-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
அல்லாஹ்வுக்கு அஞ்சுவது பயப்படுவது என்று நாம் சொல்லும் பொழுது அல்லாஹ் நம்மை ஏன் பயமுறுத்த வேண்டும் அதனால் நாம் பயம் கொண்டோம் என்றால்?
நாம் சக மனிதர்கள் , விலங்கினங்கள் மூலமாக அடையும் பயத்திற்கும் இறைவனுக்கு நாம் பயப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?
அடியேன் மிக நீண்டகாலமாக இறையச்சம் என்றால் என்ன ?
என்ற கேள்விக்கு பதிலை தேடி கொண்டிருந்தேன், பொதுவாக இதுபோன்ற கேள்விகள் சத்திய தேடலில் இருப்பவர்களின் உள்ளங்களில் கண்டிப்பாக ஒரு தினமாவது தோன்றியிருக்கும்,
அதற்கு காரணம் அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தக்வா(تقوى) ஃகஷ்யத்(خشية) ،ஃகவ்ஃப் (خوف ) என்ற பதங்கள் இறையச்சத்திற்கு நிகராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இமாம் இப்னுல் கய்யும் அல்ஜவ்ஸிய்யா ரஹிமஹுல்லாஹ்
தனது புத்தகமாகிய
மதாரிஜுஸ் ஸாலிகீனில்
(مدارج السالكين )
இதற்கான விளக்கம் ஒன்றை எழுதுகிறார்கள் ,
அல்குர்ஆனில் ஃகஷ்யத்(خشية) என்ற வார்த்தை 23 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது,
அதிகம் வினைச்சொல்லிலும், பெயர்ச் சொல்லில் குறைவாகவும் வந்திருக்கிறது.
வினைச் சொல்லுக்கு يَخْشٰى யஃஷா உதாரணம்...
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்.
(அல்குர்ஆன் : 20:44)
ஃகஷ்யத் خَشْيَةَ பெயர்ச் சொல்லுக்கு உதாரணம்...
وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا
(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம்; உங்களுக்கும் (அளிப்போம்.) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.
(அல்குர்ஆன் : 17:31)
ஃகஷ்யத்(خشية) என்ற வார்த்தையில்
அல்லாஹ் பயன்படுத்தியிருந்தால் அதற்கு ஞானத்தோடு சேர்ந்த அச்சம் என்ற கருத்தை வழங்குவதுடன் பயம் ஏற்பட்ட பின்பு உள்ளம் நிம்மதி அடையும் என்ற கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது
اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 35:28)
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம்.
என்று குறிப்பிட்டிருக்கிறான்
ஃகவ்ஃப் (خوف ) என்ற வார்த்தை அல்குர்ஆனில் 65 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இதன் அர்த்தம் உள்ளம் நிம்மதியை இழந்து நிலைகுலைந்து அமைதியை இழந்து பயப்படுவதாகும்.
لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذٰ لِكَ يُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ يٰعِبَادِ فَاتَّقُوْنِ
(மறுமை நாளில்) "இவர்களின் (தலைக்கு) மேலும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின் கீழும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்" இதைப் பற்றியே, அல்லாஹ் தன் அடியார் களை நோக்கி, "என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறி பயமுறுத்துகின்றான்.
(அல்குர்ஆன் : 39:16)
ஃகவ்ஃப் (خوف ) என்ற பயம் அல்லாஹ் தனது ரஹ்மதான வாசலிலிருந்து விரண்டோடுபவர்களை சரி செய்வதற்காக பயன்படுத்தும் சாட்டை அதன் காரணமாக இவ்வுலகத்தில் துன்பங்களின் ஊடாக நமக்கு பல அச்சங்களை சோதனையாக வழங்குகிறான்
என்ற கருத்தையும் இமாம் அவர்கள் தங்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்,
இறைநம்பிக்கையாளருக்கு இறையச்சம் வந்துவிட்டால் உலக ஆசை குறைய ஆரம்பித்துவிடும், உலகப் பற்றற்ற தன்மை அதிகரிக்கும், இறை அச்சத்தினால் அதிகம் தனிமையில் அழுவார்,
இறையச்சம் என்பது முதன்மையான நோக்கம் பாவத்திலிருந்து தன்னை தடுத்துக் கொள்வது, இறைவனுக்கு அடிபணியும் விடயங்களில் இபாதாத்துகளில் அதிகம் கவனம் செலுத்துவதாகும்,
இதன் காரணமாகத்தான் சில அறிஞர்கள் யார் பாவங்களை விடவில்லையோ அவர் இறையச்சம் கொண்டவராக கருதப்பட மாட்டார் என்று கூறுகிறார்கள்.
இறையச்சம் என்பது ஒரு சிங்கத்தை கண்டு நடுநடுங்கி போகக்கூடிய அந்த நிலைக்கு சொல்லப்படுவதில்லை அதற்கு ருஃபு
(الرعب)
என்று அரபு மொழியில் சொல்வார்கள்,
فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:38)
எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை என்று குறிப்பிடுகிறான்.
இறையச்சம் என்பது இறை நம்பிக்கைக்கு மிக அவசியமான ஒன்று
அதனால்தான் இறைவன் இவ்வாறு கூறுகிறான்
فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ
( நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 5:44)
இறையச்சத்தினால் ஏற்படும் பலாபலன் சுவனம் ஆகும்
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ
எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ,
(அல்குர்ஆன் : 79:40)
فَاِنَّ الْجَنَّةَ هِىَ الْمَاْوٰى
அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சுவனபதிதான்.
(அல்குர்ஆன் : 79:41)
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழி ஸஹீஹுல் புகாரியில் மறுமை நாளில் ஏழு கூட்டங்கள் அர்ஷின் நிழலில் இருக்கும் அதில் ஒன்று அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்கள் என்று வருகிறது.
தக்வா(تقوى) ஃகஷ்யத்(خشية) ،ஃகவ்ஃப் (خوف ) என்ற இறையச்சத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!