என்னைக் கவர்ந்த இஸ்லாம் - Jay Palfrey


ஜே பால்ப்ரே (Jay Palfrey), பிரிட்டனை சேர்ந்த பயண ஊடகவியலாளர், சிரியா மீட்பு மற்றும் முன்னேற்ற அமைப்பின் தூதர் மற்றும் பிரபல YouTube-பர். ஆன்மீகத்தை நோக்கிய தன்னுடைய நீண்ட நாள் பயணம் இஸ்லாமில் முடிவடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார் ஜே. துருக்கி இஸ்தான்புல் சுலைமானியா பள்ளிவாசலில் தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக கூறி அந்த காணொளியையும் வெளியிட்டிருக்கிறார். 

சுமார் 25 இலட்சம் பார்வைகளை இதுவரை பெற்று வைரலாகி இருக்கின்றது இந்த வீடியோ. ஜிம்பாப்வே நாட்டின் தலைமை இமாமும், இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராகவும் பார்க்கப்படும் முப்தி மென்க், ஜே-விற்கான தன்னுடைய செய்தியில், 'இறைவன் உங்களுடைய இஸ்லாமிய பயணத்தை எளிதாக்கி, சுவனத்தில் நம்மை சந்திக்க வைப்பானாக, ஆமீன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரபல தென்கொரிய YouTube-பரான தாவுத் கிம், 'ஜே, உங்களின் இந்த முடிவிற்காக நான் பெருமைப்படுகிறேன்' என்று கூறியிருக்கிறார். தன்னுடைய இஸ்லாம் நோக்கிய பயணத்தில் தாவுத் கிம்-முடன் தொடர்பில் இருந்தவர் ஜே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

"சிறு வயதில் ஏழ்மையின் காரணமாக என்னால் ஒரு நல்ல உடையை கூட பள்ளிக்கு அணிந்து செல்ல முடியாது. இதன் காரணமாக நான் கிண்டலுக்கு ஆளானேன். ஒல்லியான என்னுடைய தேகம் கேலிக்கான மற்றுமொரு காரணமாக அமைந்தது. டீனேஜ் பருவத்தில் நெருங்கிய உறவினருடைய மரணம் என்னை நிலைக்குலைய செய்தது. மன உளைச்சலில் தவித்த நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறினோம். மன அமைதிக்கான என்னுடைய பயணம் இங்கிருந்து தான் துவங்கியது.  

பல்கலைக்கழகத்தில் தான் பயணங்கள் குறித்த ஆர்வம் அதிகரித்தது. பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டேன். ஈராக், எகிப்து, துருக்கி நாட்டு மக்களின் விருந்தோம்பலும், குடும்ப அமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தன. நான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் அற்புதமான மக்கள் அவர்கள். இந்த மக்கள் மூலமாக இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. இஸ்லாம் போதிக்கும் ஓர் இறை தத்துவம், சகோதரத்துவம் மற்றும் அமைதிக்கான விடை ஆகியவை என்னை இஸ்லாம் குறித்து மேலும் ஆராய தூண்டின. 

மிக அழகான மன அமைதியை என்னால் இஸ்லாமில் பெற முடிந்தது. பல ஆண்டுகள் நீடித்த அமைதியை நோக்கிய என்னுடைய ஆன்மீக பயணம் இஸ்லாமில் முடிவடைந்திருக்கிறது. இன்று எனக்குள் காணப்படும் இந்த அற்புதமான உணர்வு நான் இதுநாள் வரை அனுபவிக்காதது" என்கிறார் ஜே பால்ப்ரே.

முதலில் இந்த காணொளியை பதிவேற்ற தயங்கியதாகவும், இருப்பினும் தன்னுடைய பயணத்தின் மூலம் ஊக்கத்தையும், அமைதியையும் பெற்றவர்களுக்காக இதனை பதிவேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், இனி தான் செல்லும் இடங்களிலெல்லாம் தன் மார்க்கத்தின் positivity-யை பரப்புவேன் என்றும், உலகை சிறந்த இடமாக மாற்ற உழைக்கும் மக்களின் வாழ்வையும் காட்சிப்படுத்துவேன் என்கிறார். 

ஜே பால்ப்ரே பதிவேற்றியுள்ள சாட்சி கூறுதல் (ஷஹாதா) வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=EXZFyqGWkyE

Previous Post Next Post