அல்- திர்மிதி (744) மற்றும் அபூதாவூத்தில் (2421) உள்ள அறிவிப்பின்படி சனிக்கிழமை மட்டும் நோன்பு வைப்பது மக்ரூஹ் ஆகும். மேலும் இப்னுமாஜாவில் (1726) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு பஸ்ர் தன் சகோதரியிடமிருந்து அறிவிப்பதாவது: ” அல்லாஹ் கடமையாக்கிய நோன்பை தவிர மற்ற நோன்புகளை சனிக்கிழமை நோற்காதீர்கள்.மற்றவை கிடைக்காவிட்டாலும் திராட்ச்சையின் பட்டை அல்லது மரத்தின் வேரையாவது மென்றுகொள்ளட்டும்”
அல்-இர்வாவில் (960) அல்-அல்பானி அவர்களால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அபூ ஈஸா அத்-திர்மிதி கூறினார்: இது ஓர் ஹஸன் ஹதீத் இங்கு சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது மக்ரூவாகும், ஏனெனில் யூதர்கள் சனிக்கிழமையை பூஜிக்கின்றனர்.
ஷேக் இப்னு உதைமீன் ( حفظه الله) கூறினார்கள்:
பல சூழ்நிலைகளில் சனிக்கிழமை நோன்பு நோற்பது பொருந்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதல் சூழ்நிலை : ரமளான் போன்ற காரணங்களால், நோன்பு நோற்பது கடமையாக இருந்தால், அவர் நோன்பு நோற்கலாம் – அல்லது கடமையான நோன்பை பூர்த்தி செய்வதற்காகவோ அல்லது பரிகாரமாகவோ அல்லது எவர் ஒருவர் ஹஜ் அத்-தமத்துவில் பலியிடுவதற்கு பதிலாக நோன்பு நோற்பது போன்ற காரணங்களுக்காகவோ நோன்பு நோற்கலாம். அவர் சனிக்கிழமை நோன்பு நோற்பது சிறந்தது என நினைத்து அந்நாளுக்கு தனித்துவம் அளிக்காமல் இருக்கும் வரை இதில் எந்த தீங்கும் இல்லை.
இரண்டாவது சூழ்நிலை : அவர் அதற்கு முந்திய நாள் அதாவது வெள்ளிகிழமை நோன்பு நோற்றிருந்தால் அதில் எந்த தீங்கும் இல்லை. ஏனெனில் ஜுவைரிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். “நேற்று நோன்பு வைத்தாயா?“ என்று கேட்டார்கள். நான் “இல்லை!” என்றேன். “நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?“ என்று கேட்டார்கள். அதற்கும் “இல்லை!” என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் “அப்படியானால் நோன்பை முறித்து விடு!” என்றார்கள். ”நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்” என்று ஜுவைரிய்யா(ரலி) கூறினார் என அபூ அய்யூப்(ரஹ்) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி 1986)
எனவே நபி (ஸல்) அவர்கள் “நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?“ என கேட்டது வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து சனிக்கிழமையும் நோன்பு நோற்க அனுமதியுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
மூன்றாவது சூழ்நிலை : சட்டத்தில் உள்ள நோன்பு சனிக்கிழமையன்று வந்தால், அதாவது மாதத்தின் நடுவில் உள்ள நாட்களில் நோற்கும் பரிந்துரைக்கப்பட்ட நோன்புகள் அல்லது ‘அரஃபா நாள்’ அல்லது ‘ஆஷுரா நாள்’ அல்லது ரமளானில் நோன்பு நோற்றவர்கள் ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது அல்லது துல்-ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பது நாட்களில் நோன்பு நோற்பதில் எந்த தீங்கும் இல்லை ஏனெனில் ஒருவர் இதனை சனிக்கிழமை என்பதற்காக நோன்பு நோற்கவில்லை, மாறாக இந்த தருணங்களில் நோன்பு நோற்பது சட்டப்பூர்வமானது என்பதனால்.
நான்காவது சூழ்நிலை : ஒருவர் சனிக்கிழமை நோன்பு நோற்பது அவருடைய பழக்கவழக்கதோடு ஒத்துப்போனால் அதாவது ஒருவர் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பவராக இருந்தால், அவர் நோன்பு வைக்கும் நாள் சனிக்கிழமையாக இருந்தால் அதில் எந்த தீங்கும் இல்லை. இது நபி (ஸல்) அவர்கள் ரமளானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் நோன்பு வைக்க தடைவித்துள்ளார்கள் அவர் வழமையாக நோன்பு வைக்கும் பழக்கமுடையவராக இருந்தாலே தவிர என கூறியது போன்று உள்ளது
(புகாரி 1914) .
எனவே இதில் எந்த தடையும் இல்லை, எனவே இது அதைப்போன்றது தான்.
ஐந்தாவது சூழ்நிலை : சனிக்கிழமையன்று நோன்பு வைக்க தடைசெய்யப்பட்டுள்ளது என்ற ஹதீஸ் ஆதாரபூர்வமாக இருக்கும் என கருதினால், அவர் சனிக்கிழமைக்கு தனித்துவம் வழங்கி விருப்பமான நோன்பை அந்நாளில் நோற்பது தடைசெய்யப்படுள்ளது.
(பார்க்க மஜ்மூ ஃபத்வா வ ரஸாஇல் அல்-ஷேக் இப்னு உதைமீன், 20/57)
அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.