1- விழிப்புணர்வின் அவசியம்
தற்காலத்தில் தனித்துவமான ஒரு நிலையில் நாம் வாழ்கின்றோம். விசித்திரமான முறையில் மக்களிடம் தகவல்கள் வந்து சேருகின்றன. அவை நெட்வேக் மற்றும் செட்லைட் ஆகிய மிக விசாலமான இரு வாயில்களால் மக்களிடத்தில் கொட்டப்படுகின்றன. இதன் விளைவாக ஒரு உலகளாவிய கலாச்சாரக் கலப்பு, ஒன்றிணைவு உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் மனிதன் பயங்கரமான அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றான். இந்நிலையை ஒரு வகுப்பறையில் ஒரு மாணவன் 20 ஆசிரியர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருக்க, அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பாடங்களை ஒரே நேரத்தில் விளக்கிக் கொண்டிருப்பதற்கு ஒப்பானது. இந்த அளவு தகவல்கள் அடர்த்தியாக மனிதனிடத்தில் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. அவனிடத்தில் சுய விழிப்புணர்வும், நடைமுறை உலகைப் பற்றிய புரிதலும், கடமை பற்றிய தெளிவும் இல்லாமல் இருப்பதானது அவனைக் கொள்கைத் தடம் புரள்வுக்கும், சிந்தனைத் தடுமாற்றத்திற்கும், பண்பாட்டு வீழ்ச்சிக்கும் இட்டுச்செல்லும் காரணியாக அமைந்து விடக்கூடும். எனவே, நிகழ்கால சூழ்நிலைகள், வசதிகள், சவால்கள், கடமைகள் என்பவற்றைப் பற்றிய ஆழமான புரிதலும், கூரிய பார்வையும் எம்மிடம் இருப்பது அவசியம். சாதாரண அறிவை விட இத்தகைய தெளிவையே விழிப்புணர்ச்சி என்கிறோம். முதிர்ந்த விழிப்புணர்ச்சி இருந்தால் மாத்திரமே பிரமாண்டமான அளவில் கொட்டப்படும் சிந்தனைகளையும் தகவல்களையும் புடம்போட்டு, அவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுப்பதற்கும் தவறானதைத் தவிர்ப்பதற்கும் முடியும்.
அல்லாஹ்வின் எதிரிகள் அனைத்து இடங்களிலும் வாழும் முஸ்லிம்களைக் குறிவைத்து, இன்றுள்ள சாதனங்களின் வசதிகளைத் திறமையான முறையில் பயன்படுத்தி, திட்டமிட்ட கலாச்சார, கொள்கை யுத்தமொன்றைத் தொடுத்துள்ளனர். இரண்டு இலக்குகளை அடைவதே இந்த யுத்தத்தின் குறிக்கோள்.
1- முஸ்லிம்களை அவர்களது மார்க்கத்தில் இருந்து வெளியேற்றுதல். இதனை நாத்திகர்கள், கிறிஸ்தவ மயமாக்கலில் ஈடுபடுவோர் போன்றவர்கள் செயல்படுத்துகின்றனர்.
2- முஸ்லிம்களின் உள்ளத்தில் இருக்கும் மார்க்கக் கருத்துக்களை மாற்றியமைத்தல்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கொடுக்கப்படாத தவறான விளக்கங்களைக் கொடுத்தல். இதற்கு இரண்டு வடிவங்கள் உண்டு; ஒன்று மார்க்கத்தில் அளவு கடந்து செல்லும் தீவிரத் தன்மை சார்ந்தது, மற்றையது மார்க்கச் சட்டங்களைக் கைவிடும் தளர்வுத் தன்மை சார்ந்தது. சிலவேளை இந்த இரண்டாவது இலக்கிற்காகப் பணியாற்றுபவர்கள் எமது சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
எனவே ஒரு பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது; அதற்குத் தீர்வு காண்பதற்கும் அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. சிந்தனை ரீதியான மற்றும் கொள்கை ரீதியான சித்தாந்தங்கள் பெரும் வெள்ளத்தைப் போன்று எங்களை எங்களது சொந்த நாட்டுக்குள்ளேயே வந்து தாக்குகின்றன; சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களையும் குறிப்பாக இளைஞர் யுவதிகளை நோக்கிப் பேசுகின்றன. இது பரந்த அளவில் பரவியிருக்கும் ஒரு ஆட்கொல்லி வைரஸிற்கு ஒப்பாக இருக்கிறது. இது எண்ணிக்கையிலும் முறையிலும் இதற்கு முன்பிருந்த எந்த ஒரு கொள்கை ரீதியான அச்சுறுத்தலை விடவும் வித்தியாசமானது. யார் அதற்கெதிரான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லையோ அவர் பாதிக்கப்படுவதற்கு நெருக்கமானவராக இருப்பார். நாம் ஒன்றும் கற்பனையாகப் பேசவில்லை. இதற்குப் பல மாதிரிகளைப் பார்த்துவிட்டோம். இஸ்லாத்தின் பெயரால் தமது தாய் தந்தையரைக் கொலை செய்பவரைக் கண்டுவிட்டோம். முஸ்லிம் சமூகத்தில் இருந்து விட்டு நாத்திகத்தை அல்லது கிறித்துவத்தைத் தழுவியதாக பிரகடனப்படுத்துவதை அல்லது மார்க்க சட்டங்களை வெளிப்படையாகப் பரிகாசம் செய்வதைப் பார்த்துவிட்டோம்.
தற்கால அகீதஹ் ரீதியான சிந்தனைப் போராட்டத்தின் பண்புகள்
1- முற்காலங்களை விட தற்காலத்தில் பிரச்சாரம் செய்யப்படுகின்ற கொள்கைகள், கருத்துக்கள், குழப்பங்கள் எண்ணிக்கை அளவில் அதிகமானவை.
அவை ஒவ்வொன்றும் தானே சரியான கொள்கை எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன. அவை எமது அகீதஹ்வையும் எமது நடுநிலையான இஸ்லாத்தையும் பண்பாட்டையும் குறிவைக்கின்றன. அவை அல்லாஹ்வின் இருப்பு, அவனது றுபூபிய்யத், உலூஹிய்யத், எமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவம், அவர்களது ஹதீஸ்கள், விதி, குர்ஆன், மார்க்க சட்டங்கள், பண்பாடுகள் போன்ற அனைத்தைப் பற்றியும் பேசுகின்றன. இது எதேச்சையாக நடப்பதல்ல; மாறாக நன்கு திட்டமிட்டுக் குறி வைக்கப்படும் ஒரு செயல்பாடாகும்.
2- இதற்காக எழுத்து, ஆடியோ, வீடியோ எனப் பல்வேறு வகையான ஊடகங்களும் சாதனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தக் கொள்கைக் குழப்பங்களைப் பிரச்சாரம் செய்கின்றவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரப்புவதற்காக ஒவ்வொரு சாதனத்தையும் ஊடகத்தையும் மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பல செனல்கள் கலாச்சார அல்லது ஆவணப்பட அல்லது அறிவியல் செனல்களாக இருந்தாலும் நாஸ்திக சித்தாந்தங்களைக் கொள்கைகளாகக் கொண்டிருக்கின்றன. சினிமா என்பது அடிப்படையில் களிப்பூட்டுவதற்கானதாக இருந்தாலும், சர்வதேச சினிமா நிறுவனங்கள் தயாரிக்கின்ற திரைப்படங்களில் மறைமுகமாக நாத்திகக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலத்திரனியல் விளையாட்டுக்களிலும் இதே நிலைதான். இப்போதெல்லாம் முன்னரைப்போல கருத்துக்களை முன்வைக்கப் பயன்படுத்தப்படுகின்ற சாதனங்கள் வரையறுக்கப்பட்டவையல்ல. முன்னர் இக்கருத்துக்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இப்போது இக்கருத்துக்கள் பல சாதனங்களின் வழியாக மக்களைத் துரத்தித் துரத்தி வருகின்கின்றன. அவற்றைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர்களைக் கூட வந்தடைகின்றன. இன்றைய சாதனங்களின் பன்முகத்தன்மை, இனிமை தரும் புதுமை, கவர்ச்சி, இலகுவான பயன்பாடு என்பன இவற்றின் தாக்கத்தைப் பன்மடங்காகப் பெருக்கியிருக்கின்றன.
3- இதற்காக இன்று பன்முகத்தன்மை கொண்ட வழிமுறைகள் கையாலப்படுகின்றன. பகுத்தறிவோடு உரையாடுதல், உணர்வுகளோடு உரையாடுதல், தத்துவப் பிரச்சினைகளை அல்லது பயன்பாட்டு அறிவியல் (பிரயோக விஞ்ஞானப்) பிரச்சினைகளைத் தூண்டிவிடுதல், சத்தியத்தை அசிங்கப்படுத்திக்காட்டுதல், பல கருத்துள்ள சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி குழப்பத்திற்கு உள்ளாக்குதல் என பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் முன்னரைப் போல் தத்துவரீதியானவையாகவும் கல்வியில் உயர்மட்டத்தவர்களை மாத்திரம் அடைகின்றவையாகவும் இல்லை.
4- இன்று முன்மொழிவுகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் கொண்டு செல்லப்படுகின்றன. பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களுக்கு ஏற்ற முறையில், கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் முன்வைக்கப்படுகின்றன. இதனால் அவை தாக்கம் செலுத்தும் பரப்பும் பிரமாண்டமாக இருக்கின்றது. உதாரணமாக சிறுவர்களுக்காகத் தயாரிக்கப்படும் பல அழகான விளக்கப்படக் கதைகள் அவர்களின் அறிவுத் தரத்திற்கேற்ற முறையில் நாத்திகக் கருத்துக்களை விதைக்கின்றன. அதே நேரம் இவற்றுக்கு எதிரான தற்காப்பு நிகழ்ச்சிகள் எண்ணிக்கையிலும், முறைகளிலும் குறைவாகவே இருப்பது கவலைக்குரியதாகும்.
5- இன்று அதிகமான குடும்பங்களில் ஆழமான பிணைப்பு இல்லை. முன்னரை விட சிறுவர்கள் மீதுள்ள கண்காணிப்பு, வாலிபர்களின் பங்களிப்பு போன்றவை குறைவாகவே உள்ளன. முன்னர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவரைப் பற்றி உணர்கின்ற நிலை இருந்தது. ஒவ்வொருவரும் மற்றவரில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வர். குடும்பம் ஒருவரையொருவர் செவிமடுக்கும் விதத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தது. அதன் உறுப்பினர்கள் கலந்துரையாடுவர். ஒருவரிடம் ஏற்படும் சிந்தனை ரீதியான சிக்கல்கள், குழப்பங்கள் போன்ற மனதில் இருக்கும் விடயங்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசிக் கொண்டனர். இதனால் குடும்பப் பிணைப்பு பெரிய அளவுக்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று பல குடும்பங்களின் நிலை அவ்வாறல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று ஒரு குடும்பம் ஒரே சுவருக்குள் வாழ்ந்தாலும் அதற்குள் தனித்தனியான பல உலகங்கள் இருப்பதை அவதானிக்கலாம். ஒவ்வொருவருக்கும் தனியான ஒரு உலகம்; அவரிடத்தில் அவரது கையடக்கத்தொலைபேசி அல்லது கம்ப்யூட்டர், அதில் அவர் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டிருப்பார். அவரைக் கண்காணிப்பதற்கும் எவரும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் தன் விடயத்தில் பிஸியாக இருப்பர். மற்றவரைப் பற்றி சிந்திப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது. இதன் விளைவாக அதிகமான வாலிபர்களும் யுவதிகளும் தவறான நோக்கங்களைக் கொண்டவர்களால் இலகுவாக வேட்டையாடப்படுகின்றனர்.
6- அதிகமான இளைஞர் யுவதிகளிடத்தில் முறையான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டிகள் இல்லை.
எங்கே செல்ல வேண்டும்? நம்பிக்கைக்குரிய வழிகாட்டிகளுக்கும் நம்பத்தகாத வழிகாட்டிகளுக்கும் இடையிலான வித்தியாசம் அவர்களுக்குத் தெரிவதில்லை. இன்று ஒவ்வொருவரும் பேசுகின்றனர், ஒவ்வொருவரும் கருத்துரைக்கின்றனர், கோட்பாடுகளை முன்வைக்கின்றனர்; அவற்றைக் கேட்பதற்கும் பலர் இருக்கின்றனர். முன்னரைப் போல் நம்பகமானவர்களிடம் மாத்திரம் கருத்துக் கேட்கப்படுவதில்லை.
7- இன்று ஏற்பட்டிருக்கும் சிந்தனை ரீதியான பிரச்சினையைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம்களிடமிருக்கும் பலவீனம்.
சிலர் இன்றைய கால சூழ்நிலையின் அபாயத்தை உணராமல் இருக்கின்றனர். கொள்கைக்குழப்பங்கள் என்ற கொடிய நோய்கள் தங்களைச் சூழாலுள்ளவர்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் பொழுது அவற்றைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் அற்றவர்களாக இருக்கின்றனர். சிலவேளை அவை அவர்களையும் தாக்குகின்றன. சிலர் காலம் கடந்து, சந்தர்ப்பங்கள் நழுவிச் சென்ற பிறகே விழித்துக்கொள்கின்றனர்.
இன்று அதிகமான இளைஞர்கள் சோசியல் மீடியாவில் கவனத்தைச் செலுத்துவதால் முறையான அறிவு அவர்களிடம் குறைவாகவே இருக்கின்றது. வழிதவறியவர்களின் கருத்துகளையும் வாசிக்கின்றனர்; அதில் பிரச்சினை இல்லை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அனுமதிப்பது சரியான செயல்பாடல்ல என்பதில் புத்திஜீவிகள் ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர். உதாரணமாக சிறுவர்களிடம் ஆயுதங்களைக் கொடுத்து அவர்கள் விரும்பியபடி செயல்படட்டும் என்று கருதுவது அறிவுடைமையா? எனவே அனைவரும் வாசிக்க வேண்டும்; பயனுள்ளதையும், பாதுகாப்பானதையும் வாசிக்க வேண்டும். அனைவரது கருத்துக்களையும் வாசிப்பது நல்லதல்ல. இந்த விடயத்தில் சமூகத்தில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன; ஒன்று வாசிப்பு மூலம் கல்வியைப் பெற்றுக் கொள்ளாத பிரச்சினை. அடுத்தது, சரியான கல்வி வழிகாட்டல் இல்லாத பிரச்சினை.
நாம் மேற்படி முன்மொழிவுகளை முன் வைத்திருக்கின்றோம். ஆனால் இவற்றைக் கையாளுவதில் எங்களிடம் நுணுக்கமும், மென்மையும், புறநிலைத்தன்மையும் இருப்பது அவசியம்.
சிலர் மிகையாகக் கற்பனை செய்வர்; சில நேரம் நிராசையடைவர். தமக்கு முன்னால் உலகமே இருண்டுவிட்டதாக நினைப்பர். இது ஆரோக்கியமானதல்ல. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், நல்ல விடயங்கள் தான் மிகையாக இருக்கின்றன. குறிப்பாக எங்களுடைய நாடுகளில் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
யதார்த்தம் என்னவெனில் பிரச்சினை இருக்கிறது; ஆனால் அது மிகைத்து விடவில்லை; சிலர் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலை அதற்கு எதிராக செயல்படுவதற்கும் போராடுவதற்கும் எம்மைத் தூண்டவேண்டும்; சோர்வு, விரக்தியின் பக்கம் இட்டுச் செல்லக் கூடாது. மார்க்கம் அல்லாஹ்வுடையது. அவனுடைய உதவியால் அது வெற்றி பெறும்.
எமக்கு முன்னால் மூன்று போராட்டக் களங்கள் இருக்கின்றன. நாடுகளைப் பாதுகாப்பதற்காக ராணுவத்தினர் போராடுகின்றனர். உடல்களைப் பாதுகாப்பதற்காக மருத்துவத்துறை போராடுகின்றது. ஈமானைப் பாதுகாக்கும் போராட்டக்களத்தில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ஆண்கள், பெண்கள், ஆசிரியர், ஆசிரியைகள், ஊடகவியலாளர்கள், மார்க்கத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் அனைவருமே இதில் களமிறங்க வேண்டும். ஏனெனில், எப்போது வேண்டுமானாலும் கொள்கை குழப்பங்கள் என்ற தீப்பொறிகள் தக்கமுடியுமான எல்லைக்குள்தான் அனைவரும் இருக்கிறார்கள்.
இஸ்லாம்தான் எமது இருப்புக்கான காரணமும், நாம் தொடர்ந்தும் வாழ்வதற்கான நோக்கமும், எமது வாழ்க்கையின் முக்கியமான அம்சமும். எனவே அதனைப் பாதுகாப்பதற்காகக் களமிறங்குவோம். அல்லாஹ் கூறுகின்றான்: {ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் (மார்க்கத்திற்காக) உதவியாளர்களாக இருந்து கொள்ளுங்கள்.} [61:14]
பேராசிரியர் அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் உரையின் சுருக்கம்.
https://youtu.be/noEgx7LVxeg
-ஸுன்னஹ் அகாடமி