இஸ்லாமிய மார்க்கத்தில் அகீதாவிற்கு (கொள்கைக்கு) மிகப்பெரும் முக்கியத்துவம் இருக்கின்றது. இஸ்லாம் என்பது அகீதா மற்றும் அமல் (என இரண்டுமே) ஆகும்.
(சரியான) அகீதா இல்லாமல் எந்த ஒரு அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் சரியான அகீதா இல்லாமல் எந்த ஒரு அமலும் பயனளிக்காது. இதன் காரணமாகவே அகீதாவின் முக்கியத்துவம், அதனைக் கற்றுக் கொள்வதின் முக்கியத்துவம் மற்றும் அதனைக் கற்றுக் கொள்வதில் உள்ள பயன்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்தும் விதமாக இந்த வார்த்தைகளை எழுத விரும்பினேன். யா அல்லாஹ்! ஈடேற்றத்தையும், நேர்வழியையும் எனக்கு வழங்கிடுவாயாக.
அகீதாவை கற்றுக் கொள்வதின் முக்கியத்துவம் என்ன?
ஏன் அகீதாவைப் பற்றி பேச வேண்டும்? அல்லது வேறு அர்த்தத்தில் சொல்ல வேண்டுமெனில், ஏன் நாம் அகீதாவைப் படிக்க வேண்டும்?
அகீதாவை பயிலுவதை நோக்கி அழைக்கும் காரணிகள் யாவை?
மேலும் அகீதாவை கற்றுக் கொள்வதின் பயன்கள் யாவை?
இந்தக் கேள்வி(களு)க்கு பதிலளிக்கும் நேரத்தில் கீழ்வரும் கேள்விக்கும் நாம் பதிலை அறிந்து கொள்வோம்.
சரியான அகீதாவின் பக்கம் உள்ள தேவையானது மிகவும் அத்தியாவசியமான தேவையா? மேலும் அகீதாவை கற்றுக் கொள்வது அவசியமான ஒன்றா?
பின்பு இந்த வார்த்தைகளை, அகீதாவைக் கற்றுக் கொள்வதின் மார்க்கச் சட்டத்தைப் பற்றிய பேச்சைக் கொண்டு முடித்துக் கொள்வோம்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருக்கும் நோக்கமாவது, நாம் அகீதாவின் முக்கியத்துவத்தை கேள்வி பதிலின் வாயிலாக அறிந்து கொள்வதாகும். எனவே அது மனதிலும் நன்றாக பதியும்.
அகீதாவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதைக் கொண்டு, ஒரு கல்வியைத் தேடும் மாணவருடைய ஆர்வமானது அகீதாவைக் கற்றுக்கொள்வதில் அதிகரிக்கும். மேலும் அதனைப் பயில்வதற்கு உற்சாகம் கொள்வார். ஏனெனில், ஒரு விடயத்தின் நோக்கத்தையும், இலக்கையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வதானது, ஒரு மனிதரிடத்தில் அந்த விடயத்திற்கு மிகப் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கும். மேலும் அவரை அதன் மீது ஆர்வம் கொள்ளச் செய்யும்.
நீ (மார்க்கக்) கல்வியை (கற்க) விரும்பினால், (அதிலே) மிக முக்கியமானவற்றை அறிந்து கொள். ஏனெனில், அதனை அறிந்து கொள்வதைக் கொண்டு ஆரம்பிப்பதாவது வழியை உனக்கு எளிது படுத்திக் கொடுக்கும்.
அகீதாவே மார்க்கத்தினுடைய மிகவும் முக்கியமான கல்வியாகும்
நாம் அகீதாவைப் படிக்கின்றோம். ஏனெனில், எவ்வித வரையறையுமின்றி அகீதாவே மார்க்கத்தின் மிகவும் முக்கியமான கல்வியாகும். அகீதா நற்குணங்களை விட முக்கியமானதாகும், அகீதா ஒழுக்கங்களை விட முக்கியமானதாகும், அகீதா வணக்க வழிபாடுகளை விட முக்கியமானதாகும், அகீதா கொடுக்கல் வாங்கல்களை விட முக்கியமானதாகும். ஏனெனில், அதுவே அடியானின் மீது உள்ள முதலாவது கடமை ஆகும். இஸ்லாத்தில் நுழையக் கூடிய ஒரு மனிதர், வணக்க வழிபாடுகளைக் கற்றுக் கொள்வதற்கு முன் தவ்ஹீதைப் பற்றி அறிந்து கொள்வதே அவர் மீது கடமையாகும்.
وعندما بعَث النبي - صلى الله عليه وسلم - معاذًا إلى نحو أهل اليمن، قال له: ((فليَكن أوَّل ما تدعوهم إليه أن يُوحدوا الله تعالى، فإذا عرَفوا ذلك، فأخْبِرهم أن الله فرَض عليهم خمس صلوات))[1].
நபி ﷺ அவர்கள் முஆத் இப்னு ஜபல் அவர்களை எமன் நாட்டு மக்களை நோக்கி (தஃவா செய்வதற்காக) அனுப்பிய சமயத்தில், 'அவர்கள் அல்லாஹ்வை (வணக்கத்தில்) ஒருமைப்படுத்த வேண்டுமென்பதே, நீங்கள் அழைப்பவற்றில் முதலாவதாக இருக்கட்டும். பின்னர் அவர்கள் அதனை அறிந்து கொண்டால், ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக என்று அவரிடத்தில் கூறினார்கள்.
நிச்சயமாக இந்த ஹதீஸானது தவ்ஹீதின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. அதுவே அகீதாவில் மிகவும் முக்கியமான பாடமாகும். மேலும், நபி ﷺ அவர்கள் அமல்களை நோக்கி அழைப்பதற்கு முன்பாக, (முதலில்) அகீதாவை சீர்படுத்துவதை நோக்கி அழைப்பதையே ஏவினார்கள். தொழுகையைக் கொண்டு ஏவுவதற்கு முன்பாக தவ்ஹீதை முற்படுத்தியுள்ளார்கள்.
மேலும், பெருமானார் ﷺ அவர்கள் நிச்சயமாக (நபியாக) அனுப்பப்பட்டதற்குப் பிறகு மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் தங்கி இருந்தார்கள். (அக்காலங்களில்) மக்களை அகீதாவை சீர்படுத்துவதை நோக்கியும், தவ்ஹீதை நோக்கியும் அழைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். (மற்ற) கடமையான விடையங்கள் மதினாவிலேயே தவிர அவர்கள் மீது இறங்கவில்லை.
இவ்விடயங்கள் தஃவாவில் முதலிலும் முக்கியமானது அகீதாவை கற்றுக் கொடுப்பதேயாகும், மேலும் அத்தஃவாவானது முதலில் அகீதாவை சீர்படுத்துவதிலேயே நிலைபெற்றிருக்கின்றது என்பதனை காட்டுகின்றது. ஒரு மனிதர், வணக்க வழிபாடுகள், ஒழுக்கங்கள் என ஏனைய அமல்கள் சரியான அகீதாவின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்காக, அகீதாவை சீர்படுத்திய பின்னரே அன்றி அமல்களைக் கொண்டு வேண்டப்படமாட்டார்.
தவறான நம்பிக்கைகளைச் சீராக்குவதற்கு அகீதாவைப் பயிலுதல்
நம்முடைய கொள்கையை சீராக்குவதற்கு நாம் அகீதாவைப் பயிலுகின்றோம். மேலும் கொள்கையை சீராக்குவது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.
ஏனெனில், அகீதா தான் ஒரு மனிதனின் செயல்கள் (அனைத்தும்) கட்டியெழுப்பப்படும் அடிப்படையாகும். மேலும் நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது அகீதாவின் அடிப்படைகள், இணை கற்பித்தல் மற்றும் இறை நிராகரிப்பு ஆகியவற்றை விட்டும் பாதுகாப்பாக இருப்பதைச் சார்ந்துள்ளது.
எவருடைய அகீதாவோடு பெரிய வகை இணைவைப்பு அல்லது (பெரிய வகை) இறை நிராகரிப்பு கலந்து விடுமோ, அவர் காஃபிர் ஆகிவிடுவார்.
மறுமை நாளில் ஒரு இறை நிராகரிப்பாளருக்கு (அவரது) நற்செயல்கள் பயனளிக்காது, அவர் நற்காரியங்களிலிருந்து அதிகமானவற்றை செய்திருந்தாலும் சரியே!.
ஒருவருடைய அகீதாவானது சரியானதாக இல்லை என்றால், அதிலிருந்து தோன்றக் கூடிய சொற்கள் மற்றும் செயல்கள் (என யாவும்) அழிந்து போகும் (எந்த ஒரு பயனும் அளிக்காது).
அல்லாஹ் கூறியது போன்று:
لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ
'(நபியே!) “நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர்”' (அல்குர்ஆன் : 39:65).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
﴿ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ ﴾ [الأنعام: 88]؛
'இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்கு இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்), அவர்களை விட்டு அழிந்துவிடும்'.
(அல்குர்ஆன் : 6:88).
அதாவது: அவர்களுடைய (நற்)செயல்கள் (யாவும்) அழிந்துவிடும். அகீதாவை சீர்படுத்தவில்லையெனில் அமல்களைக் கொண்டு எந்த ஒரு பயனும் இல்லை.
சரியான அகீதாவைப் பயிலுவது ஒரு மனிதனை இணைவைப்பிலிருந்து பாதுகாக்கும்
நாம் அகீதாவைப் படிக்கின்றோம். ஏனெனில், சரியான அகீதாவைப் பயிலுவதாவது, ஒரு மனிதனை இணைவைப்பிலிருந்து (அல்லாஹ்வுடைய அனுமதியைக் கொண்டு) பாதுகாக்கும். மேலும் சரியான அகீதாவை புறக்கணிப்பது என்பது, (மனிதன்) இணைவைப்பில் விழுவதற்கு காரணியாகும்.
இணைவைப்பு மற்றும்
காஃபிராக்கக் கூடிய நம்பிக்கைகளிலிருந்து (ஒரு மனிதரின்) அகீதாவானது தூய்மையாயிருப்பது என்பது, அவர் நிரந்தரமாக நரகத்தில் தங்கி விடுவாரா அல்லது அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவாரா என்பதை உறுதியாக தீர்மானிக்கும் விடயமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான், இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார்.
(அல்குர்ஆன் : 4:48)
அகீதாவே கல்விகளில் மிகவும் சங்கைமிக்கதும் மகத்தானதும் ஆகும்
நாம் அகீதாவைப் படிக்கின்றோம். ஏனெனில், அகீதாவே கல்விகளில் மிகவும் சங்கைமிக்கதும், மகத்தானதும், உயர்வானதுமாகும் மேலும் ஒரு கல்வியின் சிறப்பும் மகத்துவமும் (அந்தக் கல்வியின் மூலம்) அறிந்துகொள்ளப்படும் விடயத்தின் (சிறப்பையும் மகத்துவத்தையும்) சார்ந்துள்ளது. அறிந்துக்கொள்ளப்படுபவற்றில், அல்லாஹ்வையும் அவனது பண்புகளையும் பற்றி (அறிந்து கொள்வதை) விட மிகப்பெரிய ஒரு விடயம் இல்லை. இந்தக் கல்வியில் இதுபற்றியே பேசப்படுகின்றது.
சரியான அகீதா மனிதனுக்கு உள்ளச்சத்தையும், பாவங்களை விட்டு தூரமாக இருப்பதையும் அதிகரிக்கச் செய்யும்
உள்ளச்சம் அதிகரிப்பதற்காக நாம் அகீதாவைப் படிக்கின்றோம்.
அகீதா தவ்ஹீதை உள்ளடக்குகின்றது. தவ்ஹீத் என்பது அல்லாஹ்வுக்கு எவை தகுமானவை மேலும் எவை தகுமாகாதவை என்பவற்றை அறிந்து கொள்வதாகும்.
அல்லாஹ்வை அறிந்து கொள்வது என்பது உள்ளச்சத்துடைய அடிப்படைகளில் ஒரு அடிப்படையாகும்.
ஒரு அடியானுடைய அல்லாஹ்வைப் பற்றிய அறிவு அதிகரிக்கும் போதெல்லாம் அவனது உள்ளச்சமும் அதிகரிக்கும்.
நாம் மனோ இச்சைகளின் சோதனைகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவும், பாவமான காரியங்களில் ஈடுபடுவதை விட்டும் தூரமாக இருப்பது அதிகரிப்பதற்காகவும் அகீதாவைப் படிக்கின்றோம்.
அல்லாஹ் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான், அவனை (அவனது பேச்சுக்களை) செவியுற்றுக் கொண்டிருக்கின்றான், அவனை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்த நிலையில் ஒரு முஸ்லிம் எவ்வாறு அல்லாஹ்வுக்கு மாறு செய்யவான்!?.
சரியான அகீதா சந்தேகங்களிருந்து பாதுகாக்கும் விடயமாகும்
கடலின் அலைகள் போல் எழும்பும் சந்தேகங்களின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக நாம் அகீதாவைப் படிக்கின்றோம்.
(தற்காலத்திய) உலகமானது அசத்தியமான அழித்தொழிக்கும் கொள்கைகளினாலும், வழிதவறிய சிந்தனைகளாலும், தவறான பாதைகளினாலும் நிரம்பி வழிகின்றது.
இந்த (தவறான) கொள்கைகள், சிந்தனைகள் மற்றும் பாதைகளுக்கு முன்னால், ஒரு முஸ்லிமிடம் அகீதாவைப் பற்றிய சரியான கல்வியும் அதைப் பற்றிய சரியான புரிதலும் இருப்பது அவசியமானதாகும்.
நல்லதிலிருந்து கெட்டதையும், சரியானதிலிருந்து பலவீனமானதையும், சத்தியத்திலிருந்து அசத்தியத்தையும் பிரித்தறிவதற்காக (சரியான அகீதாவைப் பற்றிய கல்வி இருப்பதாவது மிக அவசியமானதாகும்).
நாம் ஏன் அகீதாவைப் கற்றுக்கொள்கின்றோம்?
அகீதாவைக் கற்றுக்கொள்ளும் போது நம்முடைய நிய்யத்தும், நோக்கமும் பின்வருமாறு இருக்கட்டும் அல்லது நாம் சரியான அகீதாவைக் கற்றுக்கொள்வதில் உள்ள பயன்கள் கீழ்வருமாறு:
1. அமலுக்கு முன்பாக அகீதாவை மக்களுக்கு கற்றுக் கொடுத்த ரசூல்மார்களைப் பின்பற்றுவது
அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ
ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தவரிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள், (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அனைத்து ஷைத்தான்களாகிய) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்). (அல்குர்ஆன் : 16:36)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ
மேலும், நிச்சயமாக என்னைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் இல்லை. எனவே, என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.
(அல்குர்ஆன் : 21:25)
2. பித்அத்துகள் மற்றும் ஷிர்க்கின் கலப்படங்களிலிருந்து நம்முடைய அகீதாவைத் தூய்மைப்படுத்துவது, மேலும் ஒரு அடியான் குஃப்ரிலிருந்தும், ஷிர்க்கிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதே நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான அடிப்படையாகும். எனினும், முழுமையான பாதுகாப்பு என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ﷺ நாடியதற்கேற்ப, சொற்களையும் செயல்களையும் சீர்படுத்தி, மேலும் வணக்க வழிபாட்டை பித்ஃஅத்திலிருந்து பாதுகாக்க கூடிய பிஃக்ஹை (புரிதலைக்) கொண்டே இருக்கின்றது.
3. ஷிர்க் மட்டும் பித்ஃஅத்தில் விழுவதிலிருந்து பாதுகாப்பு.
4. அல்லாஹ்வைப் பற்றிய அறிவானது அவனைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தும், மேலும் அவனுக்கு மாறுசெய்வதில் விழுவதிலிருந்து தடுக்கும்.
5. குழப்பங்களில் இருந்து பாதுகாப்பு. சரியான அகீதாவை கற்றுக் கொள்வதினாலேயே தவிர கொள்கை ரீதியான குழப்பங்களிலிருந்து பாதுகாப்பை அடைய முடியாது.
6. அசத்தியமான சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை எதிர்த்துப் போரிடுவது.
7. நம்மிடமிருந்து அறியாமையை நீக்குவது
அகீதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் (வெறுமனே) ஈமான் கொள்வதே போதும் என்னும் கூற்றின் அசத்தியதன்மை:
அகீதாவின் முக்கியத்துவத்தை நாம் கற்றுக்கொள்வதன் வாயிலாக, 'அகீதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் (வெறுமனே) ஈமான் கொள்வதே போதும்' என்னும் கூற்றின் அசத்தியதன்மை தெளிவாகும். ஏனெனில், நிச்சயமாக ஈமான் என்பது சரியான ஈமானாக இருக்க முடியாது, அகீதா சரியாகினாலேயே தவிர. அகீதா சரியாகவில்லை எனில், ஈமானும் இல்லை தீனும் இல்லை.
அகீதாவைப் பயிலுவது அவசியமான ஒன்றா?
"அகீதாவைப் பயிலுவது அவசியமான ஒன்றா?" என்ற முக்கியமான கேள்விக்கு, அகீதாவின் முக்கியத்துவத்தைப் பயிலுவதன் வாயிலாக நம்மால் பதில் அளிக்க இயலும்.
பதில்:
ஆம். அகீதாவைப் பயிலுவது என்பது மனிதனுடைய இன்றியமையாத விடயங்களிலிருந்துள்ள ஒன்றாகும். அதைவிட்டு அவன் (ஒருபோதும்) தேவையற்று இருக்க முடியாது.
ஒரு மனிதன் தன் மீதும் தன்னைச் சுற்றியுள்ள (ஏனைய) படைப்பினங்களின் மீதும், பேராற்றல் மற்றும் பரிபூரணமான அரசாட்சியை (உடையவனாக) நம்பக்கூடிய இறைவனின் பக்கம் தன்னுடைய ஃபித்ராவின் அடிப்படையில், புகலிடத்திற்காக ஒதுங்கக் கூடியவனாக இருக்கின்றான்.
மேலும் இந்த நம்பிக்கையானது, மார்க்கப்பற்றுடன் இருப்பதன் பக்கம் ஃபித்ரா சாய்ந்திருப்பதை உண்மைப்படுத்துகின்றது. மேலும் அவனது அந்த ஈர்ப்பையும் திருப்திபடுத்துகின்றது. ஃபித்ராவுடன் உடன்படுகின்ற, மேலும் மனித புத்திக்கும், பிரபஞ்சத்தில் அதற்கென இருக்கும் அந்தஸ்திற்கும் மதிப்பளிக்கின்ற சரியான நம்பிக்கையின் மீது இஸ்லாமிய அகீதாவானது நிலைபெற்று இருக்கின்றது.
சரியான அகீதாவின் பக்கம் இருக்கும் தேவையானது மிகவும் அவசியமான தேவையா?
"சரியான அகீதாவின் பக்கம் இருக்கும் தேவையானது மிகவும் அவசியமான தேவையா?" என்ற முக்கியமான கேள்விக்கு, அகீதாவின் முக்கியத்துவத்தைப் பயிலுவதன் வாயிலாக நம்மால் பதில் அளிக்க இயலும்.
பதில்:
ஆம். சரியான அகீதாவின் பக்கம் இருக்கும் தேவையானது மிகவும் அவசியமான தேவையாகும்.
அகீதா சரியாக இருப்பதைக் கொண்டே தவிர, உள்ளத்திற்கு எவ்வித உயிரோட்டமும், அமைதியும், இன்பமும் இல்லை.
அல்லாஹ்வையும் அவனது ஏகத்துவத்தையும் அறிந்து கொள்வது, அவனை நேசிப்பது, உள்ளச்சம் கொள்வது, அவனது ஏவல்கள் மற்றும் விலக்கல்களை கண்ணியப்படுத்துவது, அவனது வாக்குறுதிகளையும், எச்சரிக்கைகளையும் உண்மைப்படுத்துவது என்பவற்றைக் கொண்ட சரியான அகீதாவானது, ஒரு அடியானது உள்ளத்தில் பதிந்து விட்டால், அவன் இம்மையிலும் மறுமையிலும் பாக்கியம் மிக்கவனாக ஆகிவிடுவான். மேலும் அவனைக் கொண்டு அவனது சமூகமும் பாக்கியம் மிக்கதாக ஆகும்.
ஏனென்றால், ஒரு தனிமனிதனின் நடத்தை சீராக இருப்பதென்பது, அவனது அகீதாவின் சீர்த்தன்மையையும், (தவறான விடயங்களிலிருந்து) அவனது சிந்தனைகள் பாதுகாப்பாக இருப்பதையும் பின்பற்றியுள்ளது. மேலும் ஒரு தனிமனிதனின் நடத்தை சீர்கெடுவதென்பது, அவனது அகீதாவின் சீர்கேட்டையும், அதன் வழிதவறுதலையும் பின்பற்றியுள்ளது.
மன சஞ்சலங்களிலிருந்து விடுபடுவதென்பது சரியான அகீதாவுடன் (தான்) உள்ளது
சரியான அகீதாவானது, மன அமைதியின்மை, பதற்றம் மற்றும் வருத்தம் ஆகியவற்றிலிருந்து ஒரு அடியானை பாதுகாக்கின்றது.
சரியான அகீதாவை உடையவர், அல்லாஹ்வுடைய விதியின் மீதும், மேலும் அல்லாஹ்தான் (எல்லா) காரியங்களையும் நிர்வகிப்பவன், பாவங்களை அதிகமாக மன்னிக்கக் கூடியவன் என்பதையும் நம்பிக்கைக் கொள்கிறார். எனவே அவர் ஒரு நெருக்கடியில் விழுந்துவிட்டால், அவரது இறைவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றார். பின்னர் அவரது கஷ்டத்தை அவன் நீக்குகின்றான்.
மேலும் பாவம் ஏதேனும் செய்து விட்டால், அவனிடம் பாவமன்னிப்பு கோருகின்றார். பின்னர் அல்லாஹ் அவரை மன்னிக்கின்றான். மேலும் அவரை வருத்தமுறச் செய்யும் ஒன்று நிகழ்ந்து விட்டால், அல்லாஹ்வைப் புகழ்கின்றார். மேலும் "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" என்றும் கூறுகின்றார்.
ஏனெனில், அல்லாஹ் தான் (யாவற்றையும்) விதிப்பவன், எந்த ஒன்றையும் ஒரு ஞானத்திற்காகவே தவிர அவன் விதிப்பதில்லை என்பதை அவர் அறிந்திருக்கின்றார். எனவே அவர் வருத்தமுறவோ, நிராசைடையவோ மாட்டார்.
சரியான அகீதாவை உடையவரை, அமைதியடைந்த உள்ளம் மற்றும் சாந்தமான மனநிலை உடையவராக, கண் குளிர்ச்சி மிக்கவராக, மன உளைச்சல் மற்றும் குழப்பமில்லாதவராக நீ அவரைக் காண்பாய். எந்தளவுக்கெனில், அவர்களில் (ஸலஃபுகளில்) ஒருவர், "நாங்கள் ஒரு பேரின்பத்தில் இருக்கின்றோம். அரசர்கள் அதை அறிவார்கள் என்றால், அதற்காக (அதை எங்களிடமிருந்து பறிப்பதற்காக) எங்களுடன் போர் தொடுப்பார்கள்" என்று கூறக் கூடியவராக இருந்தார்.
(மார்க்க) அறிஞர் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களிடம் "(உண்மையில்) அரசர்கள் யார்?" என்று வினவப்பட்டது. (அதற்கு) "ஸுஹ்ஹாதுகள் (மறுமை வாழ்வுக்கு பயனளிக்காத விடயங்களை விட்டு விடுபவர்கள்)" என்று (பதில்) கூறினார்கள்.
"கீழ்த்தரமான மக்கள் யார்?" என்று கேட்டார்கள்.
(அதற்கு) "தங்களுடைய மார்க்கத்தை வைத்து உண்பவர்கள்" என்று (பதில்) கூறினார்கள்.
"கீழ்த்தரமானவர்களிலும் கீழ்த்தரமானவர்கள் யார்?" என்று கேட்டார்கள்.
"தங்களுடைய மார்க்கத்தைப் பாழாக்கி, பிறருடைய உலக (விவகாரங்களை) சீர் செய்பவர்கள்" என்று (பதில்) கூறினார்கள்.
அகீதா சரியாக இருப்பதைக் கொண்டே தவிர, மறுமை நாளில் ஒரு அடியான் (தண்டனையிலிருந்து) தப்பிக்க முடியாது.
قال تعالى:﴿ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ ﴾ [الأنعام: 88].
அல்லாஹ் கூறுகின்றான்:
'அவர்கள் (அல்லாஹ்வுக்கு இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்), அவர்களை விட்டு அழிந்துவிடும்'. (அல்குர்ஆன் : 6:88)
இதன் காரணமாகவே, சரியான அகீதாவின் பக்கம் இருக்கும் தேவையானது மிகவும் அவசியமான தேவையாக உள்ளது.
அகீதாவிற்கு கவனம் கொடுக்க வேண்டும் என்பதற்கு, ஃபிக்ஹ் (மார்க்கச் சட்டக் கல்வியை) விட்டு விடவேண்டும் என்பது பொருளல்ல
நாம் அகீதாவிற்கு (அதிகமாக) கவனமும் அக்கறையும் செலுத்துவதால், ஃபிக்ஹ் (மார்க்கச் சட்டக் கல்வி), நற்குணங்கள் ஆகியவற்றை கவனம் கொடுக்காமல் விட்டுவிடுவது என்பது அவசியமாகாது. ஏனென்றால், இஸ்லாம் என்பது கொள்கை மற்றும் செயல் (என இரண்டுமே) ஆகும்.
அகீதாவைக் கற்றுக் கொள்வதன் மார்க்கச் சட்டம்
அகீதாவின் முக்கியத்துவத்தை அறிந்த பிறகு, ஒரு முக்கியமான விடயத்திற்கு நாம் வருவோம். அதுதான் அகீதாவைக் கற்றுக் கொள்வதன் மார்க்கச் சட்டமாகும். அகீதாவின் விடயம் என்பது ஃபிக்ஹ்வுடைய விடயத்தைப் (போன்றதே). அகீதாவில் ஃபிக்ஹைப் போன்றே, ஃபர்ளு அய்ன் (என்று சொல்லப்படக்கூடிய ஒவ்வொருவரின் மீதும் கடமையான விடயங்களும்) உள்ளன. மேலும் ஃபர்ளு கிஃபாயா* (என்று சொல்லப்படக்கூடியவைகளும்) உள்ளன.
*[ஃபர்ளு கிஃபாயா: சமூகத்தில் ஒரு சில மக்களின் மீது மட்டும் கடமையாக இருக்கும் விடயங்கள். இவற்றை சிலர் நிறைவேற்றிவிட்டார்கள் என்றால் பிறர் மீது அக்கடமை நீங்கிவிடும். இவற்றை யாருமே நிறைவேற்றவில்லையெனில் அனைத்து மக்களின் மீதும் பாவமாகிவிடும்].
ஏனெனில், கோட்பாடானது (என்னவென்றால்): "ஒரு கல்வி(யுடைய சட்டம்) என்பது (அதில்) கற்றுக்கொள்ளப்படும் விடயத்தைப் பொருத்தே உள்ளது". கடமையான ஒன்றை நிலை நாட்டுவதற்கு வழிவகுக்குகின்ற கல்வியானது, கடமையானதாகும். மேலும் ஸுன்னத்தான ஒன்றை நிலை நாட்டுவதற்கு வழிவகுக்குகின்ற கல்வியானது, ஸுன்னத்தானதாகும்.
ஒவ்வொருவரின் மீதும் கடமையான அகீதா என்பது, எந்த ஒன்றைக் கற்றுக் கொள்வதன் மூலமே தவிர ஈமான் சரியாகாதோ அதுவாகும். அது ஈமானின் ஆறு தூண்களைப் பொதுப்படையாக நம்பிக்கை கொள்வதாகும்.
ஒரு சில மக்களின் மீது மட்டும் கடமையாக இருக்கும் அகீதா என்பது, இந்த ஆறு தூண்களை குர்ஆன் ஸுன்னாஹ்வில் இருந்து அவற்றுடைய ஆதாரங்களுடன் அறிந்து கொள்வது, மேலும் (அதற்கு) மாறுபடுபவர்களின் சந்தேகங்களையும் அவற்றிற்குண்டான மறுப்பையும் அறிந்து கொள்வதாகும்.
[குறிப்பு: இந்தக் கட்டுரையானது அலூகா எனும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்]
-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.