بسم الله الرحمن الرحيم
- ஷேக் அஹ்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அல் காழி
1. இறை நம்பிக்கையானது சொல், செயல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்:
உள்ளம், நாவு முதலியவற்றுடன் தொடர்புபட்ட சொல்; உள்ளம், நாவு, உடல் உறுப்புக்கள் முதலியவற்றுடன் தொடர்புபட்ட செயல் ஆகியவற்றில் இறை நம்பிக்கையானது பிரதிபலிக்கும்.
உள்ளத்துடன் தொடர்புபட்ட சொல்:
நம்புதல், உண்மைப்படுத்தல், ஏற்றுக்கொள்ளல்.
நாவுடன் தொடர்புபட்ட சொல்:
இஸ்லாத்தின் நாமத்தை மொழிதல், இரு கலிமாக்களையும் பகிரங்கமாக கூறுதல்.
உள்ளத்துடன் தொடர்புபட்ட செயல்: செயற்பாடுகளுக்கான எண்ணங்களையும், நாட்டங்களையும் வகைப்படுத்திக் கொள்ளல்.
உதாரணம்: அல்லாஹ்வின் மீது அன்புகொள்ளல், அவனை அஞ்சுதல், அவனிடம் எதிர்பார்த்தல், அவனிடமே முழுதையும் ஒப்படைத்தல்.
நாவுடன் தொடர்புபட்ட செயல்:
அல்லாஹ்வை நினைவுகூறல், அவனிடமே பிரார்த்தனை புரிதல், அல்குர்ஆனை ஓதுதல்.
உடல் உறுப்புக்களுடன் தொடர்புபட்ட செயல்: உடலால் செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளுக்கமைய உடல் உறுப்புக்கள் இசைவாக்கமடைதல்.
அல்லாஹ் கூறுகிறான் “உண்மையான முஃமின்கள் யார் என்றால் அல்லாஹ்(வின் திருநாம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து, நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால். அவர்களுடைய ஈமான் அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள். இத்தகையவர்தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவமன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.” (அல்குர்ஆன் 08:02-04).
“நிச்சயமாக (உண்மையான) முஃமின்கள் யார் என்றால் அவர்கள்அல்லாஹ்வின்' மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான்கொண்டு, பின்னர் (அதுபற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.” (அல்குர்ஆன் 49:15).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமான் எனும் இறைநம்பிக்கை எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது அதில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் - உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை - என்று மொழிவதாகும். அதில் அந்தஸ்த்து குறைந்தது நோவினை தருபவற்றை பாதையை விட்டும் நீக்குவதாகும். வெட்கம் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்" (புகாரி 09, முஸ்லிம் 35)
சொல்லும், செயலும் சேர்ந்த கலவையே இறை நம்பிக்கையாகும். இது, இவை இரண்டையும் வேண்டி நிற்கும் உண்மைப்படுத்துதலாகும். இவை இரண்டும் ஒருவரிடம் பிரதிபலிக்காமல் போனால் உண்மைப்படுத்தல் எனும் விடயம் அவரை விட்டும் நீங்கிவிட்டதாகவே கருதப்படும்.
2. ஈமானும் இஸ்லாமும் தனித்துப் பயன்படுத்தப்படும் போது அவை ஒவ்வொன்றும் மற்றதைக் குறிக்கும். ஈமான் எனும் வார்த்தை இஸ்லாம் எனும் வார்த்தையுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் போது வெவ்வேறான இரு அர்த்தங்கள் அவற்றுக்கு வழங்கப்படும்:
ஈமான் என்பது உள்ளத்துடன் தொடர்புபட்ட நம்பிக்கையையும், இஸ்லாம் என்பது வெளிப்படையாக நாம் செய்யும் இஸ்லாமிய
செயற்பாடுகளையும் குறிக்கும் என்பதே அவ்விரு அர்த்தங்களாகும்.
இவ் அர்த்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு முஃமினுக்கும் முஸ்லிம் எனும் பெயர் சூட்டப்படும். ஆனால் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஃமின் எனும் பெயர் சூட்டப்படாது.
அல்லாஹ் கூறுகிறான்: “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகிறார்கள்,“நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும். "நாங்கள் வழிபட்டோம்" (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்), கூறுங்கள் (என நபியே அவர்களிடம்) கூறுவீராக“ ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்கமாட்டான்" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.. (அல்குர்ஆன் 49:14).
3. ஈமான் கூடுதல் குறைவை சந்திக்கும்:
அல்லாஹ்வை அறிதல், அவன் இவ் உலகில் நிகழ்த்தியிருக்கும் அத்தாட்சிகளைப் பற்றி சிந்தித்தல், வணக்கவழிபாடுகளை சரிவர செய்தல் போன்றவற்றின் மூலம் இறைநம்பிக்கை அதிகரிக்கும். அதேவேளை அல்லாஹ்வைப் பற்றிய தெளிவின்மை, அவனது அத்தாட்சிகளை மறந்து வாழ்தல், வணக்க வழிபாடுகளில் பொடுபோக்கைக் கையாள்தல், பாவகாரியங்களில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் குறைவடைந்தும் போகும்.
அல்லாஹ் கூறுகிறான்: “உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு, ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். அல்குர்ஆன்08:02).
மேலும் அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன்தாம் அமைதியும்(ஆறுதலும்) அளித்தான்.” (அல்குர்ஆன் 48:04).
4. இறை நம்பிக்கையில் பல ரகங்கள் உள்ளன. அதன் சிலபண்புகள் சில பண்புகளை விடவும் உயரியதாக இருக்கும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :“ஈமான் எனும் இறைநம்பிக்கை எழுபதுக்கும் மேற்பட உள்ளதுடன் அதில் சிறந்தது லாஇலகாஹஇல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை- என்று மொழிவதாகும். அதில் அந்தஸ்த்து குறைந்தது நோவினை தருபவற்றை பாதையை விட்டும் நீக்குவதாகும். வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்" . (புகாரி 09, முஸ்லிம் 35)
5. இறை நம்பிக்கையாளர்களிலும் பலரகத்தினர் இருக்கின்றனர். சிலர் பூரண இறை நம்பிக்கையாளர்களாக இருப்பார்கள். சிலர் அவர்களை விடவும் தரம் குறைந்தவர்களாக இருப்பார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: “பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்துகொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதிகொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்." (அல்குர்ஆன்35:32).
இரு ஷஹாதாக்களையும் பொருளுணர்ந்து நம்பிக்கை கொள்பவர் இறைநம்பிக்கையின் அடிப்படையை அடைந்திடுவார். இஸ்லாம் கடமையாக்கிய விடயங்களை செய்து, தடுத்துள்ளவற்றை தவிர்ந்து நடப்பவர் அவசியம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கையை அடைந்திடுவார். இஸ்லாம் கடமையாக்கியவற்றையும், விரும்பியவற்றையும் செய்து, தடுத்தவற்றையும், வெறுத்தவற்றையும் தவிர்ந்து நடப்பவர் பூரண இறைநம்பிக்கையை அடைந்திடுவார்.
6. 'அல்லாஹ் நாடினால் நான் முஃமினாக இருப்பேன்' என இறை நம்பிக்கையில் விதிவிலக்கைப் புகுத்துவது மூன்றுநிலைகளில் அவதானிக்கப்படும்.
அ. இறை நம்பிக்கையின் அடிப்படை அம்சத்தில் சந்தேகம் கொண்டவராக இவ் வார்த்தையைக் கூறுவது ஹராமாகும். அது அவரை இறைநிராகரிப்பின் பக்கம் கொண்டு போய்விடும். ஏனெனில் இறைநம்பிக்கையின் அடிப்படையே உறுதியாக நம்புதல் என்பது தான்.
ஆ. தனக்கு அவசியமானளவு அல்லது பரிபூண ஈமான் இருப்பதாகத் தன்னைத்தானே சுத்தப்படுத்தும் நிலை ஏற்படுமென அஞ்சினால் இவ்வாறு கூறுவது
அவசியமானதாகும்.
இ. அல்லாஹ்வின் நாட்டத்தை மையப்படுத்தும் நோக்கில் இவ்வாறு கூறுவது ஆகுமானதாகும்.
7. பாவங்கள் செய்வதன் மூலம் இறை நம்பிக்கை எனும் பண்பு ஒருவரை விட்டும் முழுமையாக அழிந்து போய்விடாது மாறாக இறைநம்பிக்கை குறைவடைந்திடும்.
பெரும்பாவம் செய்பவர். இறைநம்பிக்கையில் குறையுள்ள ஓர்முஃமினாகவே கருதப்படுவார். அவரிடம் அடிப்படை இறைநம்பிக்கை இருப்பதால் முஃமின் எனவும், பெரும்பாவம் செய்ததற்காக பாவி எனவும் பெயர் சூட்டப்படுவார். இதற்காக வேண்டி அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்படவோ, நரகத்தில் நிரந்தரமாக தங்கிடவோ மாட்டார். மாறாக அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார். அவன் நாடினால் இவரை மன்னித்து சுவனத்தில் நுழைவிப்பான். அல்லது அவரின் பாவத்தின் அளவுக்கான தண்டனையை நரகில் வழங்கிவிட்டு, பரிந்துரை மூலமோ, அல்லாஹ்வின் கருணை மூலமோ மீண்டும் சுவனத்தில் நுழைத்திடுவான்.
அல்லாஹ் கூறுகிறான்: 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர,(மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு, மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 04:48).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுவனவாதிகள் சுவனம் சென்று, நரகவாதிகள் நரகம் சென்ற பின் அல்லாஹ்தஆலா "தன்னுடைய உள்ளத்தில்
கடுகளவாவது ஈமானுள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறுவான். அவர்கள் கருகிய நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,
நஹ்ருல் ஹயாத் எனும் ஆற்றில் போடப்படுவார்கள்." (புகாரி 22)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “தம் உள்ளத்தில் ஒரு வாற் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறிவிடுவார். மேலும், தம் இதயத்தில் ஒரு கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறிவிடுவார். மேலும், தம் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' கூறியவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார்'. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), புகாரி 44)
நபி (ஸல்) 'நன்மை' என்று கூறினார்கள் என மேற்கண்ட நபி மொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் ஈமான் எனும் நம்பிக்கை என்று குறிப்பிட்டதாக அனஸ் (ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.