ஓரினச் சேர்க்கை

بسم الله الرحمن الرحیم

இஸ்லாமிய மார்க்கமானது அனைத்து மக்களும் பின்பற்ற இயலக்கூடிய அளவிலான எளிமையான மார்க்கமாகும். ஆணாயினும், பெண் ஆயினும் அவர்களுக்குத் தக்கவாறு நுனுக்கமான, தெளிவான, தேவையான சட்டங்களைக் கொண்டிருப்பது இந்த மார்க்கத்தின் அழகுகளுள் ஒன்றாகும். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இயல்பான, ஒழுக்கமான வாழ்விற்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கக்கூடிய மார்க்கமுமாகும். ஒரு ஆணும், பெண்ணும் நன்மையை அடைந்து கொள்வதற்கான அனைத்து வழிகளும் காட்டப்பட்டுள்ளன. அதைப் போன்று ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய அனைத்து விதமான செயல்களிலிருந்து எச்சரிக்கபட்டுள்ளனர்.

அந்த வகையில் ஒரு ஆண் அல்லது பெண் தனக்குரிய உடல் இச்சைகளை தன் பாலினரிடமே தீர்த்துக் கொள்வது தடைசெய்யப்பட்ட, தீங்கிழைக்கக்கூடிய ஒன்றாகும். இது கவர்ச்சிகரமாக இருந்தாலும், இது மனிதனுடைய உடல் இயல்புக்கு அப்பார்பட்டதாகும். அல்லாஹ் தனது திருமறையான அல் குர்ஆனிலே இந்த செயல் லூத் (علیه السلام) அவர்களுடைய காலத்திலேயே முதலில் தோன்றியதாகவும், இந்த பாவச் செயலை எதிர்த்து லூத் (علیه السلام) அவர்கள் பிரச்சாரம் செய்ததையும், அதற்கு அம்மக்கள் கட்டுப்படாததனால் கல் மழையைக் கொண்டு அம்மக்களை அழித்ததையும் தெளிவாக விவரிக்கின்றான். ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டுமே காணப்பட்ட இந்த பாவச் செயல், இன்று உலகெங்கிலும் பரவி இருப்பதைக் காண்கிறோம். இந்தியாவில் ஒழுக்கத்திற்கு தலைசிறந்தவர்களாக விளங்கியவர்களான தமிழர்களும்கூட இதை பகிரங்கமாக ஆதரிக்கக்கூடிய நிலையில் மாறியிருப்பதை நாம் அறிகிறோம்.

இச்செயலில் ஈடுபடுபவர்கள், அதற்கான காரணங்களைக் கூறும்போது இது உடலளவில் ஏற்படக்கூடிய இயல்பான மாற்றங்களால் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் இது அவர்களுக்கு ஏற்பட்ட உடல் மற்றும் உள்ளத்தளவில் ஏற்படக்கூடிய நோய் என்றும் வாதிடுகின்றனர்.

முதலாவதாக, இவர்கள் இச்செயலை தங்களுடைய உடலளவில் ஏற்படக்கூடிய மாற்றம் என்று வாதிட்டால், அதில் உண்மையாளர்களாக இருந்தால், அவர்கள் அந்த இயல்பான மாற்றத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறிருப்பதில்லை. இத்தகையவர்களில் அதிகமானோர் இயல்பாக இருக்கும் தங்கள் உடலை பல வழிகளில் மேக் அப் செய்து கொள்வதன் மூலமும், பச்சைக் குத்திக் கொள்வதன் மூலமும், ஆடை அணிகலன்களை அதற்கேற்றவாறு அணிவதன் மூலம் வரம்பு மீறுகின்றனர். இன்னும் சிலர் எல்லையை மீறி இதற்கென பிரத்யேகமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இது இவர்கள் தங்களைத் தாமே நிந்தித்துக் கொள்ள வேண்டிய வரம்பு மீறிய செயலாகும்.

இரண்டாவதாக, இவர்கள் இதை தமக்கு ஏற்பட்ட நோயாக வாதிடுகின்றனர். உண்மையிலேயே, இவர்கள் இதை நோய் என்று கருதினால் அதற்கான நிவாரணத்தை நாடியே செல்ல வேண்டும். ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு நோய் ஏற்பட்டு விட்டது என்பதனால் - தம் பாலினரைக் கண்டால் இச்சை தூண்டப்படுகிறது என்பதனால் அவர்களுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட மாட்டாது. எவ்வாறு ஒரு ஆண் ஒரு பெண்ணால் கவரப்பட்டாலும், அவளை  விபச்சாரத்தின் மூலம் அடைய முடியாதோ, அதைப் போன்று இரு பாலினரும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. ஒரு ஆண், பெண் இருவரும் இனைவதற்கு மட்டும் தான் அல்லாஹ் திருமணத்தை ஒரு அருளாக அனுமதித்துள்ளான்.

இவ்வாறான மானக்கேடான செயல்களில் ஈடுபடுவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களுள் பெண்ணியம் பேசுபவர்களையே நாம் அதிகமாகக் காண்கிறோம். இது நிச்சயமாக தவறானதாகும். ஒரு ஆண் ஒரு போதும் ஒரு பெண்ணுக்கு நிகராகமாட்டான். ஒரு பெண் ஒரு போதும் ஒரு ஆணுக்கு நிகராகமாட்டாள். இதை அல்லாஹ் தன் திருமறையில் ஒரு ஒழுக்கமுள்ள பெண்ணின் நாவின் மூலம் உண்மைபடுத்தியுள்ளான். இம்ரான் (علیه السلام) அவர்களின் மனைவி, தம் மகள் மர்யம் (علیه السلام) அவர்களைப் பெற்றெடுத்த போது, தமது நேர்ச்சையை நிறைவேற்ற முயற்சிக்கும்போது, 

وَلَيْسَ ٱلذَّكَرُ كَٱلْأُنثَىٰ
ஒரு பெண் ஆணைப் போன்றவள் அல்ல.

என்ற ஒழுக்கத்தை போதிக்கின்றார்கள். இன்று மேற்குலகில் பெண்ணியம் பேசக் கூடிய அதிகமானவர்கள்  கிறுஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களாகவே உள்ளனர். இந்த இடத்தில், அவர்களால் கடவுளின் தாய் என்று அழைக்கப்படுகின்ற, இன்னும் சிலரால் தெய்வமாகவும் பார்க்கப்படுகின்ற மர்யம் (علیه السلام) அவர்களின் தாயாரின் வாயிலிருந்தே அல்லாஹ் வெளிப்படுத்திய உண்மை தான் - "ஒரு ஆண் ஒரு பெண்ணைப் போன்று அல்ல" என்ற உபதேசமாகும். இவ்வார்த்தையை கூறிய ஒரு ஒழுக்கமுள்ள பெண்ணுக்கே, அகிலத்தாருக்கும் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கக்கூடிய மர்யம் (علیه السلام) அவர்களை அல்லாஹ் பரிசளித்துள்ளான்.

நல்லொழுக்கத்தை விரும்புவோருக்கு இத்தகைய ஒழுக்கமான மக்களின் வாழ்வே வழிகாட்டுதல்களாக இருக்கின்றன. ஆகையால், நாம் ஓரினச்சேர்க்கை, விபச்சாரம் போன்ற மானக்கேடானவற்றிலிருந்து விலகி, நன்மையின் பக்கம் திரும்ப முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களின் பக்கம் நம் கவனத்தை செலுத்த வேண்டும். சமூகத்தில் இவ்வாறான பாவங்கள் பரவுவதை கட்டுப்படுத்த முயசிக்க வேணாடும். அல்லாஹ் நம்மையும் நம் சந்ததியினரையும் இவ்வாறான மானக்கேடானவற்றிலிருந்து பாதுகாப்பானாக!
Previous Post Next Post