பிரபல மோகத்தில் ஒரு சில இஸ்லாமிய அழைப்பாளர்கள்!

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், மார்க்கப் பிரச்சாரம் (தஃவா) என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாகவும் பரவலாகவும் மக்களைச் சென்றடைகிறது. ஆனால், இந்த வேகத்திற்கு ஈடாக, அழைப்புப் பணியின் புனிதத் தன்மையை அரித்துத் தின்னும் ஒரு புதிய நோய் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. அதுதான் — 'பிரபல மோகம்' (Celebrity Culture).

தங்களைத் தாங்களே திரையுலக அல்லது அரசியல் 'நட்சத்திரங்களைப்' போல் பாவித்துக்கொள்ளும் இஸ்லாமிய அழைப்பாளர்களும், அவர்களைக் கண்மூடித்தனமாக ஆராதிக்கும் ரசிகர் கூட்டமும் இன்று பெருகிவிட்டன. துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு இயக்கமோ அமைப்போ இதற்கு விதிவிலக்கல்ல.

அணுக முடியாத தொலைவில் அழைப்பாளர்கள்:

மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதையும், மக்களுக்கு நல்வழிகாட்டுவதையும் சமூகம் எப்போதும் மதிக்கிறது; தலைமேல் வைத்துப் போற்றுகிறது. ஆனால், காலப்போக்கில் தம்மை ஒரு 'நட்சத்திர அந்தஸ்துக்கு' உயர்த்திக்கொண்டு, சாதாரணப் பொதுமக்கள் கூடத் தம்மை அணுக முடியாதவாறு இடைவெளியை வளர்த்துக்கொள்வது எந்த வகையிலும் ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

நபி (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் மக்களாக, அவர்களின் துயரங்களையும் தேவைகளையும் நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் எளிய தலைவராகவே வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய பல அழைப்பாளர்கள் பாதுகாப்புப் படைய சூழ, பிரத்யேக வழிகளில் மட்டுமே பயணித்து, சாதாரண மனிதனின் கைக்கு எட்டாத 'பிம்பங்களாக' மாறிவருவது மார்க்கத்தின் அடிப்படைப் பண்புகளுக்கே முரணானது.

பிரபல்யத்தின் ஆபத்தைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் விடுத்த எச்சரிக்கை மிகக் கடுமையானது. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி இதோ:
مَن لَبِسَ ثوبَ شُهرةٍ في الدُّنيا، ألْبَسَهُ اللهُ ثوبَ مَذلَّةٍ يومَ القيامةِ
"எவர் ஒருவர் உலகத்தில் (பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தன்னை உயர்த்திக் காட்டுவதற்காகவும்) புகழையும் பிரபல்யத்தையும் விரும்பும் ஆடையை அணிகிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் இழிவின் ஆடையை அணிவிப்பான்."
(நூல்: சுனன் இப்னு மாஜா / அஹ்மத்)

இங்கு 'ஆடை' என்பது வெறும் உடையை மட்டும் குறிப்பதல்ல; மனிதன் தன்னைச் சமூகத்தில் தனித்துக் காட்டிக்கொள்ள அணியும் தோரணை, போலி அந்தஸ்து, மற்றும் பிரபல்ய தாகம் ஆகிய அனைத்தையும் குறிக்கும். மார்க்கத்தைச் சொல்லி மக்களை இறைவனின் பக்கம் அழைப்பதற்குப் பதிலாக, தம் பக்கம் ஈர்க்க நினைப்பவர்களுக்கு இந்த ஹதீஸ் ஓர் எச்சரிக்கை மணி!

அழைப்புப் பணியில் ஊடுருவியுள்ள சீர்கேடுகள்:

இந்த 'பிரபல கலாச்சாரம்' அழைப்பாளர்களிடமும் ஆதரவாளர்களிடமும் பல எதிர்மறையான போக்குகளை உருவாக்கியுள்ளது:

1. சுயப் புகழ்ச்சியும் அகந்தையும்: "தமது உபதேசங்களை மட்டுமே பிறர் கேட்க வேண்டும்; தான் மட்டும் பிறரது உரைகளைக் கேட்கவோ, மார்க்க நிகழ்வுகளில் ஒரு சாதாரணப் பார்வையாளராகப் பங்கெடுக்கவோ மாட்டேன்" என்ற இறுமாப்பு பலரிடம் குடிகொண்டுள்ளது.

2. ரசிகர் மன்றத்தை ஒத்த  கலாசாரம்: தமக்கென 'ரசிகர் மன்றங்களை ஒத்த செயற்களை உருவாக்குவது, அல்லது பிறர் உருவாக்கும்போது அதைத் தடுத்து நிறுத்தாமல் "இருந்துவிட்டுப் போகட்டுமே" என்று புகழ்ச்சி போதையில் மிதப்பது.

3. அறிவின் ஏகபோக உரிமை (Monopoly): தமது பேச்சுகளால் மக்களைத் தமக்குள்ளேயே கட்டிப்போட்டு, பிற நல்லறிஞர்களின் பயனுள்ள உபதேசங்களைக் கேட்க விடாமல் தடுப்பதும் எதிர்ப்பதும் மார்க்க ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை.

முன்னோர்களின் பண்பாடு:

இஸ்லாத்தின் முன்னைய இமாம்கள் புகழைக் கண்டு அஞ்சினார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள், மக்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டால், "அல்லாஹ் என்னை மறைமுகமாகச் சோதிக்கிறானோ" என்று கண்ணீர் விட்டு அழுபவராக இருந்தார்.

இன்றைய சூழலில் இஸ்லாமிய அழைப்பாளர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியக் கடமைகள் உள்ளன:

தொடர் வாசிப்பும் அறிவைப் புதுப்பித்தலும்: சமூக ஊடகங்களில் பெறப்படும் கைதட்டல்களோடு நின்றுவிடாமல், சமூக விழிப்புணர்வோடும் காலத்தின் மாற்றத்திற்கேற்பவும் தமது அறிவைத் தொடர் வாசிப்பின் மூலம் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தூய்மையான எண்ணம் (இக்லாஸ்): தஃவா என்பது 'Followers' எண்ணிக்கையையோ 'Views' அளவையோ உயர்த்தும் ஒரு தொழில் அல்ல; அது இறைவனின் திருப்தியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஓர் ஆன்மீகப் பொறுப்பு.

அடக்கமும் எளிமையும்: மக்களோடு கலந்திருந்து, அவர்களின் விமர்சனங்களை ஏற்கும் மனப்பகுப்பாய்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
"பிரபல்யம் தற்காலிகமாக உயர்த்தலாம்; ஆனால் அகந்தை நிரந்தரமாக வீழ்த்திவிடும்."

புகழும் பிரபல்ய மோகமும் ஒருபோதும் ஒருவரைச் சரியான பாதைக்கு இட்டுச் செல்லாது என்பதை உணர்வதே காலத்தின் அவசியமாகும். 

அழைப்பாளர்களும், அவர்களைப் பின்தொடரும் சமூகமும் தங்களின் எண்ணங்களை (நிய்யத்) தூய்மைப்படுத்தி, போலி பிம்பங்களை உடைத்து, மார்க்கத்தின் உண்மையான எளிமைக்கும் தூய்மைக்கும் திரும்புவதே சாலச் சிறந்ததாகும்.

- Azhan Haneefa
أحدث أقدم