பலவீனமான மக்களுக்கு ஆதரவளிப்பது அருள்மிகு அல்லாஹ்வின் பேருதவியைப் பெற்றுத் தரும் வணக்கமாகும். ----

சமூகத்தில் இருக்கின்ற ஏழைகள், வறியோர், நோயாளிகள், பலவீனமானவர் என்போர்  ஏதோ ஒரு வகையில் சமூகத்தில் புறக்கணிக்கப்படும் கீழ்நிலை வர்க்கத்தினராக இருப்பதாலேயே இஸ்லாம் அவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி உள்ளது. 

இவ்வாறான மக்கள் உலக ஆசையைக் குறைத்து, அதனோடு உள்ள இறுக்கமான தொடர்பை மட்டுப்படுத்தி வாழ்வதோடு,  படைத்த அல்லாஹ்வோடு‌ நெருக்கமான தொடர் பாடல் கொண்டு‌ வாழ்வது பொதுவாக இயல்பாகும். 

இவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலும் அவனை அஞ்சி பயப்படுவதிலும் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பதை மறக்க முடியாது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் போன்று நோக்கப்படும் இம்ம மக்கள் அல்லாஹ்விடம் ஒரு விஷயத்தை சத்தியம் செய்து சொல்கின்ற போது அல்லாஹ்வும் அதனை நிறைவேற்றுவான் ஆதாரப்பூர்வமாக என ஹதீஸ்களில் காண முடியும்.

இதனை கவனத்தில் கொண்டே நபி (ஸல்)  அவர்கள் பின்வருமாக கூறினார்கள். 

"هل تنصرون وترزقون إلا 
بضعفائكم" (رواه البخاري)

நீங்கள்  (அல்லாஹுவால்)‌ உதவி‌ செய்யப்படுவதும் உணவளிக்கப்படுவதும் உங்களில் உள்ள பலவீனமானவர்களை கொண்டே அன்றி இல்லை.‌ (நூல்: புகாரி)

வேறொரு  நபி மொழியில்;

"إنما ينصر الله هذه الأمة بضعيفها بدعوتهم وصلاتهم وإخلاصهم" (رواه 
(النسائي وصححه الألباني)
இந்த சமூகம் அதன் பலவீனமானவர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் தொழுகைகள் மேலும் அவர்களின் மனத் தூய்மையான செயற்பாடுகள் மூலமாகவே உதவி செய்யப்படுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் அந்நஸயி).

ஏழ்மை வறுமை கஷ்டம் துன்பத்தில் வாழும் மக்களை அன்போடு நோக்குவது அர்ஷின்‌‌ பிறக்கும் அல்லாஹ் கருணை செய்யும் ஒரு வழியாகவும்.

الرَّاحمونَ يرحمُهُمُ الرَّحمنُ . ارحَموا من في الأرضِ يرحَمْكم من في السَّماءِ . 
(رواه  الترمذي)
கருணை பாசத்துடன் நடப்பவர்களோடு கருணை, இரக்கம் நிறைந்த அல்லாஹ்வும் கருணை காட்டுகின்றான். ஆகவே பூமியில் வாழ்வோருக்கு அன்பு காட்டுங்கள். வானில் இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு அன்பு  காட்டுவான் என  நபி (அலை) அவர்கள் கூறினார்கள் (நூல் திர்மதி).

சமூகத்தில் நலிவுற்றோக இருக்கும் மக்கள் விஷயத்தில் அக்கறை காட்டுவது தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

السَّاعِي علَى الأرْمَلَةِ والمِسْكِينِ كالْمُجاهِدِ في سَبيلِ اللَّهِ، أوْ: كالَّذِي يَصُومُ النَّهارَ ويقومُ اللَّيْلَ

#ஏழைகள், மற்றும் விதவைகள் விஷயத்தில் கவனம் எடுப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கின்ற போராளி போன்றவர், அல்லது பகலெல்லாம் நோன்பு நோற்று இரவில் வணக்கம்  செய்தவர் போன்றவராவார் 
( நூல் புகாரி ,முஸ்லிம்)

சமூகத்தின் கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு உதவுவது பற்றி பல இடங்களில் அல்குர்ஆன் பேசி இருக்கிறது.

அவற்றில் அல்பலத் அத்தியாயம் குறிப்பிடும் பின்வரும் அம்சங்களும் உள்ளடங்கும் .

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
 ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْعَقَبَةُ ؕ‏
 (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
 فَكُّ رَقَبَة
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்

اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ ۙ‏
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

 يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ ۙ‏
 நெருங்கி உறவினனான ஓர் அநாதைக்கோ,
اَوْ مسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ‏
அல்லது (வறுமை காரணமாக) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ
(உணவளிப்பதாகும்).

 ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا
 بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ‏
பின்னர், இவர் ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், அன்பு பாசத்தை கொண்டு  கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் மாறி விடுவது (கணவாயைக் கடப்பதாகும்).

 اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏
அத்தகையவர் தாம்  வலப்புறத்தாரான  (சுவனவாதிகள்).  (அல் பலத்:11-18) 

செலவு செய்கின்ற ஒருவர், இறைவழியில், 
இறை திருப்தியை இலக்காகக் கொண்டு செலவழித்தல், 

சுவனத்தை ஆசை வைத்து செலவழித்தல்,

நெருங்கிய, மற்றும் தூரத்து உறவினர்கள் அண்டைய அயலவர் போன்றவர்களை‌ படுத்துதல்  போன்ற ஒழுங்குகளை கற்றுத் தருவது போல; ஏழை எளியோருக்கு உணவளிப்பது பற்றியும் வழிகாட்டி இருக்கிறது. 

அந்த வகையில்
கைதிகளின் விடுதலைக்காக  செலவு செய்தல், அடிமையை விடுதலை செய்ய செலவு செய்தல் போன்ற பல்வேறு வழிகளையும் அல்குர்ஆன் பேசியிருக்கிறது.

அவ்வாறே ,ஸ(ஜ )காத் கொடுக்க தகுதியான எட்டு பிரிவினர்  பற்றியும் பேசி,‌ இதுபோன்ற நலிவுற்ற  தேவை உடையோர்  தொடர்பாகவும் விளக்கி இருக்கிறது. 

அதன் காரணமாகவே அவர்களை அரவணைத்து வாழ வேண்டும் எனப் பணிக்கும் இஸ்லாம் அவர்களுக்கு உதவுவதன் மூலம்   நமக்கும் நன்மையும் பிரதி ஈடுகளும் நல்வாழ்வும் கிடைக்கும் என்ற நற்செய்தியையும் குறிப்பிடத் தவறவில்லை.

ஆகவே, உணவளிப்பது தர்மம் செய்வது,  ஏழைகளை கவனிப்பது, அனாதைகளை பராமரிப்பது போன்ற சமூகவியல் சார்ந்த அமல்களை முஸ்லிம்களாகிய  நாம்‌  பொறுமையோடும் சமூகம் சார்ந்த வணக்கமாகவும் மனதில் இறுத்தி  செயலாற்ற வேண்டும்.  
எக்காரணம் கொண்டும் பிறர் புகழோ முகஸ்துதியோ இதில் கலந்து விடலாகாது.

- எம் . ஜே . எம். ரிஸ்வான் மதனி 

Previous Post Next Post