ஜும்ஆ தொழுகைக்கு 40 பேர் இருக்கவேண்டுமா?

ஜும்ஆ தொழுகைக்கு 40 பேர் இருக்கவேண்டும். அவ்வாறில்லாவிடின்  முதலில் ஜும்ஆ தொழுதுவிட்டு பிறகு லுஹர் தொழவேண்டும்" என கூறி அப்படி செய்தும் வருகிறார்கள்.

ஒரு நாளைக்கு (பர்ளான தொழுகை) ஐவேளை தொழ வேண்டும் என்று இஸ்லாம் கடமையாக்கியுள்ளதே தவிர ஆறு நேர தொழுகையை கடமையாக்கவில்லை. இவர்கள் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு லுஹர் தொழுவதன் மூலம் ஆறு நேர தொழுகையை வெள்ளிக்கிழமையன்று ஏற்படுத்தியுள்ளார்கள்.

"ஜும்ஆ தொழுகைக்கு 40 பேர் இருந்தாக வேண்டும்" என்று சிலர் சொல்வதால் இவ்வாறு இவர்கள் நடந்து கொள் கிறார்கள். 

"ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?" என்பதை ஆராய்ந்து பார்த்தால்.....!

கஃப் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சப்தத்தைக் கேட்டால், 

"சஹ்த் இப்னு சுராரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக" என கூறுவார்கள். இதனை கவனித்த அவருடைய மகன் "காரணம் என்ன?" என்று கேட்டபோது, "சுராரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் முதன் முதலில் பனூ பயாலாவின் கோத்திரத்தாரின் நகீஹுல் கலுமாத் எனும் இடத்தில் ஜும்ஆ தொழுகை நடாத்தினார்" என்று கூறினார்கள். "அன்றைய தினம் நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்" என மகன் கேட்டபோது, 

"நாங்கள் 40 பேர் இருந் தோம்" என கூறினார். (நூல் அபூதாவூத்)

இப்னு மாஜாவில் வரக் கூடிய இன்னு மொரு அறிவிப்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவாஸல்லம்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரமுன்பு இந்த ஜும்ஆ நடந்ததாக உள்ளது. 

இந்த சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டுதான், 

"40 பேருக்குக் கூடுதலாக இருந்தால் ஜும்ஆ தொழ வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால் லுஹர் தொழ வேண்டும்" என்கிறார்கள்.

இந்த சம்பவத்தை சரிவர கவனிக்காமல் இவர்கள் தவறாக செயல்படுகிறார்கள். இது நபியவர்களின் ஹிஜ்ரத்துக்கு முன்பு நடந்த சம்பவம். அன்றைய நேரத்தில் முஸ்லிம்களின் வளர்ச்சி அதிகமிருக்க வில்லை. அப்படியான ஒரு கட்டத்தில் ஜும்ஆ கடமையாகிய நிலையில் நகீஹுல் கலுமாத் எனும் இடத்தில் அப்போது அங்கு இருந்த முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து ஜும்ஆ தொழுகிறார்கள். அந்த ஜும்ஆவில் பங்கு பெறக் கூடிய அளவில் இருந்த மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை நாற்பது பேர்தான். இதைதான் இச்சம்பவம் தெளிவாக கூறுகிறது. 

"அன்றைய நாளில் நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்" என்ற கேள்வியையும், பதிலையும் கவனித்துப் பார்த்தால் நாற்பது பேருக்கு அதிகமாக அல்லது குறைவாக இருந்திருந்தால் அது பற்றியும் அவர் கூறியிருப்பார். இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்த நிலையைத்தான் அந்த சஹாபி தெளிவாக விளக்கப்படுத்துகிறார். இங்கு ஜும்ஆவை நிறைவேற்றுவதற்கு எத்தனை பேர் இருக்கவேண்டும் என்ற பிரச்சினை விளக்கப்படுவில்லை.

"ஜும்ஆ தொழுகையின் போது எத்தனை பேர் இருந்தீர்கள்?" என்றுதான் கேட்கப்பட்டது.

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் "தல்கீசுல் கபீர்" எனும் நூலில்  ஜும்ஆவுக்கு 40 பேர் அவசியம் என்பதற்கு இதில் எந்த ஆதாரமுமில்லை என்பதை விளக்கப்படுத்துகிரார்கள். (பார்க்க பாகம் 2, பக். 56)

அடுத்து நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த பின் ஒரு முறை ஜும்ஆ தொழுகை நடாத்தி கொண்டி ருக்கும்போது சிரியா நாட்டிலிருந்து ஓர் (வியாபார) ஒட்டகக் கூட்டம் வந்தது. உடனே மக்கள் (பள்ளியிலிருந்து அந்த வியாபார கூட்டத்தை நோக்கி) கலைந்து சென்றார்கள். பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்கு பன்னிரெண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அப்போது பின்வரும் குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

அவர்கள் வியாபாரத்தையோ வேடிக் கையையோ கண்டால் உம்மை நிற்க வைத்துவிட்டு அவற்றை நோக்கி சென்று விடுகின்றனர். (62:11) (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு), (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஜும்ஆ நடந்து கொண்டிருக்கும்போது பள்ளியில் இருந்தவர்கள் வியாபாரக் கூட்டத்தை நோக்கி வெளியேறி சென்ற பின்பு எஞ்சியிருந்தவர்கள் பன்னிரெண்டு பேர் மட்டுமே. இவர்களுக்கு நபியவர்கள் ஜும்ஆ நடாத்தினார்கள். 

"40 பேருக்குக் குறைவாக இருக்கிறீர்கள், எனவே ஜும்ஆ செல்லாது இப்போது லுஹர் தொழ வேண்டும்" என நபியவர்கள் கூறவுமில்லை. அல்லாஹ் கட்டளையிடவுமில்லை. ஜும்ஆ நேரத்தில் வெளியேறியவர்களை கண்டித்துதான் இந்த வசனங்கள் அருளப்பட்டன.

ஹிஜ்ரத்துக்கு முன்பு நடந்த கஃப் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் சம்பவத்தை (தவறாக விளங்கி) ஆதாரமாகக் காட்டும் இவர்கள் ஹிஜ்ரத்திற்குப் பின்பு நடந்த ஆதாரத்தை கவனிக்காமல் விட்டு விட்டார்கள். ஆகவே ஜும்ஆ தொழுகைக்கு 40 பேர் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே  ஊரிலுள்ளவர்கள் முதலில் ஜும்ஆ தொழுகை நடாத்துவது மட்டுமே போதுமானது. அதன் பிறகு லுஹர் தொழ வேண்டும் என்ற அவசியமில்லை.

அல்லாஹ்வும் அவனது தூதரும் போடாத நிபந்தனைகளை இவர்களாக ஏற்படுத்தி பாவத்தையே சம்பாதிக்கிறார்கள். இந்த தவறை அவர்கள் உணரவேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

(இம்தியாஸ் யூஸுப் ஸலபி)

أحدث أقدم