ரமழான் – ஒர் ஆன்மிக வசந்தத்தின் உதயம்

بسم الله الرحمن الرحيم


- எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)  BA (Hons) MA (Reading) 


உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். வீடுகளை சுத்தப்படுத்துவது, தொலைக்காட்சி பெட்டிகளை அகற்றுவது, பள்ளிவாயல்களை அலங்கரிப்பது என அவை தொடர்கின்றன. புறரீதியான வரவேற்பை விட அகரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்ந பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா? என்ற கேள்வி எம்மை நோக்கி எழுகின்றது.

ரமழான் அது கண்ணியமான மாதம். அதிலேதான் புனிதமிகு இறை வேதமான அல்-குர்ஆன் அருளப்பட்டது. அதிலேதான் ஆயிரம் மாதங்களை விட சங்கைமிக்க லைலதுர் கத்ர் எனப்படும் இரவு அமைந்துள்ளது. அதன் பகற் பொழுது நோன்பிலும் இராப் பொழுது வணக்கத்திலும் செலவிடப்படுகின்றது. அது பரஸ்பரம் அன்பும் பாசமும் பரிமாறப்படும் மாதம். அது பொறுமையையும் தக்வா என்கின்ற இறையச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் உன்னதமான மாதமாகும். 

ரமழான் பல நன்மைகளை வழங்குகின்றது. அவை தனிமனிதர்களையும் குடும்பங்களையும் தழுவியதாக காணப்படுகின்றது. ரமழான் மாதம் ஏற்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் தனித்துவமானவை. 

தினமும் 12-14 மணித்தியாலங்கள் என ஒரு மாத காலம் சுமார் 368 மணித்தியாலங்கள் நோன்பு நோற்பதில் ஒரு அடியானால் கழிக்கப்படுகின்றது. இதனால்தான் நோன்பு ஒரு மனிதனின் ஆன்மாவை நெறிப்படுத்தி நன்மை அடிபணிவு பொறுமை போன்ற பண்புகளை ஏற்படுத்துகின்றது.

பொதுவாக அனைத்து வணக்கங்களும் வெளிரங்கமாக நிறைவேற்றப்படுகின்றன. உதாரணமாக தொழுகையில் அடியான் எழுந்து நிற்பதும் உட்காருவதும் குனிவதும் சிரம் தாழ்த்துவதும் போன்ற அசைவுகள் மக்கள் பார்வைக்கு எட்டுகின்றது. தவிர ஹஜ் ஸகாத் போன்ற வணக்கங்களும் ஏதோ ஒரு வகையில் வெளிரங்கமானவை. ஆனால் நோன்பு இதற்கு முற்றிலும் மாற்றமானது. இது இறைவனுக்கும் அவனது அடியானுக்கும் மாத்திரம் தெரியுமான இரகசிய இபாதத்தாகும். இதனால்தான் நோன்பிற்குறிய கூலியை அல்லாஹ்வே உறுதிப்படுத்துகிறான். ‘‘நோன்பைத் தவிர மனிதனது அனைத்து செயற்பாடுகளும் அவனுக்குரியவை. அது எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். (புஹாரி) 

ரமழான் அல்-குர்ஆனின் மாதமாகும். அதனை ஓதுவதற்கும் விளங்குவதற்கும் அதன் போதனைகளை வாழ்வில் எடுத்து நடப்பதற்கும் ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது. ரமழானுடைய மாதத்தில் முழுமையாக ஒரு முறையாவது அல்-குர்ஆனை ஓதி முடித்து விட வேண்டும் என்ற மனோ நிலை பொதுவாக எல்லோரின் உள்ளத்திலும் ஏற்படும். இம்மாத்தில் அல்-குர்ஆனின் கருத்துக்களை விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் முயல்கின்ற போது அது எமது ஆன்மாவை ஒரு படி மேலே உயர்த்தி விடுகின்றது. மனோரீதியான அமைதியும் நிம்மதியும் அதனால் கிடைக்கின்றன. ஏனெனில் அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. 

ரமழான் மாதம் எத்தகைய மகத்துவமுடையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. (21-85)

ரமழான் முஸ்லிமிடத்தில் நற்பண்பகளையும் சீறிய ஒழுக்கத்தையும் உருவாக்குகின்றது. அவற்றுல் அல்லாஹ்வை திக்ர் செய்தல் குர்ஆன் ஓதுதல் தவிர வேறு விடயங்களில் நாவை ஈடுபடுத்தாது மெளனம் காத்தல் தேவை ஏற்படும் போது நல்லதை மாத்திரம் பேசுதல் பொய் கூறுதல் புறம் பேசுதல் கோள் சொல்லுதல் போன்ற துர் குணங்களிலிருந்து நாவைப் பேணுதல் நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் போன்ற பண்பாடுகள் மிக முக்கியமானவையாகும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி பிரஸ்தாபித்தார்கள். பொய்யுரைத்து அதன் அடிப்படையில் செயற்படுவதை விட்டு விடாதவர் உணவையும் குடிப்பதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. (புகாரி)

ரமழானின் பகற்பொழுதில் உணவு குடிபானம் உடலுறவு போன்றவற்றை தடுத்துக் கொள்வதன் மூலம் மனோ இச்சையை கட்டுப்படுத்துவதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. தனக்கு முன்னால் அறு சுவை உணவும் இனிய பானமும் ஹலாலான மனைவியும் இருந்த போதிலும் இறை கட்டளைக்குப் பயந்து அவற்றை அனுபவிக்காமல் மனிதன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான். பொதுவாக மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கிறது. அது உலக இருப்புக்கும் உயிரினங்களின் பரவலுக்கும் தேவைப்படுகின்றது. எனினும் இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த வகையில் ஒரு நோன்பாளியை பொருத்தமட்டில் ஹலாலான செயற்பாடுகளையே அல்லாஹ்வின் கட்டளைக்காக தவிர்த்துக் கொள்ள முனையும் போது ஹராமானவற்றிலிருந்து தனது உள்ளத்தை தற்காத்துக் கொள்ளவும் மனோ இச்சைகளை நெறிப்படுத்தவும் முடியுமான நிலையை பெற முடிகின்றது. ஒரு வகையில் இப்படியான செயற்பாடுகள் மனிதர்களை மலக்குகளின் நிலைக்கே கொண்டு செல்கிறது. ஏனெனில் அவர்கள் உணவு குடிபானம் உடலுறவு போன்ற உடல் ரீதியான தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். முழுமையாக அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள்.

ரமழானின் இராக்காலம் முஸ்லிமின் ஆன்மீக மேம்பாட்டுக்கு அதிகம் இடம் கொடுக்கும் காலப் பகுதியாகும். அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருந்து இரவு நேர தொழுகைகளில் ஈடுபட்டு அவனைத் துதித்து புகழ்ந்து அவனிடமே தஞ்சமடைந்து தன் இயலாமையை அவனிடம் ஒப்புவித்து பாவமன்னிப்புக் கேட்டு மீளும் செயற்பாடுகள் அப்பொழுதுகளில் இடம்பெறும். அதே போல் குர்ஆன் திலாவத்துக்களாலும் தராவீஹ் தொழுகைகளாலும் இஃதிகாப்களாலும் நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகின்றது. எனவேதான் எமது இராப்பொழுதுகள் அமல்களால் விழிப்படைகின்றன. அதேபோல் ரமழானின் இரவுகளை வீண் கேளிக்கைகளிலும் விளையாட்டுக்களிலும் கழிக்கும் ஒரு சிலரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தொழுகையிலும் திக்ரிலும் இபாதத்களிலும் கழிக்கப்பட வேண்டிய ரமழானின் இரவுகள் தெருக்கள் தோரும் கும்மாளமிட்டு திரியும் சில இளைஞர்களால் கேளிக்கைக்குரிய இரவுகளாக மாற்றம் பெருகின்றன. உண்மையில் சொல்லப் போனால் அநேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமழானின் இரவுகளை வீணாக கழித்துக் கொண்டிருப்பதுதான் கசப்பான உண்மை. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக பெற்றுக்கொண்டது பசியையும் தாகத்தையும் விட்டதை தவிர வேறேதும் இல்லை (புஹாரி)

நோன்பு பிறரின் உணர்வுகளை மதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றது. இம்மாதத்தில் நியாயமான சில காரணங்களுக்காக நோன்பு நோற்பதை விட்டவர்கள் நோன்பாளிகளின் பார்வைக்கு அப்பால் மறைவாக உணவு உட்கொள்ளுதல் அருந்துதல் அசௌகரியம் தொல்லை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் என்பன போன்ற செயற்பாடுகள் பிற மனிதர்களின் உணர்வுகளை மதிப்பதன் சிறந்த வெளிப்பாடாகும். இது நோன்பாளியின் உணர்வை மதிப்பதற்காகவே செய்யப்படுகின்றது. எனவேதான் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் சுயநலம் தன்னலம் போன்ற துர் மனப்பாங்குகளிலிருந்து அவனது ஆத்மாவை சுத்திகரித்து பிறர் நலம் பேணுதல் என்ற சிறப்பான பயிற்சியை நோன்பு தருகிறது. 

பொதுவாக ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் மத்தியிலேயே சர்வ சாதாரணமான காரணங்களுக்காக சண்டைகளும் முரண்பாடுகளும் வந்துவிடுகின்றன. எனவேதான் அறிமுகமில்லாத மனிதர்கள் மத்தியில் முரண்பாடுகள் பிணக்குகள் எழுவதையொட்டி ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில் சமூகத்தில் சண்டையையும் சச்சரவையும் பிணக்குகளையும் அத்துமீறலையும் தடுத்துவிடுகின்ற ஒரு காலமாக ரமழான் காணப்படுகின்றது. ஒருவன் உன்னோடு சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி நான் நோன்பாளி எனக் கூறட்டும். (புகாரி) என்ற நபி (ஸல்) அவர்களின் போதனை முஸ்லிம் சமூகத்திற்குள் பிரச்சினைகளற்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதோடு அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த சூழலை உருவாக்குகின்றது.

ரமழான் சமூக ரீதியாக பசியின் கொடுமையை உணரவும் வசதியுள்ளவன் வறியவனின் துன்பங்களை அறியவும் அவற்றுள் பங்கு கொள்ளவும் துணை செய்கிறது. இது ஏழை பணக்காரன் என்ற பொருளாதார இடைவெளியை மானசீகமாக குறைத்து விடுவதற்கும் சமூகத்திற்குள் தோன்றும் வகுப்பு வாதத்தையும் ஏற்றத்தாழ்வையும் அகற்றி மனிதர்களின் சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தவும் உதவுகின்றது. ஏனெனில் கண்ணியம் எடை போடப்படும் அளவுகோல் பொருளாதார வசதியோ சமூக அந்தஸ்தோ கிடையாது மாறாக..

இறைவன் பற்றிய அச்சமே உங்களில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் உங்களில் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே! (49:13)

ரமழானின் இறுதியில் நோன்பு காலம் முடிவடைந்து பெருநாள் தினத்தில் கோபதாபங்களை மறந்து பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதனாலும் கைலாகு கொடுத்து ஆரத்தழுவிக் கொள்வதனாலும் முஸ்லிம்கள் மத்தியில் சகோதரத்துவ வாஞ்சையும் அன்னியொன்னியமும் ஏற்படுகிறது. இது சமூகம் மனோ நிம்மதியுடன் வாழ்வதற்கு துணை செய்கிறது. மகிழ்ச்சியும் மன நிறைவையும் உள்ளத்தை ஆட்கொண்டு அதே மகிழ்ச்சியும் மன நிறைவும் குடும்ப அங்கத்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கின்ற மனப்பாங்கு ஏற்படுகின்றது. எனவே ஒட்டு மொத்தமாக முழு முஸ்லிம் சமூகமும் உள மகிழ்ச்சியோடு கழிக்கின்ற ஒரு நாளாக பெருநாள் அமைகின்றது. 

எனவே ரமழான் புனிதமான மாதம் மனிதனின் ஆன்மாவைச் சீர்படுத்தி கசடுகளையும் துருக்களையும் நீக்கி இறை நேசத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி மனித வாழ்வைச் சீர்படுத்தி சமூக உணர்வுகளையும் ஏற்படுத்தவருகின்ற ஒரு மாதமாகும். எனவே அதனது உண்மையான தத்துவங்களைப் புரிந்து அதனை முழு அளவில் பயன்படுத்தி இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ள முனைவோமாக.

أحدث أقدم