عالم دولة
وعالم أمة
عالم ملة
1. நாட்டிற்கான ஆலிம்கள் (عالم دولة) :
நாடு, நாட்டின் தலைவர்கள், அமைச்சர்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்ப தீர்ப்பு வழங்குவார்கள். நாட்டின் தலைவர் ஒன்றை ஹலாலாக்கினால், அதை ஹலாலாக்கி விடுவார்கள். நாட்டின் தலைவர் ஒன்றை ஹராமாக்கினால் இவர்களும் அதை ஹராமாக்கி விடுவர்.
இவர்கள் தான் عالم دولة நாட்டிற்கான ஆலிம்கள்.
2. உம்மத்திற்கான ஆலிம்கள் (عالم أمة) :
பொதுமக்கள் எதை விரும்புவார்களோ, அதற்கேற்ப தீர்ப்பு வழங்குவார். அந்த தீர்ப்பு சத்தியத்திற்கு முரணாக இருந்தாலும் சரியே! இவர் சமூகத்தை பின்பற்றுகின்ற ஆலிம். இவரும் முதல் வகையைப் போன்று குற்றமிழைத்தவர். தான் கற்ற கல்விக்கேற்ப செயல்படாமல் சமூகத்தோடு சாய்ந்து விட்டார்.
3. மார்கத்திற்கான ஆலிம் (عالم ملة) :
நாட்டையும் பொருட்படுத்த மாட்டார், பொது மக்களையும் பொருட்படுத்த மாட்டார். மக்கள் விரும்பினாலும், வெறுத்தாலும் குர்ஆன், சுன்னா அடிப்படையில் தீர்ப்பளிப்பார். இவர்தான் உண்மையான ஆலிம்.
அல்லாஹ்வின் ஷரீஅத் அடிப்படையில் தீர்ப்பளிப்பது ஒவ்வொரு ஆலிமின் மீதும் கடமை. இவர்தான் மார்க்கத்தின் ஆலிம்.
இவர் மக்களை பொருட்படுத்த மாட்டார். இவர் உலகத்திலிருந்து கஃபனாடையோடு, தான் செய்த நல்லறங்களுக்கான கூலியோடு செல்வார். வேறு யாரிடமும், எதையும் வேண்டமாட்டார்.
மார்கத்திற்கான ஆலிம்கள் இந்த உலகத்திலேயே அவருடைய பெயரை அல்லாஹ் உயர்த்துவான். அவருடைய மரணத்திற்குப் பின்னும் அவருடைய கல்வியில் அல்லாஹ் பரக்கத்தை ஏற்படுத்துவான்.
எனவே கல்வி தேடும் எனது சகோதரர்களிடம் நான் ஆதரவு வைக்கிறேன். மார்க்கத்தின் ஆலிம்களாக நீங்கள் ஆக வேண்டும்.
அல்லாஹ்வின் கட்டளை அடிப்படையில் சத்தியத்தை தெளிவு படுத்த வேண்டும். இதைத்தான் அல்லாஹ் அவர்களிடம் உடன்படிக்கை எடுத்துள்ளான்.
வழிகெட்ட ஆலிம்களை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள்:
(இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்குமிடையில்) இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும்.
{அல்குர்ஆன்~ 2:166}
நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் "எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?" என்று கதறுவார்கள்.
{அல்குர்ஆன்~ 33:66}
அன்றி "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
{அல்குர்ஆன்~ 33:67}
(ஆகவே) "எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு" என்று கூறுவார்கள்._
{அல்குர்ஆன்~ 33:68}
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் "(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது" என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதி மொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது மகா கெட்டதாகும்.{அல்குர்ஆன்~ 3:187}
இந்த வசனத்தில் வேதம் வழங்கப்பட்ட யூத நஸாராக்களை பற்றி சொன்னாலும் இந்த உம்மத்தையும் இவ்வசனம் உள்ளடக்கும் . எனவே மார்க்கத்தை உண்மையான முறையில் மக்களுக்கு போதிக்கும் ஆலிம்களாக மார்க்கத்திற்கு சேவையாற்றும் ஆலிம்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!
-ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் உரையிலிருந்து