திக்ர் மூன்று வகைப்படும்.
1. அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்.
இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம்.
a) துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக:
سبحان الله،
الحمد لله،
لا اله الا الله،
الله أكبر،
سبحان الله وبحمده..
போன்ற திக்ர்களைக் கூறுவது. இவற்றில் மிகச் சிறந்த ஒரு நபிவழி திக்ர் தான் பின்வரும் திக்ராகும்.
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
b) அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அவற்றின் எதார்த்தங்களையும் பற்றி எடுத்துரைத்தல். உதாரணமாக: அல்லாஹ் அனைத்துப் படைப்புகளினதும் சப்தங்களையும் செவிமடுக்கின்றான், அல்லாஹ்வுக்கு மறையக் கூடிய எந்த ஒன்றும் இல்லை, அவன் அவர்கள் மீது அவர்களது பெற்றோர்களை விட இரக்கம் காட்டக் கூடியவன் போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக இவற்றில் மிகச் சிறந்தது, அல்லாஹ் தன்னைப் பற்றி அல்குர்ஆனிலும் நபி ﷺ அவர்களின் ஹதீஸின் மூலமாகவும் புகழ்ந்துரைத்திருக்கின்ற விடயங்களை மாற்று வியாக்கியானங்களைக் கூறி திரிவுபடுத்தாமல், கருத்தை மறுக்காமல், படைப்புகளுக்கு ஒப்பிடாமல், அவ்வாறே எடுத்துரைத்து அவனைப் புகழ்வதாகும்.
இந்த வகை திக்ரை இன்னும் ஒரு பார்வையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
i) ஹம்த்: அல்லாஹ்வின் மீது நேசம் கொண்டு, அவனில் திருப்தி அடைந்து, அவனது பூரணமான பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்வதைக் குறிக்கும்.
ii) ஸனா: மேற்படி அவனது புகழை மீண்டும் மீண்டும் கூறுவது ஸனா எனப்படும்.
iii) மஜ்த்: கண்ணியம், மகத்துவம், பெருமை, ஆட்சி அதிகாரம் போன்ற அவனது பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்வதை மஜ்த் எனப்படும்.
மேற்படி மூன்று வகையான புகழ்களையும் ஸூறதுல் பாத்திஹஹ்வின் ஆரம்பத்தில் பார்க்கலாம். அடியான் 'அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்' என்று சொன்னால், حمدني عبدي என்னுடைய அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுவான். அடியான் 'அர்றஹ்மானிர்றஹீம்' என்று சொன்னால், أثنى عليّ عبدي என்னுடைய அடியான் என்னைப் பாராட்டி விட்டான் என்று அல்லாஹ் கூறுவான். அடியான் 'மாலிகி யௌமித்தீன்' என்று கூறினால், مجدني عبدي என்னுடைய அடியான் என்னைக் கீர்த்தித்து விட்டான் என்று அல்லாஹ் கூறுவான். (பார்க்க: முஸ்லிம் 395)
2. இரண்டாவது வகை திக்ர்: அல்லாஹ்வின் ஏவல்களையும், விலக்கல்களையும், சட்டங்களையும் ஞாபகப்படுத்தல்.
இந்த வகை திக்ரையும் இரண்டாகப் பிரிக்கலாம்.
a) இன்ன விடயங்களை அல்லாஹ் ஏவியிருக்கின்றான், இன்ன விடயங்களைத் தடுத்திருக்கின்றான், இன்ன விடயங்களை விரும்புகின்றான், இன்ன விடயங்களை வெறுக்கின்றான் என்று அவனைப் பற்றிக் கூறி ஞாபகப்படுத்தல்.
(அதாவது மார்க்க விடயங்களைக் கற்றல், கற்பித்தல்)
b) அல்லாஹ்வின் கட்டளை வருகின்ற பொழுது உடனடியாக அதனை நிறைவேற்றுவதன் மூலமும் அவனது விலக்கல்கள் வருகின்ற பொழுது அவற்றில் இருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்வதன் மூலமும் அவனை ஞாபகப்படுத்தல்.
(அதாவது அல்லாஹ்வின் நினைவால் அமல் செய்தல்)
மேற்படி அனைத்து வகையான திக்ர்களும் ஒரு அடியானிடம் ஒரு சேர இருந்தால் அவனது திக்ரே மிகச் சிறந்த திக்ராகும். மேலும் அதிகப் பயன் தரக்கூடிய திக்ராகும்.
குறிப்பாக அல்லாஹ்வின் சட்டங்களை எடுத்து நடக்கின்ற திக்ர் மிக முக்கியமான திக்ராகும். அதை அடுத்து அவனது சட்டங்களை ஞாபகப்படுத்துகின்ற திக்ரும் முக்கியமானதாகும். நிய்யத் - எண்ணம் சரியாக இருந்தால், இவை இரண்டும் மிகச் சிறப்பான திக்ர்களாகும். (அதாவது மார்க்கத்தைக் கற்றல், கற்பித்தல், அமல்செய்தல்)
3. அல்லாஹ்வை திக்ர் செய்வதில் மூன்றாவது வகை: அதுதான் அவன் செய்த அருட்பாக்கியங்களையும் உதவிகளையும் நினைத்துப் பார்த்தல். இதுவும் ஒரு சிறந்த திக்ராகும்.
மேற்படி ஐந்து முறையிலான திக்ர்களும் சில வேலைகளில் உள்ளத்தினாலும் நாவினாலும் ஒரு சேர நடைபெறலாம். அதுவே மிகச் சிறந்ததாகும். சில பொழுதுகளில் உள்ளத்தினால் மாத்திரம் நடைபெறலாம். அது இரண்டாம் தரமாகும். இன்னும் சில நேரங்களில் நாவினால் மாத்திரம் நடைபெறலாம். அது மூன்றாம் தரமாகும்.
வெறும் நாவினால் மாத்திரம் நடைபெறும் திக்ரை விட உள்ளத்தினால் நடைபெறும் திக்ர் சிறந்து விளங்குவதற்குக் காரணம் யாதெனில், அதுவே அல்லாஹ்வைப் பற்றிய அறிவையும் அன்பையும் வெட்கத்தையும் அச்சத்தையும் அவன் கண்காணிக்கிறான் என்கின்ற உணர்வையும் விளைவிக்கும். மேலும் அதுவே கடமைகளில் குறை செய்வதையும் பாவங்களில் பொடுபோக்காக இருப்பதையும் தடுத்துவிடும். வெறும் நாவினால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் திக்ர் இத்தகைய பெரிய விளைவை ஏற்படுத்தாது. ஆனால், அதற்கும் நன்மையுண்டு.
திக்ரானது துஆவை விடச் சிறந்தது
துஆ எனும் வணக்கத்தை விட திக்ர் எனும் வணக்கம் சிறந்ததாகும். ஏனெனில் திக்ர் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அருட்கொடைகள் ஆகியவற்றைக் குறித்து அவனைப் புகழ்வதாகும். துஆ என்பது அடியான் தனது தேவையை கேட்பதாகும். இதுவும் அதுவும் சமமில்லை.
இதனால்தான் துஆ கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு தேவையை வேண்டுவது முஸ்தஹப்பாக இருக்கின்றது. இது துஆ அங்கீகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும் என்ற வழிகாட்டலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
திக்ர், புகழ் இன்றி துஆ கேட்பதைவிட அல்லாஹ்வைப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு துஆ கேட்பது சிறந்தது. மட்டுமல்லாமல், அது துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் உகந்தது.
அத்தோடு ஒரு அடியான் தனது நிலைமையையும், தேவையையும், இயலாமையையும் அல்லாஹ்விடத்தில் தெரியப்படுத்திப் பிரார்த்தனை செய்வது மேலும் சிறந்ததாகவும், இன்னும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அதிக வாய்பையும் கொடுக்கின்றது. இதனைக் குர்ஆனில் [28:24, 21:87, 7:23] இடம்பெற்றிருக்கின்ற மூஸா நபி, யூனுஸ் நபி, ஆதம் நபி (அலைஹிமுஸ்_ஸலாம்) ஆகிய நபிமார்களின் பிரார்த்தனைகளிலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரார்த்தனைகளில் நாம் அவதானிக்கலாம்.
குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்
பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.
ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் குர்ஆன் ஓதுவதை விட தஸ்பீஹ் எனும் திக்ரைச் செய்வதே சிறந்ததாகும். அங்கு குர்ஆன் ஓதுவதற்குத் தடை கூட வந்துள்ளது. அதேபோன்றுதான் தொழுது ஸலாம் கொடுத்ததற்குப் பிறகு திக்ருகளை ஓதுவது, அதானுக்குப் பதில் சொல்வது குர்ஆனை ஓதுவதில் ஈடுபடுவதை விடச் சிறந்தது. பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆன் ஓதுவது சிறந்ததாக இருந்தாலும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அச்சந்தர்ப்பங்களுக்குரிய திக்ர்களையும் துஆகளையும் ஓதுவது குர்ஆனை ஓதுவதை விடச் சிறந்ததாகும். அதேபோன்றுதான் ஒரு அடியானுக்கு சில நிலைகளில் குர்ஆனை ஓதுவதை விட திக்ர் செய்வது அல்லது துஆ கேட்பது அவனுக்கு அதிக பயனைத் தரக்கூடியதாக இருக்கும். உதாரணமாக ஒருவன் தனது பாவங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது, அவன் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, பாவமன்னிப்புத் தேடுவது குர்ஆன் ஓதுவதை விடச் சிறந்ததாகும். அதேபோன்று மோசமான மனிதர்களால் அல்லது ஜின்கள், சைதான்களால் தனக்கு ஆபத்து வரும் என்று அஞ்சுகின்ற சந்தர்ப்பங்களில் திக்ர்களையும் துஆகளையும் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது பயனுள்ளதாக அமையலாம். அதேபோன்று பொதுவாக குர்ஆன் திலாவதும் திக்ரும் துஆவை விடச் சிறப்பானதாகவும் நன்மை தரக்கூடியதாகவும் இருந்தாலும், ஒருவருக்கு அவசியமான ஒரு தேவை ஏற்பட்டால் அவர் அதை அல்லாஹ்விடம் கேட்பதை விட்டுவிட்டு திக்ரிலும் திலாவதிலும் ஈடுபட்டால் சில நேரம் அவருடைய உள்ளம் முழுமையான ஈடுபாட்டோடு அந்த வணக்கங்களைச் செய்ய முடியாமல் போகலாம். இந்த நிலையில் அந்த வணக்கங்களில் ஈடுபடுவதை விட முழு ஈடுபாடு, பணிவு, பக்தி ஆகியவற்றுடன் துஆ கேட்பதே அதிக பயனுள்ளதாக இருக்கும்.
மேற்கூறப்பட்ட குர்ஆன் திலாவத், திக்ர், துஆ ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகத் தொழுகை இருக்கின்றது. அத்தோடு உடல் உறுப்புக்கள் அடிபணிந்து வணக்கத்தில் ஈடுபடும் பூரணமான ஒரு நிலையையும் அதில் காணமுடியும். இதனால் தொழுகையானது திலாவத், திக்ர், துஆ ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் செய்வதை விடச் சிறந்ததாகும்.
ஒவ்வொரு வணக்கத்திற்குமுரிய சிறப்பு என்ன? ஒவ்வொரு வணக்கமும் எந்த நேரத்தில் அதிக சிறப்பைப் பெறுகின்றது? போன்றவற்றை அறிவது மிகவும் பயனுள்ளதாகும். ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். கண்ணுக்கு ஒரு இடம் இருக்கிறது, காலுக்கு ஒரு இடம் இருக்கிறது, தண்ணீருக்கு ஒரு இடம் இருக்கிறது.. ஒரு ஆடையை ஒரு நேரத்தில் சவர்க்காரத்தினால் கழுவுவது அதற்குப் பயனுள்ளதாக இருக்கும்; அதே ஆடைக்கு இன்னொரு நேரத்திலே வாசனைத் திரவியங்களைப் பூசுவது அயன்பண்ணுவது பயனுள்ளதாக இருக்கும்.
ஓர் அறிஞரிடத்தில், தஸ்பீஹ் செய்வதா அல்லது இஸ்திக்ஃபார் செய்வதா ஒரு அடியானுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்? என்று கேட்டதற்கு, ஆடை சுத்தமாக இருந்தால் வாசனைத் திரவியமும் பன்னீரும் அதற்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்; அது அழுக்கடைந்திருந்தால் சவர்க்காரமும் சுடுநீரும் அதற்கு மிகப் பயன் தரும் என்று பதிலளித்தார்கள்.
இது போன்று தான் ஸூறதுல் இக்லாஸ் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஈடாகக் கூடியதாக இருந்தாலும், வாரிசுரிமை, தலாக், குல்ஃ, இத்தஹ் போன்று சட்டங்களைப் பற்றிப் பேசுகின்ற ஆயத்கள் அவற்றுக்குத் தேவை ஏற்படுகின்ற பொழுது ஸூறதுல் இக்லாஸை ஓதுவதை விடப் பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்ற விடயங்களை அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும். இதற்கு மார்க்க அறிவு அவசியமாகும். அமல்களின் தரங்களைப் பற்றியும் அவற்றின் நோக்கங்களைப் பற்றியும், எந்த நேரத்தில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஷைதான் எம்மை ஏமாற்றி விடுவான். அவனுக்கு எங்களை வழி கெடுக்க முடியாமல் போனால் சிலவேளை சிறப்பான ஒரு அமலை விட்டுவிட்டு சிறப்புக் குறைந்த ஒரு அமலில் ஈடுபடுத்த முயற்சிப்பான். அதேபோன்று அடிப்படையில் சிறப்புக் குறைந்த ஒரு அமல் அதற்குரிய நேரத்தில் சிறப்புப் பெறுகின்ற போது அதனை விட்டுவிட்டு அடிப்படையில் சிறப்பான ஒரு அமலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அதில் அதிக நன்மை இருக்கிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்து அந்த நேரத்திற்குரிய அமலை செய்ய விடாமல் அந்த நேரத்தை கடந்து செல்ல வைப்பான்.
குர்ஆன் ஓதுவது மிகச் சிறப்பானதாக இருந்தாலும் ஸலாம் கூறியவருக்குப் பதில் அளிப்பதற்காக அல்லது தும்மியவருக்குப் பதிலளிப்பதற்காக அதனை நிறுத்துவது ஏற்றமானது; ஏனெனில் அந்த சந்தர்ப்பம் தவறிவிட்டால் அதே அமலைச் செய்வதற்கு மீண்டுவர முடியாது. ஆனால் அவரால் அந்த அமலை முடித்துவிட்டு மீண்டும் குர்ஆனை ஓத முடியும்.
பெரும்பாலானவை இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆய்விலிருந்து சுருக்கி எடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய உசாத்துணை:
الوابل الصيب للإمام ابن القيم
- ஸுன்னஹ் அகாடமி