கவாரிஜிய பிரிவுகள்

கவாரிஜ்‌ என்ற சொல்‌ காரிஜ்‌ என்ற மூலச்‌ சொல்லில்‌ இருந்து தோன்றியதாகும்‌. வெளியேறியவன்‌ என்று பொதுவாக கருத்துத்‌ தரும்‌ இச்சொல்‌ தலைவரின்‌
கட்டுப்பாட்டை விட்டு வெளியேறிச்‌ சென்று தலைமைத்துவத்துக்கு எதிராக கிளர்ச்சி
செய்பவரைக்‌ குறிக்கிறது. “பாவம்‌ செய்பவன்‌ காபிராவான்‌ என்ற கருத்தின்‌ அடிப்படையில்‌ பெரும்பான்மை முஸ்லிம்‌ சமூகத்தைவிட்டும்‌ பிரிந்து அதற்கு எதிராக செயற்படும்‌ பிரிவினர்‌” கவாரிஜ்‌ எனப்படுகின்றனர்‌.

தோற்றமும்‌ வளர்ச்சியும்‌:

கலீபா அலி(ரழி) அவர்களுக்கும்‌ ஷாம்‌ தேச கவர்னர்‌ முஆவியா (ரழி) அவர்களுக்கும்‌ இடையே உஸ்மான்‌ (ரழி)அவர்களின்‌ கொலை தொடர்பாக ஏற்பட்ட
கருத்து வேறுபாட்டினால்‌ உருவான ஸிப்பீன்‌ யுத்தத்திற்கு தீர்வு காண்பதற்காக இரு தரப்பிலிருந்தும்‌ இரு ஸஹாபாக்கள்‌ நடுவர்களாகத்‌ தெரிவு செய்யப்பட்ட போது அலி(ரழி) அவர்களின்‌ படையில்‌ இருந்த ஒரு பிரிவினர்‌ “அல்லாஹ்‌ தீர்ப்பு
வழங்கிய விடயத்தில்‌ நடுவர்களை நியமித்து அவர்களின்‌ தீர்ப்பை ஏற்றுக்‌ கொள்வது அல்லாஹ்வின்‌ தீர்ப்பைப்‌ புறக்கணிப்பதாகும்‌ எனக்கூறி “தீர்ப்புக்‌ கூறும்‌ அதிகாரம்‌ அல்லாஹீவுக்கன்றி வேறெவர்க்கும்‌ இல்லை” என்ற கோஷத்துடன்‌ நடுவர்களின்‌
தீர்ப்பை நிராகரித்து தொடர்ந்தும்‌ முஆவியாவுக்கு எதிராகப்‌ போராடுமாறு அலி(ரழி) அவர்களை வலியுறுத்தினர்‌.

அதைக்‌ கேட்ட அலி(ரழி) அவர்கள்‌ “உண்மையான வார்த்தை பிழையாக நோக்கப்படுகிறது” எனக்கூறி அவர்களின்‌ வாதத்தை மறுத்துரைத்தார்கள்‌

அப்போது அவர்கள்‌ அப்துல்லாஹ்‌ இப்னு வஹப்‌ அர்ராஸிபி என்பவரைத்‌ தமக்கு அமீராக நியமித்துக்‌ கொண்டு அலி(ரழி) அவர்களை விட்டுப்‌ பிரிந்து சென்று அவர்களுக்கு எதிராகப்‌ போர்தொடுக்க முனைந்ததன்‌ மூலம்‌ கவாரிஜ்‌ என்ற பிரிவு
தோற்றம்‌ பெற்றது.

இப்பிரிவினர்‌ பல்வேறு காரணங்களுக்காக பல பெயர்களில்‌ அழைக்கப்படுகிறார்கள்‌.

அலி(ரழி), முஆவியா(ரழி) ஆகியோருக்கிடையே தீர்வுகாண நடுவர்கள்‌ நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்தமையினால்‌ முஹக்கிமா என்றும்‌, ஹரூரிய்யா என்ற இடத்தில்‌ ஒன்று கூடி கலந்தாலோசித்தமையினால்‌ ஹரூரிய்யா என்றும்‌ நகர்வான்‌ என்ற இடத்தில்‌ அலி(ரழி) அவர்கள்‌ இவர்களுக்கு எதிராக யுத்தம்‌ தொடுத்தமையினால்‌
அஹ்லு நகர்வான்‌ என்றும்‌, அநீதியை ஒழிப்பதற்காக அல்லாஹ்வுடன்‌ தம்‌ உயிரை விலை பேசியவர்கள்‌ என்ற அர்த்தத்தில்‌ அஷ்ஷிராத்‌ என்றும்‌ இவர்கள்‌ பற்றிய
நபியவர்களது தீர்க்கதரிசன செய்தியில்‌ அல்மாரிகா (மார்க்கத்தை விட்டும்‌ விரைந்து வெளியேறுபவன்‌) என்று குறிப்பிடப்பட்டுள்ளதனால்‌ அல்மராரிகா எனறும்‌ அழைக்கப்படுகின்றனர்‌.

கவாரிஜ்கள்‌ ஆரம்பத்தில்‌ அல்லாஹ்வின்‌ தீர்ப்புக்கு மாறாகத்‌ தீர்ப்பளிப்பது குற்றம்‌ என்ற அடிப்படையிலேயே தமது முரண்பாட்டை வெளிப்படுத்தினர்‌. பிற்பட்ட காலங்களில்‌ முஃதஸிலா, ஜஹமிய்யா, அஷாஇரா, மாத்ரூதிய்யா போன்ற தத்துவ
இயக்கங்களின்‌ செல்வாக்குக்‌ காரணமாக இவர்களும்‌ அகீதா சார்ந்த விடயங்களில்‌ தத்துவார்த்த ரீதியில்‌ பேச ஆரம்பித்தனர்‌. இதன்‌ விளைவாக கவாரிஜ்கள்‌ மத்தியில்‌ புதிய நம்பிக்கைகளும்‌ உட்பிரிவுகளும்‌ தோன்ற ஆரம்பித்தன.

கவாரிஜ்களுக்கு மத்தியில்‌ உருவான உட்பிரிவுகள்‌

1. அல்‌அஸாரிக்‌: நாபிஃ இப்னு அஸ்ரக்‌ என்பவரைப்‌ பின்பற்றுபவர்கள்‌. காபிர்களின்‌ குழந்தைகளும்‌ நரகம்‌ நுழைவர்‌ என்பது இவர்களது கருத்தாகும்‌. ரஜம்‌
தண்டனையை மறுத்தல்‌, பெண்மீது கூறப்படும்‌ படுதூறுக்காக மாத்திரம்‌ தண்டனை வழங்குதல்‌. திருடப்பட்ட பொருள்‌ சிறியதாயினும்‌ பெரியதாயினும்‌ சமமாகத்‌ தண்டனை வழங்குதல்‌ போன்ற நடைமுறைகளும்‌ இவர்களிடம்‌ காணப்பட்டன.

2. அஸ்ஸபரிய்யா: ஸியாத்‌ அல்‌ அஸ்பர்‌ என்பவரைப்‌ பின்பற்றுவோரே இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்‌. இவர்களது கொள்கை நம்பிக்கையில்‌ முரண்பட்டோரது பிள்ளைகளைக்‌ கொல்ல வேண்டும்‌ என்ற விடயத்தில்‌ மாத்திரம்‌ அஸாரிக்களுடன்‌
முரண்படுகின்றனர்‌.

3. அந்நஜ்தாத்‌: நஜ்தா இப்னு ஆமிர்‌ அல்ஹனபீ என்பவரைப்‌ பின்பற்றுபவர்கள்‌. இவர்களது கருத்தின்படி மார்க்கம்‌ என்பது இரு விடயங்களாகும்‌.
ஒன்று: அல்லாஹ்வை அறிவதும்‌ அவனது தூதரை அறிவதும்‌ முஸ்லிம்களது இரத்தத்தையும்‌
செல்வங்களையும்‌ மதித்து நடத்தல்‌. 
இரண்டு: அல்லாஹ்விடமிருந்து வந்தவற்றை
முழுமையாக ஏற்றுக்கொள்ளல்‌. அது தவிர்ந்த ஏனைய ஹலால்‌ ஹராம்‌ சார்ந்த விடயங்கள்‌ பற்றி அறியாதிருப்பது குற்றமல்ல. ஏனெனில்‌ அது மார்க்கத்தில்‌ உள்ளதல்ல. ஒருவன்‌ பாவத்தில்‌ பிடிவாதம்‌ காட்டுவதன்‌ மூலம்‌ காபிராகின்றான்‌.
அது பெரும்‌ பாவமாயினும்‌ சரி சிறு பாவமாயினும்‌ சரி.

4. அல்‌அபாலிய்யா: அப்துல்லாஹ்‌ இப்னு அபால்‌ என்பவரைப்‌ பின்பற்றுவோர்‌ இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்‌. இப்பிரிவு தோன்றக்‌ காரணம்‌ கவாரிஜ்களின்‌ தலைவர்‌ நாபிஃ பின்‌ அஸ்ரக்‌ என்பவர்‌ அனைத்து முஸ்லிம்களும்‌ அரபுக்காபிர்களைப்‌ போன்றவர்களே. இவர்களிடம்‌ எதிர்பார்க்கப்படுவதெல்லாம்‌ இஸ்லாம்‌ அல்லது யுத்தம்‌. அவர்களைத்‌ திருமணம்‌ முடிக்கக்கூடாது. அவர்கள்‌ அறுத்தவற்றை சாப்பிடக்‌ கூடாது. அவர்கள்‌ மத்தியில்‌ வாழவும்‌ கூடாது. இவ்வாறு கூறும்‌ போது இப்னு ஸிபார்‌ என்பவர்‌ அதை மறுத்து ஸிபரிய்யாவை உருவாக்கினார்‌. அப்போது இப்னு அபால்‌ இன்னொரு கருத்தைக்‌ கூறினார்‌. அதாவது அவர்கள்‌ முஷீரிக்குகள்‌ அல்ல. நிஃமத்தை மறுக்கும்‌ காபிர்கள்‌. இவர்களது இரத்தத்தைத்‌ தவிர வேறெதுவும்‌ எமக்கு ஹலாலாக மாட்டாது. என்ற கருத்தின்‌ அடிப்படையில்‌ தனது இயக்கத்தை அமைத்தார்‌.

இந்நான்கு பிரிவுகளும்‌ கவாரிஜ்களின்‌ பிரதான உட்பிரிவுகளாகும்‌. அவ்வாறே இந்நான்கிற்குள்ளும்‌ இன்னும்‌ பல உட்பிரிவுகள்‌ பல காரணங்களுக்காக உருவாகின.


கவாரிஜ்களின்‌ முரண்பாடான நம்பிக்கைகளும்‌ முடிவுகளும்‌:

1. பெரும்‌ பாவம்‌ செய்தவர்களை காபிர்கள்‌ என்றும்‌ அவர்கள்‌ நரகில்‌ நிரந்தரமாகத்‌ தங்குவார்கள்‌ என்றும்‌ கூறுதல்‌.

2. அலி(ரழி), உஸ்மான்‌ (ரழி) ஆகியோரையும்‌ இன்னும்‌ அதிகமான ஸஹாபாக்களையும்‌ காபிர்கள்‌ என்று கூறுதல்‌

3. மறுமையில்‌ அல்லாஹ்வைக்‌ காணமுடியும்‌ என்பதை மறுத்தல்‌

4. ஸிராத்தையும்‌ அதைக்‌ கடந்து செல்வதையும்‌ நிராகரித்தல்‌

5. அல்லாஹ்விடமிருந்தல்லாமல்‌ நபியவர்கள்‌ கூறும்‌ விடயங்களில்‌ நபிக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம்‌ இல்லை எனக்கூறுதல்‌

6. குர்‌ஆனின்‌ வெளிப்படையான கருத்து என தாம்‌ நம்பும்‌ விடயங்களுக்கு முரணாக வரும்‌ முதவாதிரான ஹதீஸ்களை நிராகரித்தல்‌

7. அல்குர்‌ஆனும்‌ ஸான்னாவும்‌ உறுதிப்படுத்தும்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை மறுத்தல்‌

8. தமது நம்பிக்கைகளில்‌ தம்முடன்‌ உடன்பட்டவர்களுடனல்லாமல்‌ ஜமாஅத்தாக
தொழுவதை மறுத்தல்‌

9. திருமணத்துக்குப்‌ பின்‌ விபசாரத்தில்‌ ஈடுபடும்‌ ஆணுக்கு ரஜ்ம்‌ தண்டனை வழங்குவதை மறுத்தல்‌

10. ஷபாஅத்தை மறுத்தல்‌

11. குறைந்த பட்சம்‌ 40 பேர்‌ இருக்கும்‌ நிலையில்‌ தவறிழைக்கும்‌ தலைவர்களுக்கு எதிராகப்‌ புரட்சியில்‌ ஈடுபடுவது கடமை எனக்‌ கூறல்‌. இது ஹத்து ஹிராஃ
எனப்படுகிறது.


கவாரிஜ்களின்‌ இயல்பான பண்புகள்‌:

சில நபர்களிடம்‌ காணப்பட்ட இயல்பான பண்புகளுடன்‌ தீவிர மதப்பற்றும்‌ ஒன்று சேர்ந்தமையே கவாரிஜ்கள்‌ தோற்றம்‌ பெறுவதற்குக்‌ காரணமாய்‌ அமைந்தது. அப்பண்புகள்‌ வருமாறு:

தீவிரத்‌ தன்மை: இவர்கள்‌ தாம்‌ உருவாக்கிக்‌ கொண்ட நம்பிக்கைகளிலும்‌ ஏனைய வணக்க வழிபாடுகளிலும்‌ தீவிரத்தன்மையை வெளிப்படுத்தியமையினால்‌ அதிக
வணக்கவாளிகளாகவும்‌ பாவங்களுக்கிடையில்‌ பாகுபாடு பார்க்காமல்‌ அனைத்துப்‌ பாவங்களையும்‌ பெரும்‌ பாவங்களாக காட்டுபவர்களாவர்‌.

கடும்போக்கு: கடும்போக்குக்‌ காரணமாக இவர்களிடம்‌ எந்த ஒன்றிலும்‌ நளினத்‌ தன்மை இருக்கவில்லை. சிறிய தவறுகளுக்காகவும்‌ மக்களை எதிர்த்துப்‌ போர்‌
புரிபவர்களாகவே இருந்தனர்‌.

எதிர்ப்பு மனப்பாங்கு: இணங்கிப்‌ போகின்ற தன்மை இவர்களிடம்‌ குறைவாகவே காணப்பட்டது. இதனால்‌ தம்முடன்‌ முரண்படுபவர்களை எப்போதும்‌ எதிர்த்துக்‌
கொண்டே இருப்பார்கள்‌. சமாதானம்‌ செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்‌.

மேலோட்டமான அறிவு: இவர்கள்‌ மார்க்கம்‌ தொடர்பான மேலோட்டமான அறிவையே
பெற்றிருந்தனர்‌. ஷரீஅத்தின்‌ நோக்கத்தைப்‌ புரிந்து கொள்கின்ற அளவுக்கு அவர்களிடம்‌ நுணுக்கமான அறிவு இருக்கவில்லை. அதனால்‌ தான்‌ நடுவர்கள்‌
நியமிக்கப்பட்டதை அவர்களால்‌ புரிந்து கொள்ள முடியாமல்‌ போனது.

பிரமை: தாம்‌ கற்ற அறிவில்‌ கொண்ட பிரமை காரணமாக தாம்‌ ஸஹாபாக்களைவிடவும்‌ ஏனைய அறிஞர்களை விடவும்‌ தம்மைக்‌ கற்றவர்களாகக்‌ கருதிக்‌ கொண்டார்கள்‌.

முதிர்ச்சியின்மை: முதிர்ச்சியின்மை காரணமாக தமது சிந்தனையிலும்‌ செயற்பாட்டிலும்‌ பொறுமை இழந்து செயற்பட்டனர்‌.

கவாரிஜ்களின்‌ விடயத்தில்‌ ஸஹாபாக்களின்‌ நிலைப்பாடு:

கவாரிஜ்கள்‌ ஸஹாபக்களை காபிர்கள்‌ என்று கூறினாலும்‌ ஸஹாபாக்கள்‌ அவர்களை அவ்வாறு கூறவில்லை. மாறாக கவாரிஜ்‌ அமைப்பபைச்‌ சேர்ந்த ஒருவர்‌ தொழுகையில்‌ இமாமத்‌ செய்யும்‌ போது அவருக்குப்‌ பின்னால்‌ நின்று தொழுதிருக்கின்றார்கள்‌.
இவர்கள்‌ பற்றி அலி(ரழி) அவர்கள்‌ குறிப்பிடும்‌ போது “எமக்கெதிராக அத்துமீறிய எமது சகோதரர்கள்‌” என்றே கூறினார்கள்‌. எனினும்‌ அவர்களை எதிர்த்துப்‌
போரிட்டுள்ளார்கள்‌. அதற்கு இரு காரணங்கள்‌ உள்ளன.

1. கவாரிஜ்களின்‌ அத்துமீறிய செயற்பாடு: இவர்கள்‌ அலி (ரழி) அவர்களையும்‌ இன்னும்‌ பல ஸஹாபாக்களையும்‌ காபிர்கள்‌ எனக்‌ கூறி அவர்களுக்கு எதிராக வாளேந்திப்‌ போரிட்டதுடன்‌ சிறுவர்கள்‌, பெண்கள்‌, வயோதிபர்கள்‌, நிரபராதிகள்‌
என்று பார்க்காமல்‌ தமது கொள்கைக்கு மாற்றமான முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளார்கள்‌. இவ்வாறான சந்தர்ப்பங்களில்‌ ஸஹாபாக்கள்‌ அவர்களை எதிர்த்துப்‌ போராடியுள்ளார்கள்‌. நகர்வான்‌ யுத்தம்‌ அதற்கு சிறந்த உதாரணமாகும்‌.


2. ஸஹாபாக்களின்‌ இஜ்திஹாத்‌: நபி(ஸல்‌) அவர்களின்‌ முன்னறிவிப்புக்களின்படி வாளேந்திப்போராடுமாறு கூறப்பட்டுள்ளவர்களின்‌ பண்புகள்‌ முழுமையாக கவாரிஜ்களிடம்‌ காணப்பட்டமையினால்‌ அவர்களை எதிர்த்துப்‌ போராடுவதை நன்மை என்று கருதினார்கள்‌. நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “எனது உம்மத்தில்‌ ஒரு
கூட்டம்‌ தோன்றும்‌. உங்களது ஓதலை அவர்களது ஓதலுடன்‌ ஒப்பிட முடியாது. உங்களது தொழுகையை அவர்களது தொழுகையுடன்‌ ஒப்பிட முடியாது. உங்களது நோன்பை அவர்களது நோன்புடன்‌ ஒப்பிட முடியாது. குர்‌ஆனை ஓதுவார்கள்‌. அவர்கள்‌ நினைக்கிறார்கள்‌ அது அவர்களுக்கு சார்பானது என்று. ஆனால்‌ அது அவர்களுக்கு எதிராகவே இருக்கிறது. அவர்களது தொழுகை அவர்களது பிடரி
நரம்பைத்‌ தாண்டாது. இவர்கள்‌ வில்லில்‌ இருந்து அம்பு விரைவது போன்று மார்க்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள்‌. அவர்களை எதிர்த்துப்‌ போராடியழிக்கும்‌ படையினர்‌ தமது நபியின்‌ வாயிலாக அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நன்மைகளை அறிவார்களாயின்‌ அமல்‌ செய்வதை விட்டுவிடுவார்கள்‌”(புஹாரி, முஸ்லிம்‌).

கவாரிஜ்கள்‌ விடயத்தில்‌ ஸஹாபாக்கள்‌ கொண்டிருந்த அதே நிலைப்‌ பாட்டையே
ஸஹாபாக்களுக்குப்‌ பின்‌ வந்த ஸலபுஸ்ஸாலிஹீன்களும்‌ கொண்டிருந்தார்கள்‌.
முஸ்லிம்‌ உம்மத்‌ கவாரிஜ்கள்‌ விடயத்தில்‌ தொடர்ந்தும்‌ விழிப்புடனேயே இருந்து வந்துள்ளது. ஏனெனில்‌ நபியவர்கள்‌ முன்னறிவுப்புச்‌ செய்த ஹதீஸ்களை நோக்கும்‌ போது அவை, இத்தகையவர்கள்‌ மறுமைநாள்‌ வரை வெளிப்படக்கூடியவர்கள்‌ என்பதையே உணர்த்துகின்றன. நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “இறுதிக்‌ காலத்தில்‌ ஒரு கூட்டம்‌ வெளியாகும்‌. அவர்கள்‌ இளவயதுடையவர்களாகவும்‌, மூடக்கனவுடையவர்களாகவும்‌ இருப்பார்கள்‌. மனிதர்களில்‌ சிறந்தவருடைய வார்த்தைகளில்‌ இருந்தே பேசுவார்கள்‌. அவர்களது ஈமான்‌ அவர்களது தொண்டைக்‌ குழியைத்‌ தாண்டாது. வில்லில்‌ இருந்து அம்பு புறப்படுவது போன்று இவர்கள்‌ மார்க்கத்தை விட்டு வெளியேறுவார்கள்‌. அவர்களை எங்கு கண்டாலும்‌ கொலை செய்யுங்கள்‌. அவர்களைக்‌ கொன்றவர்களுக்கு மறுமையில்‌ நற்கூலியுண்டு” (புஹாரி)
أحدث أقدم