ஆதாரமற்ற இலங்கை வரலாற்றுச் செய்திகள்

இலங்கைக்கு வஹாப் இப்னு அபீ ஹப்ஸா என்ற ஒரு நபித்தோழரை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள் என பரவலாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்தவர்களால் அறிஞர் சித்திலெப்பயைின் முஸ்லிம் நேசன் பத்திரிகையை மேற்கோள் காட்டிக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அதற்கு இஸ்லாமிய வரலாற்றில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பது மாத்திரமின்றி அவ்வாறு ஒரு நபித்தோழரே இருந்ததாக எந்தவொரு பதிவுமில்லை. நபியவர்கள் எங்கெங்கு தூதனுப்பினார்கள் என்ற அனைத்துத் தகவலும் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு தூதை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக எந்தவொரு வரலாற்று நூலிலும் இடம்பெறவில்லை.

இந்தியாவுக்கு தமீமுல் அன்ஸாரீ, உக்காஷா, மாலிக் பின் தீனார் என 3 நபித்தோழர்கள் வருகை தந்ததாகவும் அவர்களின் அடக்கஸ்தலங்கள் அங்கிருப்பதாகவும் தமிழுலகில் தொகுக்கப்பட்ட பல நூட்களில் காணமுடிகின்றது. இவையும் ஆதாரமற்ற செய்திகளாகும் என்பது மாத்திரமின்றி பல வரலாற்றுச் சான்றுகளோடு முரண்படுவது மாத்திரமின்றி இதனை எழுதியவர்களுக்கும் இஸ்லாமிய வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் காட்டுகின்றது. 

முதல் நபித்தோழரான தமீமுத்தாரி அல்அன்ஸாரி ரழி அவர்கள் கிறிஸ்தவராக இருந்து நபியவர்களின் இறுதிக்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் அவர்கள் மதீனாவிலிருந்து ஷாமுக்கு இடம்பெயர்ந்து அங்கு மரணித்தார்கள் என்று மாத்திரமே வரலாற்று நூட்கள் குறிப்பிடுகின்றன. பார்க்க இப்னு ஹஜரின் அல்இஸாபா (1/ 488)

உக்காஷா ரழி அவர்களையும் இப்பட்டியலில் சேர்ப்பது நகைப்புக்கிடமானது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் அவர்கள் அபூபக்ர் ரழி அவர்களின் காலத்தில் நடைபெற்ற மதம்மாறியவர்களுடனான போரில் ஷஹீதாகிவிட்டார்கள். அரபு நாட்டில் மரணித்தவரின் கப்ர் எவ்வாறு இந்தியா வந்தது?!  பார்க்க இப்னு ஹஜரின் அல்இஸாபா  (4/ 440)

மாலிக் இப்னு தீனார் என்ற ஒரு நபித்தோழரின் அடக்கஸ்தலமும் இந்தியாவில் உள்ளது என்பதுதான் அனைத்தையும் மிஞ்சிய அதிசயமாகும். அவர் ஒரு நபித்தோழரே கிடையாது மாறாக அவர் தாபிஈன்களைச் சார்ந்தவர். ஈராக்கில் மரணித்த அவரது அடக்கஸ்தலம் எவ்வாறு இந்தியா வந்தது என்பதுதான் புரியவில்லை. பார்க்க இமாம் தஹபியின் ஸியர் அஃலாமின் நுபளா (5/ 362)
 ஸர்கலியின் அல்அஃலாம் (5/ 261)
மேற்கூறிய தவறான தகவல்கள் வெறும் வாய்ப்பேச்சுகளாக மாத்திரமின்றி பல்வேறு அகடமி ஆய்வுகள் வரலாற்று நூட்கள் என்பவற்றில் பிரபல எழுத்தாளர்கள், ஆய்வாளர்களால் எ்வவித விமர்சனமுமின்றி முன்வைக்கப்படுவதனால்தான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
Previous Post Next Post