ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள் ஆகிய மூன்று தலைமுறையினரை குறிப்பதற்கும், குறிப்பாக ஸஹாபாக்களை முன்னிலைப்படுத்துவதற்கு இஸ்லாமிய வழக்கில் ஸலஃப்புகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
அகீதா, இபாத்துகள், வியாபாரம், அணிகலன்கள், உணவுகள், நடைமுறைகள் ஆகிய அனைத்து விஷயங்களிலும், நபி அவர்களிடமிருந்து மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்கள், எப்படி நடைமுறை படுத்தினார்கள் என்று பார்ப்பது மன்ஹஜ் ஸலஃப் ஆகும்.
ஆகவேதான் மேலே நாம் குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் நபி அவர்களின் ஹதீஸ்களோடு, ஸஹாபாக்களின் விளக்கத்தையும், நடைமுறையையும் சேர்த்து பதியப்பட்டிருப்பதை குர்ஆன் விரிவுரைகளிலும், ஹதீஸ் கிரந்தங்களிலும் காணலாம்.
( உதாரணத்திற்கு இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்தில் இருபெருநாள் சட்டங்கள் எனும் பாடத்தில் ஒருவருக்கு பெருநாள் தொழுகை தவறி விட்டால் அவர் பெருநாள் தொழுகை போன்று இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என பாட தலைப்பிட்டு அதற்கு ஆதாரமாக நபி அவர்களின் ஹதீஸை பதியாமல், அனஸ் ரலி அவர்களின் (அஸர்) நடவடிக்கையை பதிவு செய்துள்ளார்கள்.)
ஸஹாபாக்களின் விளக்கமும், நடைமுறையையும் அவசியம் ஏற்க வேண்டும் என்பதற்காக ஆதாரங்கள்.
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
அன்னிஸா அத்தியாயம் – 4:115
இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்கு தெளிவான தன் பின்னர் எவர் தூதருக்கு மாறு செய்து, முஃமின்களின் வழியல்லாத (வேறு) வழியை பின்பற்றுவாரோ அவரை நாம் அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பி விடுவோம். அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.
இவ்வசனத்தில் அல்லாஹ், நேர்வழியை பற்றி கூறும் போது இரண்டு விஷயங்களை கூறுகிறான்.
1 – தூதரின் வழி
2 – முஃமின்களின் வழி
முஃமின்களின் வழிக்கு மாற்றமாக செல்வதும் ஒருவரை வழிகேட்டின் பக்கம் கொண்டு சென்று நரகத்தில் தள்ளும் என்கிறான்.
முஃமின்கள் யாரை குறித்து கூறப்பட்டுள்ளது, முஃமின்கள் என்ற நிலை அடைந்தவர்கள் இவ்வசனம் இறங்கும் போது யாராக இருந்தார்கள்?
ஸஹாபாக்கள் தான் இருந்தார்கள். அவர்களை குறித்து தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்துவதற்கு நபி அவர்களின் ஹதீஸை பாருங்கள்.
நபி அவர்கள் கூறினார்கள், என்னுடைய உம்மத் 73 கூட்டமாக பிரியும். அனைத்தும் நரகத்திற்கு செல்லும் ஒரேயொரு கூட்டத்தாரை தவிர. அவர்கள் யார் என நபி அவர்களிடம் ஸஹாபாக்கள் கேட்ட போது நபி அவர்கள் பதிலளித்தார்கள், நானும் எனது ஸஹாபாக்களும் எதன் மீது உள்ளோமோ அவர்களே வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டத்தினர் என்றார்கள். ( திர்மிதி)
இந்த ஹதீஸில் நபி அவர்கள் தன்னோடு ஸஹாபாக்களையும், சேர்த்து கூற வேண்டிய அவசியம் என்ன?
1 – ஸஹாபாக்கள் நபி அவர்களிடமிருந்து மார்க்கத்தை நேரடியாக கற்றார்கள்.
2 – அல்குர்ஆன்,சுன்னாவில் வந்துள்ள தகவல்கள் எங்கே இறங்கியது, யார் குறித்து பேசுகிறது, என்ற காரணங்களை அறிந்தவர்கள்.
3 – அல்குர்ஆன், சுன்னாவில் தெளிவு, சந்தேங்களுக்கு நேரடியாக நபி அவர்களை அணுகினார்கள்.
மார்க்கத்தை விளங்குவதற்கு ஸஹாபாக்களின் விளக்கமும், நடைமுறையும் மிக அவசியமாக இருக்கிறது. ஆகவேதான் நேர்வழியில் இருப்பவர்கள் ஸஹாபாக்களின் விளக்கத்தை ஏற்று பின்பற்றினார்கள்.
இமாம் அஹமத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்,
أُصولُ السُنة عندنا التمَسُك بما كانَ عليهِ أصحابُ رسول الله- صلى الله عليهِ وسلم- والإقتداء بهم
எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படை என்பது, அல்லாஹ்வின் தூதர் அவர்களின் ஸஹாபாக்கள் எதன்மீது இருந்தார்களோ அதுவும், அவர்களை பின்பற்றுவதுமே ஆகும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகெட்ட கூட்டங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஸஹாபாக்களின் விளக்கத்தை பின்பற்றாதவர்களாகவும், சுய விளக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாகவே இருப்பார்கள்.
உதாரணத்திற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கவாரிஜ்களிடம் பேச செல்லும் போது கூறினார்கள், உங்களிடம் ஒரு ஸஹாபியும் இல்லையே என்றார்கள்.
ஸலஃப்பிய்யா என்பது ஸஹாபாக்களின் கூட்டமைப்பை பற்றி பிடிப்பதும், அதில் அவர்களை பின்பற்றி நடப்பதுமே ஆகும். அல்லாஹ்வே ஸஹாபாக்களை உறுதியான முறையில் பின்பற்ற சொல்கிறான். பார்க்க அல்குர்ஆன் அத்தியாயம் அத்தவ்பா வசனம் 100 : முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
- மௌலவி ஹசன் அலி உமரி