிப்பட்ட ஆதாரங்களை கொண்டு நேரான பாதை எது என்பதை அறியமுடிகின்றது.
நேரான பாதை ஒன்று தான் இருக்க முடியும் மற்ற பாதைகள் அனைத்தும் வழிகேடுகள். நம்மை வழி கெடுப்பதற்காக ஷைத்தான் பல வழியில் முயற்சி செய்து கொண்டிருக்கின்றான். பல பாதைகளை உருவாக்கி அவற்றின் பக்கம் அழைத்து கொண்டிருக்கின்றான்.
பல புதுமை கொள்கைகளைக் கொண்டு மார்க்கத்தில் பிரிவினைகளை உருவாக்குவதே ஷைத்தானின் குறிக்கோள். எனவே பல பாதைகளில் இருந்து கொண்டு நம்மை குறி வைக்கிறான். ஒன்றில் தப்பித்தாலும் ஒன்றில் சிக்கிக் கொள்வோம் என்பது அவன் எதிர்பார்ப்பு. ஆனாலும் நேரான பாதை ஒன்றே.
நேரான பாதையை கண்டுபிடிப்பது எப்படி? ஒரே வழிதான் உள்ளது நபித்தோழர்கள் எந்த பாதையில் பயணித்தார்களோ அதுவே நேரான பாதை அவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான பாதையில் செலுத்தினான்.
அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதருடைய நேரடி கண்காணிப்பில் சீர்திருத்தபட்டார்கள்.
நபித்தோழர்களின் பாதைதான் சுவர்கத்தின் பாதை அவர்களின் ஜமாஅத், வழிகேடுகளை விட்டுப் பாதுகாக்கப்பட்டது, அவர்களிடம் கொள்கை குழப்பங்கள் இருக்கவில்லை, மார்க்கத்தைப் எப்படி புரிய வேண்டுமோ அப்படியே சரியாக புரிந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட சஹாபாக்களிடம் கற்றவர்கள் தான் தாபியீன்கள்.
தாபியீன்களிடம் கற்றவர்கள் தான் தபவு தாபியீன்கள் இவர்களைப் போல் நாமும் நேரான பாதையை பற்றி பிடிக்க வேண்டும்.
நேரான பாதையை எப்படிப்பற்றி பிடிக்க வேண்டும் என்று இமாம்கள் கூறுகிறார்கள்.
இமாம் அவ்ஸாயீ(ரஹி) கூறினார்கள் உங்களை நபிவழியில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நபித்தோழர்கள் எங்கு நிறுத்தினார்களோ அங்கு நிறுத்துங்கள் அவர்களை விட அதிகம் தெரிந்தவர்கள் போல் பேசாதீர்கள் ,அவர்கள் என்ன கூறினார்களோ அதையே கூறுங்கள் அவர்கள் எதை விட்டு விலகி இருந்தார்களோ அதை விட்டு நீங்களும் விலகி இருங்கள் .ஸலஃப் ஸாலிஹீன்கள் பாதையிலேயே பயணம் செய்யுங்கள் .நிச்சயமாக அவர்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ அதுவே உங்களுக்கு போதுமானது .
இன்னும் இமாம் அபூஹனீபா(ரஹி ) கூறினார்கள் சுன்னாவையும், ஸலஃபையும் உறுதியாக பின்பற்றுங்கள் புதுப்புது காரியங்கள் அனைத்தை குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் .அவையே பித்அத்துகள் .
நாம் கல்வியை யாரிடம் எடுக்க வேண்டும் மற்றும் அந்த அறிஞர்கள் யாரிடம் கல்வியை எடுத்தார்கள் என்பதை அறிந்தால் தான் நேரான பாதையை நோக்கி நாம் பயணிக்க முடியும்.
எனவே நமது கொள்கையை கற்பிக்கக் கூடிய அறிஞர் யார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி) அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று கூறினார்கள் அறிந்து கொள்ளுங்கள் வேதக்காரர்களில் உங்களுக்கு முன் இருந்து 72 கூட்டங்களாகப் பிரிந்து விட்டார்கள். நிச்சயமாக இந்த சமுதாயம் எழுபத்து மூன்றாக பிரியும். 72 நரகில் இருக்கும் ஒன்று மட்டும் சொர்க்கத்தில் இருக்கும் அதுதான் அல்ஜமாஆ. (திர்மிதி)
இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிய வருவது :
72 கூட்டங்கள் எந்த அடிப்படையில் உருவாக்குவார்கள் என்றால் அவர்கள் அனைவருமே நபித்தோழர்களின் பாதையிலிருந்து விலகி சென்றிருப்பார்கள்.
நபித்தோழர்களின் ஜமாஅத்திடம் இல்லாத புதுமை சிந்தனைகளை மார்க்கமாக கொண்டவர்களே 72 கூட்டங்களாக பிரிவார்கள்.
அல்ஜமஆ என்பது யாரைக் குறிக்கும்?
சஹாபாக்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள்.
இவர்களின் கயிற்றை பிடித்துக் கொண்டு செல்வது தான் நம்முடைய வேலையாக இருக்கின்றது. ஆனால் இன்னும் சில கூட்டத்தினர் நாங்கள் தான் அந்த சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு கூட்டம் என்றும் மற்றவர்களெல்லாம் வழிகெட்டவர்கள் என்று மக்களை அச்சுறுத்துகிறார்கள்.
சரியான கல்வியாளர்கள் யார் என்பதை அரிய இது போன்ற அறிஞர்களைப் பற்றி அறிந்து மற்றும் அந்த அறிஞர்கள் யாரிடம் கல்வியை கற்றார்கள் என்பதை அறியும் பொழுது தான் விளங்க முடியும்.
உதாரணமாக நாம் ஒரு ஊருக்கு செல்கிறோம் என்றால் அதனுடைய பாதையை அறிந்தால் மட்டுமே சரியாக சென்றடையும் முடியும். இல்லை என்றால் இடையில் மற்றவர்களின் தவறான வழிகாட்டுதலினால் திசை திரும்பி விடுவோம்.
எனவே மார்க்கத்தில் நேரான வழியை அடைய வேண்டும் என்றால் அந்தப் பாதையைக் காட்டும் அறிஞரைப் பற்றிய அறிய வேண்டும்.
நபி (ﷺ) விட்டுச்சென்ற அந்த கயிற்றை , சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய அந்த கயிற்றை நாம் வலுவாக பற்றிப் பிடிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள் என் சமுதாயத்தில் இருந்து ஒரு கூட்டம் அல்லாஹ்வின் உதவி செய்யப்பட்ட நிலையில் எப்போதும் உண்மையில் நிலைத்திருக்கும் அல்லாஹ்வின் கட்டளை மறுமை வரும் வரை வழிகெடுக்கும் யாரும் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. (புகாரி 71)
அப்படிப்பட்ட நேரான வழியை உடைய சுவர்க்கம் செல்லும் ஒரு கூட்டத்தை பற்றி நாம் அகீதாவில் படித்திருப்போம் அதுதான் நபிவழியையும் நபிவழியின் மீதிருந்த நபித்தோழர்களின் வழியையும் பின்பற்றும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ.
அவற்றின் கொள்கைகள் சஹாபாக்கள் பின்பற்றிய கொள்கைகளாகும். எனவே நாமும் அந்த கொள்கையை பேணி நடக்க வேண்டும்.
இந்த நபிமொழி குறிப்பிடும் கூட்டத்தை சேர்ந்த மகத்தான இமாம்களில் ஒருவரான இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்க்கையையும், கொள்கையையுமே இங்கு காணப் போகின்றோம்.
இந்த இமாம்கள் அனைவருமே:
உண்மையில் நிலைத்திருந்தவர்கள்,
வழிகேடுகளை விட்டு விலகி இருந்தவர்கள்,
அல்லாஹ்வின் உதவியை பெற்றவர்கள்,
வெற்றி பெற்றவர்கள்.
இமாம்கள் என்றால் நம் பள்ளியில் தொழுகை நடத்தும் இமாம்கள் என்று நினைத்துவிடக்கூடாது. இவர்கள் அறிஞர்கள், கல்வியாளர்கள், கொள்கையை நிலைநிறுத்துவதற்காக பாடுபட்டவர்கள் என்பதை நன்கு விளங்க வேண்டும்.
இமாம் அபூஹனீஃபா (ரஹி):
இமாம் அபூஹனீஃபா அவர்களைப் பற்றி நாம் கூறும் பொழுது மத்ஹபுகள் பற்றி சில விஷயங்கள் விளங்க வேண்டியுள்ளது. இந்த இமாம்கள் குர்ஆன் சுன்னாவின் வழியே வாழ்ந்தார்கள்.
மக்களே உருவாக்கிக் கொண்டது தான் மத்ஹப். குர்ஆன் ஹதீஸில் இல்லாத விஷயங்களை மத்ஹபுகள் மூலம் பின்பற்றுகிறார்கள். இது தவறான வழியாகும்.
ஷாஃபி, ஹனஃபி என்று மத்ஹபுகளை மக்களே உருவாக்கியுள்ளார்கள். அவற்றை பின்பற்ற வேண்டும் என்று எந்த ஒரு இமாமும் கூறவில்லை. இந்த இமாம்கள் எல்லாம் குர்ஆன், சுன்னாவை பின்பற்றினார்கள். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும்.
சஹாபாக்கள் அனைவரும் சிறந்த சமுதாயம் என்று நபி (ﷺ ) அவர்களால் சொல்லப்பட்ட முதல் சமூகத்தினர் ஆவார்கள், காரணம் அவர்கள் வஹீக்கு சாட்சியாக இருந்தவர்கள். நபி ﷺ அவர்களிடம் நேரடியாக கல்வியை கற்றவர்கள்.
அப்படிப்பட்ட சஹாபாக்களை குறைகூறுபவர்கள், கண்ணியம் இல்லாமல் பேசுபவர்கள் வழிகெட்டவர்கள் ஆவார்கள்.
நபி (ﷺ )அவர்களிடம் நேரடியாக படித்த ஸஹாபாக்களை பற்றி இமாம் அபூஹனீஃபா (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்:
“சஹாபாக்கள் கண்ணியத்தின் சமுதாயம்,
எந்த நபித்தோழரை பற்றியும் நல்லதைத் தவிர வேறு எதையும் பேசமாட்டோம்,
நபித்தோழர் எவரை விட்டும் நாம் விலகிக் கொள்ள மாட்டோம் அவர்களில் ஒருவரை நேசித்து மற்றவரை விட்டு விட மாட்டோம்” என்று கூறி உள்ளார்கள்.
ஆனால் வழிகெட்ட கூட்டத்தினர் சில சஹாபாக்களை விட்டுவிட்டு சிலரை மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள். இது தவறான வழிமுறையாகும்.
ஆகவே சுன்னா என்பது அனைத்து சஹாபாக்களையும் ஏற்றுக் கொண்டு எந்த பாரபட்சமும் இன்றி அவர்களை நேசிப்பது.
சாமானிய மனிதருக்கும் ஸஹாபாக்களுக்கும் உள்ள வித்தியாசம் நபி (ﷺ )கூறியுள்ளார்கள்; "நீங்கள் உஹது மலை அளவு தர்மம் செய்தாலும் சஹாபாக்கள் செய்த கைப்பிடி தர்மத்திற்கு சமமாகாது".
அதுபோல இமாம் அபூஹனீஃபா அவர்கள் கூறினார்கள்;
“நபி (ﷺ ) அவர்களிடம் ஒரு சஹாபா ஒரு மணி நேரம் கற்கும் கல்விக்கு ஒரு மனிதன் தன் ஆயுள் முழுவதும் நற்செயல்கள் புரிந்தாலும் அது சமமாகாது.
நாம் உறுதி கூறுகிறோம்; அல்லாஹ்வின் தூதருக்கு பின் மனிதர்களில் சிறந்தவர் அபூபக்ர் (ரலி), பின்னர் உமர்(ரலி), பின்னர் உஸ்மான் (ரலி), பின்னர் அலி (ரலி), அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்.”
சஹாபாக்களின் மீது அவர்கள் கொண்ட அன்பும் கண்ணியமும் இதன் மூலம் அறிய முடிகிறது
இமாம் அபூஹனீஃபா (ரஹி) அல்லாஹ்வின் அஸ்மா வஸ்ஸிஃபாத் விஷயத்தில் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் படைப்புகளில் எந்த ஒன்றும் அவனுக்கு ஒப்பாகாது. நிகராக முடியாது. அவனுடைய பெயர்களும், பண்புகளும் என்றென்றும் இருப்பவை. எப்போதும் இருக்கக்கூடியவை.
அவனுடைய பண்புகள் படைப்புகளின் பண்புகளை போல் அல்ல,
அவனுடைய அறிவு படைப்புகளின் அறிவை போல் அல்ல,
அவனுடைய ஆற்றல் படைப்புகளின் ஆற்றலை போல் அல்ல,
அவனுடைய பார்வை படைப்புகளின் பார்வையை போல் அல்ல,
அவனுடைய செவிப்புலன் படைப்புகளின் செவிப்புலனை போல் அல்ல,
அவனுடைய பேச்சு படைப்புகளின் பேச்சை போல் அல்ல,”
இமாம் அவர்கள் ஃபிக்ஹுல் அக்பர் என்ற புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்கள்.
அகீதா உடைய விஷயத்தில் நபி (ﷺ) அவர்கள் எப்படி ஸஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்களோ எவ்வாறு ஸஹாபாக்கள் விளங்கினார்களோ அவ்வாறே இமாம் அவர்களும் எடுத்துரைத்தார்கள்.
நாம் அல்லாஹ்விடம் மார்க்கத்தில் புரிதலை கொடு என்று துஆ கேட்க வேண்டும்.
அகீதாவில் நம் அறிவின் மூலம் சுய கருத்தை சொல்லக்கூடாது என்று இமாம் அபூஹனீஃபா பதிவிட்டுள்ளார்.
எல்லா பொருட்களுக்கும் ஒரு உருவம் வடிவம் உள்ளது. அது போல அல்லாஹ்வுடைய உள்ளமையை (தாத்) பற்றி நாமாக பேசக்கூடாது.
"நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ﷺ) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக (மறுமையில்) உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! புகாரி, 554.
அதுபோல் அல்குர்ஆனில் அல்லாஹ் தனக்கு கைகள் இருப்பதாக கூறியுள்ளான்.
ஆகவே அல்லாஹ்வுக்கு ஒரு தாத் இருக்கிறது என்று நம்பவேண்டும்.
அல்லாஹ்வின் உள்ளமை (தாத்) பற்றி எவருக்கும் எதை கூறவும் தகுதி இல்லை. மாறாக, அல்லாஹ் தன்னை எப்படி வர்ணித்துள்ளானோ, அப்படியே அவனை வர்ணித்து விட வேண்டும். அல்லாஹ்வை பற்றி தன் சுய கருத்து எதையும் கூறக்கூடாது. அவன் உயர்ந்தவன். பாக்கியவான் அகிலங்களின் இறைவன்.
இதை இமாம் தஹவி அவர்கள் அல்அகீதா அல்தஹாவியா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
கைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுவதால் கைகள் இருக்கிறது என்று நம்பவேண்டும். அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறினார்கள் என்றால் நாமும் அதை அப்படியே நம்ப வேண்டும். இதில் எந்த ஒரு சுய கருத்தையும் திணிக்கக்கூடாது .
அல்லாஹ் மிக உயர்ந்தவன், அகிலத்தாரின் இறைவன் எனவே அல்லாஹ் தன்னை எப்படி வர்ணித்துள்ளானோ அதை அப்படியே நம்ப வேண்டும்.
அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துள்ளான்:
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். அல்குர்ஆன் : 20:5
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறி இருக்கின்றான்.
இயல்பாகவே நாம் துஆ செய்யும் போது கையை மேல் நோக்கி தான் உயர்த்தி கேட்கிறோம்.
அல்லாஹ்வுடைய செயல்களைப் பற்றி இமாம் அபூஹனீஃபா கூறினார்கள்: "அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துள்ளான். எவனொருவன் அல்லாஹ் எங்கிருக்கிறான் வானத்திலா, பூமியிலா என்று தெரியவில்லை என்று கூறுகிறானோ அவன் காஃபிர் ஆவான்."
இன்றைய சமுதாயத்தில் சிலர் அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று கேட்டால் அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று அல்லாஹ்வை பற்றி அறியாமையிலயே இருக்கின்றனர். நம்மை படைத் தரப்பை பற்றி அறியாமல் இருப்பது எவ்வளவு பெரிய கைசேதம் இது போன்ற தவறான கருத்துக்களைக் கொண்டவர்கள் தான் வழி கெட்ட கூட்டத்தினர்.
நம் குழந்தைகளுக்கு படைத்த இறைவன் எங்கிருக்கிறான் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அல்லாஹ் பேசும் பண்புடையவன்:
இமாம் அபூஹனீஃபா (ரஹி) கூறுகிறார்கள்:
அவன் தன் பேச்சால் பேசக்கூடியவன். அல்லாஹ்வின் பேச்சு ஒரு நிலையான பண்பு , மனிதர்கள் பேசுவது போன்று போன்றல்ல
ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا ۚ
இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். அல்குர்ஆன் : 4:164
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் பேசினான் என்பது புரிகிறது, மற்றும் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாக இருக்கின்றது.
குர்ஆன் லவஹுல் மஹ்பூள் என்னும் ஏட்டில் எழுதப் பட்டிருக்கின்றது.
எத்தனையோ உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
நபி (ﷺ )அவர்கள் மீது இறக்கப்பட்டுள்ளது.
நாம் அதை ஓதக்கூடியவர்களாக இருக்கிறோம்.
இது அல்லாஹ்வுடைய பேச்சு
என்று இமாம் அபூஹனீபா கூறியுள்ளார்கள். அல்குர்ஆன் படைக்கப்பட்டது கிடையாது அல்லாஹ்வுடைய பேச்சாகும் என்ற முக்கியமான ஒன்றை பதிவிட்டுவுள்ளார்கள் .
இபாத்திலேயே உயர்ந்தது துஆ:
துஆவை பற்றி இமாம் அபூஹனீஃபா அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வை விடுத்து பிறரை அழைத்து பிரார்த்திப்பது எவருக்கும் கூடாது.
அல்லாஹ் அனுமதித்து கட்டளையிட்டபடி தான் அவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். அல்குர்ஆன் : 7:180
இந்த வசனத்தில் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் கூறி துஆ கேட்க்கலாம் என்பதை அறியமுடிகிறது.
இன்றைக்கு சில மனிதர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு தர்காக்களிலும் மற்றும் சிலரிடமும் சென்று பிரார்த்திக்கிறார்கள் இது பாவமான வழி முறையாகும்.
இன்னாரின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் என்றோ, உன்னுடைய நபிமார்கள், ரசூல்மார்கள் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் என்றோ, உன்னுடைய புனித கஅபாவின் பொருட்டால் கேட்கிறேன் என்று கூறுவது வெறுக்கத் தக்கதாகும் .
- அத்தஹாவியா என்ற புத்தகத்தில் இமாம் தஹவி ரஹி அவர்கள் பதிவிட்டு உள்ளார்கள்.
தத்துவ கலையைப் பற்றி இமாம் அபூஹனீஃபா ரஹி அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு மனிதர் இமாம் அபூஹனீஃபா அவர்களிடம் வந்து தத்துவ கலையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? மற்றும் மக்கள் வானமண்டல கோள்களை அதனுடன் தொடர்பு படுத்தி கூறுகிறார்களே? இதை பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.
இமாம் கூறினார்கள்; "இது எல்லாம் தத்துவவாதிகளின் வெற்று வார்த்தைகள். சுன்னாவையும், ஸலஃபுடைய பாதையையும் உறுதியாகப் பற்றிக் கொள். புதுமையான காரியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள். நிச்சயமாகவே அவையே பித்அத்துகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டவை ."
நாம் வாழும் பொழுது எந்த குழப்பமுமில்லாமல் பித்அத்துகளை தவிர்த்து குர்ஆன் சுன்னாவை பற்றி பிடித்து நபி (ﷺ )அவர்கள் காட்டித்தந்த வழியில் நடக்க வேண்டும்.
தர்க்கம் ஒரு மூடத்தனம்:
இமாம் அபூஹனீஃபா (ரஹி) அவர்களின் மகன் ஹம்மாது (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு நாள் என் தந்தை அல்லாஹ் அவர் மீது அருள் புரியட்டும் என்னிடம் வந்தார்.
நான் தத்துவவாதிகள் சிலரிடம் ஒரு விஷயத்தைப் பற்றி குரல் தொனிகள் உயர்கிற அளவிற்கு தர்கித்தபடி அமர்ந்திருந்தேன்.
வீட்டில் இருப்பதை அறிந்தவுடன் அவரிடம் சென்றேன்.
என் தந்தை "இவர்கள் யார்? என்ன விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் ?"என்று கேட்கிறார்கள்.
அதற்கு நான் "இன்ன விஷயம்" என்று கூறினேன்
என் தந்தை "ஹம்மாதே தத்துவ கலையை விட்டுவிடு" என்றார்கள்.
என் தந்தை ஒன்றை அனுமதித்து பின் தடை செய்வது அரிது. அவர் குழப்பமடைந்து நான் பார்த்ததே இல்லை. எனவே நான் "தந்தையே இதைக் கற்றுக் கொள்ளும்படி நீங்கள் எனக்கு கூறவில்லையா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் “ஆம்” என்று கூறிவிட்டு “இன்று நான் உனக்கு அதை தடுக்கிறேன்” என்று கூறினார்கள்.
"ஏன் அப்படி" என்று நான் கேட்டேன்.
அவர்கள் கூறினார்கள் இந்த தத்துவவாதிகள் பல விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள். எதுவரையேனில் ஷைத்தான் அவர்களிடம் வந்து அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகளையும், குரோதங்களையும் பரப்பி அவர்களின் ஒரு மார்க்கத்தில் இருந்து பிரிக்கும் வரை இறுதியில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு எதிரிகள் ஆகிவிடுவார்கள்.
தத்துவம் பேசுபவர்களிடம் தர்க்கம் செய்வது ஆபத்தானது.
இதைத்தான் நபி (ﷺ) அவர்கள் இரண்டு நபர் தர்க்கம் செய்வதை பார்த்துவிட்டு "நீ உண்மை சொல்வதாக இருந்தாலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுபவர்களுக்கு சொர்க்கத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கட்டப்படும்" என்று கூறினார்கள்.
எனவே மார்க்க விஷயமாக இருந்தாலும் தர்க்கம் செய்யக் கூடாது.
விதியைப் பற்றி இமாம் கூறியது:
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் எல்லா பொருட்களையும் அவை படைக்கப்படுவதற்கு முன்பே அவற்றை நன்கு அறிந்த நிலையில், நிலையான அறிவுடையவனாக அல்லாஹ் இருந்தான்.
(படைக்கப்படாமல்) இல்லாதிருக்கும் ஒருவனின் நிலையை, அவன் (படைக்கப்பட்டு) இருக்கும்போது ஒருவனின் நிலையை, அவன் (படைக்கப்படாமல்) இல்லாது இருக்கும்போதும் அல்லாஹ் அறிவான்.
அனைத்தையும் எழுதி விட்டான்:
அல்லாஹ் விதியை நிர்ணயித்து அதை பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எழுதி இருக்கிறான். அல்லாஹ் எழுதுகோலுக்கு எழுதும்படி கட்டளையிட்டான்.
என் இறைவனே நான் எதை எழுத? என்று அது கேட்டது மறுமை நாள் வரை எது நடக்குமோ அதையெல்லாம் எழுது என்று அல்லாஹ் கூறினான் அதையே பின்வரும் வசனத்தில் கூறுகிறான்
وَكُلُّ شَىْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ
அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
அல்குர்ஆன் : 54:52
وَ كُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் : 54:53)
அவன்தான் அனைத்தையும் நாடுகிறான். இம்மையிலும், மறுமையிலும் எந்த ஒன்றும் அல்லாஹ் நாடினால் தவிர நடக்காது.
வழிகெட்ட கூட்டத்தினர் மனிதர்களைத் தான் அல்லாஹ் படைத்தான். மனிதர்களின் செயல்களை படைக்கவில்லை என்று வாதிடுகிறார்கள் இது தவறான கருத்து.
நாம் எப்படி புரிய வேண்டுமென்றால் மனிதர்களையும், மனிதர்களின் செயல்களையும் அல்லாஹ்தான் படைத்தான் மற்றும் சிலர் கேட்கிறார்கள் சொர்க்கவாசி, நரகவாதி என்று முன்னரே எழுதி விட்டால் அப்பொழுது நாம் எப்படி அதற்குப் பொறுப்பாக ஆக முடியும் என்கிறார்கள்
இமாம் கூறுகிறார்கள்: அல்லாஹ் அவனுடைய படைப்புகளில் எந்த ஒன்றின் மீதும் குஃப்ரோ, ஈமானோ நிர்பந்திக்கப் படுவதில்லை. அவர்கள் சுதந்திரமானவர்களாவே படைக்கப்படுகிறார்கள். அடியார்களின் செயல்கள்தான் ஈமானும், குஃப்ரும் ஒருவன் காஃபிராகும் போதும், முஃமினாகும் போதும் அவனது நம்பிக்கையை, நிராகரிப்பை அல்லாஹ் நன்கு அறிவான். நம்பிக்கையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். அவனுடைய அறிவில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது.
விதியில் அதிகமான கேள்விகளைக் கேட்கக் கூடாது அது தவறான நிலையில் நம்மை விட்டு விடும்.
இமாம் அபூஹனீஃபா (ரஹி) அவர்கள் வழிகெட்ட கூட்டத்தினர்களுக்கு மத்தியில் எவ்வாறு ஒரு தெளிவான கொள்கையில் இருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் குர்ஆன் ஹதீஸை விட்டு விட்டு என்னுடைய மத்ஹபை பின்பற்றுங்கள் என்று எங்கேயும் கூறவில்லை.
அவர்கள் நேரான கொள்கையில் வாழ்ந்து மக்களுக்கும் நேரான கொள்கையை எத்தி வைத்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.