காதல்: இயல்பு, வெளிப்பாடு மற்றும் தீர்வு

காதல் என்பது தற்காலப் பொதுச் சமூகத்தில் முறையாகப் புரிந்துகொள்ளப்படாததொரு கருத்தியலாகவே இருந்து வருகிறது.

குறித்தவொரு பெண்ணையோ/ஆணையோ நேசிப்பதென்றாலே அவர்கள் மீதானதொரு பற்றுகையை (attachment) வளர்த்துகொள்வதும், அந்நபரை எப்படியேனும் அடைந்துகொள்ள வேண்டுமென அவாவுறுவதும், அவரோடு நேரம் கழிக்க வேண்டுமென விரும்புவதும், பிரிந்துபோனால் துயருறுவதும் என மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது.

இவ்வகை ' உணர்ச்சிபூர்வமான காதலானது (Passionate Love)' காதலின் ஒரு வகைப் படித்தரம் என்பதுடன், இது உள்ளத்தைப் பீடிக்கக்கூடிய ஒரு நோய் என்பதாகவே இஸ்லாமிய உலகின் பேரறிஞர்களான ஷேய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யஹ் (ரஹ்) மற்றும் அவருடைய மாணவரான இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

இமாம் இப்னு தைமிய்யஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“மஹ்ரமில்லாத ஒரு பெண்ணை நேசிப்பது பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்; அந்த எதிர்மறை விளைவுகள் எவ்வளவு தாக்கமுடையதாக இருக்கும் என்பதை அல்லாஹ் மாத்திரமே அறிவான். இது ஒருவருடைய மார்க்கப் பற்றைப் பாதிக்கும் ஒரு நோய்; இந்நோய் ஒருவருடைய மனம் மற்றும் உடலையும்கூட பாதிப்படையச் செய்யக்கூடியது.”

நூல்: மஜ்மூ அல்-ஃபதாவா (10/132)

இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்) கூறினார்கள்:

”காதல் என்பது உள்ளத்தில் ஏற்படக்கூடிய ஒரு நோய்."

நூல்: அத்-திப்பு அந்-நபவி (நபிவழி மருத்துவம்) (250)

இது உள்ளத்தில் ஏற்படும் ஏனைய நோய்களின் தன்மை, காரணி மற்றும் சிகிச்சை முறை ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

'உணர்ச்சிபூர்வமான காதல் (Passionate Love)' இரு தன்மைகளால் ஆனது:

1. ஒருவரைத் தீவிரமாக நேசித்தல்
2. அவரோடு நேரத்தைச் செலவிட வேண்டுமென அதீத பிரயத்தனம் கொள்ளல்.

இவ்விரு தன்மைகளுடைய வெளிப்பாடும் ஒருவரிடையே இருந்தால் மாத்திரமே அவர் 'உணர்ச்சிபூர்வமான காதல்' எனும் நோயினால் பீடிக்கப்பட்டவராகிறார்.

‘உணர்ச்சிபூர்வமான காதல்’ உள்ளத்தைக் கட்டம் கட்டமாகப் நோய்வாய்ப்படச் செய்வது மட்டுமன்றி, அது அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் பீடிக்கப்பட்டவரைத் துருவமயப்படுத்தி, பாவச்செயல்களின் பக்கம் இட்டுச் செல்லும்; அதிலும் குறிப்பாக, முறையாக அணுகப்படாத இருதலைக் காதலாக அது மாறும் பட்சத்தில், தெளிவான பாவங்கள் மற்றும் அனாச்சாரங்களின் பக்கம் கொண்டுபோய் நிறுத்திவிடும் என்பது கண்கூடு.

இந்நோய் உள்ளத்தைப் பீடித்துக்கொள்வதற்கான அடிப்படைக் காரணங்களாகப் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளாமை மற்றும் கற்பனைச் சிந்தனை (wishful thinking) ஆகியவற்றைக் குறிப்பிட முடியும்.

முதல்முறை ஒரு பெண் மீது பார்வை விழுந்தவுடனேயே பார்வையைத் தாழ்த்திக்கொள்வது அவசியம்; அது மனதிற்குக் கடிவாளமிடும் செயல். மாற்றமாக, பார்வையை மீள மீள அவள் மீது செலுத்துவதென்பது உள்ளத்தில் அவளுடைய நினைவுகளை மெதுமெதுவாகக் குடிகொள்ளச் செய்துவிடும்.

குறித்த பெண் மீதான உளரீதியான நெருக்கப்பாடு உள்ளத்தில் ஏற்பட ஆரம்பித்தவுடனேயே உள்ளம் அவளைப் பற்றிக் கொள்வதுடன், அவள் பற்றிய கற்பனைச் சிந்தனையில் அவன் மூழ்கி விடுகிறான்.

நித்தமும் அவள் உருவாய் அவளைப் பற்றிக் கற்பனை செய்வதும், அவளைச் சூழவுள்ள விடயங்கள் பற்றிக் கற்பனை செய்து மகிழ்ச்சியடைவதும் என அவனுடைய சிந்தையின் முழு வடிவமும் அவளென்றாகி விடுகிறது - கற்பனையில் இன்பம் காண்கிறான், மாய உலகில் சஞ்சரிக்கிறான்.

உள்ளத்தைப் பாழ்படுத்தக்கூடிய 5 விடயங்களைப் பற்றி இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும்போது, கற்பனைச் சிந்தனையை மிகப் பிரதானமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

பார்க்க: மதாரிஜுஸ் ஸாலிகீன் (1/443 – 449)

கற்பனைச் சிந்தனை உள்ளத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தக்கூடியது; அது மனிதனானவன் யதார்த்தத்தை ஏற்றுகொள்வதை விட்டும் அவனைத் தூரப்படுத்தி, இல்லாத ஒன்றைப் பற்றி நினைத்து நினைத்து கவலை கொள்வதில் அவனைக் காலம் கடத்தச் செய்துவிடுகிறது.

இது உள்ளத்தில் ஏற்படக்கூடிய போதை - குறித்த பெண்ணின் நினைவாலேயே அவனுடைய உள்ளம் போதையடைகிறது, அதனாலேயே இன்பம் காண விளைகிறான்.

'ஒருவரைப் பற்றித் தொடர்ச்சியாக நினைத்துக்கொண்டிருப்பது மது அருந்துவதற்கு ஒப்பானது'

*இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்)
நூல்: ரவ்ழதுல் முஹிப்பீன் (147)

காதலுக்கான தீர்வைப் பொறுத்தளவில், காதலிக்கும் இருவரும் திருமணம் செய்துகொள்வதே அதற்குரிய முதன்மை நிவாரணமாகும்.

'ஒருவரையொருவர் நேசிக்கும் இருவருக்கிடையே திருமணத்தைப் போன்ற எதுவும் இல்லை' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுரைத்தார்கள்.

நூல்: இப்னு மாஜஹ் (1847)

”காதல் நோய்க்கான மருந்து நேசித்தவரைத் திருமணம் செய்துகொள்வதாகும்"

*இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்)
நூல்: அத்-திப்பு அந்-நபவி (நபிவழி மருத்துவம்) (250)

குறித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமெனின் அவளுடைய பாதுகாவலரிடம் போய் முறையாக அவளைப் பெண் கேட்டுத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

பாதுகாவலர்களும் இவ்விடயத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது அவசியம்:

பெண் கேட்டு வரக்கூடிய ஆண்மகன் மார்க்க விழுமியங்களைப் பேணி வாழக்கூடிய, நற்குணம் படைத்த ஒருவனாக இருப்பானேயானால் அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.

அதேபோல, தன்னுடைய மகன் விரும்பியிருக்கும் பெண்மகள் மார்க்கப்பற்றுடையவளாகவும், ஒழுக்க மாண்புமிக்கவளாகவும், தன்னுடைய மகனின் எதிர்காலக் குடும்பத்தை நல்ல முறையில் பராமரிக்கத் தகுதியானவளாகவும் இருப்பாளேயானால் அவர்களைத் திருமணத்தினூடாக சேர்த்து வைக்க வேண்டும்.

அதுவன்றி, குடும்பத் தாரதரம், சமூகப் பின்புலம், வயது, கல்வித் தகைமை, தொழில்நிலை போன்ற மார்க்கம் தடை செய்யாத அசட்டையான சாக்குப்போக்குகளை காரணம் காட்டி அவர்களைப் பிரித்துவிடக்கூடாது.

பிறர் என்னதான் கருத்துக் கூறிக்கொண்டாலும் சேர்ந்து வாழப்போவது அவர்கள் இருவரும்தான்; அவர்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போயிருக்கிறதென்றால் ஏனையோர் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

தவிரவும், திருமணம் செய்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாதபோது, உணர்ச்சிபூர்வமான காதல் உள்ளத்தில் குடியேற முன்பதாக முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும். அதையும் தாண்டி, உள்ளத்தை இந்நோய் ஆக்கிரமித்து விட்டுள்ளதென்றால் அதிலிருந்து மீள்வதற்கு என்னென்ன வழிவகைகளைக் கையாள வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். . 

உலகம், பிரபஞ்சம், அவற்றிலுள்ளவை, அவற்றைத் தாண்டியுள்ளவை, நாம் அறிந்தவை மற்றும் அறியாதவை என யாவும் அல்லாஹ்வுடைய நாட்டத்தின் பிரகாரமே இயங்கிவருகிறது என்பதை ஆழமாக மனதிற்குள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.

(ஸூரத்துல் அன்ஆம் 6:59)

அல்லாஹ்வுடைய நாட்டமின்றி ஒரு இலைகூட மரத்திலிருந்து உதிருவது கிடையாது எனும்போது, நாம் பிறப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே எமது விதி எழுதப்பட்டு விட்டது – நாம் எங்கே பிறக்கவிருந்தோம், என்னென்ன பட்டம் பதவிகளை எல்லாம் அடையவிருக்கிறோம், யாரைத் திருமணம் செய்யவிருக்கிறோம், எவ்வளவு காலம் வாழவிருக்கிறோம், எங்கே, எப்போது மரணிக்கவிருக்கிறோம் என்பது வரை யாவும் அல்லாஹ்வால் முன்கூட்டித் திட்டமிடப்பட்டே இருக்கின்றன.

அதன்படி, 'விரும்பியது கிடைக்காமல் போவதும் அல்லாஹ் எனக்காக நாடியதே. நான் அறியாதவற்றை எல்லாம் அவன் அறிந்தவனாக இருக்கிறான், அவன் எனக்காக எவற்றை எல்லாம் விதியாக்கியிருக்கிறானோ அவை எல்லாம் நான் எனக்காக நாடுபவற்றை விடச் சிறப்புக்குரியது’ என்னும் விதி மீதான ஆழமான பற்றுறுதியை மெதுமெதுவாக ஆழ்மனதில் பதியும்படி முதலில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்; யதாரத்தத்தை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் உளப்பக்குவம் இதனூடாக வளரும்.

இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது, இதிலுள்ள மோகங்களும், அலங்காரங்களும் வெறுமனே கண்ணை மயக்கக்கூடியவையே. இங்கு ஒரு பயணியாக குறுகிய காலப்பகுதியே வாழ வந்திருக்கிறோம். நிரந்தர வாழ்க்கையான மறுமை வாழ்க்கைக்காக எம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் தளமாகவே இவ்வுலக வாழ்க்கை இருக்கப்போகிறது.

‘இவ்வுலகத்தில் ஒரு வழிப்போக்கனைப் போன்று வாழ்ந்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள்.

வழிப்போக்கனொருவன் எப்போதும் அவனுடைய பயணத்தின் இலக்கை அடைவதிலேயே குறியாக இருப்பான், பயணத்தின்போது அவனுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் இடைஞ்சல்களைப் பெரிதாகப் பொருட்படுத்தமாட்டான்; அதேபோல, உலகில் தற்காலிகமாக வாழ வந்திருக்கும் நாம், இங்கு சந்திக்கும் இன்னல்களும், பின்னடைவுகளும் எம்மைத் துவண்டு போகச் செய்துவிடக்கூடாது. மாற்றமாக, எமது இலக்கு மறுமை வாழ்வில் ஈடேற்றம் பெறுவதாகவே இருக்க வேண்டும் என்பதை எமது சிந்தையில் உறுதியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்; அடுத்த நொடி மரணத்தைத் தழுவி கப்ருடைய வாழ்க்கையை நோக்கி நகர வேண்டியேற்பட்டால், இங்கு பிரச்சினையாக இருந்த எதுவுமே அங்கு பொருட்டாக இருக்கப்போவது கிடையாது என்பதே எமது உள்ளம் ஏற்க மறுக்கும் உண்மை.

உணர்ச்சிபூர்வமான காதலால் பீடிக்கப்பட்ட உள்ளம் குறித்த ஆண் அல்லது பெண் மீதான ஒரு வகைப் பற்றுகையை (Attachment) வளர்த்துக்கொள்கிறது; இதுவே உள்ளத்தைப் பீடிக்கக்கூடிய நோய். பற்றுகை இருப்பதால்தான் நித்தமும் அவளோடு நேரம் கழிக்க வேண்டுமெனவும், அவளுடைய பிரிவு துயராகவும் புலப்படுகிறது.

கற்பனைச் சிந்தனை பற்றுகையை மேலும் மேலும் அதிகரித்து உள்ளத்தைப் பலவீனப்படுத்துகிறது. அதனூடாகக் கவலையை நேசிக்கும், கவலையில் இன்பம் காணும் உள்ளம் உருவாகிறது.

இந்த சிந்தனைச் சிறையிலிருந்து வெளியே வரவேண்டுமென நினைப்பவர்கள் திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் பாடல்கள் கேட்பதை முற்றாகக் கைவிட வேண்டும். இசை மற்றும் பாடல்கள் கற்பனைச் சிந்தனைகளுக்கு வெகுவாக உரமூட்டக்கூடியவை. ஆகவே, இவற்றை விட்டு முற்றிலும் ஒதுங்கி, குர்ஆன் ஓதுதல் மற்றும் குர்ஆன் ஓதுவதை செவிமடுத்தல் போன்ற செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபடுவது அவசியம். குர்ஆன் உள்ளத்திற்கு ஒளியூட்டி, இசையை உள்ளத்திலிருந்து வெளியேற்றி விடும்.

அதேபோல, நீண்டகாலமாக உணர்ச்சிபூர்வமான காதல்வயப்பட்ட ஒருவருடைய உள்ளம் எப்போதும் குறித்த பெண்ணைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது இயல்பானது. ஆகவே, இதிலிருந்து தன்னை விடுத்துக்கொள்வதற்கு சிந்தனை ரீதியான விழிப்புணர்வு (Thought Consciousness) மிக அவசியமானது. தன்னுடைய சிந்தனை எங்கெங்கெல்லாம் உலாவுகிறது, அது எப்படி எப்படி எல்லாம் செயற்படுகிறது என்பன பற்றியதொரு விழிப்புநிலை ஆரம்பத்தில் எப்போதும் அவரிடம் இருக்க வேண்டும். குறித்த பெண்ணைப் பற்றிய சிந்தனை அல்லது அப்பெண் சார்ந்த விடயங்களைப் பற்றிய சிந்தனையை நோக்கி மனம் தாவ முயலும்போது, உடனடியாக அதனைக் கட்டுப்படுத்தி, சிந்தனையைத் தனக்கு விருப்பமான வேறு ஏதேனும் ஒரு விடயத்தை நோக்கித் திருப்புவதற்கான பிரக்ஞையோடு எப்போதும் இருக்க வேண்டும்.

எமது சிந்தனைகளுடைய வடிவமைப்பே (Thinking Pattern) அனைத்திற்கும் காரணம். ஏதேனுமொன்றைப் பற்றி அதிகமதிகம் சிந்தித்துக்கொண்டிருந்தால் அது எமக்கு நெருக்கமானதைப் போன்றும், அது எம்முடயைதைப் போன்றும் உணர்வோம். இதுபோன்று காதலிக்கக்கூடியவர்கள் ‘அவள் என்னுடையவள்/அவன் என்னுடையவன்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், இருவருக்குமிடையே இருக்கக்கூடிய யாதார்த்த நிலையைப் பார்த்தால், இருவரும் தொலைதூரத்தில் இருப்பார்கள்; பெயரளவுக்காவது இருவருக்குமிடையே எந்தவொரு ஆள்சார் தொடர்புகூட இருக்காது. ஆனால், அவனுடைய உள்ளம் அவளைப் பற்றிக்கொண்டிருப்பதால்தான் அவளைத் தனக்கு நெருக்கமானவளாக உணர்கிறான். அதிலிருந்து அவனுடைய சிந்தனையைப் படிப்படியாக விடுவித்துக்கொள்ளும்போது மனம் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும்.

உணர்ச்சிபூர்வமான காதலினால் பாதிக்கபட்டவர் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டுமென்பதுடன் அல்லாஹ்வின்பால் அதிகதிகம் தன்னை நெருக்கமாக்கும் காரியங்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். குர்ஆன் ஓதுதல், தஹஜ்ஜுத், ழுஹா போன்ற ஸுன்னத்தான மற்றும் நஃபீலான தொழுகைகளைத் தொழுதல், நபிகளார் ஏவிய விடயங்களை முடிந்தவரை கடைபிடித்தல், தர்மம் செய்தல் போன்ற நற்கருமங்களினூடாக அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்கும், மறுமை வாழ்வை வெற்றிக்குரியதாக மாற்றிக்கொள்வதற்கும் விரைய வேண்டும்.

இமாம் இப்னு தைமிய்யஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

”காதலினால் சோதிக்கப்படும் ஒருவர் பேணுதலாகவும், பொறுமையோடும் இருப்பாரேயானால், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வதன் காரணமாக அவருக்குக் கூலி கிடைக்கும்.

ஏதேனுமொரு துன்பத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பொறுமையோடு அதனைத் தாங்கிக்கொள்வது போல, காதலின் துயரத்தை உள்ளத்தில் உணர்கின்ற போதிலும், பிறரிடம் அது பற்றிக் கூறுவதனூடாகவோ அல்லது காதலிப்பவரின் அன்பை ஏதோ ஒரு வகையில் அடைந்துகொள்ள முயற்சிப்பதனூடாகவோ தடுக்கப்பட்ட பேச்சுகளைப் பேசக்கூடும் என்ற காரணத்தினால் தடுக்கப்பட்ட விடயங்களைப் பார்க்காமல், பேசாமல் மற்றும் செய்யாமல் அமைதியைப் பேணி, அல்லாஹ்வுக்குக் கட்டுபட்டுப்படுவதிலும், பாவங்கள் புரிவதிலிருந்து விலகி நிற்பதிலும் பொறுமையைக் கடைபிடிப்பாராயின் அவர் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுள் ஒருவராகவும், பொறுமையாளர்களுள் ஒருவராகவும் இருப்பார் என்பது மார்க்க சட்டதிட்டங்களினூடாகப் புலனாகிறது.”

நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை”

(ஸூரத்து யூசுஃப் 12:90)

நூல்: மஜ்மூ அல்-ஃபதாவா (10/133)

அல்லாஹ்வை நேசிப்பதால் மாத்திரம் நிரப்ப முடியுமானதொரு வெற்றிடம் உள்ளத்தில் உண்டு. ஆகவே, அல்லாஹ்வை நேசிப்பதன் வெளிப்பாடாக நாம் செய்யக்கூடிய அணுவளவு காரியத்தையும் அவனுடைய திருப்தியைப் பெறுவதை நோக்கமாகக்கொண்டு அமைத்துக்கொள்ளும்போது, இவற்றிலிருந்து மீண்டுவர முடியும்.

இறுதியாக, ஒரு பெண்ணை மனப்பூர்வமாக நேசிப்பதென்பது அவள் மீது உணர்ச்சிபூர்வமான காதலை வளர்த்துக்கொள்வது அல்ல:

அவளைத் திருமணம் செய்வதற்கு உளப்பூர்வமாகப் பிடித்திருக்கிறதென்றால், மேலே குறிப்பிட்டது போல அவளுடைய பாதுகாவலனிடம் போய் முறைப்படி பெண் கேட்டுத் திருமணம் செய்துகொள்வதே உசிதமானது.

அது சாத்தியப்படாத விடத்து, அவளுடைய இம்மை மற்றும் மறுமை வாழ்வுக்கு எவ்விதப் பாதகத்தையும் ஏற்படுத்தாமல் நடந்துகொள்வதுடன், அவளுடைய ஈருலக வாழ்வும் சிறப்பனதாய் அமைய வேண்டுமென அவளுடைய நலன்களுக்கு முன்னுரிமையளித்து திரைமறைவில் அல்லாஹ்விடம் அவளுக்காகப் பிரார்த்திக்க வேண்டும் – இதுவே உளப்பூர்வமான காதல் மற்றும் நேசம்.

அதுவன்றி, தான் உணர்ச்சிவயப்பட்டிருப்பது போதாக்குறைக்கு எப்படியேனும் அப்பெண்ணையும் இவ்வலைக்குள் சிக்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், அவளுடைய உள்ளத்தையும் சீர்கெடுக்கும் காரியங்களைச் செய்ய விளைவதன் மூலமாக அவளோடு பேசி மகிழ முயல்தல், தனிமையில் நேரம் கழிக்க முயல்தல் போன்ற பாவச்செயல்களின் பக்கம் அவளையும் தள்ளி, அவளுடைய இம்மை வாழ்வைச் சிக்கலுக்குரியதாக ஆக்குவது மட்டுமன்றி, சில நேரங்களில் அவளுடைய மற்றும் அவளுடைய குடும்பத்தினரது கண்ணியத்தை முற்றிலுமாக சீர்குலைத்து அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக்கொடுக்கும்படியாக நடந்துகொண்டு, அவளுடைய மறுமை வாழ்வுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதை எப்படி அவள் மீதான நேசம் என்று கூற முடியும்?

‘நேசம்' என்றாலே நல்லதை நாடுவதும், நல்லதைச் செய்வதும்தான்; இப்படியான தீச்செயல்களைச் செய்வதும், தீச்செயல்களைச் செய்யத் தூண்டுவதும் ஒருபோதும் நேசமாக மாட்டாது. மாறாக, தன்னுடைய ஆசைகளுக்கும், மோகங்களுக்கும் ஏற்றாற்போல் அவளையும் செயற்பட வைப்பதற்கானதொரு முன்முயற்சி என்றே கூறவேண்டும்.

இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் மீது நீங்கள் வைத்திருக்கக்கூடிய நேசமானது உங்களுடைய ஆசைகள் மற்றும் இச்சைகளை விட அவர்களுடைய மறுமை வாழ்வைக் குறித்து உங்களை அதிகம் கவலையுறச் செய்கிறதென்றால், அதுவே நேசத்தின் தூய வடிவமாகும்.”

ரவ்ழதுல் முஹிப்பீன்

காலாகாலமாக இளைஞர்களும் இளைஞிகளும் பாதிக்கப்படும் ‘உணர்ச்சிபூர்வமான காதல் (passionate love)’ என்பது ஒருவர் மீது உள்ளத்தில் ஏற்படக்கூடிய பற்றுகையின் வெளிப்பாடு என்பதை சரிவரப் புரிந்துணர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை முறைப்படி அணுகி, அவர்களுக்கு உரிய உளவள வழிகாட்டல்களை வழங்குவதனூடாக அவர்களை இதிலிருந்து பாதுகாப்பாக மீட்டெடுப்போமாக!

எம். எஸ். எம். ரஸ்மி

Previous Post Next Post