முஹம்மத் நபியும் மாற்று மதத்தினரும்

எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை.

‘நபி(ச) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: முஸ்லிம் 1213-137

அவர்கள் எதிலும் இலகுத் தன்மையை நேசிப்பவராகவே இருந்தார்கள். பின்வரும் நபிமொழி மூலம் இதை அறியலாம்.

‘ஆயிஷா(ர) அறிவித்தார். இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் – எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர்(ச) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.)”
நூல்: புஹாரி 3560, முஸ்லிம் 2327-77

மென்மையான சுபாவமும் இலகுவான போக்குமுடைய நபி(ச) அவர்கள் இதே இயல்புடன்தான் மாற்று மதத்தவர்களுடன் நடந்து கொண்டார்கள்.

01. அன்பான அணுகுமுறை:

முஹம்மத் நபியை அல்குர்ஆன் ஒரு அருளாகவே அறிமுகம் செய்கின்றது.

‘(நபியே!) அகிலத்தாருக்கு அருட் கொடையாகவேயன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.”
(21:107)

அகிலத்தார் அனைவர் மீதும் அவர் அன்புடையவராகவே இருந்தார்.

மனிதர்கள் மீது அன்பு காட்டாதவர்கள் மீது அல்லாஹ் அன்பு காட்டமாட்டான் என்பது அவரது போதனையாகும்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான். என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ர) அறிவித்தார்.” (நூல்: புஹாரி 7376)

மனிதர்கள் மீது அன்பு காட்ட வேண்டும் எனும் போது அதில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத அனைவரும் உள்ளடங்குவர். உயிர் உள்ள ஜீவன்கள் அனைத்தின் மீதும் அன்பு காட்டுமாறும் அவர் போதித்தார். இந்த வகையில் மாற்று மதத்தவர்களுடனும் அன்புடன் அவர் நடந்து கொண்டார்.

02. மன்னித்தல்:

மாற்று மதத்தவர்களால் உலகில் யாருமே சந்திக்காத அளவுக்கு கொடுமைகளை நபி(ச) அவர்கள் சந்தித்தார்கள். அவர் பழிவாங்கப்பட்டார், ஊரை விட்டும் விரட்டப்பட்டார், மக்கா பள்ளியை விட்டும் தடுக்கப்பட்டார், அவரது தோழர்கள், தொடரான வன்முறைக்கு உள்ளானார்கள். ஈற்றில் முஹம்மது நபி மக்காவை வெற்றி கொண்டார்கள். தனக்கு முன்னால் தம்மை அழிக்கத் துடித்தவர்கள் கை கட்டி நின்று கொண்டிருந்த போது அத்தனை பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

தண்டிக்க நியாயம் இருந்தும், அதிகார பலம் இருந்தும் அத்தனை கொடுமைகளையும் மறந்து மன்னித்த அந்த மாமனிதரை வன்முறையாளராகவும் கொடூரமானவராகவும் சித்தரிப்பது எவ்வளவு அநியாயமானது என்று சிந்தித்துப் பாருங்கள்.

03. எதிரிகளுக்காகப் பிரார்த்தித்தவர்:

எதிரிகளைப் பலரும் சபிப்பார்கள். முஹம்மது நபி தனது எதிரிகளுக்கும் நேர்வழி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவராவார்.

நபி(ச) அவர்களது தோழர் அபூ ஹுரைரா என்பவர் தனது தாய் நபி(ச) அவர்களைத் திட்டித் தீர்ப்பதாகக் கூறுகின்றார். பதிலுக்கு அந்தத் தாய்க்கு நேர்வழி காட்டுமாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

இவ்வாறு அபூ ஜஹ்ல் எனும் இஸ்லாத்தின் பரம விரோதிக்காகக் கூட நபியவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள் எனும் போது அவர்களது அன்பு உள்ளம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தாயிப் நகரில் தன்னை ஓட ஓட இரத்தம் வழிந்து மயக்கம் ஏற்படுமளவுக்கு அடித்தவர்களைக் கூட அழித்துவிடட்டுமா? என்ற மலக்குகளின் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் வேண்டாம் எனக் கூறி இவர்கள் இஸ்லாத்திற்கு வராவிட்டால் கூட பரவாயில்லை இவர்களது சந்ததிகளாவது சத்திய வழிநடக்க வேண்டும் என்று பிரார்த்தித்த உத்தம நபிதான் முஹம்மத் நபியவர்கள்!

04. அன்பளிப்பு:

நபியவர்கள் முஸ்லிம் அல்லாதவர் களுடன் அன்பளிப்புக்களைப் பரிமாறியுள்ளார் கள். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவர்கள் அன்பளிப்புக்களை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய அன்பளிப்புக்களை ஏற்றுள்ளார்கள். பிற சமூகங்களுடன் நல்லுறவைப் பேணும் விதத்திலேயே அவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

05. சமூக உறவுகள்:

நபி(ச) அவர்கள் முஸ்லிம் அல்லாத மக்களுடன் சராசரியான சமூக உறவைப் பேணியுள்ளார்கள். யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகளாக இருந்தும் அவர்களுடனும் நல்லுறவைப் பேணியுள்ளார்கள்.

யூத மூதாட்டி ஒருவர் நபி(ச) அவர்களை விருந்துக்கு அழைத்தாள். நபியவர்கள் அந்த அழைப்பை ஏற்று தமது தோழர்களுடன் சென்றார்கள். அவள் உணவில் விஷம் கலந்து கொடுத்தாள். அப்படியிருந்தும் நபியவர்கள் அவளை மன்னித்தார்கள் என்பதை அவர்களின் பரிசுத்த வரலாற்றில் கணலாம்.

இவ்வாறே யூத சிறுவன் ஒருவன் நோயுற்ற போது சென்று அவனை நோய் விசாரித்தார்கள் என்பதை அவர்களின் வரலாற்றில் இன்னுமோர் தடமாக இருப்பதைக் காணலாம்.

06. கொடுக்கல்-வாங்கல்கள்:

யூத சமூகத்துடன் நபி(ச) அவர்கள் கொடுக்கல்-வாங்கல் உறவைப் பேணியுள்ளார்கள். மதீனாவின் ஜனாதிபதியாக இருந்த நபி(ச) அவர்கள் அந்நாட்டின் சிறுபான்மைச் சமூகமான யூதர்களுடன் சுமுக உறவைப் பேணியுள்ளார்கள்.

நபி(ச) அவர்கள் யூதர்களுடன் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுள்ளார்கள். தமது மரணம் வரை இந்த நல்லுறவைப் பேணியுள்ளார்கள்.

ஆயிஷா(ர) அறிவித்தார். தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ச) அவர்கள் இறந்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘இரும்புக் கவசம்” என்றும் இன்னோர் அறிவிப்பில், ‘இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகு வைத்தார்கள்” என்றும் இடம் பெற்றுள்ளது. ” (புஹாரி: 2916)

07. முஸ்லிம் அல்லாதோருடனான உறவுகள்:

அன்று நபி(ச) அவர்கள் இஸ்லாத்தைப் போதித்த போது சிலர் ஏற்றனர், சிலர் மறுத்தனர். நபி(ச) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாவின் தந்தை இஸ்லாத்தை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தவராவார். இந்த சூழ்நிலையிலும் முஸ்லிம் அல்லாத இரத்த உறவுகளைப் பேணும் படியும் அவர்களுக்கான அந்தஸ்தினை வழங்கும் படியும் நபி(ச) அவர்கள் போதித்தார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள். இஸ்லாத்தை எதிர்க்காதவர்கள் என இரண்டாக வகுத்து அவர்களுடன் மிக நீதத்துடனும் நியாயத்துடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்ளுமாறும் மார்க்கம் ஏவுகின்றது.

‘எவர்கள் மார்க்க(விடய)த்தில் உங்களுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும், மேலும், உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கின்றான்.”

‘எவர்கள் மார்க்க(விடய)த்தில் உங்களுடன் போரிட்டு, உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றினார்களோ அவர்களையும் மேலும், உங்களை வெளியேற்றிட உதவி செய்தார்களோ அவர்களையும் நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்வதையே அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கின்றான். அவர்களை யார் நேசர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.”

‘எவர்கள் மார்க்க(விடய)த்தில் உங்களுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும், மேலும், உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கின்றான்.”
(60:7-8-9)

08. அண்டை அயலவர்கள்:

இவ்வாறே முஸ்லிம் அல்லாத அண்டை அயலவர்களுடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நபி(ச) அவர்கள் போதித்தார்கள். முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத இஸ்லாத்தை எதிர்க்காத மாற்று மதத்தவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு கூறியதுடன் இத்தகையவர்களைக் கொலை செய்தவன் சுவனத்தின் வாடையையும் நுகர முடியாது என்றும் கண்டித்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ர) அறிவித்தார்.” (புஹாரி: 3166)

இத்தகைய போதனைகளைச் செய்தவரைத் தீவிரவாதியாகச் சித்தரிக்க முடியுமா? நபியவர்கள் வெறுமனே போதிப்பவராக மட்டும் இருக்கவில்லை. தனது போதனைகளின்படி வாழ்பவராகவும் இருந்தவராவார். நபி (ச) அவர்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் இருந்த அதே வேளை முஸ்லிம் அல்லாத மக்களுடன் சுமுகமான உறவைப் பேணிய உத்தமராகவும் திகழ்ந்தார்கள்.

உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றும் எவரும் மாற்று மதத்தவர்களுக்கு அநீதி இழைப்பவராக இருக்க முடியாது! இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களே இத்தகைய தவறான சிந்தனையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது
Previous Post Next Post