- அஷ்ஷைஃக் முஹம்மது பின் ஹிஸாம் ஹஃபிதஹுல்லாஹ்
கேள்வி:
பாமர மக்களில் அதிகமானவர்களிடத்தில் 'அல்லாஹ் எங்கே இருக்கின்றான்' என்று கேட்கப்பட்டால், 'அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கின்றான்' என்று கூறுகின்றார்கள். இந்த கூற்றுடைய தீர்ப்பு என்ன?
மேலும் இந்த கூற்றுடைய அசத்தியத்தன்மையை (நிரூபிப்பதற்கும்), அதனை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் உரிய சிறந்த வழி என்ன?
பதில்:
இந்தக் கூற்று அசத்தியமானதாகும். மேலும் இது அசத்தியமான கொள்கையாகும், பித்அத்வாதிகளின் கொள்கையிலிருந்து உள்ளதாகும்: சூஃபிய்யாஹ், அஷாயிராஹ்,. முஃதஸிலா (மற்றும் பிற) பித்அத்துவாதிகள், வழிகேடர்களுடைய கொள்கைகளிலிருந்து உள்ளதாகும்.
அல்லாஹ்வோ (சுப்ஹானஹு வதஆலா) வானத்தில் இருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
ءَاَمِنْتُمْ مَّنْ فِىْ السَّمَآءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِىَ تَمُوْرُۙ
'வானத்திலிருப்பவன், உங்களை பூமியில் அழுந்தச்செய்து விடுவான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (பூமியாகிய) அது அந்நேரத்தில் நடுங்கும்'.
(அல்குர்ஆன் : 67:16)
'வானத்தில் இருக்கின்றான்' என்பதன் பொருளாவது: மேலே இருக்கின்றான் என்பதாகும். வானமானது, அல்லாஹ்வை சூழ்ந்திருக்கின்றது என்பது அதன் பொருளன்று. (அவ்வாறு கூறுவதில் இருந்து) அல்லாஹ் பாதுகாப்பானாக! இவ்வாறு புரிந்து கொள்வது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ۖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
மேலும், (நபியே!) அல்லாஹ்வை_அவனுடைய கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் மதிப்பளிக்கவில்லை, இன்னும், பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனுடைய (ஒரு கைப்) பிடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனுடைய வலக்கையிலும் சுருட்டபட்டவையாயிருக்கும், அவன் தூயவன், இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
(அல்குர்ஆன் : 39:67).
அல்லாஹ்வோ, அவனது (ஏழு) வானங்களுக்கு மேலாக, அவனது கண்ணியத்திற்குத் தகுந்தவாறு, அவனுடைய அர்ஷின் மீது உயர்ந்து இருக்கின்றான். அவனுடைய படைப்புகளிலிருந்து, எந்த ஒன்றும் அவனை சூழ்ந்து கொள்ளாது. (மாறாக) அல்லாஹ்வே எல்லாவற்றையும் சூழ்ந்த(றிப)வனாக இருக்கின்றான்.
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ
(நபியே!) மிக உயர்வானவனாகிய உமதிரட்சகனின் பெயரை நீர் (புகழ்ந்து) துதி செய்வீராக!
(அல்குர்ஆன் : 87:1)
அல்லாஹ் கூறுகின்றான்:
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ
மேலும், அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆள்பவன், அன்றியும் அவனே தீர்க்கமான அறிவுடையவன், (யாவையும்) நன்கு உணர்பவன்.
(அல்குர்ஆன் : 6:18).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُه
தூய வாக்கியங்கள் அவனளவில் மேலேறிச் செல்கின்றன, நல்ல செயலும் அதை (அல்லாஹ்வின் பால்) உயர்த்துகிறது. (அல்குர்ஆன் : 35:10).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ
நிச்சயமாக நாம் (நம் வேதமாகிய) இதனை கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் எனும்) இரவில் இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் : 97:1)
இந்த விடயத்தில் அடுத்தடுத்தென நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ
பின்னர் அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (அல்குர்ஆன் : 7:54).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
அர்ரஹ்மான் அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (அல்குர்ஆன் : 20:5)
அதாவது உயர்ந்து விட்டான் என்பதாகும். அல்லாஹ் 'உயர்ந்திருத்தல்' எனும் பண்பை கொண்டுள்ளான். (இந்தப்) பண்பானது அவனுடைய (தாத் எனும்) உள்ளமையோடு என்றென்றும் இருக்கக்கூடியதாகும். அது அல்லாஹ்வை விட்டும் (என்றும்) பிரிந்து விடாது. 'உயர்ந்திருத்தல்' எனும் அல்லாஹ்வுடைய பண்பானது, அவனுடன் (என்றென்றும்) இருக்கக்கூடிய பண்புகளிலிருந்தும் உள்ளதாகும். அவனோ மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.
நபி ﷺ அவர்கள் இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணத்தின் பொழுது, ஏழாவது வானத்தைத் தாண்டி, 'சித்ரதுல் முன்தஹா' (எனும் இலந்தை மரத்தினை) அடையும் வரைக்கும் உயர்த்தப்பட்டார்கள். (பின்னர்) அவர்களுடைய இறைவன், அவரிடத்தில் ﷺ பேசினான். மேலும் அவனுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (உள்ள விடயங்களை) அவர்களுக்குக் காண்பித்தான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى
நிச்சயமாக அவர்தன் இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
(அல்குர்ஆன் : 53:18)
மிஃராஜூடைய நிகழ்வானது 'அல்லாஹ் மேலே இருக்கின்றான்' என்பதற்கு தெளிவான ஆதாரம் ஆகும். இந்த மிகப்பெரும் அந்தஸ்தைக் கொண்டு அல்லாஹ் அவரை ﷺ கண்ணியப்படுத்தினான்.
والنبي صلى الله عليه وسلم سأل الجارية فَقَالَ لَهَا :((أَيْنَ اللَّهُ ؟ قَالَتْ : فِي السَّمَاءِ ، قَالَ : مَنْ أَنَا ؟ قَالَتْ : أَنْتَ رَسُولُ اللَّهِ ، قَالَ : أَعْتِقْهَا ، فَإِنَّهَا مُؤْمِنَةٌ )) أخرجه مسلم عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ.
மேலும், நபி ﷺ அவர்கள் (முஆவியா இப்னு அல் ஹகம் அவர்களின்) அடிமைப் பெண்ணிடத்தில், 'அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?' என்று கேட்டார்கள்.
அந்தப் பெண் கூறினாள்: 'வானத்தில் இருக்கின்றான்' (அதாவது வானத்திற்கு மேல் இருக்கின்றான் என்று).
நபி ﷺ அவர்கள் (பின்பு அவளிடத்தில்) 'நான் யார்?' என்று கேட்டார்கள்.
அவள் 'நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர்' என்று (பதில்) கூறினாள்.
நபி ﷺ அவர்கள் 'இவளை விடுவித்து விடு. ஏனெனில், நிச்சயமாக இவள் மூஃமினான பெண்ணாவாள்' என்று கூறினார்கள்.
(இந்த ஹதீஸை முஆவியா பின் ஹகம் அஸ்ஸுலமியிடம் இருந்து முஸ்லிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்)
எனவே, அல்லாஹ்வுடைய புத்தகத்திலிருந்தும், நபி ﷺ அவர்களுடைய ஸுன்னத்திலிருந்தும் அடுத்தடுத்தென நிறைய ஆதாரங்கள் (இதற்கு) இருக்கின்றன. 'அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கின்றான்' என்ற நம்பிக்கையானது அசத்தியமான ஒரு கொள்கையாகும். மேலும் இப்படிப்பட்ட பேச்சை எவ்வாறு ஒரு முஸ்லிமால் கூற இயலும்!!? அல்லாஹ் (சுப்ஹானஹூ வதஆலா) அசுத்தமான இடங்களில் இருப்பதை விட்டும், மேலும் அவனுடைய படைப்புகளுடன் கலந்து இருப்பதை விட்டும் தூய்மையானவன். அதை விட்டும் அவன் உயர்ந்தவன்.
மூவரின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்கவதாக இல்லாமலில்லை, ஐவருடைய (இரகசியத்)தில் அவன் அவர்களில் ஆறாவதாக இல்லாமலில்லை, அதைவிடக் குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ அவர்கள் எங்கிருந்தபோதிலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை, (எந்நிலையிலும் அவன் அவர்களுடைய இரகசியங்களை அறிந்து கொள்கிறான்). (அல்குர்ஆன் : 58:7) எனும் அல்லாஹ்வுடைய கூற்றைப் பொறுத்தவரையில்,
அதைக் கொண்டு நாடப்படுவதாவது: 'அல்லாஹ் அவர்களுடன் அவனுடைய அறிவு, செவி, பார்வை, சூழ்ந்திருத்தல் மற்றும் கண்காணித்தலுடன் இருக்கின்றான்' என்பதாகும். எந்த ஒரு இரகசியமும் அவனுக்கு மறைந்து விடாது.
அல்லாஹ் இந்த வசனத்தை அறிவைக் கொண்டு ஆரம்பித்து, அறிவைக் கொண்டே முடித்திருப்பது அதனை சுட்டிக் காட்டுகின்றது.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْاۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும், பூமிலுள்ளவற்றையும் நன்கறிகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்கவதாக இல்லாமலில்லை, ஐவருடைய (இரகசியத்)தில் அவன் அவர்களில் ஆறாவதாக இல்லாமலில்லை, அதைவிடக் குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ அவர்கள் எங்கிருந்தபோதிலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை, (எந்நிலையிலும் அவன் அவர்களுடைய இரகசியங்களை அறிந்து கொள்கிறான்.) பின்னர், அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு மறுமை நாளில் அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 58:7)
இதை (இந்த வசனத்தை) அறிவைக் கொண்டு ஆரம்பித்து, அறிவைக் கொண்டே முடித்துள்ளான்.
மேலும் ஸூரத்துல் ஹதீதின் ஆரம்பத்தில் உள்ள மற்றொறு வசனத்திலும் (இவ்வாறே செய்துள்ளான்).
அல்லாஹ் கூறுகின்றான்:
هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِؕ يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَاؕ وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான், நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் (அறிவாலும், ஆற்றலாலும்) உங்களுடன் இருக்கிறான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு பார்க்கிறவன்.
(அல்குர்ஆன் : 57:4)
இதனை (அதாவது அல்லாஹ் நம்முடன் இருப்பதை தனது) அறிவுடன் குறிப்பிட்டுள்ளான். மேலும் சஹாபாக்கள் மற்றும் தாபியீன்களிலிருந்தும் உள்ள ஸலஃபுகளும் அதனை (அல்லாஹ் நம்முடன் இருப்பதைக்) கொண்டு நாடப்படுவது அறிவைக் கொண்டே என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
அல்லாஹ் அவனுடைய அறிவு, சூழ்ந்திருத்தல், செவி மற்றும் பார்வையுடன் நம்முடன் இருக்கின்றான். மேலும் (அதே நேரத்தில்) அவன் அர்ஷின் மீது இருக்கின்றான். அவனது படைப்புகளுடன் கலந்திருக்கவில்லை. அதிலிருந்து (அவ்வாறு கலந்து இருப்பதிலிருந்து) அல்லாஹ் மிக உயர்ந்தவனாவான்.
அவனுடைய படைப்புகள் என்ன ஒரு (பெரிய) விடயம், அவைகளுடன் அவன் கலந்திருப்பதற்கு!? பூமிகள் அனைத்தும், வானங்கள் அனைத்தும், அர்-ரஹ்மானின் ஒரு கைப்பிடியே!
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் கூறினார்கள்:
'அர்ஷுடன் ஒப்பிடும் போது ஏழு வானங்களும், உங்களின் ஒருவருடைய கைப்பிடியில் உள்ள ஒரு கடுகை போன்றே தவிர இல்லை!'
அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ۖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
மேலும், (நபியே!) அல்லாஹ்வை_அவனுடைய கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் மதிப்பளிக்கவில்லை, இன்னும், பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனுடைய (ஒரு கைப்) பிடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனுடைய வலக்கையிலும் சுருட்டபட்டவையாயிருக்கும், அவன் தூயவன், இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
(அல்குர்ஆன் : 39:67).
-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.