திடீர் விபத்துக்கள், நெருங்கிய உறவினரின் மரணம், நாட்பட்ட/வலி மிகுந்த நோய்கள், வியாபாரத்தில்/விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் மிகுந்து வங்குரோத்து அடைந்த நிலை, பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமை, கணவன் மனைவி சண்டை, ஆசைப்பட்டு கேட்ட பொருளை பெற்றோர் வாங்கித் தராமை, அதிர்ச்சிகரமான/ அவமானகரமான நிகழ்வுகள், மன அழுத்தம், நிலநடுக்கம்/புயல் போன்ற பேரழிவுகள் என சிறியதாகவோ, பெரியதாகவோ ஒரு துன்பம் ஏற்படும்போது, முஸ்லீம்கள் நான்கு வெவ்வேறு படிநிலைகளாகப் பிரிந்துவிடுகின்றனர்:
முதல் நிலை: அதிருப்தி அடைதல்,
இறைவன் விதித்ததன் மீது இவ்வாறு அதிருப்தி கொள்வது பெரும்பாவமாகும்.
இதில் பல்வேறு வகையான அதிருப்திகள் உள்ளன:
1. தனது இரட்சகன் மீது உள்ளத்தால் அதிருப்தி அடைவது, இதனால் அல்லாஹ் தனக்கு விதித்துள்ளதன் மீது விசனம் கொள்வது, மேலும் இது தடைசெய்யப்பட்டுள்ளதும், இறை நிராகரிப்புக்கு வழிவகுக்கக் கூடியதுமாகும். உயர்ந்தோனான அல்லாஹ் கூறுகிறான்:
وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ ۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖۚ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ؕ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ
இன்னும், மனிதர்களில் (உறுதியின்றி, சந்தேகத்தின்) விளிம்பின் மீதிருந்து (கொண்டு) அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான், எனவே, அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைகிறான், அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமாயின் அவன் தன் முகத்தின் மீது (ஈமானை விட்டும் இறை நிராகரிப்பின்பால்) புரண்டுவிடுகிறான், (இத்தகையவன்) இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டான், இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன்: 22:11)
2. எனக்கு ஏற்பட்ட கேடே, அழிவே எனப் புலம்புதல் மற்றும் ஒப்பாரி மூலம் வார்தைகளினால் (அல்லாஹ்வின் மீதான) அதிருப்தியை வெளிப்படுத்துவது. இதுவும் தடைசெய்யப்பட்டுள்ளது.
3. தனது கன்னங்களில் அடித்துக் கொள்வது, உடைகளைக் கிழித்துக் கொள்வது, முடியைப் பிடுங்குவது மற்றும் தற்கொலை போன்றவற்றைச் செய்வதன் மூலம் உடல் ரீதியாக அதிருப்தியை வெளிப்படுத்துவது. இவ்வாறான செயல்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டவை ஆகும், ஏனெனில் இவை துன்பம் ஏற்படும்போது மேலெழுந்து வரவேண்டிய பொறுமையை தடுத்துவிடுகிறது.
இரண்டாம் நிலை: பொறுமை
ஒரு கவிஞர் சொல்வதைப் போல்:
பொறுமை, அதன் சுவையோ கசப்பானது,
ஆனால் அதன் பலன்களோ தேனை விட இனிமையானவை.
எனவே, ஒருவர் தனக்கு ஏற்படுகின்ற துன்பத்தை மிகப் பாரமானதாகக் கருதுகிறார், அது நிகழ்வதை அவர் வெறுத்தபோதிலும் அதைத் தாங்கிக் கொள்கிறார், அவருடைய இறை நம்பிக்கை அவரை அதிருப்தி அடைவதிலிருந்து பாதுகாக்கிறது. அத்துன்பம் ஏற்படுவதும் ஏற்படாமலிருப்பதும் அவரைப் பொறுத்த வரை சமமானது அல்ல, எனினும் உயர்ந்தோனாகிய அல்லாஹ் பொறுமையாக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அதனால் இவ்வாறு துன்பத்தின்போது பொறுமை கொள்வது கடமையாகும் என்பதற்காக அவர் பொறுமை கொள்கிறார்:
وَاصْبِرُوْا ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَۚ
ஆகவே, நீங்கள் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 8:46)
மூன்றாம் நிலை: பொருந்திக்கொள்ளல்
ஒருவர் துன்பத்தை அல்லாஹ்வுக்காகப் பொருந்திக்கொள்கிறார், அவரைப் பொறுத்தவரையில் அவருக்கு அத்துன்பம் ஏற்படுவதும் ஏற்படாதிருப்பதும் சமமே. துன்பம் ஏற்படும்போது அவருக்கு கடினமாக இருப்பதுமில்லை, அத்துன்பத்தை அவர் சுமையாக கருதுவதுமில்லை. இது மிகவும் விரும்பத்தக்க படிநிலையாகும், எனினும் துன்பம் ஏற்படும் போது இந்நிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை, ஏனெனில் ஆதாரப்பூர்வமான கருத்துக்களின்படி இந்நிலையை விட இதற்கு அடுத்த நிலை தெளிவாக மிகச்சிறந்ததாகும், எனினும் இது விரும்பத்தக்கது என்று கூறப்படுவதற்கு காரணம் யாதெனில்; துன்பம் தனக்கு நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் இந்நபர் ஒரே மாதிரியாக அல்லாஹ்வை பொருந்திக் கொண்ட நிலையிலையே காணப்படுகிறார், அதேசமயம் இதற்கு முந்தைய நிலையில், துன்பம் அவருக்கு கடினமாக உள்ளது, இருப்பினும் அவர் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறார்.
நான்காவது நிலை: நன்றியுணர்வு,
ஒருவர் தனக்கு நேர்ந்த துன்பத்துக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது. இது மிக உயர்ந்த படிநிலையாகும். ஏனெனில் அல்லாஹ் அல்-முஹ்ஸின்(இறுதியாக நன்மை புரிபவன்) என்று அவர் அறிந்து வைத்திருப்பதாலும், மேலும் தனக்கு நேர்ந்த துன்பமானது தனது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் நன்மைகள் அதிகரிக்கப்படவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை அவர் அறிந்து நன்றியுணர்வுடன் அல்லாஹ்வின் மீது நன்மைக்காக ஆதரவு வைத்திருப்பதாலும் இது மிக உயர்வான படிநிலையாக காணப்படுகிறது.
'ஒரு முஸ்லிமைக் குத்தும் முள் உள்ளிட்ட அவருக்கு நேரிடும் துன்பம், துக்கம், கவலை தொல்லை, மனவேதனை உள்ளிட்ட எதுவானாலும் அதற்குப் பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் (ஆதாரம் -: புஹாரி, முஸ்லிம்)
எனவே சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு இடர் ஏற்பட்ட உடனேயே இந்த நான்காவது படிநிலையை நோக்கி இயல்பாகவே நகரக்கூடியவர்களாக நம்மை வழக்கப்படுத்திக் கொள்வோமாக.. அல்லாஹ் நம்மை அப்படிப்பட்ட ஈமானில் உயர்ந்த படிநிலையிலுள்ள மக்களாக ஆக்குவானாக.. ஆமீன்!
- ஷேஹ் இப்னு உதைமீன் (ரஹி) அவர்களின் பதாவா அர்கானுல் இஸ்லாம் தொகுப்பில் காணப்படும் பதிலை அடிப்படையாகக் கொண்டது