மன இச்சையை எவ்வாறு முறியடிப்பது?

மன இச்சைக்கு மருந்து பொறுமையும் ஹலாலான முறையில் அதற்கு தீர்வு காண்பதும் தான்.

ஹலாலான முறையில் தீர்வை பெற முடியவில்லை என்றால் நமது நிலை என்ன ?

பாவமான காரியங்களில் ஒரு மனிதன் நிம்மதியை அடைய தொடங்கி விட்டால்  அவனை தடுத்து நிறுத்த அல்லாஹ்வைத் தவிர யாராலும் முடியாது !!

இதன் விளைவாக எப்பொழுதும் கலக்கத்துடனும் நிம்மதியற்ற நிலையிலும் செய்த பாவத்தை எண்ணி கொஞ்சம் கொஞ்சமாக இறந்தும் கொண்டிருப்பார், எப்பொழுதும் கவலையில் வீழ்ந்துகிடப்பார் யாரைப் பார்த்தாலும் கோபம் வரும் வெறுமை ஏற்படும் தனிமையை விரும்புவார்கள்.

 இமாம் இப்னுல் கையும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

பாவத்தில் இன்பம் கண்டுவிட்ட நபர்கள் அதிலிருந்து மீள முடியாமல் அதை விட்டு விடவும் முடியாமல் அதிலே சுழன்று கொண்டிருப்பார்கள்.
روضة المحبين ونزهة المشتاقين | 1 - 470 |

இந்த ஒரு உளவியல் ரீதியான பிரச்சனையில் அதிகப்படியாக இன்றைய வாலிபர்கள் குறிப்பாக சுய இன்பத்தையும் , ஆபாசமான படங்களை பார்ப்பதிலும் தனது அதிகப்படியான நேரத்தை தனிமையில் கழிப்பதுமாக இருந்து வருகின்றனர், முஸ்லிமல்லாதவர்களும் இந்த பிரச்சனையில் இன்று உருண்டு வருகின்றனர்....

இதற்கு தீர்வு தான் என்ன ?

இதற்குரிய தீர்வை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً   وَسَآءَ سَبِيْلًا‏
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 17:32)

அல்லாஹ் விபச்சாரம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை மாறாக விபச்சாரத்தின் பக்கம் நெருங்க வேண்டாம் என்று கூறியிருப்பது தான் மிக அற்புதமான வரிகள்.

விபச்சாரத்தை தூண்டும் அனைத்து செயல்களை விட்டும் தூரமாக இருங்கள் என்று அர்த்தம்.

(விபச்சாரத்தை தன்னுள் சுமந்திருக்கும் வீடியோக்கள் வலைதளங்கள் புகைப்படங்கள் இடங்கள் போன்றவைகள் )

இன்று கார்ப்பரேட் உலகத்தில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம் எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் அதில் வரும் விளம்பரங்கள் முழுக்க முழுக்க விபச்சார சிந்தனைகள் தான் இருக்கிறது, பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்படுகின்றன,

 நல்ல எண்ணத்தில் ஒருவர் சமூக வலைதளங்களில் நுழைந்தாலும் அவர் வழி தவற கூடியவராக மாறும் பழக்கத்தை இங்கிருந்துதான் ஏற்படுத்திக் கொள்கிறார்.

இறை நம்பிக்கையாளர்களை இது போன்ற பழக்கங்கள் இறைவனிடமிருந்து பிரித்து தொழுகையை முறைகேடாக தொழுகக்கூடியவர்களாகவும் குறைவுடைய தொழுகையை நிறைவேற்றுபவர்களாகவும் மாற்றுகிறது,

பலரை இது மன இச்சையை நோக்கி ஓடக்கூடிய மிருகங்களாக மாற்றி விடுகிறது....

இறை நம்பிக்கையாளரின் இறை நம்பிக்கை மிகவும் குன்று விடுகிறது இதில் ஆண்களும் பெண்களும் விதிவிலக்கல்ல.

மனித குலத்திற்கு எதிராக தொடுக்கப்படும் மிகப்பெரிய அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்தும் ஒரு போராகும் என்பதை நாம் உணர வேண்டும் நாம் அறியாமலே இந்த ஒரு கவனகுறைவில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

திருமணம் ஒன்றே இதற்கு தீர்வு என்பதா !!
 இல்லை அதுவும் போதுமான ஒன்று அல்ல.

திருமணமானவர்களும் இந்த உளவியல் ரீதியான பிரச்சனைகளில் உலண்டு கொண்டு தான் இருக்கிறார்கள் எத்தனையோ வீடுகள் நாசமாகிவிட்டன.

இதற்கு ஒரே தீர்வு இறையச்சத்தின் ஊடாக நம்மை நெறிப்படுத்தி கொள்ள வேண்டும், இரும்பை போன்ற உறுதியான எண்ணங்களை நாம் முதலில் நமது பலகீனமான உள்ளத்தில் விதைக்க வேண்டும்.

நாம் செய்து கொண்டிருக்கும் அனைத்து செயல்களையும் படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் நம்மை அது குறித்து மறுமையில் கேட்பான் என்ற இறை உணர்வு நம்மில் அதிகமாக வேண்டும்.

இன்று வாய்மூடி இருக்கும் நமது உடல் அவயங்கள் நாளை மறுமையில் நாம் செய்த பாவத்தை சாட்சி சொல்லி பேசும் என்ற இறை வசனங்களை மறந்து விட வேண்டாம்.

இருட்டான அறைக்குள் யாருக்கும் தெரியாமல் நாம் கதவை மூடிக்கொண்டு ஹராமான வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் என்றாவது யோசித்ததுண்டா படைத்த இறைவன் நமக்கு இந்த அறையின் ஊடாக ஆக்சிஜனை வழங்கிக் கொண்டிருக்கிறான் நீங்கள் இறைவனுக்கு மாறு செய்யும் பொழுதும் இறைவன் உங்களுக்கு நல்லவைகளை தான் செய்து கொண்டிருக்கிறான், அத்தகைய இறைவனுக்கா மாறு செய்வது!!

மோசமான காட்சிகளை கண்டு கொண்டிருக்கும் பொழுது அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும் மரணம் வந்துவிட்டால் நமது நிலை என்ன எவ்வளவு அசிங்கம் இந்த நிலையில் நமது மறுமையின் நிலை என்னவாகும்!!

ஆண்களோ பெண்களோ தங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த பாவ காரியங்களை உடனடியாக நிறுத்துங்கள்.

இனி முதல் தொலைக்காட்சியை பார்ப்பதும் ஸ்மார்ட்போன்களின் ஊடாக விலக்கப்பட்ட விடயங்களை தாங்கி இருக்கும் வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியான முடிவை நீங்கள் எடுப்பதுடன் உங்களின் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

ஸ்மார்ட்போன்களை முடிந்த அளவுக்கு தவிர்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்று சொன்னால் சில கட்டுப்பாடுகளுடன் அதை கையாளுங்கள்.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு என்று சில குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குங்கள் , உங்கள் செல்போனில் இருக்கும் நோட்டிபிகேஷன் ஆப்ஷனை நிறுத்துங்கள், தேவையில்லாமல் வந்து குமியும் வாட்ஸ் அப்புகளை அவ்வப்பொழுது பார்க்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்,

அதிலும் ஹலாலான முறையில் நமது தேவைகளையும் நோக்கத்தை மட்டும் பார்ப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் தேவை இல்லாமல் கண்களில் படும் வீடியோக்களையும் படங்களையும் ஸ்க்ரோல் செய்யும் இந்த மோசமான பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏
அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபச்சாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 23:5)

இந்த இறை வசனத்தில் இடம் பெற்று இருக்கும் விபச்சாரம் என்ற விளக்கத்தை மட்டும் புரிந்து கொள்ளாமல் அதன் பக்கம் நம்மை தள்ளிவிடும் அனைத்து விடயங்களையும் நாம் புரங்கை கொண்டு இனி அல்லாஹ்வின் உதவியுடன் புறந்தள்ளுவோம்.

தனிமையில் அதிகமாக நேரத்தை செலவு செய்யாமல் கூட்டத்துடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

இயற்கையாக அல்லாஹ் உங்களிடம் வழங்கி இருக்கும் இந்த மன இச்சையை பூர்த்தி செய்வதில் சுய இன்பம் விபச்சார சிந்தனைகள் கொண்ட வீடியோக்கள் இன்னும் புத்தகங்களை கையாள்வதில் உங்களது நேரத்தை வீணாக்கி விடாமல் ஹலாலான முறையில் திருமணத்தின் ஊடாக மன இச்சைகளை பூர்த்தி செய்ய முயலுங்கள்.

அதிகம் அதிகமாக நோன்புகளை நோக்க முயற்சி செய்யுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு உடல் சக்தியையும் பண சக்தியையும் வழங்கி இருந்தால் ஒரு திருமணத்தின் ஊடாக உங்களது மன இச்சையை நீங்கள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஹலாலான  மறு திருமணம் செய்து கொண்டு மன இச்சையை கட்டுப்படுத்துங்கள் காரணம் இது ஹலாலான முறையாகும், இதில் சமூகத்தை எண்ணியோ உங்களது முதல் மனைவியை நினைத்தோ குடும்பத்தை நினைத்தோ நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகளினால் உங்களுக்கும் இறைவனுக்கு மத்தியில் மிகப்பெரிய ஒரு தொலைவை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு பாவிகளாக மாறி நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் பொழுது பாவிகளாக சந்திப்பீர்கள்  என்பதை கசப்பாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

இறை சிந்தனைகளாலும் திருக்குர்ஆனை ஓதுவதன் ஊடாகவும் நபிலான வணக்கங்களின் ஊடாகவும் நன்மையான காரியங்களின் ஊடாகவும் மனதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மனதை ஆளும் இறைவனிடம் தஹஜித்திலும் துஆ கபூலாகும் வேளைய பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையே உள்ள நேரங்களிலும் அழுது இறைவனிடம் உங்கள் குறைகளை வெளிப்படுத்துங்கள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கிறது என்று ஆழமாக நம்புங்கள்.

முன்பின் தெரியாத ஆண்களையோ பெண்களையோ சமூக வலைதளங்களில் பழகுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் மஹரம் இல்லாத ஆண்களுடனும் பெண்களுடனும் பழகுவதை தவிர்த்துக் கொள்ளவும் , இதில் கவனக் குறைவுடன் இருக்கும் போது தான் சைத்தான் நம்மை வழிகெடுத்து விடுகிறான்.

இன்று இஸ்லாமிய மார்க்கம் வலைத்தளங்களின் ஊடாகவும் எளிதாக வாசிக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இதற்கு மாற்று வழியாக நேர்மறை சிந்தனைகளை வழங்கும் வலைதளங்களை பயன்படுத்தலாம்.

தனிமனித ஒழுக்கம் பரிபூரணம் ஆகாதவரை சமூக எழுச்சி என்பது எட்டா கனியாகும்.

அரபு வலைதளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

-தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

أحدث أقدم