ஒற்றைப்படை இரவுகளான 23, 27, 29 ஆம் இரவுகளும் லைலத்துல் கத்ர் இரவாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது

ஒற்றைப்படை இரவான இருபத்தி மூன்றாவது இரவும் லைலத்துல் கத்ர் இரவாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.


ஹதீஸ் 1

அபூஹுரைரஹ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(ஒரு முறை ரமலானில்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “இம்மாதத்தில் எத்தனை (இரவுகள்) சென்று விட்டன?” என்று வினவினார்கள். நாம், இருபத்தி இரண்டு இரவுகள் சென்றுவிட்டன; இன்னும் எட்டு இரவுகளே மீதமாக உள்ளன என்று பதிலளித்தோம். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “இல்லை, இருபத்தி இரண்டு இரவுகள் சென்றுவிட்டன; இன்னும் ஏழு இரவுகள் இருக்கின்றன, இன்றைய இரவு (அதாவது இருபத்தி மூன்றாவது இரவு) அதனை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 7423, அல்பானி, வாதிஈ, அர்னாஊத் ஆகிய ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என உறுதிப்படுத்தியுள்ளனர்)


ஹதீஸ் 2

அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (றழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:

“லைலத்துல் கத்ர் (எந்த இரவு என்பது) பற்றி எனக்குக் கனவில் காட்டப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப் பட்டது. அன்று காலை நான், ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தஹ்) செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள். இருபத்து மூன்றாவது நாள் இரவில் மழை பெய்தது. (அன்று காலையில்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களுக்கு (ஸுப்ஹுத் தொழுகை) தொழ வைத்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஈரச் சேற்றின் அடையாளம் அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் படிந்திருந்தது.

இருபத்தி மூன்றாவது இரவு தான் லைலத்துல் கத்ர் என்று அப்துல்லாஹ் இப்னு உனைஸ் அவர்கள் செல்பவர்களாக இருந்தார்கள்.
(முஸ்லிம் 1168)

விளக்கம்:

மேற்படி ஹதீஸின் அடிப்படையில் நபி ﷺ அவர்களது காலத்தில் குறித்த வருடத்தில் 23ஆம் இரவு லைலதுல் கத்ர் இரவாக இருந்திருக்கிறது. வேறு ஹதீஸ்களைப் பார்க்கும் போது வேறு ஆண்டுகளில் வேறு இரவுகளிலும் லைலதுல் கத்ர் வந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. 

23வது இரவு தான் லைலதுல் கத்ர் என்பது அப்துல்லாஹ் இப்னு உனைஸ் அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். 

லைலத்துல் கத்ர் இரவானது ஒவ்வொரு வருடமும் ரமழான் இருதிப்பத்தின் ஒற்றை இரவுகளில் மாறி மாறி அமையலாம் என்பதே சரியான கருத்தாகும்.


ஒற்றைப்படை இரவான இருபத்து ஏழாவது இரவும் லைலத்துல் கத்ர் இரவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஹதீஸ் 1

உபை இப்னு கஃப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்த (லைலத்துல் கத்ர்) இரவை நான் அறிவேன். என்னுடைய பெரும்பாலான அறிவின்படி அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களுக்கு நின்று வணங்குமாறு கட்டளையிட்ட இரவு தான் அந்த இரவு. அது 27ஆவது இரவாகும். 
(முஸ்லிம் 762)

ஹதீஸ் 2

ஸிர் இப்னு ஹுபைஷ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:

நான் உபை இப்னு கஃப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) ‘வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்’ என்று கூறுகின்றாரே?” என்று கேட்டேன். அதற்கு உபை (றழியல்லாஹு அன்ஹு), “இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் (ஒரு நாள் மட்டும் வழிபாடுகளில்) சார்ந்து இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமழான் மாதத்தில்தான் உள்ளது என்பதையும் அதன் கடைசிப் பத்தில்தான் உள்ளது என்பதையும் அது (ரமழானின்) இருபத்தேழாவது இரவுதான் என்பதையும் இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு அல்லாஹ் நாடினால் என்று கூறாமல், “அது (ரமழானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்” என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், “அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை (றழியல்லாஹு அன்ஹு), “அல்லாஹ்வின் தூதர் ﷺ எங்களிடம் ‘அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்’ என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)” என்றார்கள்.
(முஸ்லிம் 762)

ஹதீஸ் 3

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் நபியே! நான் வயோதிபராகவும் நோயாளியாகவும் இருக்கிறேன்; எனக்கு நின்று வணங்குவது சிரமமாக இருக்கின்றது;  அல்லாஹ் எனக்கு லைலத்துல் கத்ர் இரவுக்கு பாக்கியம் அளிக்கலாம் என்று ஆதரவு வைக்கப்படும் ஒரு இரவை கூறுங்களேன் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நபி ﷺ அவர்கள், *ஏழாவது இரவை நீர் எடுத்துக்கொள்* என்று கூறினார்கள்.
(அஹ்மத் 2149)

(இங்கு ஏழாவது இரவு என்பது பெரும்பாலும் 27ஆவது இரவை குறிக்கும்.)

ஹதீஸ் 4

நுஃமான் இப்னு பஷீர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிம்ஸ் நகரின் மிம்பரில் நின்று கூறினார்கள்:

நாம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் ரமழான் மாதத்தின் இருபத்து மூன்றாவது இரவின் மூன்றில் முதலாவது பகுதி வரையில் நின்று வணங்கினோம். பின்னர் இருபத்தி ஐந்தாவது இரவு நடு இரவு வரை அவர்களுடன் நின்று  வணங்கினோம். பின்னர் இருபத்தி ஏழாவது இரவு நாம் ஸஹர் உணவை அடைந்து கொள்ள மாட்டோமோ என்று நினைக்கும் வரை (பஜ்ர் நேரம் நெருங்கும் வரை) தொழுகை நடத்தினார்கள். ஏழாவது இரவு என்பது 27வது இரவு என்று நாம் சொல்கிறோம். நீங்களோ  இருபத்தி மூன்றாவது இரவு தான் ஏழாவது இரவு என்று (பின்னாலிருந்து கணக்கிட்டு)
 சொல்கிறீர்கள். நாங்கள் சரியான கருத்தில் இருக்கிறோமா அல்லது நீங்கள் இருக்கிறீர்களா?
(அஹ்மத் 18402)

ஹதீஸ் 5

அபூதர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகினார்கள்: 

நாம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் ஒரு ரமழானில் நோன்பு நோற்றோம். மாதத்தின் ஏழு நாட்களே எஞ்சியிருக்கும் வரையில் எங்களுக்கு அவர்கள் (இரவுத்) தொழுகை ஜமாஅத்தாக நடத்தவில்லை. (23 ஆவது இரவு) கிட்டத்தட்ட இரவின் மூன்றில் ஒரு பகுதி செல்லும் வரையில் தொழுகை நடத்தினார்கள். பின்னர் (இருபத்தி) நான்காவது இரவு எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. அதை அடுத்துவரும் (25 ஆவது) இரவின் கிட்டத்தட்ட அரைவாசி செல்லுகின்ற வரையில் எமக்கு தொழுகை நடத்தினார்கள். (அப்போது) நாம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த இரவின் மீதமுள்ள பகுதியிலும் எங்களுக்கு    தொழுகை நடத்தினால் நன்றாக இருக்குமே என்று கூறினோம். அதற்கவர்கள், “நிச்சயமாக ஒரு மனிதன் இமாமுடன் (அவர் தொழுகையை முடித்து) திரும்பும் வரையில் நின்று வணங்கினால் அவனது இரவின் எஞ்சிய பகுதியும் (அவன் நின்று வணங்கிதாக) அவனுக்காக கணக்கிடப்படும்” என்று கூறினார்கள். பின்னர் (இருபத்தி) ஆறாவது இரவு எங்களுக்கு (இரவுத்) தொழுகை நடத்தவில்லை. ஏழாவது இரவே எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். தங்களது குடும்பத்தினருக்கும் வருமாறு ஆள் அனுப்பினார்கள். மனிதர்கள் ஒன்று திரண்டனர். எங்களுக்கு ஸஹர் உணவு தப்பி விடுமோ என்று நாம் அஞ்சும் அளவுக்கு (நீண்ட நேரம்) தொழுகை நடத்தினார்கள்.
(அஹ்மத் 21448)

ஹதீஸ் துறை ஆய்வாளர்களான அல்பானி, வாதிஈ, ஷு அர்னாவூத்  ஆகியோர் மேற்படி 3, 4, 5 ஆகிய மூன்று ஹதீஸ்களின் அறிவிப்பாளர்வரிசைகளும் ஆதாரப்பூர்வமானவை என உறுதிசெய்துள்ளனர்.


ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்பதாவது  இரவும் லைலதுல் கத்ர் இரவாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

عن ابن عبَّاس رضِيَ اللهُ عنهُما: قال: قال رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ: ((هِي في العَشر، هي في تِسع يَمضِين، أو في سَبْعٍ يَبقَين))؛ يعني: ليلةَ القَدْر.  رواه البخاريُّ (2022)

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: 
 
'லைலதுல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!'
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா)
(புகாரி: 2022)

இதிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் லைலதுல் கதர் வரலாம் என்பது தெளிவாகிறது.


- ஸுன்னஹ் அகாடமி

Previous Post Next Post