தவ்ஹீது என்பது ஒரு பெயர்ச்சொல். வஹ்ஹத, யுவஹ்ஹிது எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. இதன் பொருள், ஒன்றை அது ஒன்றாகவே உள்ளது என்பதாகும். இது மறுத்தல், உறுதிப்படுத்தல் இல்லாமல் ஏற்படாது. அதாவது, மறுக்கும்போது அந்தப் பொருளைத் தவிர உள்ள அனைத்தையும் மறுக்க வேண்டும். அதன் மூலம் அப்பொருளை அது ஒன்றுதான் என்று உறுதிப்படுத்த வேண்டும்.
இதை பின்வரும் பொருளடக்க தலைப்புகளில் பார்ப்போம்..
பொருளடக்கம்:
மொழிரீதியான பொருள்
மார்க்கரீதியான பொருள்
தவ்ஹீதின் வகைகள்
தவ்ஹீது அர்ருபூபிய்யா
தவ்ஹீது அல்அஸ்மா வஸ்ஸிஃபாத்
தவ்ஹீது அல்உலூஹிய்யா
தவ்ஹீதின் முக்கியத்துவம்
சிறப்புகள்
படைப்பின் நோக்கம்
இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட காரணம்
வேதங்கள் இறக்கப்பட்ட காரணம்
முஸ்லிம், காஃபிர் வேறுபாடு
அமைதி மற்றும் மனநிறைவுக்குக் காரணம்
நமக்கு விடப்பட்ட முதல் அழைப்பு
நம் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை
சுவர்க்கத்தில் நுழைய வழி
பாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகிலிருந்து பாதுகாப்பு
தவ்ஹீதுக்கு எதிரான ஷிர்க்கின் அபாயங்கள்
தவ்ஹீதின் அறிவுப்பூர்வமான நிலை
பகுத்தறிவான விளக்கம்
தனித்தன்மை
குர்ஆனுடைய வாதம்
தவ்ஹீதின் மகத்துவம்
தவ்ஹீதின் வரலாறு
இறைத்தூதர்கள் தெளிவுபடுத்திய தவ்ஹீது
பிரிவினையின் தொடக்கம்
மனிதனின் இயற்கையான உள்ளுணர்வு
சிலை வணக்கத்தின் தொடக்கம்
இணைவைப்பின் மூல வரலாறு
இறந்தவர்களை இடைத்தரகர்களாக எடுத்துக்கொள்தல்
அல்லாஹ்வை விட்டுப் பிறரிடம் பிரார்த்திப்பது இணைவைப்பே
மொழிரீதியான பொருள்
மொழிரீதியாக தவ்ஹீது என்பது வஹ்ஹத எனும் சொல்லிலிருந்து வருகிறது. எதையேனும் ஒன்றை அது ஒன்றாகவே உள்ளது என்று இதற்குப் பொருள். வாஹிது (ஒன்று) என்பது இரண்டு, மூன்று மற்றும் பலவற்றுக்கு எதிரானது. பன்மைக்கு எதிர்ப்பதமாக தவ்ஹீது எனும் பதம் உள்ளது. வாஹிது (ஒன்று) என்பது கடைசி வரை ஒன்றாகவே இருக்கும். அது எந்தக் கட்டத்திலும் இன்னொன்றுக்கு இணையாக ஆகிவிடாது.
மார்க்கரீதியான பொருள்
இஸ்லாமிய வழக்கில் அதாவது ஷரீஆ சட்டப்படி தவ்ஹீது என்றால் அல்லாஹ்வை அனைத்து வகையான வணக்கங்களைக் கொண்டு ஒருமைப்படுத்துவதாகும். இதன் மூலம் அல்லாஹ்வையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற கருத்து அமைகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: ...அல்லாஹ்வுடைய மார்க்கம் நிலைபெறுகின்ற வரை.. (அல்குர்ஆன் 8:39)
இங்கு மார்க்கம் (தீன்) என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகும்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னையே வணங்குவதற்காக தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுக்கு யாரையும் இணையாக்காதீர்கள். (அல்குர்ஆன் 4:36)
ஆகவே, அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே கீழ்ப்படிந்து, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள்.(அல்குர்ஆன் 40:14)
ஆக, அல்லாஹ்வுக்கே எல்லா வணக்கங்களையும் நிறைவேற்றி, அவனைத் தவிர அனைத்தையும் புறக்கணித்து அவற்றை வணங்காமல் இருக்க வேண்டும். இதுவே தவ்ஹீது.
தவ்ஹீதின் வகைகள்
பொதுவாக தவ்ஹீதின் வகைகள் அனைத்தும் பின்வரும் விளக்கத்தில் அடங்கிவிடும். அதாவது, அல்லாஹ்வுக்கு உரிய அனைத்தையும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும்.
கல்வியாளர்கள் தவ்ஹீதை மூன்று வகைப்படுத்தியுள்ளார்கள். அவை:
தவ்ஹீது அர்ருபூபிய்யா (அல்லாஹ்வின் இறைமையில் அவனை ஒருமைப்படுத்துதல்)
தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் (அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துதல்)
தவ்ஹீதுல் உலூஹிய்யா (அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துதல்)
குர்ஆனுடைய வசனங்களையும் நபிமொழிகளையும் ஆழ்ந்து கற்றதின் மூலம் இந்த வகைப்பாட்டை அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். தவ்ஹீதின் எல்லா வகைகளும் இந்த மூன்று வகைகளுக்குள் அடங்கிவிடுவதாக அவர்கள் கூறுயுள்ளார்கள்.
1. தவ்ஹீது அர்ருபூபிய்யா
அனைத்தையும் படைப்பது, அவற்றுக்கு உரிமையாளனாக இருப்பது, நிர்வகிப்பது ஆகிய செயல்பாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதே தவ்ஹீது அர்ருபூபிய்யா ஆகும். இதன் விரிவான பொருள் பின்வருமாறு: முதலில் அல்லாஹ்வை அவனுடைய படைக்கும் செயலைக்கொண்டு ஒருமைப்படுத்துவதாகும்.
அல்லாஹ்வைத் தவிர வேறொரு படைப்பாளன் இருக்கின்றானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவஜக்கின்றான்.அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை.(அல்குர்ஆன் 35:3)
எனவே, அல்லாஹ் ஒருவன் மட்டுமே படைப்பாளன். அவன்தான் அனைத்தையும் படைத்தவன்; அவை படைக்கப்படும் முன்பே அவற்றின் விதியை முடிவு செய்தவன். அவனுடைய படைப்பு என்பதில் அவனே படைத்த அவனுடைய காரியங்களும், அதோடு படைப்புகளின் காரியங்களும் அடங்கும். இதன் காரணமாகவே, ஈமான் முழுமை பெறுவதற்கு விதியின் மீதான நம்பிக்கை அவசியமாகிறது. தன்னுடைய அடியார்களின் காரியங்களையும் அவன்தான் படைக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்யும் காரியங்களையும் படைக்கிறான். (அல்குர்ஆன் 37:96)
2. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
அல்லாஹ் தனது வேதத்திலும் தனது தூதர் (ஸல்) அவர்களின் நாவின் மூலமும் தன்னை எப்படி வருணித்துள்ளானோ, தனக்கு என்னென்ன பெயர்களைச் சூட்டியுள்ளானோ அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனை ஒருமைப்படுத்துவதே தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் எனப்படும். இது அல்லாஹ் தனக்கு உண்டு என்று உறுதிப்படுத்திய பெயர்களையும் பண்புகளையும் அவ்வாறே உறுதிப்படுத்துவதைக்கொண்டே அமையும். அப்பெயர்களையும் பண்புகளையும் திரித்துக் கூறாமல், அவற்றின் அர்த்தங்களைப் புறக்கணிக்காமல், மாற்றாமல், அவற்றை படைப்புகளின் பண்புகளுடன் ஒப்பிடாமல், அவற்றைக் குறித்து அவை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பாமல் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனக்கு என்னென்ன பெயர்களையும் பண்புகளையும் வருணித்துள்ளானோ அவற்றை உண்மை என்றும் எதார்த்தமானவை என்றும் நம்பிக்கை கொள்வது கடமையாகும். எனினும், நாம் அவற்றின் எதார்த்தத்தைக் குறித்து அவை எப்படியிருக்கும் என்ற கேள்வியுடன் ஆராயக் கூடாது. அந்தப் பெயர்களையும் பண்புகளையும் படைப்புகளின் பெயர்கள், பண்புகளுடன் எந்த விதத்திலும் ஒப்பிட்டு நம்பிக்கை கொள்ளமாட்டோம்.
இந்த சமுதாயத்தின் பல கூட்டங்கள் வழிகெட்டது இவ்வகையான தவ்ஹீதுடைய விஷயத்தில்தான். அவர்கள் நம்முடைய தொழுகைத் திசையையே முன்னோக்கினாலும், தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வழிகெட்டவர்களே.
இஸ்லாமை நம்பிக்கைகளிலும், செயல்பாடுகளிலும், ஒழுக்கங்களிலும் சரியாகப் பின்பற்றிய முன்னோர்களான நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றிய நல்லோர்கள் (அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ்) இவ்விஷயத்தில் நேரான பாதையில் சென்றார்கள். அவர்கள் இந்த வகையான தவ்ஹீதை நம்பிக்கை கொண்டபோது, அல்லாஹ்வை அவன் எவ்வாறு வருணித்துள்ளானோ, அவ்வாறே அவனை வருணித்தார்கள். அவர்கள் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அவற்றின் எதார்த்தமான நிலையுடன் உண்மையாக ஏற்று நம்பிக்கை கொண்டார்கள். அதே சமயம், அவற்றை அல்லாஹ்வின் மகத்துவத்திற்கு ஏற்ப நம்பிக்கை கொண்டார்கள். அவர்கள் யாரும் அவற்றின் அர்த்தங்களை மாற்றவில்லை; அவற்றை மறுக்கவில்லை; அவற்றைக் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கவில்லை; அவற்றை படைப்புகளின் பெயர்கள், பண்புகளுடன் ஒப்பிடவில்லை.
எடுத்துக்காட்டாக, அல்லாஹ் தனக்கு அல்ஹய்யு (என்றும் உயிருள்ளவன்) எனவும், அல்கய்யூம் (என்றும் நிலையானவன்) எனவும் பெயர்கள் சூட்டிக்கொண்டுள்ளான். ஆகவே நமக்குரிய கடமை என்னவெனில், அல்ஹய்யு என்பதை அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாக நம்பிக்கை கொண்டு, இந்தப் பெயர் குறிப்பிடும் பண்பை அல்லாஹ்வுக்கு உண்டென உறுதியாக நம்பிக்கை கொள்ளவும் வேண்டும். உயிருடன் உள்ள இந்தப் பண்பு அவனுக்குக் குறையற்றதாக, என்றும் உள்ளதாக, ஒன்றும் இல்லாமையிலிருந்து அவனுடைய உயிர் வரவில்லை என்றும், அதற்கு முடிவே இல்லை என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனக்கு அஸ்ஸமீஉ (நன்கு செவியுறுபவன்) என்றும் பெயர் சூட்டியுள்ளான். நம்முடைய கடமை என்னவெனில், இது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று எனவும், அவனுக்குக் குறையில்லாத கேட்கும் திறன் உண்டு; அவனால் அனைத்தையும் எல்லாக் காலங்களிலும் கேட்க முடியும் என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும். செவியுறுதல் என்கிற செயல்பாட்டை தனக்கு அவன் உண்டு என்று வருணித்துள்ளான். இப்பெயரின் மூலம் அது உறுதியாகிறது. ஆனால் செவியுறுபவன் என்று ஒருவனுக்குப் பெயர் சூட்டப்பட்டும், அவனுக்கு அந்தப் பண்பு இல்லை; அவனால் எந்தச் சப்தத்தையும் குரல்களையும் கேட்க முடியாது என்று கூறுவது முரண்பாடாகும். இது சாத்தியமே இல்லை.
அல்லாஹ் கூறுகிறான்:அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டுள்ளதுஎன்று இந்த யூதர்கள் கூறுகின்றார்கள்.(உண்மையில் அப்படியில்லை!) அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன.மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டார்கள்.அல்லாஹ்வுடைய இரண்டுகைகளோவிரிந்தே இருக்கின்றன.அவன் நாடியவாறெல்லாம்அள்ளி வழங்குகிறான். (அல்குர்ஆன் 5:64)
அல்லாஹ்வின் இரண்டு கைகளும் விரிந்தே இருக்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் தனக்கு இரண்டு கைகள் உண்டென உறுதி செய்கிறான். அக்கைகள் விரிந்தும் இருக்கின்றன என வருணிக்கிறான். அவற்றின் மூலம் அவன் தாராளமாக வழங்குகிறான். இதிலிருந்து அல்லாஹ்வுக்கு இரண்டு கைகள் உண்டு என்றும், அவை விரிந்து இருக்கின்றன, அவற்றின் மூலம் தாராளமாக வழங்குகிறான் என்றும் நம்பிக்கை கொள்வது நம் மீது கடமையாகிவிட்டது. அதே சமயம், நம்முடைய உள்ளங்களால் அந்தக் கைகளைக் கற்பனை செய்வது கூடாது. நமது நாக்குகளால் அப்படிப்பட்ட பேச்சுகளைப் பேசக் கூடாது. அவற்றின் எதார்த்தம் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கக் கூடாது. அவற்றைப் படைப்புகளின் கைகளுடன் ஒப்பிடவும் கூடாது. காரணம் அல்லாஹ் கூறுகிறான்:
அவனுக்கு ஒப்பானது எதுவும் இல்லை. அவனோ நன்கு செவியுறுபவன்; நன்கு பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)
(நபியே!) நீர் கூறும்:நிச்சயமாக என்னுடைய இறைவன் (ஆகாது என்று) தடுத்திருப்பதெல்லாம் வெளிப்படையாகவோ, இரகசியமாகவோ செய்யப்படுகின்ற மானக்கேடான செயல்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், எந்த ஓர் ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைத்து வணங்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக்கட்டிப் பொய்) கூறுவதையும்தான்.(அல்குர்ஆன் 7:33)
(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தெளிவான அறிவில்லையோ அதை நீர் பின்தொடராதீர்.ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.(அல்குர்ஆன் 17:36)
3. தவ்ஹீதுல் உலூஹிய்யா
அல்லாஹ்வை அவனுக்குரிய வணக்கங்களால் ஒருமைப்படுத்துவதே தவ்ஹீதுல் உலூஹிய்யா எனப்படும். மக்கள் அல்லாஹ்வுடன் யாரையும், எதையும் வணக்கத்திற்குரியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பொருள்களை வணங்கக் கூடாது; அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடுவது போல் அவற்றிடம் நெருக்கம் தேடக் கூடாது. இந்த வகை தவ்ஹீதுடைய விஷயத்தில்தான் இணைவைப்பாளர்கள் வழிதவறிப் போனார்கள். நபியவர்கள் போரிட்டது இப்படிப்பட்ட இணைவைப்பாளர்களிடம்தான். இவர்களின் இரத்தமும் செல்வமும் பாதுகாப்பின்றி ஆனது. தங்கள் நிலத்தையும் வீடுகளையும் இழந்தார்கள். இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டது இந்த வகை தவ்ஹீதுடனே. வேதங்களில் இந்த வகை தவ்ஹீதுடன் மற்ற இரண்டு வகைகளும் விளக்கப்பட்டது. தவ்ஹீதுர் ருபூபிய்யாவும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்தும் இவ்வகை தவ்ஹீதுடன் தெளிவுபடுத்தப்பட்டன என்றாலும், குறிப்பாக இறைத்தூதர்கள் அதிகம் கவனம் செலுத்தி மக்களைச் சீர்திருத்தியது இந்த தவ்ஹீதுல் உலூஹிய்யா எனும் வகையில்தான்.
மக்கள் தங்கள் வணக்கத்தை அல்லாஹ் அல்லாத வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்பதே தவ்ஹீதுல் உலூஹிய்யா ஆகும். அது அல்லாஹ்வுக்கு நெருக்கமான ஒரு வானவராக இருந்தாலும், அவன் அனுப்பிய ஒரு தூதராக இருந்தாலும், ஒரு நல்ல மனிதராக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் படைப்பாக இருந்தாலும், வணக்கத்தை இவற்றுக்குச் செய்யக் கூடாது. வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது. யார் இந்த வகை தவ்ஹீதைப் பாழ்படுத்துகிறார்களோ, இதற்குரிய கடமைகளைச் சரிவரச் செய்யவில்லையோ, அவர் இணைவைப்பாளரே. அவர் தவ்ஹீதுர் ருபூபிய்யாவையும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்தையும் ஏற்றுக்கொண்டு நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவர் ஒரு காஃபிரே; இறைநிராகரிப்பாளரே.
ஒருவர் அல்லாஹ் ஒருவனே படைப்பாளன், உரிமையாளன், அனைத்தையும் நிர்வகிப்பவன் என்றும், அவனுடைய பெயர்கள், பண்புகளை அல்லாஹ்வுக்குத் தகுதியான முறையில் நம்பிக்கையும் கொண்டிருக்க, அதே சமயம் அவன் அல்லாதவர்களை வணங்கவும் செய்கிறார் என்றால், அவர் தவ்ஹீதின் இரண்டு வகைகளை நம்பிக்கை கொண்டு எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை. எனவே ஒருவர் தவ்ஹீதுர் ருபூபிய்யாவையும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்தையும் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தும், சமாதிகளில் அடங்கியிருப்பவர்களிடம் பிரார்த்தனை செய்தாலோ, அவர்களை வணங்கினாலோ, அவர்களுக்கு நேர்ச்சை செய்தாலோ, அவர்களின் நெருக்கத்தைத் தேடினாலோ, அவர் ஓர் இணைவைப்பாளரே. அவர் இறைநிராகரிப்பாளராகவும் இருப்பதின் காரணமாக நிரந்தர நரகில் இருப்பார்.
அல்லாஹ் கூறுகிறான்: எவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குகின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடைசெய்துவிடுகின்றான்.அவன் செல்லக்கூடிய இடம் நரகம்தான்.(இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.(அல்குர்ஆன் 5:72)
தவ்ஹீதின் முக்கியத்துவம்
இந்தத் தூணின் மீதுதான் இஸ்லாம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் ஐந்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு முதலில் அல்லாஹ் ஒருவனையே வணங்குவது என்றுதான் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 19)
இறைத்தூதர்களின் அழைப்புடைய சாரமும், அவர்களது அழைப்பைத் திறந்து வைக்கிற சாவியும் தவ்ஹீதுதான். நிச்சயமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பவே செய்தோம். அவர்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டு விலகுங்கள் என்றே கூறினார்கள் என்று (அல்குர்ஆன் 16:36) அல்லாஹ் கூறுகிறான்.
இதற்காகத்தான் அல்லாஹ் நம்மைப் படைத்தான். ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை (அல்குர்ஆன் 51:56) என்று அல்லாஹ் கூறுகிறான். எப்படி நாம் அல்லாஹ்வை அறிந்துகொள்ளாமல் அவனை வணங்க முடியும்? அதற்குத்தான் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் கற்றுக்கொள்கிறோம். அதன் மூலமாகவே அவனை அறிந்துகொள்கிறோம்.
குர்ஆனில் இதுவே மிகப் பெரிய அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குர்ஆன் தொடங்குவது (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின் மூலம்) தவ்ஹீதைக்கொண்டே. அதுபோல் முடிவதும் (அல்இக்லாஸ், அல்ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மூலம்) தவ்ஹீதைக்கொண்டே. குர்ஆனுடைய மகத்தான வசனம் (ஆயத்துல் குர்சி 2:255) தவ்ஹீதுடைய கல்வியைப் போதிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் தமது நாளைத் தொடங்குவதே தவ்ஹீதைக்கொண்டுதான். தினசரி ஃபஜ்ருடைய சுன்னத்தான தொழுகையில் அல்காஃபிரூன் மற்றும் அல்இக்லாஸ் அத்தியாயங்களை ஓதுவார்கள். மேலும் நாளை முடிப்பதும் இந்த அத்தியாயங்களைக்கொண்டே. வித்ரு தொழுகையில் இவற்றைத் திரும்பவும் ஓதுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபியவர்கள் தமது கடைசி மூச்சு வரை கூட தவ்ஹீதையே வலியுறுத்தினார்கள். தமது நோயின்போதும் அவர்கள், யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக, அவர்கள் தங்கள் இறைத்தூதர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டார்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ) இது தவ்ஹீதுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
தவ்ஹீதின் பக்கம்தான் நபியவர்கள் முதலில் அழைத்தார்கள். இதற்காக மக்காவில் பதிமூன்று வருடங்கள் செலவழித்தார்கள். மக்களே, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்று சொல்லுங்கள்; வெற்றி பெறுவீர்கள் என்று பிரசாரம் செய்தார்கள். (முஸ்னது அஹ்மது 4/63)
தமது தோழர்களைப் பல கூட்டத்தார்களிடம் அனுப்பி வைக்கும்போது முதலில் தவ்ஹீதையே பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்கள். முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கும்போது, நிச்சயமாக நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களும் கிறித்தவர்களும் வாழ்கிற ஒரு தேசத்திற்குப் போகிறீர்கள். அவர்களுக்கு முதலில் தவ்ஹீதின் பக்கம் அழைப்புக் கொடுங்கள். அல்லாஹ்வையே வணங்கச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். (ஸஹீஹுல் புகாரீ)
ஒருவர் தவ்ஹீதுள்ள நிலையில் இறந்தால் நிச்சயம் அவர் சொர்க்கம் நுழைவார். ஒரு யூதச் சிறுவன் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட நிலையில் இறந்தபோது, இந்தச் சிறுவனை நரகிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று நபியவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ)
தவ்ஹீதின் சிறப்புகள்
தவ்ஹீதை விட நல்ல முடிவுகளைத் தரக்கூடிய அல்லது அதனை விட அதிகச் சிறப்புகள் கொண்ட ஒன்று இல்லவே இல்லை. காரணம், தவ்ஹீதின் சிறப்பே அது இம்மை, மறுமை இரண்டுக்கும் சிறந்ததை வழங்குகிறது.
தவ்ஹீதின் காரணமாக பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இது ஒரு பொதுவான சிறப்பு. நல்ல முடிவு.
அதனுடைய சிறப்புகளில் ஒன்று, அது இந்த உலகின் துயரங்களையும் மறுமையின் துயரங்களையும் போக்கி ஈருலகின் தண்டனைகளை விட்டும் பாதுகாக்கிறது.
தவ்ஹீதானது அதைப் பின்பற்றுகிறவருக்கு நேர்வழியைக் காட்டுகிறது. இம்மை மறுமையில் முழு பாதுகாப்பை வழங்குகிறது.
இதனைக்கொண்டு அல்லாஹ்வின் திருப்தியையும் கூலிகளையும் பெற முடியும். குறிப்பாக, முஹம்மது (ஸல்) அவர்களின் பரிந்துரையானது யார் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனத்தூய்மையுடன் சொன்னார்களோ அவர்களுக்கே. இவர்கள்தாம் பேறு பெற்றவர்கள்.
தவ்ஹீதைச் சார்ந்துதான் எல்லாச் செயல்களும் சொற்களும் அல்லாஹ்விடம் ஏற்கப்படுகின்றன. அவை வெளிப்படையாகவோ, மறைவானவையாகவோ எப்படி இருந்தாலும் சரியே.
ஒருவரின் உள்ளத்தில் தவ்ஹீது முழுமையாக அமைந்துவிட்டால், அல்லாஹ் அவரின் உள்ளத்தை ஈமான் மூலம் அலங்கரித்துவிடுகிறான். அவர் அதற்குப் பின்பு குஃப்ரையும் (இறைநிராகரிப்புக் கொள்கைகளையும்), ஃபிஸ்க்கையும் (அல்லாஹ்வுக்கு மாறு செய்வதையும்) வெறுப்பவராக மாறிவிடுகிறார். அவர் அல்லாஹ்வினால் வழிகாட்டப்பட்டவர்களின் அந்தஸ்தை அடைந்துவிடுகிறார்.
தவ்ஹீதானது ஒரு வணக்கசாலி எதிர்கொள்ளும் எதிர்பாராத கஷ்டங்களின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது. அவருடைய வலிகளைக் குறைக்கிறது. அவருக்குள் உள்ள தவ்ஹீதும் ஈமானும் அவருடைய உள்ளத்தை ஆறுதல்படுத்துகிறது. அவரின் ஆத்மா மனநிறைவு கொண்டு, அல்லாஹ் விதித்த சோதனைகளின்போது அதை ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்படுகிறது.
தவ்ஹீதின் மகத்தான சிறப்புகளில் ஒன்று, அது ஒரு வணக்கசாலியை அவர் படைப்புகளுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுவிக்கிறது. படைப்புகளைச் சார்ந்து இராமல், அவற்றுக்குப் பயந்து நடுங்காமல், அவற்றின் மீது நம்பிக்கை வைத்துக் கிடக்காமல், அவற்றின் திருப்திக்காகச் செயல்படாமல், சுயமரியாதையுடனும் உண்மையான கண்ணியத்துடனும் நடக்க வழிகாட்டுகிறது.
தவ்ஹீதின் மக்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்குவான். இந்த உலக வாழ்க்கையில் கண்ணியம், மரியாதை, உதவி ஆகியவற்றை அவன் வழங்குவான். அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவான். அவர்களின் காரியங்களை இலேசாக்குவான். அவர்களின் விவகாரங்களைச் சீர்படுத்துவான். அவர்களின் பேச்சுகளையும் செயல்பாடுகளையும் பலப்படுத்துவான்.
இந்த உலகத்தின் தீங்குகளை விட்டும் மறுமையின் தீங்குகளை விட்டும் தவ்ஹீதை நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு வழங்குவான். அவனுடைய நினைவில் அவர்களுக்கு மன அமைதியையும் ஆறுதலையும் வழங்குவான். இதற்குரிய உத்திரவாதம் குர்ஆனிலும் நபிவழியிலும் அடிக்கடி நன்கு அறியப்பட்ட விஷயமாகும்.
படைப்பின் நோக்கம்
ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்கவே தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
இந்த வசனம்தான் குர்ஆனில் படைப்பின் நோக்கத்தைச் சொல்கிற மிக வெளிப்படையான வசனம்.
இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட காரணம்
உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்என்று நாம்வஹ்யிஅறிவிக்காமலில்லை.(அல்குர்ஆன் 21:25)
(பூமியின் பல பகுதிகளிலும் வசித்திருந்த) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம்.(அத்தூதர்கள் அவர்களை நோக்கி,) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்.(அவனை வணங்குவதிலிருந்து உங்களை வழிகெடுக்கிற ஷைத்தான்களாகிய எல்லா) ‘தாகூத்’தைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்என்(று கூறிச் சென்)றார்கள்.அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழிகேட்டிலேயே நிலைத்திருந்தவர்களும் அவர்களில் உண்டு.ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (தூதர்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள்.(அல்குர்ஆன் 16:36)
வேதங்கள் இறக்கப்பட்ட காரணம்
அவன் வானவர்களுக்குவஹ்யிகொடுத்து, தன் அடியார்களில் தான் நாடியவர்களிடம் அனுப்பி வைத்து, வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்என்று எச்சரிக்கை செய்யுமாறு அவருக்குக் கட்டளையிட்டான்.(அல்குர்ஆன் 16:2)
ஒவ்வொரு நபியும் ரசூலும் வஹ்யி பெற்றுள்ளார்கள். அதுதான் ஒரு வேதத்தின் அடிப்படை. சில நேரங்களில் அது எழுதப்படும், சில நேரங்களில் எழுதப்படாது. இறைத்தூதர்கள் உள்ளுணர்வு மூலமாகவும் அதனைப் பெறுவார்கள். நாம் நான்கு வேதங்களையே (தவ்றாத், இன்ஜீல், ஸபூர், குர்ஆன்) பிரபலமாக அறிந்திருந்தாலும், இன்னும் பல எழுதப்பட்ட வேதங்கள் இருந்துள்ளன.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் வேறுபாடு
அவன்தான் உங்களைப் படைத்தவன்.(அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு.(அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு.நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் 64:2)
அமைதி மற்றும் மனநிறைவுக்குக் காரணம்
தவ்ஹீதைப் பின்பற்றுவது இம்மை, மறுமையின் அமைதிக்கும் மனநிறைவுக்கும் வழிவகுக்கிறது.
உண்மையாகவே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்முன்பு அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன.(ஏனென்றால், நபியே! நீர்) அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வின் பெயரை துதி செய்வதனால்தான் உள்ளங்கள்நிம்மதி அடையும். (அல்குர்ஆன் 13:28)
நமக்கு விடப்பட்ட முதல் அழைப்பு
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்களின் இறைவனையே வணங்குங்கள்.(அதனால்) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமுடையவர்களாக ஆகுவீர்கள்.(அல்குர்ஆன் 2:21)
குர்ஆனில் இடப்படும் முதல் கட்டளை இதுதான்.
நபி (ஸல்) அவர்கள் முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கும்போது, நிச்சயமாக நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களும் கிறித்தவர்களும் வாழ்கிற ஒரு தேசத்திற்குப் போகிறீர்கள். அவர்களுக்கு முதலில் தவ்ஹீதின் பக்கம் அழைப்புக் கொடுங்கள் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சாட்சி சொல்வதின் பக்கம் அவர்களை அழையுங்கள் என்று சொன்னதாக வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)
நம் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை
முஆத் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால்உஃபைர்என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதில் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்'' என்று பதில் கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 2856)
சுவர்க்கத்தில் நுழைய வழி
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியஇறைவன் அறவே இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர்என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரண்டுஉறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்கமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம் 44)
பாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகிலிருந்து பாதுகாப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தாம் செய்து வந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக (இறக்கும் தறுவாயில்) தம் வீட்டாரிடம் "நான் இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவஜக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்'' என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவருடைய வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரது உடலை ஒன்று திரட்டிய பின் "நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டான். அவர் "உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது'' என்று பதிலளித்தார். ஆகவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.(ஸஹீஹுல் புகாரீ 6480)
தவ்ஹீதுக்கு எதிரான ஷிர்க்கின் அபாயங்கள்
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைத்து வணங்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்.இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குகின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரிய பாவத்தையே பொய்யாகக் கற்பனை செய்கின்றார்கள்.(அல்குர்ஆன் 4:48)
தவ்ஹீதின் அறிவுப்பூர்வமான நிலை
முஸ்லிம் அல்லாதவர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு பொதுவான கேள்வி, கடவுள் இருக்கிறான் என்றால் அவன் ஒருவனாகத்தான் இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள என்ன காரணங்கள் உண்டு? இந்தக் கேள்வி முக்கியமானதுதான். இஸ்லாமிய இறைநம்பிக்கையின் கருத்தோட்டத்தைப் புரிந்துகொள்ள இதற்குப் பதில் அறிவது அவசியம்தான். இறைவனுடைய ஏகத்துவ நிலையை அரபுமொழியில் தவ்ஹீது என்பார்கள். இதுதான் குர்ஆனுடைய மையக் கருத்து. அனைத்து இறைத்தூதர்களும் சொன்ன செய்தி. குர்ஆனில் அத்தியாயம் 112இல் இறைவனுடைய இயல்பைப் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான்.(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன்.(அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.(ஆகவே, அவனுக்குத் தந்தையுமில்லை; சந்ததியுமில்லை.)(மேலும்,) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை.(அல்குர்ஆன் 112:1-4)
இந்த அத்தியாயத்தின் வெளிச்சத்தில் இறைவனுடைய ஒருமை நிலையைப் பல வழிகளில் விளக்க முடியும். இறைவனின் தனித்துவமான நிலையை இறைக்கோட்பாடு எனும் நிலையிலிருந்து தத்துவ விசாரணையுடன் முன்வைக்க முடியும்.
பகுத்தறிவான விளக்கம்
அழிவில்லாத படைப்பாளன் என்று ஒரே ஒருவன்தான் இருக்க முடியும் என்பதைப் பகுத்தறிவு ஏற்கிறது. அழிவில்லாத இன்னொருவனும் இருப்பான் என்பது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இல்லை. அழியக்கூடிய தெய்வங்கள் ஒன்றுக்கும் அதிகமானவையாக இருந்து வருவதால், அவன் மட்டும் ஒரே ஒருவன் என்ற தனித்தன்மையுடனே இருக்க முடியும். எனவே, அவனுக்கு மனைவியோ, குழந்தையோ இருக்க வாய்ப்பில்லை. அவன் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கவும் சாத்தியமில்லை. அழியக்கூடிய தெய்வங்கள் பல கூறுகளாக இருப்பதால், அந்த இறைவன் பல கூறுகளாகப் பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்க முடியும். இதே கோணத்தில் அவன் பல வேடங்களில் பிரிந்திருக்கிறான் என்றும் ஏற்க முடியாது. காரணம், அவனை இப்படிப் பகுப்பது அவனுக்கு வரம்புகளை நிர்ணயிக்கிறது. அது அவனது அழிவற்ற நிலையை மறுக்கிறது.
தனித்தன்மை
பிரபஞ்சத்தின் இயக்கம் தனித்தன்மையுடன் இருக்கிறது. குர்ஆன் கூறுவதுபோல், இறைவனுக்கு ஒப்பாக எதுவும் இல்லை என்ற தனித்தன்மையை பிரபஞ்சத்தை இறைவன் இயக்கி வருவதிலும் அறிய முடிகிறது. இந்தத் தனித்தன்மை இல்லாமல் போயிருந்தால் இறைவனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கிறார்கள் என்ற பொருளைக் கொடுத்துவிடும். பிரபஞ்சமும் தனித்தன்மையற்றதாக ஆகியிருக்கும்.
குர்ஆனுடைய வாதம்
இறைவன் ஒருவனாகவே இருக்க முடியும் என்ற வாதத்தைக் குர்ஆன் பின்வரும் வசனத்தின் மூலம் முன்வைக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்: வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிரவேறுகடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும்.(அல்குர்ஆன் 21:22)
இங்கு குர்ஆன் முன்வைப்பது என்னவென்றால், இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்திருந்தால், இதன் இயக்கத்திலுள்ள ஒழுங்கு சீர்குலைந்து இது அழிந்தே போயிருக்கும் என்பதாகும்.
தவ்ஹீதின் மகத்துவம்
அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, தங்களின் (அந்த) நம்பிக்கையுடன் (இணைவைத்து வணங்குதல் என்னும்) அநியாயத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாகப் பாதுகாப்பு உண்டு.அவர்கள்தாம் நேரான வழியிலும் இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 6:82)
அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊது (ரலி)கூறியதாவது:"எவர் நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர்'' என்னும் (6:82ம்) இறைவசனம் இறக்கப்பட்டபோது, நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார்?'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. "தங்கள் இறைநம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்துவிடாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.லுக்மான் அவர்கள் தம் மகனுக்கு, "என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்' என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13வது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?'' என்று பதிலளித்தார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 3360)
இந்த வசனம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி சொல்கிறது. அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபட்டு, தமது நம்பிக்கையில் இணைவைத்தலைக் கலந்திடாமல் இருப்பவர்கள். அதனை விட்டும் அவர்கள் தூரமாக இருப்பதினால், அவர்களுக்கு மறுமையில் நரகத்தை விட்டுப் பாதுகாப்பு நிச்சயம். அவர்கள்தாம் இந்த உலகில் நேர்வழியும் அடைந்தவர்கள்.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள்:இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான' அல்லது "அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்.(ஸஹீஹ் முஸ்லிம் 58)
மேலும் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் அவனைச் சந்திக்கிறாரோ, அவர் சொர்க்கம் நுழைவார். யார் அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ, அவர் நரகம் நுழைவார். (ஸஹீஹ் முஸ்லிம் 279)
இந்த அறிவிப்புகள் அனைத்தும் தவ்ஹீதின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் அடியானின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு இதுவே வழி. தவ்ஹீது அவருடைய பாவங்களை மன்னித்து, அவரின் தவறுகளைத் திருத்துகின்றது.
தவ்ஹீதின் வரலாறு
இறைத்தூதர்கள் தெளிவுபடுத்திய தவ்ஹீது
பிரிவினையின் தொடக்கம்
இறைத்தூதர்கள் தெளிவுபடுத்திய தவ்ஹீது
இறைத்தூதர்களில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் தொடங்கி, இறுதித்தூதரான முஹம்மது (ஸல்) வரையான எல்லாத் தூதர்களும் கொண்டு வந்த செய்தி தவ்ஹீதுதான்.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்என்று நாம்வஹ்யிஅறிவிக்காமலில்லை.(அல்குர்ஆன் 21:25)
(பூமியின் பல பகுதிகளிலும் வசித்திருந்த) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம்.(அத்தூதர்கள் அவர்களை நோக்கி,) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்.(அவனை வணங்குவதிலிருந்து உங்களை வழிகெடுக்கிற ஷைத்தான்களாகிய எல்லா)தாகூத்தைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்என்(று கூறிச் சென்)றார்கள்.(அல்குர்ஆன் 16:36)
தவ்ஹீதுர் ருபூபிய்யாவை பிரசாரம் செய்ய மட்டுமே அல்லாஹ் தன்னுடைய தூதர்களை அனுப்பினான் என்று நினைக்க சாத்தியமே இல்லை. மாறாக, தவ்ஹீதுல் உலூஹிய்யாவுக்காகவே அவர்களை அவன் அனுப்பினான். காரணம், தவ்ஹீதுர் ருபூபிய்யாவை மறுத்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே. அதிலும் அவர்களின் உள்ளங்கள் அதனை ஆழமாக அறிந்தே வைத்துள்ளன. அவர்கள்தாம் கர்வத்தால் வெளிரங்கத்தில் நிராகரித்து வருகிறார்கள்.
பிரிவினையின் தொடக்கம்
இணைவைப்பின் தொடக்கமானது இறந்துவிட்ட நல்ல முஸ்லிம்கள் சிலரை வரம்பு மீறிப் புகழ்ந்ததாலும் மரியாதை செய்ததாலும் ஏற்பட்டது. மக்கள் அவர்கள் மீதான பக்தியில் அவர்களுக்குச் சிலைகளை வடித்து அவற்றை வணங்கத் தொடங்கினார்கள். அல்லாஹ்விடம் கேட்பதுபோல் அவர்களிடமும் பிரார்த்தனை செய்தார்கள். இங்கு என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், மக்கள் அல்லாஹ்வை வணங்குவதுபோல் அந்த நல்லோர்களையும் வணங்கினார்கள் என்பதே.
மனிதனின் இயற்கையான உள்ளுணர்வு
அல்லாஹ் கூறுகிறான்: ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டு) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.அவர்களிடத்தில் நான் எந்த ஒரு பொருளையும் கேட்கவில்லை.மேலும், எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை.(நபியே! நீர் கூறும்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்.(அல்குர்ஆன் 51:56-58)
ஆக, ஒருவரின் ஆத்மாவை அது படைக்கப்பட்டபடியே விட்டுவிட்டால், அதனுடைய உள்ளுணர்வு (ஃபித்ரா) அல்லாஹ்வின் இறைமை நிலைக்குச் சான்று பகரும். அவனையே நேசித்து, அவன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடும். அவனுக்கு எதனையும் இணைவைக்காது. ஆனால் இந்த உள்ளுணர்வு (ஃபித்ரா) மனிதர்கள் மற்றும் ஜின்களிலுள்ள ஷைத்தான்களின் காரணமாகக் கெட்டுவிடுகிறது. அவர்கள் ஊசலாட்டங்களையும் குழப்பங்களையும் உண்டுபண்ணி அவற்றை அழகுபடுத்தியும் காட்டி ஏமாற்றிவிடுகிறார்கள். இதன் காரணமாக மனிதர்கள் தாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதிலிருந்து திசைதிருப்பப்பட்டுவிடுகிறார்கள்.
சிலை வணக்கத்தின் தொடக்கம்
தொடக்கத்தில் மனித சமுதாயம் ஒரே சமுதாயமாகவே இருந்தது. அனைவரும் அல்லாஹ் ஒருவனையே வணங்கி தவ்ஹீதில்தான் இருந்தார்கள். பின்பு ஷிர்க் எனும் இணைவைப்பு படிப்படியாக உருவானது. இதற்கு அல்லாஹ்வின் பின்வரும் கூற்று ஆதாரமாக உள்ளது:
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே சமுதாயமாகவே இருந்தார்கள்.பிறகு (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான்.(அல்குர்ஆன் 2:213)
மனிதர்கள் அனைவரும் (ஒரே மதத்தைப் பின்பற்றக்கூடிய) ஒரே சமுதாயத்தினராகவே (ஆரம்பத்தில்) இருந்தார்கள்.பிறகு (தங்கள் வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணையாகப் பொய் தெய்வங்களை வணங்கியதாலும், தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையினாலும் பல மதத்தினராகப்) பிரிந்துவிட்டார்கள்.(அல்குர்ஆன் 10:19)
இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்: நபி நூஹ் (அலை) அவர்களுக்கும் ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையே பத்து தலைமுறைகள் இருந்தன. அனைவருமே சத்திய மார்க்கத்தின் மீதே இருந்தார்கள். பிறகு அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள். எனவே, அல்லாஹ் இறைத்தூதர்களை நற்செய்தி சொல்பவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பினான்.
நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் பூமியில் இணைவைப்பு உருவானது. அந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணையாகத் தங்களின் சிலைகளை வணங்கினார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
உண்மையாகவே நாம் நூஹை அவருடைய சமுதாயத்தினரிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம்.(அவர், அவர்களை நோக்கி) ‘நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.அல்லாஹ்வை விட்டுவிட்டு (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது.(வணங்கினால்) துன்புறுத்தக்கூடிய நாளின் வேதனையை உங்களுக்கு (நிச்சயமாக வருமென்று) நான் அஞ்சுகிறேன்என்று கூறினார்.(அல்குர்ஆன் 11:25,26)
இணைவைப்பின் மூல வரலாறு
நூஹ் (அலை) அவர்களின் மக்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: (மற்றவர்களை நோக்கி,) ‘நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்.‘வத்’ (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள்.‘ஸுவாஉ’ ‘எகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 71:23)
இணைவைப்பின் தொடக்கமானது இறந்துவிட்ட நல்ல முஸ்லிம்கள் சிலரை வரம்பு மீறிப் புகழ்ந்ததாலும் மரியாதை செய்ததாலும் ஏற்பட்டது. மக்கள் அவர்கள் மீதான பக்தியில் அவர்களுக்குச் சிலைகளை வடித்து அவற்றை வணங்கத் தொடங்கினார்கள். அல்லாஹ்விடம் கேட்பதுபோல் அவர்களிடமும் பிரார்த்தனை செய்தார்கள். இங்கு என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், மக்கள் அல்லாஹ்வை வணங்குவதுபோல் அந்த நல்லோர்களையும் வணங்கினார்கள் என்பதே.
இறந்தவர்களை இடைத்தரகர்களாக எடுத்துக்கொள்தல்
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கின்றோம்.ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக. பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்துகொள்வீராக. எவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாங்கள் இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றார்கள்).அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விசயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்தமாட்டான்.(அல்குர்ஆன் 39:2,3)
(அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவர்கள்) தங்களுக்கு எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன், ‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்குப் பரிந்துரை செய்பவை‘ என்றும் கூறுகின்றார்கள்.(ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கி), ‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா? அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவற்றைவிட மிக உயர்ந்தவன்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 10:18)
சிலை வணங்கிகள் தங்களுக்குப் பாதுகாவலர்களாக (அவ்லியாக்களாக) அல்லாஹ்வுடன் படைப்புகளை எடுத்துக்கொண்டார்கள் என்று இந்த இரண்டு வசனங்களிலும் அல்லாஹ் நமக்குத் தெரிவிக்கிறான். அவர்கள் அல்லாஹ்வுடன் அப்படைப்புகளையும் வணங்கினார்கள். அவர்களிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள். அவர்களிடம் பயபக்தியை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்காக நேர்ச்சை செய்தார்கள். அவர்கள் மீது சத்தியம் செய்து, அவர்களுக்காக அறுத்துப் பலியிடவும் செய்தார்கள். இவை அனைத்தும் அவர்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் என்றும் நம்பினார்கள். அந்த அவ்லியாக்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினார்கள்.
அல்லாஹ்வை விட்டுப் பிறரிடம் பிரார்த்திப்பது இணைவைப்பே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: யார் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்த நிலையில் இறக்கிறாரோ, அவர் நரகத்தில் நுழைவார். (ஸஹீஹுல் புகாரீ 4490)