அல் வலா வல் பரா - நேசம் கொள்ளலும் நீங்கிக் கொள்ளலும்

அல்வலாஉ வல்பராஉ - நேசம்‌ வைத்தலும்‌ நீங்கிக்‌ கொள்ளலும்‌ (சுருக்கமாக)


நேசம்‌ வைத்தல்‌ (அல்‌ வலா) : இது தாம்‌ விரும்பக்‌ கூடியவர்களுடன்‌ உள்ரங்கமாகவும்,‌ வெளிரங்கமாகவும்‌ நேசம்‌ வைத்தல்‌, மரியாதையுடன்‌ நடந்து கொள்ளல்‌, சங்கை படுத்தல்‌, உதவி புரிதல்‌ போன்றவற்றைக்‌ குறிக்கும்‌.

இஸ்லாமிய அடிப்படையில் அல்-வலா வல்-பரா என்றால் அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வதையும், அல்லாஹ்வுக்காக வெறுத்து நீங்கிக் கொள்வதையும் குறிக்கிறது.

பின்வரும்‌ அல்குர்‌ஆன்‌ வசனம்‌ இது பற்றி குறிப்பிடுகின்றது.

முஹம்மது, அல்லாஹ்வின் தூதராவார்; அவருடன் இருப்பவர்களோ, நிராகரிப்போர் மீது மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள்.. (அல்குர்ஆன்: 48:29)

அல்லாஹ்‌ விசுவாசிகளுக்கு பாதுகாவலன்‌. அவன்‌ அவர்களை இருளிலிருந்து ஒளியின்பால்‌ வெளிப்படுத்துகிறான்‌. இறை நிராகரிப்பாளர்களின்‌ பாதுகாவலர்கள்‌ தாகூத்‌(ஷைத்தான்கள்‌)தான்‌. அவர்கள்‌ இவர்களை ஒளியிலிருந்து இருளின்‌ பால்‌ வெளிப்படுத்துகிறார்கள்‌. இவர்கள்‌ நரகவாசிகள்‌. அதில்‌ என்றென்றும்‌ நிரந்தரமாக இருப்பார்கள்‌. (அல்‌ பகரா: 257)

முஸ்லிம்களை நேசித்தல் என்றால் பொதுவாகவும், மார்க்கத்துக்காகவும் முஸ்லிம்களை உள்ளத்தாலும், சொல் செயல் என்பவற்றாலும் நெருங்கி நேசித்தலாகும்.

இதில் முதன்மையாக நேசிக்கபட வேண்டியவர்களாக நபிமார்கள், நல்லடியார்கள், நபித்தோழர்கள் - அவர்களை அடியொற்றிய ஸலபுஸ் ஸாலிஹீன்கள், இமாம்கள் போன்றவர்கள் உள்ளடங்குவர்.

மேலும், அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக  நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள். (அல்குர்ஆன்: 59:10)

இவர்கள் தவிர பொதுவாகவே முஸ்லிம்கள் அனைவரையும் நேசித்தலையும் அந்நேசத்தை வெளிக்காட்டலையும் அல் வலாஉ குறிக்கிறது.

நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே! (அல்குர்ஆன்: 49:10)

உங்களுடைய நண்பனெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் விசுவாசங்கொண்டார்களே அவர்களும்தான்..
(அல்குர்ஆன்: 5:55)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. 
இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். 
(ஸஹீஹுல் புகாரி: 6011.)

காபிர்களுடன்‌ நேசம்‌ வைத்தல்‌ என்றால்‌ அவர்களின்‌ பால்‌ உள்ளத்தால் நெருங்கி சொல்‌, செயல்‌, எண்ணம்‌ போன்றவைகளின்‌ மூலமாக நமது நேசத்தை வெளிக்காட்டலாகும்‌.


நீங்கிக்கொள்ளல்‌ (அல்‌ பராஉ) : இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இது உபதேசம்‌, அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நேர்வழியை தெளிவுபடுத்தியதன்‌ பின்‌ அல்லாஹ்வுக்காக வெறுத்து தூரமாக விலகிக்‌ கொள்ளலை இது குறிக்கிறது‌. 

இது மூன்று வகைப்படும்:

1. இணை வைப்பாளர்களையும் இறை நிராகரிப்பாளர்களையும் விட்டு நீங்கிக்கொள்ளல்.

விசுவாசங்கொண்டோரே! என்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும்_அவர்கள்பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்து வைக்கின்ற நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம், (ஏனென்றால்) சத்தியத்திலிருந்து உங்களிடம் வந்த (வேதத்)தை திட்டமாக அவர்கள் நிராகரித்தும் விட்டனர், உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வை நீங்கள் விசுவாசித்ததற்காக (நம்முடைய) தூதரையும் உங்களையும் உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறார்கள், (விசுவாசிகளே!) என் பாதையில் ஜிஹாது செய்வதற்காகவும், என் பொருத்தத்தைத் தேடியும் நீங்கள் வெளியேறி விடுவீர்களாயின்_(அவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளவேண்டாம், ஆனால் நீங்களோ) அவர்கள் பால் நேசத்தின் காரணமாக (செய்திகளை) மறைமுகமாகச் சேர்த்து வைக்கிறீர்கள், நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துவிட்டதையும், (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்திவிட்டதையும் நானோ நன்கறிவேன். இன்னும் உங்களில் யார் இதைச் செய்கின்றாரோ அவர் நேரான பாதையைத் திட்டமாக தவறவிட்டுவிட்டார். (அல்குர்ஆன்: 60:1)

2. நயவஞ்சகர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல்.

(விசுவாசங்கொண்டோரே! தெரிந்து கொள்ளுங்கள்) நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள்,  அவர்களோ, உங்களை நேசிப்பதில்லை,  நீங்கள் வேதங்கள் யாவற்றையும் விசுவாசிக்கிறீர்கள்.  இன்னும், அவர்கள் உங்களைச்  சந்தித்தால், “நாங்கள் விசுவாசிக்கிறோம்”, என்று கூறுகின்றனர், இன்னும் (உங்களிலிருந்து விலகி) அவர்கள் தனித்துவிட்டாலோ (உங்கள் மீதுள்ள) ஆத்திரத்தினால் (தங்கள் கை) விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கின்றனர்,  ஆகவே, (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “உங்கள் ஆத்திரத்திலேயே நீங்கள் இறந்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகிறவன்” (அல்குர்ஆன்: 3:119)

மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு வகையினரும் முஸ்லீம்களால் முழுவதுமாக நீங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக இஸ்லாத்தை நேரடியாக விரோதித்து முஸ்லீம்களுக்கு நேரடியாக அநியாயம் இழைத்தவர்கள் (ஹர்பியூன்கள்) - அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்வரை என்றென்றும் வெறுத்து நீங்கிக் கொள்ளப்படவேண்டியவர்கள் ஆவர்.
  
3. முஸ்லிம்களிலுள்ள; பித்அத் வாதிகளின் பித்அத்கள், பாவிகளின் பாவங்கள், வழிகேடர்களின் வழிகேடுகள், நிகழ்வுகள் போன்றவற்றை விட்டும் விலகிக் கொள்ளல்.

 விசுவாசங்கொண்டோரே!...  இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்,  பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்,  இன்னும் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்,  (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானன். (அல்குர்ஆன்: 5:2)

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் ஈமானின் இறுதி நிலையாகும். (அபூ ஸயீது அல் குத்ரி (ரலி) (முஸ்லிம் 78)

நீங்கிக் கொள்ளப்படவேண்டியவர்களில் இவர்கள் மேற்குறிப்பிட்ட முதல் இரண்டு வகையினரை விட தாழ்ந்த படிநிலையிலுள்ளவர்களாவர் ஏனெனில் முஸ்லிமான ஒருவனிடம் காணப்படும் மார்க்கத்துக்கு முரணான அம்சத்துக்காக அவன் வெறுக்கப்படுகிற அதேவேளை அவன் முஸ்லிம் என்பதற்காகவும் அவனுடமுள்ள நலவின் அளவுக்கேற்பவும் அவன் நேசிக்கப்பட வேண்டும்.

இமாம்‌‌ இப்னு தைமியா (ரஹ்‌) அவர்கள்‌ பதாவா என்ற நூலில்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்‌: 

அல்லாஹ்வுக்காக நேசம்‌ வைத்தலும்‌ விரோதம்‌ கொள்ளலும்‌ மூஃமின்கள்‌ மீது கடமையாகும்‌. ஒரு மூமின்‌ அநியாயம்‌ செய்திருந்தாலும்‌ அவனுடன்‌ நேசம்‌ வைக்கவேண்டும்‌. ஏனெனில்‌ அநியாயம்‌ ஒருபோதும்‌ ஈமானிய நேசத்தை இல்லாமலாக்கி விடாது. ஏனெனில்‌ இறைவன்‌ பின்வருமாரு கூறுகிறான்‌ “விசுவாசிகளில்‌ இரு கூட்டத்தினர்‌ சண்டை செய்து கொண்டால்‌ அவர்களிடையே சமாதானம்‌ செய்து வையுங்கள்‌. (அல்‌ ஹாஜுராத்‌ : 9)”. யுத்தம்‌, வரம்பு மீறல்‌ என்பவைகள்‌ இருந்தும்‌ கூட அவர்களை(மூமின்களை) அல்லாஹ்‌ சகோதரர்களாக ஆக்கியுள்ளான்‌. அவர்கள்‌ மத்தியில்‌ நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறும்‌ ஏவியுள்ளான்‌. ஒரு மூமின்‌ உனக்கு அநியாயம்‌ செய்து வரம்பு மீறியிருந்தாலும்‌ அவனை நேசிப்பது கடமையாகும்‌. ஓர்‌ இறைநிராகரிப்பாளன் உனக்கு ஏதும்‌ தந்து நல்லது செய்திருந்தாலும்‌ அவனை (அவனுடைய இறைநிராகரிப்புக்காக) வெறுத்து நடக்க வேண்டும்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ மார்க்கம்‌ முழுவதும்‌ அவனுக்கே ஆகுவதற்காக வேதங்களையும்‌ தூதரையும்‌ அனுப்பி வைத்தான்‌. எனவே அத்தூதரை சார்ந்தவர்களுடன்‌ நேசமும்‌ அவரது எதிரிகளுடன்‌ விரோதமும்‌ கொள்ள வேண்டும்‌. கூலி, கண்ணியம்‌ என்பவைகள்‌ அவரை சார்ந்தவர்களுக்கும்‌ இழிவு, தண்டனை என்பவைகள்‌ அவரது எதிரிகளுக்கும்‌ வழங்கப்படும்‌. ஒரு மனிதரிடத்தில்‌ கெட்ட, நல்ல விடயங்கள்‌, பாவம்‌, கட்டுப்படுதல்‌, மாறு செய்தல்‌, ஸுன்னா, பித்‌ஆ (நூதனம்‌) ஆகிய விடயங்கள்‌ ஒன்று சேருமிடத்து அவனிடமுள்ள நல்ல விடயங்களின்‌ அளவிற்கேற்ப நேசத்தை பெற்றுக்கொள்வான்‌. அதேவேளை அவனிடமுள்ள கெட்ட விடயங்களின்‌ அளவிற்கேற்ப விரோதத்திற்கும்‌ ஆளாவான்‌. ஒரே நபரிடத்தில்‌ கண்ணியத்தையும்‌ இழிவையும்‌ ஏற்படுத்தக்‌ கூடிய விடயங்கள்‌ ஒன்று சேரலாம்‌. உதாரணமாக திருடனைப்‌ போல. அவன்‌ திருடியதற்காக கை துண்டிக்கப்பட்டு அவனது தேவைக்கேற்ப பைத்துல்‌ மாலிலிருந்து உதவி வழங்கப்படும்‌. இதுதான்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ ஜமாஅத்தினர்களின்‌ வழிமுறையாகும்‌. இதில்‌ கவாரிஜிகள்‌, முஃதஸிலாக்கள்‌, அவர்களை சார்ந்தவர்கள்‌ முரண்படுகிறார்கள்‌. (மஜ்மூஃ பதாவா: பாகம்‌ 20, பக்கம்‌ 208, 209).

அல்லாஹ்வையும்‌ அவன்‌ தூதரையும்‌ பகைத்துக்‌ கொண்டிருப்பவர்கள்‌ தங்களது நெருங்கிய உறவினர்களாக இருந்த போதிலும் அவர்களுக்கு உபதேசமும், அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்த பின்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ஜமாஅத்தினர்‌ அவர்களை விட்டு நீங்கி விடுவார்கள்‌.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்ட சமூகத்தினரை, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர், அவர்கள் தங்களின் பெற்றோர்களாயினும், அல்லது தங்களின் ஆண்மக்களாயினும், அல்லது தங்களின் சகோதரர்களாயினும் அல்லது தங்கள் குடும்பத்தவராயினும் சரியே! (காரணம்) அத்தகையோர்- அவர்களின் இதயங்களில் ஈமானை (விசுவாசத்தை அல்லாஹ்வாகிய) அவன் எழுதிவிட்டான், மேலும் தன்னிடமிருந்து (வெற்றி எனும்) ரூஹைக் கொண்டு அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறான், இன்னும் அவர்களைச் சுவனங்களில் நுழையச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ் அவர்களை பொருத்திக் கொண்டான், அவனை அவர்களும் பொருத்திக் கொண்டார்கள், அவர்கள் தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்_அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
(அல்குர்ஆன்: 58:22)

விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய தந்தையர்களையும் உங்களுடைய சகோதரர்களையும் விசுவாசத்தைவிட நிராகரிப்பை அவர்கள் நேசித்தால்- நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,  உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
(அல்குர்ஆன்: 9:23)

விசுவாசங்கொண்ட ஆண்களும், பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உற்ற காரியஸ்தர்களாயிருக்கின்றனர், அவர்கள், (பிறரை) நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள், (மார்க்கத்தில் மறுக்கப்பட்ட) தீமையைவிட்டும் விலக்குகிறார்கள்,  தொழுகையையும் நிறைவேற்றுகிறார்கள், ஜகாத்தையும் கொடுத்து வருகிறார்கள்,  அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்பட்டு நடக்கிறார்கள்,  இத்தகையோர் அல்லாஹ் அவர்களுக்கு  அருள்புரிவான்- நிச்சயமாக அல்லாஹ், யாவரையும் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
(அல்குர்ஆன்: 9:71)


நேசம்‌ வைத்தல்‌, நன்னடத்தை என்பவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள்‌

நேசம்‌ வைத்தல்‌ என்பது ஒரு விடயம்‌ நன்னடத்தை என்பது வேறு ஒரு விடயம்‌. இதற்கு பின்வரும்‌ அல்குர்‌ஆன்‌ வசனம்‌ சான்றாகவுள்ளது.

உங்களின்‌ மார்க்க விடயங்களில்‌ போராடாத உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள்‌ நலன்‌ செய்வது அவர்களுடன்‌ நீதமாக நடப்பது என்பவற்றை அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை. (அல்‌ மும்தஹினா :8)

இதிலிருந்து உதவி புரிவது, அன்பு செலுத்துவது என்பவற்றில்‌ ஏற்படும்‌ நேசம்‌ என்பது வேறு. இறைநிராகரிப்பாளர்களான குடும்பத்தினர்களுடன்‌ நல்ல முறையில்‌ நடந்து கொள்ளுதல்‌, இனபந்துகளை பேணி நடந்து கொள்ளுதல்‌, அவர்களுக்காக செலவிடல்‌ என்பது வேறு என்பது தெளிவாகிறது.

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசமும் செய்தோம், அவனுடைய தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனைச் சுமந்தாள், இன்னும் (அவனுக்குப் பால்குடி மறக்கடித்து) அவன் பிரிவது இரண்டு வருடங்களிலாகும், (ஆகவே மனிதனே!) நீ எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக, (முடிவில்) என்னிடமே (உன்) மீளுதல் இருக்கிறது.” (அல்குர்ஆன்: 31:14)

எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ, அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் (அவ்விஷயத்தில்) நீ  அவ்விருவருக்கும் கீழ்ப்படியவேண்டாம்; ஆயினும், இவ்வுலகத்தில் நன்மையான காரியத்தில் நீ அவ்விருவருடனும் (அன்புடன் ஒத்து) உடனிருப்பாயாக; இன்னும், (வழிபாட்டில்) என்பால் திரும்பியவரின் வழியை நீ பின்பற்றுவாயாக; பின்னர் நீங்கள் யாவரும் என்னிடமே திரும்பி வந்து சேர வேண்டியதிருக்கின்றது; அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன்: 31:15)

மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள், பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்,  (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொணடவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங்கொண்டவனாக, பெருமையாளனாக இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான். (அல்குர்ஆன்: 4:36)


முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழக்கூடிய நாடு ஒன்றில் காபிர்களுடனான நேசத்திற்கான சில எடுத்துகாட்டுகள்‌ :

1. அவர்களுடைய மதங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள், கலாச்சாரங்களுக்காக அவர்கள் மீது நேசம் கொள்ளல், அவற்றை இஸ்லாத்தை விட சிறந்ததாக கருதுதல், அவற்றை எவ்வகையிலேனும் சரி கண்டு அவர்களது இறை நிராகரிப்பின் மீது சந்தேகம் கொள்ளல்.

2. முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இறை நிராகரிப்பாளாகளுக்கு உதவி, ஒத்தாசைகள்‌ புரிவது, அவர்களுக்கு சார்பாகப்‌ பேசுவது, அவர்களை புகழ்வது.

3. இஸ்லாத்தை இழிவு படுத்தும் நோக்கில் அவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு (குறிப்பாக சமூக வலைத்தளங்களில்) ஆதரவு தெரிவித்தல் அல்லது தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்வதற்காக இஸ்லாமிய மார்க்கத்தில் போதாமையுள்ளதாக அல்லது இஸ்லாமிய வழிகாட்டல்களில் பிற்போக்குத்தனம் இருப்பதாக அவர்களிடம் உடன்படுதல்.

4. அவர்களிடம் உரையாடும்போது அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், தீனுல் இஸ்லாத்தையும், ஸலபுஸ்ஸாலிஹீன்களையும், இவர்களது வழிமுறைகளையும் முகஸ்துதிக்காகவோ அல்லது நேசத்துக்காகவோ விட்டுக்கொடுத்து பேசுதல்.

5. மார்க்க விடயங்களில் அவர்களுடன்‌ வளைந்து கொடுத்து, சேர்ந்து போதல்:

‌ அல்லாஹ்‌ பின்வருமாறு கூறுகின்றான்‌ :
"முஹம்மதே! நீர்‌ வளைந்து கொடுத்தால்‌ அவர்களும்‌ வளைந்து கொடுக்க விரும்புகின்றனர்‌." (கலம்‌ : 9)

6. அவர்கள்‌ பக்கம்‌ சற்று சாய்தல்‌:

இறைவன்‌ கூறுகின்றான்‌ 
(முஹம்மதே!) நாம்‌ உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால்‌ அவர்களை நோக்கிச்‌ சிறிதேனும்‌ நீர்‌ சாய்ந்திருப்பீர்‌! (இஸ்ரா : 74). 

7. அவர்களை திருப்திப்படுத்த அவர்களது கொண்டாட்டங்கள், அனுஷ்டானங்கள், வழிபாடுகளில் பங்கெடுத்தல்:

(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
(அல் பகறா-120)

8. பேச்சு, உடை, அலங்கரித்துக்கொள்ளல் போன்றவற்றில்‌ அவர்களை பின்பற்றுதல்‌:

யார்‌ பிற கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறானோ அவன்‌ அந்த சமூகத்தை சர்ந்தவனாவான்‌ என நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: இப்னு உமர்‌ (ரலி), ஆதாரம்‌ : அபூ தாவூத்‌ 4033.

9. காஃபிர்களையும் வழிகேடர்களையும் 
தங்களது வழிகாட்டிகளாக கருதுதல்:

உதாரணமாக.. சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கட் வீரர்கள், அரசியல்வாதிகளை தங்களது தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் கருதுதல் அவர்கள் மீது நேசம் கொண்டு அவர்களைத் தல, தலைவா என அழைத்தல், அவர்களது ரசிகர்கள் என பெருமையாக கூறிக் கொள்ளல், அவர்களது வழக்கங்களை பின் தொடர்தல், அவர்களது பிறந்த நாட்களை கொண்டாடுதல், அவர்கள் மரணிக்கும்போது அவர்களது வழிகேடுகளையும் பாவங்களையும் கலைச்சேவைகளாகவும் சாதனைகளாகவும் சிறப்பித்து அஞ்சலி கட்டுரைகள் வரைதல், அதை சமூக வலைத்தளங்களில் பகிர்தல், அவற்றுக்கு விருப்பக்குறியிடுதல்.

அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸிஹ்ஹீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தான் எங்களுடைய தலைவர் என்றோம். அதற்கு நபியவர்கள்: மேன்மைமிக்க உயர்வான அல்லாஹ் தான் எங்கள் தலைவர் என பதிலளித்தார்கள். அபூதாவுத்: 4806 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி), நூல்: புகாரி 6170)

10. அவர்களுக்காகப்‌ பாவமன்னிப்புத்‌ தேடுதல், அவர்கள் மரணிக்கின்றபோது அவர்களுக்காக ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தித்தல் (RIP என சமூக வலைத்தளங்களில் பதிவிடல்)‌:

முஷ்ரிக்குகள்‌ (இணைவைப்பவர்கள்‌) தம்‌ நெருங்கிய உறவினர்களாக இருப்பினும்‌, நிச்சயமாக அவர்கள்‌ நரகவாதிகள்‌ என்று தெளிவாக்கப்பட்ட பின்‌ அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும்‌, ஈமான்‌ கொண்டவர்களுக்கும்‌ தகுதியானதல்ல. (அத்‌ தெளபா : 113)

11. அவர்களுடன் சேர்ந்து கொண்டு (குறிப்பாக சமூக வலைத்தளங்களில்) இஸ்லாமிய தலைவர்கள், அறிஞர்களை கேலி கிண்டல்கள் செய்தல், இஸ்லாமிய வழிமுறைகளையும் அடையாளங்களையும் பரிகசித்தல், அவ்வாறான கேலி கிண்டல்களை ரசித்தல், :

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏகஇறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல் குர்ஆன் 5:57)

12. அவர்களின் உள்ளங்களை குளிர்விப்பதற்காக வேண்டி அவர்களின் பாணியில் முகமன் கூறுதல், வாழ்த்துகள் தெரிவித்தல், வரவேற்புகள் அளித்தல்:

யஹுதி நஸாராக்களைப் போல நீங்கள் (ஸலாம்)முகமன் கூற வேண்டாம் ; அவர்கள் கரங்களாலும், தலைகளாலும் , சைகையினாலும் (ஸலாம்) முகமன் கூறுவார்கள்.
அறிவிப்பவர்:ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள்.
நூல்: நஸாயி-10100, பைஹகீ-8520.

(மேற்கூறப்பட்ட எடுத்துக் காட்டுகள் அவற்றின் எண்ணங்கள் நோக்கங்களைப் பொறுத்து இஸ்லாத்தை முறிக்க்கூடிய காரணங்களான குஃப்ர் மற்றும் நயவஞ்சகத்தை ஏற்படுத்தக்கூடிய காரியங்களிலுள்ளதாகவும் அமையலாம் அல்லது அதுவல்லாமல் பெரும் பாவம் அல்லது பாவம் என்ற வரையறைக்குள்ளானதாக மாத்திரமும் அமையலாம்.. அல்லாஹ்வே உள்ளத்தை அறிபவன். பார்க்க - ஹாத்திப் (ரலி) அவர்கள் கூறிய காரணத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்றுக்கொண்டு அவர்களை காஃபிர் என்றோ நயவஞ்சகர் என்றோ தீர்பளிக்காமல் விசுவாசியாகவே ஏற்றுக் கொண்டது தொடர்பான ஹதீஸ். ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி 3007, 4274, முஸ்லிம் 4097)


அல்லாஹ்வுக்காக நேசமும் வெறுப்பும் கொள்ள வேண்டியதன் அவசியம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத் (4061)

முஆத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்:  ஈமானில் மிகச் சிறந்தது நீ ஒருவரை அல்லாஹ்விற்காக நேசிப்பதும் நீ ஒருவரை அல்லாஹ்விற்காக வெறுப்பதும் உன்னுடைய நாவை இறைநினைவில் வைப்பதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நூல் : அஹ்மத் 22132.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஈமானின் கயிறுகளில் மிக உறுதியானது அல்லாஹ்விற்காக நேசிப்பதுதம் அல்லாஹ்விற்காக வெறுப்பதுமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : தப்ரானி 2539.


காபிர்களை விட்டு நீங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் மீது அநீதி இழைக்க வேண்டும் என்று அர்த்தமா?

ஷெய்க் அப்துல் அஸீஸ் பின்பாஸ் (ரஹ்) அவர்களிடம் அல்வலா வல்பரா என்பதை விளக்குமாறும் காபிர்களை நேசிக்கலாமா என்பது பற்றியும் கேட்கப்பட்ட போது கூறுகிறார்கள்:

“ அல்வலா வல்பரா என்பது முஃமின்களை நேசிப்பதும் காபிர்களை வெறுப்பதும் அவர்களை விட்டும் விலகுவதும் அவர்களின் மார்க்கங்களை விட்டு விலகுவதும் ஆகும். 

இதைப்பற்றி அல்லாஹு தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 60 : 4)

காபிர்களை வெறுக்கவேண்டும் என்பதின் கருத்து அவர்கள் மீது வரம்பு மீறுவது அவர்களுக்கு அநியாயம் செய்வது என்று பொருளல்ல. மாறாக உன்னுடைய உள்ளத்தில் அவர்களை வெறுப்பதும் அவர்கள் உன்னுடைய (உற்ற) நண்பர்களாக இருக்கக்கூடாது என்பதாகும். மேலும் அவர்களை நீங்கள் நோவினை செய்யக்கூடாது, அவர்களுக்கு தொல்லை தரக்கூடாது, அவர்களுக்கு அநியாயம் செய்யக்கூடாது. அவர்கள் ஸலாம் சொன்னால் மறுப்பு சொல்லவேண்டும். அவர்களுக்கு அறிவுரை செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்வழியைக் காட்ட வேண்டும்.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்:
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! “எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று (அல்குர்ஆன் 29 : 46)

வேதக்காரர்கள் என்பவர்கள் யூதர்களும் கிருஷ்த்தவர்களும் ஆவார்கள். மேலும் முஸ்லிம்களிடத்தில் ஒப்பந்தம் செய்தவர்கள் நம்முடைய ஆட்சியின் கீழ் இருப்பவர்கள் நம்மிடத்தில் பாதுகாப்பு பெற்றவர்களும் இதில் அடங்குவர்.” 

நூல் : மஜ்மவுல் ஃபதாவா 5 பக்கம் 246.


இறுதியாக,

மேற்கூறப்பட்ட காபிர்களை நேசம்‌ வைத்தலின்‌ வெளிப்பாடுகளானது அவர்களை உள்ளத்தால்‌ நேசித்து, இஸ்லாத்தையும், முஸ்லிம்களை விட அவர்களை உயர்வாக மதித்தலையே குறிப்பிடுகின்றது. மாறாக அவர்களுடன்‌ சக வாழ்வை பேணுவதையோ, அனுமதிக்கப்பட்ட கொடுக்கல்‌ வாங்கல்களில்‌ ஈடுபடுவதையோ அல்லது எமது உறவினர்களாக, அண்டை வீட்டினர்களாக அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதையோ, உபகாரங்கள், கஷ்டங்களில் உதவிகள் செய்வதையோ அல்லது பரஸ்பரம் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்வதையா அல்லது நோய் விசாரிப்பதையோ அல்லது மார்க்கத்துக்கு முரணாகாத விருந்துகளில் கலந்து கொள்வதையோ இஸ்லாம்‌ தடை செய்யவில்லை. இதற்குப்‌ பின்வரும்‌ ஆதாரங்களைக்‌ குறிப்பிடலாம்‌:

1. "மார்க்க விஷயத்தில்‌ உங்களுடன்‌ போரிடாதோருக்கும்‌, உங்கள்‌ வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும்‌ நன்மை செய்வதையும்‌, அவர்களுக்கு நீதி செலுத்துவதையும்‌ அல்லாஹ்‌ உங்களுக்குத்‌ தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ்‌ விரும்புகிறான்‌. மார்க்க விஷயத்தில்‌ உங்களுடன்‌ போரிடுவோர்‌, உங்கள்‌ இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர்‌, உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர்‌
ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ்‌ உங்களுக்குத்‌ தடை செய்கிறான்‌. அவர்களை உற்ற நண்பர்களாக்கிக்‌ கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்‌." (மும்தஹினா : 8, 9)

2. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இணைவைப்பவரான) என் தாயார் என்னிடம் "ஆசையுடன்" அல்லது "அச்சத்துடன்" வந்துள்ளார். நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 1828.)

3. அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். 'அய்லா'வின் அரசன் நபி(ஸல்) அவர்களுக்கு ('தல்தல்' எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபி(ஸல்) அவர்கள் அவனுக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவனுக்கு எழுதினார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 3161)

4. அனஸ்(ரலி) அறிவித்தார். 
யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள்.. (ஸஹீஹுல் புகாரி: 2617.)

5. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌ தம்‌ போர்க்கவசம்‌ முப்பது ஸாவுகள்‌ அளவு வாற்கோதுமைக்குப்‌ பகரமாக ஒரு யூதரிடம்‌ அடகு வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணித்தார்கள்‌. (புஹாரி 2916)

6. யூத மதத்திலுள்ள ஒரு சிறுவன் நோயுற்றிருந்தான். அவனை நோய் விசாரிப்பதற்கு சென்றிருந்த நபி(ஸல்) அவர்கள் அப்பையனின் தலைப்பக்கமாக உட்கார்ந்து அப்பையனிடம் நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் எனக் கூறினார்கள். அப்பையனின் தலைப்பக்கம் நின்று கொண்டிருந்த தன் தந்தையை அப்பையன் பார்த்தான். அபுல்காசிமுக்கு கட்டுப்படு என அப்பையனின் தந்தை கூறினார். அப்பையன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். என் மூலம் அப்பையனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என கூறியவாறு எழுந்து சென்றார்கள். 
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : அபூதாவூத்

அதேபோல் மேற்கூறப்பட்ட முஸ்லீம்கள் மீது நேசம் கொள்ளல் என்பதில் முஸ்லீம்களிலுள்ள போதைப்பொருள் கடத்தல்/வியாபாரம் செய்பவர்கள், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சிறுவர்/பாலியல் துஷ்பிரயோகத்திலீடுபடுவோர், நாட்டிலுள்ள கனிய/இயற்கை வளங்களை திருட்டுத்தனமாக சூறையாடுபவர்கள், கலப்பட/பதுக்கல் வியாபாரம் செய்பவர்கள் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பாதுகாப்பதையோ அல்லது அவ்வாறான சமூக விரோதிகளை கண்டும் காணாமல் விட்டுவிடுவதையோ உள்ளடக்காது. இவர்கள் உடனடியாக சட்ட ஒழுங்குக்கு பொறுப்பானவர்களிடம் முறைப்பாடளிக்கப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவேண்டியவர்களாவர். மேலே நாம் பார்த்த வல் பராஉவின் மூன்றாவது வகையும் இதனையே விளக்கி நிற்கிறது.

அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 2444)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
أحدث أقدم