ஜின்களை வசீகரித்த அல்குர்ஆனிய வசனங்கள்!

சரித்திரப் பின்னணி


இறைத் தூதரின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் ஜின்கள் அடி வானம் வரை ஏறிச் சென்று பூமியில் உள்ள நிகழ்வுகள் குறித்து முதலாவது வானத்தில்   அல்லாஹ்வின் வானவர்கள் உரையாடும் செய்திகளை திரைமறைவில் ஒட்டுக் கேட்டு பூமியில் உள்ள ஜோதிடக்காரர்களிடம் ஒன்றை நன்றாகப் பெருக்கி அவர்களின் செவிப்பறைகளுக்கு கொண்டு சேர்க்கும் ஆற்றலும் வழக்கமும் இருந்து வந்தது.

எனினும் இறைத் தூதரின் வருகையோடு அந்த வழி முழுமையாக மூடப்பட்டது.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் நபியாக அனுப்பப்பட்ட செய்தி குறித்தும் மேல் வானத்திற்கு செல்ல முடியாதவாறு வானவர்கள் மூலம் வான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பற்றியும் மறைவான அறிவற்ற ஜின்கள் இதனால் தமக்குள் குழப்பமடைந்தனர்.

அதன்காரணமாக தமது உயர் சபையைக் கூட்டி உலகின் நாலா திசைகளுக்கும் தமது பிரதிகளை அனுப்பி அனுப்பி வைத்தனர்.
 
அவர்களில் நஸீபைன் அல்லது நைனவி எனப்படும் ஈராக் பிரதேச ஜின்களில் ஒரு குழு திஹாமா என்றழைக்கப்படும் மக்கா மாகாணத்தை வந்தடைந்தனர்.

அந்தோ ஆச்சரியம்! ஜின்களை குர்ஆனிய வசனங்கள் மடக்கின

மக்காவிற்கும் தாயிஃபிற்கும் இடையில் உள்ள  நக்லா نخلة  என்ற பள்ளத்தாக்கில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் "சுபஹ்" தொழுகையில் புனித குர்ஆனை சப்தமாக ஓதும் ஒலியை திடீரென செவிமடுத்த அந்த ஜின்கள் குழு, உடனே தமது பிற நண்பர்களை நோக்கி أنصتوا மௌனம்! மௌனம் காருங்கள்! எனக் கூறி, அந்த அழகிய ஓசையை செவிமடுத்ததும், (الله أكبر) புனித குர்ஆனை நம்பி இஸ்லாத்தில்  இணைந்தது முஃமின்களாக மாறியது மாத்திரமின்றி, தமது சமூகத்தவரை அதன் பக்கம் அழைக்கின்ற அழைப்பாளர்களாகவும் திரும்பிச் சென்றனர். 

என்ன ஆச்சரியம்! அதனை தெளிவுபடுத்தியே அல்லாஹ் "அல்ஜின்" என்ற 72- வது அத்தியாயத்தை 
قل நபியே நீர் கூறுவீராக எனத் தொடங்கி நிகழ்வை முழுமையாக  விபரிக்கின்றான். (புகாரி, முஸ்லிம் செய்திச் சுருக்கம்).

குறிப்பு
---
46-வது அத்தியாயமான அல்-அஹ்காஃப் அத்தியாயத்தில் 29-32 வரையான வசனங்கள் இது குறித்தும் பேசி இருக்கின்றன. 

பாடங்கள்
---
(1) புனித அல்-குர்ஆனை செவிமடுத்தல் என்பது நேர்வழியின் முதற்படியாகும்.

ஜின்கள் கூட  குர்ஆனிய போதனைகளை பொருள் அறிந்து செவிமடுத்த பின்பே ஹிதாயத் பெற்றனர். எனவே அதனை ஓதுவது மாத்திரமல்லாது அதன் பொருளை அறிவதால் குர்ஆன் விரும்புகின்ற முஸ்லிம்களாக மாறலாம்.

(2) மனிதர்களைப் போல ஜின்களும் உயிர்வாழ்ந்து மரணித்த பின்னால் சொர்க்கம், நரகம் என்று இரண்டில் ஒன்றிற்கு தேர்வு செய்யப்படுவர்.

இது பற்றிய குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. 

ஆகவே, அவர்கள் இந்த உலகில் அல்லாஹ்வுக்கு இணைவைக்காது அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவது அவர்கள் மீதுள்ள கடமையாகும்.

(3)"அல்ஜின்" அத்தியத்தின் தொடக்கமும் இறுதியும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட மறைவான ஞானம் என்பது இல்லை என்றும் , அதையும் அல்லாஹ் நாடினால் வஹி மூலமாக மாத்திரம் அறிவித்துக் கொடுப்பான்  என்பதையும் உணர்த்தி உள்ளான்.

(4) அல்ஜின் அத்தியாயத்திற்கும் ஜின்களை தாம் வசப்படுத்தியதாகக் கூறி மக்களை ஏமாற்றுவோரின் கூற்றுக்கும் இடையில் ஷரீஆ ரீதியாக எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் வெறும் ஃபிராடுகளே! 

(5)அல்ஜின் அத்தியத்தம் 28 வசனங்களைக் கொண்டது அதன் தொடக்கம் 

قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا (الجن/١)
ஜின்களில் ஒரு குழுவினர் (குர்ஆனை செவெமடுத்து)  ஆச்சரியம் நிறைந்த குர்ஆனை நிச்சயமாக நாம் செவிமடுத்தோம் என்று கூறியதாக எனக்கு வஹி அறிவிக்கப்பட்டுள்ளது என்று (நபியே) நீர் கூறுவீராக! 

يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا (الجن/٢)
அது நேர்வழியின் பக்கமாக வழிகாட்டுகின்றது. எனவேதான் அதனைக் கொண்டு நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது இரட்சகனுக்கு இனிமேலும் எந்த இணையும் கற்பிக்க மாட்டோம் (என்றும் கூறினர்).அல்ஜின்-1-2) என அழகிய ஆரம்பத்தோடு தொடர்கின்றது. அதையும் இறைத் தூதர் அவர்கள் வஹியாக அறிவிக்கப்பட்ட பின்பே அறிந்து கொண்டார்கள்.

(6) மனிதர்களைப் போல ஜின்களில் முஸ்லிம், காஃபிர், என பல வரக்கத்தினர் உள்ளனர்.

﴿وأنّا مِنّا الصّالِحُونَ ومِنّا دُونَ ذَلِكَ كُنّا طَرائِقَ قِدَدًا﴾ [الجن:١١].
நம்மில் நல்லவர்களும் இருக்கின்றனர். அவர்களை விட தரத்தில் குறைவானவர்களும்
இருக்கின்றனர்.நாம் பல குழுக்களாக இருப்பதே இதன் காரணமாகும் (அல்ஜின்-11) 

  وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا. وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا ( الجن /١٣-١)
நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். அநீதி இழைத்தோரும் இருக்கின்றனர். யார் இஸ்லாத்தின் படி நடந்தார்களோ அவர்கள் நேர்வழியை பெற்று விட்டனர். அநீதி இழைத்தவர்கள் நரகின் எரிகட்டைகளாக மாறுவர்  என்ற வசனம் ஜின்களின் தெளிவான புரிதலை உணர்த்தும் வசனங்களாகும்.

எனவே இதன் பின்பும் குர்ஆனிய போதனைகள் மொத்ததில் விளங்காது என்ற குதர்க்கத்தை விடுத்து பொதுவாக ஜின்களுக்கு குர்ஆன் விளங்கியது  எதனால் என்று சிந்திப்மோமாக!

-எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி

أحدث أقدم