ஆக்கம்: சகோதரி அஸ்மா பின்த் ஷமீம்
தமிழில் : உம்மு உபைத்
அன்பான சகோதரிகளே! இன்றைய காலகட்டத்தில் சில சகோதரிகள் தங்கள் தலையை மட்டுமே மறைத்துக்கொண்டு ஹிஜாபுடன் இருக்கிறேன் என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் தலையை மறைப்பது மட்டும் தான் ஹிஜாப் என்பதல்ல.
உண்மையில் சிந்தித்துப் பார்த்தோமானால் ஹிஜாப் என்பது நம் பேச்சின் வெளிப்பாடு, நம் நடையின் வெளிப்பாடு, நம்மை நாமே வழி நடத்திச் செல்லும் நெறிமுறை. ஹிஜாப் என்னும் வார்த்தை தன்னகத்தே ஒரு முறையான, முழுமையான வாழ்க்கை நெறியைக் கொண்டுள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
இன்னும், முஃமீனான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது, இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் (முஃமீனான பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம்புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது, மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்தி லிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம், மேலும் முஃமீன்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி)நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்;ஆன் - சூரத்துந்நூர் 24:31)
ஹிஜாபைப் பற்றி இவ்வசனம் தெளிவுபடுத்தும் உண்மைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
தலையை மட்டும் மறைத்துக் கொண்டால் போதுமா?
இந்த வசனத்தை உற்று நோக்கும் போது தங்கள் முந்தானைகளை மேற்சட்டையின் மீது போட்டு கழுத்து, நெஞ்சு ஆகியவற்றையும் மறைக்க வேண்டும். அதாவது தலையை மறைக்கப் பயன்படுத்தும் துணியால் இந்த பாகங்களையும் மறைக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். எனினும் சில பெண்கள் சிறிய துணியினால் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு ஏனைய பாகங்களான கழுத்து, நெஞ்சு பகுதியை மறைக்காமல் விட்டு விட்டு தாங்கள் முழுமையாக ஹிஜாபின் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். இது அறியாமைக்கால பெண்களின் நடைமுறையாகும்;.
இமாம் குர்துபி கூறியுள்ளார்கள். அக்கால பெண்கள் தலையை மறைக்க பயன்படுத்தும் துணியின் ஓரங்களை பின்னால் தொங்கும்படி விட்டுவிடுவர். இதனால் கழுத்து, நெஞ்சு, காது ஆகிய பகுதிகள் மறைக்கப்படாமல் இருக்கும். பின்னர் அல்லாஹ், தங்கள் முந்தானைகளால் இப்பகுதிகளை மறைக்க ஆணையிட்டான்.
இறுக்கமான உடைகள் அணியலாமா?
டைட் ஜீன்ஸும், சிறிய டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு தலையை மட்டும் ஒரு துணியால் மறைப்பதும் ஹிஜாப் ஆகாது. உடலமைப்பை வெளிப்படுத்தும் இறுக்கமான ஆடைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அணியக்கூடாது. நபி (ஸல்) கூறினார்கள், 'என் உம்மத்தில் பெண்களிலிருந்து ஒரு சாரார் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று உயர்ந்து இருக்கும். அவர்கள் சுவனம் நுழையவே மாட்டார்கள், ஏன் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்'. (ஆதாரம்: முஸ்லிம்)
மெல்லிய ஆடைகளை அணியலாமா?
ஷிபான் போன்ற மெல்லிய துணி வகைகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது. உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் தோலின் நிறம் வெளியே தெரிகின்ற ஆடைகளை ஹிஜாபாக ஆக்க முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மெல்லிய உடை அன்பளிப்பாக கிடைத்தது, அதை ஒஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். அதை அவர் தன் மனைவிக்கு கொடுத்து விட்டார்;. நபி (ஸல்) அவரிடம் இதைப்பற்றி கேட்ட போது தம் மனைவிக்கு கொடுத்ததை தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர் அதை அணியும் போது மேலே வேறு ஒரு ஆடையும் சேர்த்து அணியட்டும். ஏனெனில் அவ்வுடை அவரின் எலும்புகளின் அளவை விவரிக்கும் விதமாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்.
ஹிஜாப் பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கலாமா?
ஆடையானது பிற ஆடவரின் கவனத்தைக் கவரும் விதமாக இருக்கக்கூடாது. 'அல்லாஹ் தன் திருமறையில் அழகை வெளிப்படுத்தக் கூடாது' என தெளிவாகக் கூறுகிறான். இருந்தும் சில சகோதரிகள் ஹிஜாப் அணிகிறோம் என்ற பெயரில் அலங்கரிக்கப்பட்ட ஹிஜாபை அணிந்து கொண்டு வலம் வருகின்றனர். ஜொலிக்கும் கற்கள் பதிக்கப்பட்டும், ஜரிகை வேலை செய்யப்பட்டும் உள்ள இந்த ஹிஜாப், சாதாரண ஆடைகளில் அவர்கள் இருப்பதைவிட கூடுதல் அழகை வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதால் ஆண்களின் பார்வை அவர்களை நோக்கி செல்கிறது. இதனால் ஹிஜாபின் முக்கிய அம்சமே அடிபட்டு விடுகிறது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கிவிடுங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள். மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களைவிட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான். (அல்குர்ஆன் - சூரத்துல் அஹ்ஜாப் 33:33)
அழகு அலங்காரமும், வாசனைத் திரவியங்களும்
அலங்காரம் செய்து கொண்டு வெளியே செல்வதும் அழகை வெளிக்காட்டும் விஷயமே! தலையையும் உடலையும் மறைத்துக் கொண்டு உதட்டுச்சாயம், கண்மை போன்றவைகளை பூசிக் கொண்டு போவதும் ஹிஜாபில் சேராது. மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பதும் ஆகுமானதல்ல. ஆனால் வாசனைத் திரவியங்கள் கணவனுடன் மட்டும் இருக்கக்கூடிய நேரங்களில் உபயோகிக்கலாம்;;.
மஸ்ஜிதுகளுக்கு போகும்போது பெண்கள் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். மேலும் நபி (ஸல்) யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரி ஆவாள்''என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூ மூஸா (ரலி), ஆதாரம்: அஹ்மது)
சலங்கை மற்றும் மணியோசையுடன் கூடிய நகைகள்
நம்மவரிடையே கொலுசு அணிவது வழக்கம். அதில் வருகின்ற ஓசை அடுத்தவரைக் கவரும், இது தவறு என்று அவர்கள் உணர்வதில்லை. சத்தம் வருகின்ற எந்த விஷயமானாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நவீன நாகரீக உலகில் செருப்பு, கைச்செயின், கைப்பை, கிளிப் இன்னும் உடைகளிலும் சத்தம் வரும் மணிகள் வைக்கப்படுகின்றன. இவை ஹிஜாபின் ஒழுங்குகளுக்கு எதிரானது. இதையே அல்லாஹ் தனது திருமறையில் கூறும்போது,
மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.. (அல்குர்ஆன் - சூரத்துந்நூர் 24:31)
ஹிஜாபில் இருந்துக் கொண்டு மஹரமல்லாதவரிடம் பேசி சிரித்தல்
சில சகோதரிகள் ஹிஜாபுடன் இருந்து கொண்டு அந்நிய ஆண்களிடம் பேசி சிரிப்பதால்; தவறில்லை என்று நினைக்கின்றனர்;;. ஆனால் அவ்வாறில்லை. நீங்கள் பேசக் கூடிய ஆண் ஒரு ஆலிமாக இருந்தாலும்கூட பேச்சில் நளினம் காட்ட வேண்டாம். அல்லாஹ் திருமறையில் கூறுவதை கவனியுங்கள்:
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல, நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான், இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (சூரத்துல் அஹ்ஜாப் - 33:32)
முக்கியமான தேவைக்காக அன்றி அந்நிய ஆடவரிடம் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நளினம் கூடாது என்பதால் கடின சித்தமாக பேசலாம் என்பதல்ல. மாறாக சாந்தமாக அதே நேரம் உறுதியான வாக்குகளைக் கொண்டு பேசவேண்டும்.
ஹிஜாப் அணிந்து கொண்டு அந்நிய ஆடவரை பார்த்தலும் ஹிஜாப் அல்ல
அல்லாஹ் உங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். ஏனெனில், ஒரு பார்வை ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் அர்த்தம் மிக்கவை. எனவே இஸ்லாமிய முறைப்படி முழுமையாக நாம் உடையணிந்திருந்தாலும், நமது பார்வைகளை தாழ்த்திக் கொள்வது கொண்டு நமது வெட்கத்தை பேணிக் கொள்ள வேண்டும். இதுவே குழப்பம் ஏற்படாமல் இருக்க வழிவகைச் செய்யும்.
இன்டெர்நெட் மற்றும் தொலைபேசிகளில் உரையாடுவது, மஹரம் அல்லாதவரிடம் உரையாடிக் கொண்டு, 'நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அது இன்டர்நெட் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ இருந்தபோதிலும், இவ்வாறான தொடர்புகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழி வகுத்துவிடும். எத்தனையோ குடும்பங்கள் வாழ்விழந்ததற்கும், எத்தனையோ இளம் வயது பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கும் இவைகள் காரணங்களாக அமைந்திருக்கின்றன. எனவே தான் இஸ்லாம் சொல்கிறது ஹராமுக்கு வழிவகுக்கும் அல்லது துணைபோகும் அனைத்து விஷயங்களும் ஹராமே. அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (;சூரத்துல் அஃராஃப் - 7:32)
நடையில் கவனம்
பெண்கள் பேஷன் ஷோக்களில் ஒய்யாரமாக நடை நடந்து ஆண்களை கவர்வது போன்ற நடைகளை நடக்கக் கூடாது. கண்ணியமான முறையில் ஒழுக்கத்துடன் இருப்பது தான் மரியாதை. நபி (ஸல்) 'காலை தட்டி நடக்கும் பெண்கள் நரகத்திற்குரியவர்கள்' என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
மஹரமல்லாதவர்களுடன் கை குலுக்குவது
மஹரமல்லாதவர்களுடன் கை குலுக்குவது ஆகுமானதல்ல என்பதும் ஹிஜாபின் ஒரு அம்சமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உங்களுக்கு அனுமதி இல்லாத பெண்களை தொடுவதைவிட தலையில் இரும்பு ஆணியைக் கொண்டு அடித்தல் சிறந்தது'. (ஆதாரம்: தப்ரானி)
ஆண்கள் பகுதியை தவிர்த்தல்
சில சமயங்கள் பெண்களில் சிலர் பள்ளிகளில் ஆண்கள் பகுதியின் வழியாக நுழைவர் அல்லது அந்த வழிகளில் தனியாக நின்று கொண்டிருப்பர். இது மற்ற ஆண்களுடன் கலந்து நிற்க வழி செய்துவிடும். எங்கும் எப்போதும் பெண்கள் நுழைவுப் பகுதியையே பயன்படுத்த வேண்டும். நபி (ஸல்) 'சாலைகளின் நடுவே நடப்பதற்கு உங்களுக்கு (பெண்களுக்கு) அனுமதியில்லை என்பதால் ஓரமாக செல்லுங்கள்' என்று கூறினார்கள்.(ஆதாரம்: அபூ தாவூது)
அல்லாஹ்வின் வீட்டை வலம் வரும் போதும் அந்நிய ஆடவருடன் கலந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்கள்.
பிற சகோதரிகளின் அழகை மறைத்தல்
ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அழகை தன் கணவனிடமோ அல்லது சகோதரரிடமோ வர்ணிக்கக் கூடாது. சக பெண்ணின் அவயத்தை மறைத்தலும் ஹிஜாபின் அம்சமாகும். நபி (ஸல்) 'ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அழகை அவளைக் காண்பது போன்று வர்ணிக்கக் கூடாது'' என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இந்த நிரந்தரமற்ற உலகில், பிறர் நம் அழகை ரசிக்க வேண்டும். நம் ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும் மெச்சலுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால், நாளை மறுமையில் இறைவன் முன் கை சேதப்பட்டவர்களாக நிற்போம். இந்நிலை நமக்கு வேண்டாம்! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அவனது சத்திய மார்க்கத்தை விளங்கி நேரான பாதையில் செல்ல துணைபுரிந்து உன்னத சுவனத்தை நல்குவானாக! ஆமீன்!!!