அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா தன்னுடைய வேதமான அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
(إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِیدࣲ سَمِعُوا۟ لَهَا تَغَیُّظࣰا وَزَفِیرࣰا)
[சூரா ஃபுர்கான் 12]
மேலே குறிப்பிடப்பட்ட அல் குர்ஆனிய வசனத்தில்
((إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِیدࣲ))
பொருள் :
(அது அவர்களை வெகு தூரத்திலிருந்து காணும் மாத்திரத்தில்)
அவர்களை எது தொலை தூரத்தில் இருந்து காணும் மாத்திரத்தில்; என்ற விடயத்தில் பல கருத்துக்கள் கூறப்படுகிறது அவைகளில் :
முதலாவது கூறப்படும் கருத்து :
நரகம் (மஹ்ஷர் மைதானத்துக்கு) கொண்டுவரப்படும் போது அது தொலை தூரத்திலிருந்து அவர்களை காணும் போது.
இரண்டாவது கருத்து :
நரகத்துடைய காவலாலர்கள் தொலை தூரத்திலிருந்து அவர்களை காணும் போது.
இந்த இரண்டு கூற்றுக்களில் ஏற்றமான சரியான கருத்து :
நரகம் அது அவர்களை வெகு தூரத்திலிருந்து காணும் போது என்பதாகும். இந்த விடயத்தை யதார்த்தமானதாக மறுமையில் அல்லாஹ் ஆக்குவான்.
((مِّن مَّكَانِۭ بَعِیدࣲ))
பொருள் :
(தொலை தூரத்திலிருந்து)
விளக்கம் :
அதாவது வெகு தொலைவு தூரத்தில் இருந்து நரகம் அவர்களை காணும் போது.
அவர்களுக்கும் நரகத்திற்கும் மத்தியில் உள்ள வெகு தொலைவு தூரம் ஐநூறு வருடகாலம் ஒருவர் பிரயாணம் செய்யும் தூரம் என்று சொல்லப்படுகிறது, மேலும் ஒரு வருட கால தூரம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்னு அப்பாஸ் ரழியல்லாகு அன்ஹுமா அவர்களைத் தொட்டுவந்த ஒரு அறிவிப்பில் :
நூறு வருடகாலம் ஒருவர் பிரயாணம் செய்யும் தூரம் என்று வந்துள்ளது.
இந்த குர்ஆன் வசனத்துடன் சம்பந்தப்பட்டு ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவர் அறிவிப்புச் செய்கின்றார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நான் கூறாதவற்றை யார் என்மீது நான் கூறியதாக பொய்யாக கூறுகின்றாரோ.. அவர் நரகத்துடைய இரண்டு கண்களுக்கிடையில் ஒரு ஒதுங்கும் தலத்தை எடுத்துக் கொள்ளட்டும், அப்போது கேட்கப்பட்டது : அல்லாஹ்வின் தூதரே! அதற்கு (நரகத்திற்கு) இரண்டு கண்கள் இருக்கின்றதா?
நபியவர்கள் கூறினார்கள் : ஆம், அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவிமடுக்க வில்லையா!
((إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِیدࣲ.. ))
(நரகம் அது அவர்களை வெகு தூரத்திலிருந்து காணும் சந்தர்ப்பத்தில்) . என்ற வசனத்தை ஓதிக் கான்பித்தார்கள்.
இந்த செய்தியை இமாம் அப்து இப்னு குமைத் அவர்கள் அறிவித்துள்ளார்.
இது அஷ்ஷெய்க் ஸித்தீக் ஹஸன் கான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மேலே குறிப்பிட்ட வசனத்தை "பத்ஹுல் பயான் பீ மகாஸித் அல்குர்ஆன்" என்ற நூலில் விளக்கியதன் சாரம்சமாகும்.
இமாம் அல்-முஹத்திஸ் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "அஸ் ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அல் லஈபா" என்ற நூலில் மேலே குறிப்பிட்ட ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், நரகத்திற்கு இரு கண்கள் இருக்கும் அவைகளால் அது பார்க்கும், மேலும் அதற்கு இரு செவிப் புலன்கள் இருக்கும் அவைகளால் அது செவிமடுக்கும், மேலும் அதற்கு ஒரு நாவு இருக்கும் அதன் மூலம் அது பேசும் என்று பல ஸஹீஹான செய்திகளில் இடம்பெற்றுள்ளன.
((سَمِعُوْا لَهَا تَغَيُّظًا وَّزَفِيْرًا))
பொருள் :
அதற்குரிய கொந்தளிப்பையும், அது மூச்சுவிடும் பேரிரைச்சலையும் இவர்கள் (தங்கள் செவியால்) கேட்பார்கள்.
விளக்கம் :
இறைவனுடைய இக்கட்டளையை நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ள நரகமானது அந்த இறை நிராகரிப்பாளர்களை காணும் மாத்திரத்தில் அது கொந்தளித்து, பேரிரைச்சல் விடும். அச் சப்தத்தை இறை நிராகரிப்பாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்த வண்ணமே தங்கள் செவிகளினால் செவிமடுப்பார்கள் .
அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா இன்னும் ஒரு வசத்தில் கூறுகின்றான் :
((إِذَاۤ أُلۡقُوا۟ فِیهَا سَمِعُوا۟ لَهَا شَهِیقࣰا وَهِیَ تَفُورُ))
அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் (நரகத்தின்) கொதி சப்தத்தைக் கேட்பார்கள்.
[Surah Al-Mulk 7]
அல்லாஹ் நம் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.