ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் இஸ்லாமிய வழி முறை அல்ல

1.    அல்லாஹ்வும் ரஸூலும் காட்டாத அனுமதிக்காத வழிமுறையாகும்.

2.    அல்லாஹ்வும் ரஸூலும் இதற்கு ஒரு வழியைக் காட்டியுள்ளார்கள். யார் ஓர் ஆட்சியாளருக்கு உபதேசம் செய்ய நாடுகின்றாரோ அவரின் குறைகளைப் பகிரங்கப்படுத்த வேண்டாம், அவருக்கு தன்மையாக அதனை எடுத்து வையுங்கள். நீங்கள் செய்த உபதேசத்தை அவர் ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்குரியதாகும். இல்லையென்றாலும் அவர் மீதுள்ள கடமை நிறைவேறியதாக ஆகிவிடும்.
-     அஹ்மத், தபரானீ, பைஹகீ

3.    இது யூதர்களினதும் கிரிஸ்தவர்களினதும் வழி முறையாகும். யார் ஒரு சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்ளைச் சார்ந்தவராவார் என நபியவர்கள் கூறினார்கள்.
-     அஹ்மத், அபூதாவூத்

4.    ஆர்ப்பாட்டங்கள் வெறுக்கத்தக்க விடயங்களை தோற்றுவிக்கின்றன.
•    இறை சட்டங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
•    ஊடகங்கள் குறித்த நிகழ்வைப் படம் பிடிக்கின்றன.
•    ஏசப்படுகின்றது
•    சாபம் இடப்படுகின்றது.
•    சத்தமிட்டு குரல் எழுப்பப்படுகின்றது.
•    பொருட்சேதங்கள் ஏற்படுகின்றன.
•    குழப்பங்கள் விளைவிக்கப்படுகின்றன.
•    பொருட்கள், கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன.
•    ஆண் பெண் கலப்பு நடைபெறுகின்றது.
•    மக்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
•    பாதை ஒழுங்குகள் மீறப்படுகின்றன.

5.    தாக்குதல் நடத்தப்படுகின்றது.
6.    இரத்தம் சிந்தப்படுகின்றது.
7.    கேலி, கிண்டல் செய்யப்படுகின்றது.
8.    தீங்குகள் விளைவிக்கப்படுகின்றன.
இத்தனை அம்சங்களும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவிற்கு முரண்பட்டுக் காணப்படுகின்றன.
மேற் கூறப்பட்ட நபிமொழிகள் அனைத்தும் இவ்வம்சங்களைத் தடுத்தே வந்துள்ளன.
உங்களில் யார் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவனுக்கு நாம் பெரும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
-     அல்புர்கான்: 19

 பாதைகளில் உட்காருவதை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன், நாம் அமர்ந்து கதைத்துக் கொண்டிருப்பது எங்களுக்கு மிக அவசியமாக இருக்கின்றது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். நீங்கள் பாதைகளில் உட்காருவதாக இருந்தால், அதற்குரிய உரிமைகளை நிறைவேற்றுங்கள் என்றார்கள். பாதைக்குரிய உரிமை யாது? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். பார்வையைத் தாழ்த்துவதும் தொந்தரவுகளைத் தடுத்துக்கொள்வதும் – பாதையில் செல்பவர்கள் விடயத்தில் சொல்லாலும் செயலாலும் நோவினையைத் தவிர்த்தல் – ஸலாத்திற்கு பதில் வழங்குவதும் நன்மையைக் கொண்டு ஏவுவதும் தீமையைக் கொண்டு தடுப்பதும் ஆகும் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹூ அன்ஹூ
-     புகாரி, முஸ்லிம், அஹ்மத்

மேலே நபியவர்கள் கூறியுள்ள ஒழுங்கு விதிகளுக்கமைய எல்லா விடயங்களையும் கடைபிடித்தவர்களாக ஆர்ப்பாட்டம் செய்வர்கள் பார்வையைத் தாழ்த்தி, ஸலாதிற்கு பதிலளித்துக் கொண்டு, தீங்கைத் தடுத்துக் கொண்டு, நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொண்டு!!! போராடுவோம் போராடுவோம் எமது உரிமைகள் கிடைக்கும் வரைப் போராடுவோம்!!! என்று கூற முடியுமா???

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கூறுகின்றான்.
-     அந்நூர்: 30,31

அலியே! பார்வையைத் தொடராதே, நிச்சயமாக முதலாவது – பார்வை – உனக்கு குற்றமில்லை, இரண்டாவது உனக்கு குற்றமாகும்.
-     ஹாகிம்

ஆண் பெண் விடயமாக அல்லாஹ் நமக்கு அறிவித்துத்தந்துள்ள சட்டங்களை அந்நிஸா: 23, அந்நூர்: 27-31, அல்அஹ்ஸாப்: 32,33,53 போன்ற வசனங்களில் கண்டு கொள்ளலாம்.

இப்படி பல வசனங்களில் அல்லாஹ் மிகவும் தெளிவாக இச்சட்டங்களைக் குறிப்பிட்டுள்ளான். விசேடமாக அந்நூர், அல்அஹ்ஸாப் போன்ற ஸூராக்களை பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
பெண்களைப் பாதையில் இறக்கலாமா?

முக்கியமான தேவைகள் இன்றி பெண்களை பாதையில் இறக்குவதை இஸ்லாம் ரோஷமற்ற செயலாக சித்தரிக்கின்றது. ஆண்களுடன் பெண்களை கலந்திருக்க அனுமதிப்பவனை தையூஸ் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். அந்நிய ஆணுடன் கலந்திருப்பதற்கு அனுமதிப்பவன் மற்றும் விபச்சாரத்திற்கு வழி அமைக்கும் செயல்களைச் செய்ய அனுமதிப்பவன் தான் தையூஸ் என்று அழைக்கப்படுவான்.

மூவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கிவிட்டான்: தொடர்ச்சியாக மதுபானம் அருந்துபவன், பெற்றோரை நிந்திப்பவன், தன் குடும்பத்தில் அசிங்கம் நடப்பதை அங்கீகரிக்கும் தையூஸ் என ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரழியல்லாஹு அன்ஹு
-     அஹ்மத், நஸாஈ

மற்றும் இவர்கள் ரோஷமற்றவர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: உங்கள் பெண்கள் வெளியிலே செல்லும் விடயத்தில் நீங்கள் ரோஷம் அடைய வேண்டாமா? நிச்சயமாக உங்கள் பெண்கள் சந்தைகளில் திரிவதாக எனக்கு செய்தி எட்டியது எனக் கூறுகின்றார்கள்.
-     அஹ்மத்

முகீரத் பின் ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஃத் பின் உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாகக் கூறுகின்றார்கள்: என் மனைவியுடன் யாரையாவது ஓர் ஆணைக் கண்டால் எவ்வித மன்னிப்புமின்றி நான் அவனை வெட்டிவிடுவேன் என்று கூறிய செய்தி நபியவர்களுக்கு எட்டிய போது நீங்கள் ஸஃதுடைய ரோஷத்தைக் கண்டு ஆச்சரியமடைகிறீர்களா? நான் அவரைவிட ரோஷமுடையவன் என்னைவிட அல்லாஹ் ரோஷமுடையவன் என்று கூறினார்கள்.
-     புகாரி, முஸ்லிம்

இவ்வாறான விடயங்களுக்குத் தவறான வியாக்கியானம் கற்பிப்பவர்கள் வைக்கும் வாதங்கள்:

1.    ஆர்ப்பாட்டம் கூடாது தான் ஆனால் போராட்டம் கூடும் என்கின்றோம் என்பார்கள்.
2.    பெண்களை பாதையில் இறக்கக் கூடாது என்றால்! நபியவர்கள் காலத்தில் பெண்கள் ஜிஹாதுக்கு சென்றார்கள் என்பார்கள்.
3.    பெண்களும் சென்றால் தான் அது உரிமைக் குரலாக இருக்கும் என்கின்றார்கள்.
4.    நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேறு வழி இல்லை என்பார்கள்.
5.    இது மக்கள் பலம் ஜனநாயகம் என்பார்கள்.

மறுப்பு:

ஆர்ப்பாட்டம் மற்றும் உரிமைப் போராட்டம் என்று வித்தியாசமாக மக்களுக்கு விளக்க முனைகின்றார்கள். போராட்டத்தின் முதல் கட்டமே ஆர்ப்பாட்டம் என்று தெரியாதவர்கள் போன்று காட்ட நினைக்கின்றார்கள். போராட்டத்தின் முதல் கட்டம் ஆர்ப்பாட்டமாகவும் இரண்டாவது கட்டமாக ஆயுதமாகவும் இருக்கும் என்பது இவர்களுக்குத் தெரியாமல் இல்லை. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றார்கள். தாம் செய்யும் எல்லா விடயங்களையும் இஸ்லாமிய மயப்படுத்த நினைக்கின்றார்கள்.

போராடுவோம்! போராடுவோம்! எமது உரிமையைப் பெறும் வரைப் போராடுவோம்! என்ற இந்த கோஷத்திற்கும், அரசே! அரசே! எமக்களித்த வாக்கை நிறைவேற்று என்ற இந்த ஆர்ப்பாட்ட கோஷத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? அதிலும் ஆண்கள் பெண்கள் கலந்திருக்கின்றார்கள், கோஷமிடுகின்றார்கள், பதாதைகளைத் தூக்கிச் செல்கிறார்கள், மறியல் போராட்டம் செய்கிறார்கள். 

இப்படியெல்லாம் இருக்கும் அதேவேளை போராட்டத்திற்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன, எதிர்ப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ன வித்தியாசம்???
பெண்கள் நபியவர்கள் காலத்தில் ஜிஹாதுக்குச் சென்றார்கள் என்பது உண்மை தான், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் செல்லும் பெண்கள் போன்று ஆண்களுடன் கலந்து சப்தமிட்டுக் கொண்டு சென்றார்கள் என்று இப்பெண்களுக்கு அவர்களை ஒப்பாக்கிக் காட்ட நினைக்கின்றார்கள். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து செல்பவர்கள் ஜிஹாதிற்கு சென்றவர்கள் போன்று ஒழுக்கம் பேணி இறைவன் பெண்களுக்கென காட்டியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் செல்வார்களா? அல்லது நபியவர்கள் பாதையில் பெண்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்று சில ஒழுக்க விழுமியங்களைச் சொன்னார்களோ அப்படித்தான் இப்பெண்கள் செல்வார்களா?

வேடிக்கை என்னவென்றால் தாம் செய்யும் அசிங்கமான இஸ்லாத்தை அவமதிக்கும் செயலைச் செய்துவிட்டு அதனை சமாளிப்பதற்காக இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஜிஹாதை இதற்கு ஆதாரமாகக் காட்டுவது தான். இவர்களின் இதைப் போன்ற எத்தனையோ அம்சங்களுக்கு இப்படித்தான் ஆதாரம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜிஹாதிற்கு சென்ற பெண்கள் ஜிஹாதிற்கு செல்லும் போது கடை பிடித்த ஒழுக்கங்கள்
மஹ்ரம் இன்றி செல்ல மாட்டார்கள்.

சப்தமிட்டுக் கொண்டு கோஷமிட்டுக் கொண்டு செல்லமாட்டார்கள்.

அந்நிய ஆண்களுடன் கலந்திருக்க மாட்டார்கள்.

அந்நிய ஆண்களைத் தொடமாட்டார்கள் – நிர்ப்பந்த நிலையைத் தவிர ஜிஹாதில் காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்திரம் தேவைப்பட்டாலே தவிர தொடமாட்டார்கள் -

பாதையில் கேலி கிண்டல் செய்யமாட்டார்கள்.

பார்வையைத் தாழ்த்திச் செல்வார்கள். – நிர்ப்பந்த நிலையைத் தவிர ஜிஹாதில் காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்திரம் தேவைப்பட்டாலே தவிர பார்க்கமாட்டார்கள் -

எல்லா சந்தர்ப்பங்களிலும் செல்லமாட்டார்கள். – நிர்ப்பந்த நிலையைத் தவிர ஜிஹாதில் காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்திரம் தேவைப்பட்டாலே தவிர செல்லமாட்டார்கள் -

தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வார்கள்.

பொதுவாக ஜிஹாதிற்கு பெண்கள் செல்வதற்கு நபியவர்கள் அனுமதி வழங்கவில்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களிடத்தில் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஜிஹாதை நாம் அமல்களில் சிறந்ததாகக் காண்கின்றோம், நாம் ஜிஹாத் செய்யலாமா? என வினவ, அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: இல்லை, உங்களுக்கு ஜிஹாதிலே மிகச்சிறந்தது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் என்றார்கள்.
-     புகாரி

மற்றுமோர் அறிவிப்பில் : அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? எனக் கேட்டார்கள், அதற்கு நபியவர்கள் ஆம் அவர்கள் மீது ஜிஹாத் கடமையாகும் அதிலே யுத்தம் இல்லை, ஹஜ்ஜூம் உம்ராவுமாகும் என்றார்கள்.
-     அஹ்மத்

இது தான் இஸ்லாம் கூறும் பெண்களுக்கான ஜிஹாதாகும். சில சமயங்களில் பெண்கள் கலந்து கொண்டாலும் மேற்சொல்லப்பட்டுள்ள ஒழுங்குகளைப் பேணியே கலந்து கொண்டார்கள்.

ஆர்ப்பாட்டங்களில் பெண்களின் நிலை மேற்சொல்லப்பட்டுள்ள ஒழுக்கங்களைத் தாண்டியதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவைகளை நடைமுறை ஆர்ப்பாட்டங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பெண்களை இஸ்லாம் அனுமதித்த காரணங்களுக்காக இன்றி வெளியிறக்கக் கூடாது எனும் போது அவர்களும் கோஷமிட்டு, பதாதைகள் தூக்கிச் சென்று தான் உரிமைகளைப் பெற வேண்டும் என்பது கேலிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

எமது உரிமைகளை வென்றெடுக்கத்தான் போராடுகின்றோம் என்றால், இறைவனின் சட்டங்கள் எதற்காக? இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமது உரிமைகளை இறைவனிடம் கேட்கச் சொல்கின்றார்கள், இவர்களோ இல்லை முடியாது நாம் ஆட்சியாளர்களிடம் எதை இழந்தாவது எச்சட்டத்தை மீறியாவது பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் காபிராக இருந்தாலும் எமது உரிமைக்காகப் போராடுவோம் என்று உரிமைக் குரல் விடுக்கின்றார்கள். குர்ஆன் ஸுன்னா என்று நாவால் மாத்திரம் கூறிக் கொண்டு தங்களின் சுய சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள்.

இஸ்லாத்திற்கு சம்பந்தமற்ற ஜனநாயகத்தை இஸ்லாமிய போராட்டம் போன்று மக்களுக்கு சித்தரித்து கொண்டிருக்கின்றார்கள். ஜனநாயகம் என்பது எவ்வகையில் இஸ்லாத்திற்கு சம்பந்தப்படுகின்றது? அதிகாரங்களையும் அடக்கு முறைகளையும் அடாவடித்தனங்களையும் தீய அம்சங்களையும் தன்னகத்தே வைத்த நிலையில் காலத்திற்கு காலம் மக்களிடம் கையேந்தி ஓட்டுப்பிச்சை வாங்கிய பின் அதிகாரத்தைப் பெற்ற நிலையில் மக்களின் சொத்துக்களைச் சூறையாடுவதும் அவர்களின் உயிர்களுக்கு பங்கம் விளைவிப்பதும் தான் இவர்களின் பணியாகும். சுருக்கமாகச் சொன்னால் இஸ்லாம் எவைகளை எல்லாம் தடுத்துள்ளதோ அத்தனை அம்சங்களையும் அரங்கேற்றக் கூடிய ஒன்றை உரிமைக் குரல் மக்கள் பலம் என்று கூறி அதற்காக வக்காலத்து வாங்கும் நிலை தான் ஜனநாயக கோட்பாடாகும். இவ்வளவு பாரதூரமான ஒன்று எப்படி இஸ்லாத்திற்கு சம்பந்தப்பட முடியும் என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இத்தனையும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்று கூறிக் கொண்டே நடைமுறைப்படுத்துவதனை நாம் அவதானிக்க முடியும். மேலே நாம் குறிப்பிட்டுள்ள அத்தனை நபி மொழிகளும் ஓர் இஸ்லாமிய ஆட்சியாளர் விடயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு கொடுங்கோனாக இருந்தால் கூட அவர் விடயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் தெளிவாக இஸ்லாம் கூறுகின்றது. இவைகளை எல்லாம் மறுத்த நிலையில் தான் அத்தனையையும் அங்கீகரித்துக் கொண்டு இவைகளை நடை முறைப்படுத்துவதனை நாம் கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

எனவே, அநியாயம் உரிமை மறுப்பு என்று எவ்வகையான நிலைமை நமக்குத் தோன்றினாலும் அச்சந்தர்ப்பங்களில் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா நிழலில் இருந்து அவைகளை நாம் அவதானிக்க வேண்டும். இஸ்லாமிய வட்டத்திற்குள் நாம் செயல்பட வேண்டும். இஸ்லாத்திற்கு முரணான எல்லா அம்சங்களையும் நிராகரிக்க வேண்டும். அவைகள் யார் மூலமாக வைக்கப்பட்டாலும் பரவாயில்லை வஹியை ஏற்று நாம் செயல்படுவதில் தான் நமக்கு வெற்றி உண்டு என்பதனைக் கவனத்தில் கொள்வோமாக!

- அஷ்ஷெய்க் யாஸிர் ஹமீட் பிர்தவ்ஸி
Previous Post Next Post