உமர் ரழி அவர்களை ஆட்சேபித்த பெண்மணியின் சம்பவம் ஆதாரபூர்வமானதா?

பெண்கள் பெரிய தொகையை மஹராகக் கேட்கக் கூடாது என உமர் ரழி அவர்கள் கூறிய சம்பவம் ஆதாரபூர்வமாக இருந்தாலும் அதனை ஒரு பெண்மணி அதனை ஆட்சேபனை செய்ததாக வரும் சம்பவம் பலவீனமானதும் குறித்த சம்பவம் இடம்பெறும் ஏனைய பல்வேறு அறிவிப்புக்கள் மற்றும் நபிமொழிகள் இஸ்லாத்தின் வழிகாட்டல் ஆகியவற்றுக்கு முரணானதுமாகும். 

இச்சம்பவத்தை பல முஸ்லிம்கள் உமர் ரழியின் நீதத்தைத் தெளிவுபடுத்துவதற்காகப் பகிர்ந்தாலும் இதனை ஷீஆக்கள் உமர் ரழி அவர்களைக் கேவலப்படுத்தும் நோக்கில் பரப்புகின்றனர். 

குறித்த சம்பவத்தின் அறிவிப்பாளர் வரிசை பலமானது இப்னு கஸீர் ரஹ் அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அது பின்வரும் காரணங்களால் தவறானதாகும். 

முதலாவது 
இப்னு கஸீர் ரஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ள அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஜாலித் இப்னு ஸஈத் எனும் அறிவிப்பாளர் பலவீனமானவர்.

இரண்டாவது 
இந்த சம்பவத்தை அறிவிக்கும் ஷஃபி என்பவருக்கும் உமர் ரழி அவர்களுக்கும் இடையில் தொடர்பின்மை. உமர் ரழி அவர்கள் மரணிக்கும் போது ஷஃபிக்கு வெறும் 3 வயது மாத்திரமே. 

இருவருக்கும் இடையில் மஸ்ரூக் என்ற அறிவிப்பாளர் இடம்பெறும் அறிவிப்பும் பலவீனமானது. எனவேதான் இச்சம்பவத்தை அறிவித்த இமாம் பைஹகீ அவர்கள் கூட இது தொடர்பறுந்த அறிவிப்பாளர் வரிசை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். 

முஸன்னப் அப்துர்ரஸ்ஸாகில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பிலும் பல்வேறு வடுக்கள் காணப்படுகின்றன. எனவே தான் வெவ்வேறு அறிவிப்புக்கள் ஒன்றையொன்று பலப்படுத்த முடியாதளவு பலவீனமான தகவலாக ஆய்வாளர்களால் இச்சம்பவம் கருதப்படுகின்றது.

மூன்றாவது 
இச்சம்பவம் இடம்பெறும் ஏனைய ஆதாரபூர்வமான அறிவிப்புக்களில் எதிலும் இவ்வாறு ஒரு பெண்மணி ஆட்சேபனை செய்ததாக இடம்பெறவில்லை. 

நான்காவது
அதிகமான மஹ்ர் தொகை பெறுவது சிறந்ததல்ல என்ற உமர் ரழி அவர்களின் விருப்பம் சுன்னாவுக்கு உடன்பாடானதே அன்றி முரணாணதல்ல. இப்னுஹிப்பானில் இடம் பெறும் ஒரு ஹதீஸில் திருமணத்தில் சிறந்தது இலகுவான திருமணம் என்பதாகவும் ஹாகிம் மற்றும் பைஹகியில் இடம்பெறும் அறிவிப்பில் திருமணத்தில் சிறந்தது குறைவான மஹரைக்கொண்ட திருமணம் எனவும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

நபியவர்கள் 500 திர்ஹம்களை விட அதிகமாக வழங்கவுமில்லை. தனது மகள்மாருக்காக 400 திர்ஹம்களை விட அதிகமாக பெறவுமில்லை என்பதை வைத்தே உமர் ரழி அவர்கள் இந்த வழிகாட்டலை வழங்கினார்கள். 

ஐந்தாவது 
உமர் ரழி அவர்களின் வழிகாட்டலில் ஏதாவது தவறு இருந்திருந்தால் மஸ்ஜிதுந் நபவியில் குழுமியிருந்த அனைத்து நபித்தோழர்களும் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை. 

ஆறாவது 
நீங்கள் ஒரு குவியலை வழங்கியிருந்தாலும் அதிலிருந்து எதனையும் மீளப்பெறவேண்டாம் என்ற வசனத்தில் உமர் ரழி அவர்களின் வழிகாட்டலைத் தவறென நிரூபிக்கும் ஆதாரம் எதுவும் இல்லை. குறித்த வசனம் பெண்களுக்கு வழங்கிய மஹர் தொகை எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் விவாகரத்தின் போது அதனைத் திரும்பப் பெறக்கூடாது என்ற சட்டம் மாத்திரமே கூறப்படுகின்றது. மாறாக மஹர் தொகையை அதிகமாக கொடுங்கள் எனக் கூறப்படவில்லை. 

ஏழாவது 
நமது நாடுகளில் சீதனப் பிரச்சினை இருப்பதனால் பெரிய தொகை மஹர் பெறுவது ஒரு பிரச்சினையாக விளங்குவதில்லை. அரபு ஆபிரிக்க நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகும். அந்தச் சூழலில் வாழ்வோரினால் உமர் ரழி அவர்களின் இந்த வழிகாட்டலில் உள்ள நியாயத்தை இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும். நமது நாடுகளில் சீதனப் பிரச்சினையால் திருமணம் செய்ய முடியாமல் பெண்கள் சிரமப்படுவதை விட பன்மடங்கு சிரமத்தை அங்குள்ள வாலிபர்கள் எதிர்நோக்குகின்றனர். வாலிபர்களுக்கு திருமணம் செய்யவே இங்கு பல தொண்டு நிறுவனங்கள் உண்டு. 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
أحدث أقدم