ஒரு முஸ்லிம் இவ்வுலகில் வாழும் போது ஒன்று தனக்கு நலம் நாடுபவனாக இருக்க வேண்டும்
மற்றொன்று பிறருக்கு நலம் நாடுபவனாக இருக்க வேண்டும்
என்றைக்கும் மற்றவர்களுக்கு தீங்கு தருபவனாக,தொல்லை தருபவனாக இருக்க மாட்டான் அவ்வாறு இருக்கவும் கூடாது.
அப்படி இருந்தால் அவன் பரிபூரணமாக முஸ்லிமாக கருதப்படமாட்டான்.
அவன் எந்த காரியத்தை செய்தாலும் அதில் அவனுக்கு பலன் இருக்கும் அல்லது மற்றவர்களுக்கு பலன் இருக்கும்.
தன் நாவாலும் கரத்தாலும் பிறருக்கு தீங்கு தராதவனே உண்மையான முஸ்லிம்.
மக்களின் உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தருபவனே உண்மையான முஸ்லிம்.
தானும் நன்றாகஇருக்கவேண்டும் தன்னைச் சார்ந்து வாழ்பவர்களும் நன்றாக இருக்கவேண்டும் எனஎண்ணுபவனே உண்மையான முஸ்லிம்.
பாதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்துபவனே உண்மையான முஸ்லிம்.
மூன்று நபர்கள் இருந்தால் ஒருவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் அது மூன்றாம் நபருக்கு மன வருத்தத்தை தரும் என்றார்கள் நபியவர்கள்.
பிற சமூக மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்பவனே உண்மையான முஸ்லிம்
மேற்கூறப்பட்ட நபிமொழிகளைக் கருத்தில் கொண்டு தான் ஒரு இறைநம்பிக்கையாளன் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும்.
அந்த வகையில் தனக்கும் பிறருக்கும் எத்தகைய நன்மையும் தராத ஒன்று தான் பட்டாசு வெடிப்பது.
அதே நேரத்தில் அது அவனுக்கும் தீமை சமூகத்திற்கும் தீமை.
பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1)தான் சிரமப்பட்டு,உழைத்துச் சேர்த்த பொருளாதாரத்தை கரியாக்கி, வீணடிக்கிறான்.
மறுமையில் பொருளாதாரத்தை எவ்வழியில் செலவழித்தாய் என்கிற கேள்விக்கு அஞ்சிக் கொள்ளட்டும்
2) ஆரோக்கிய கேட்டை விளைவிக்கிறான்.
பட்டாசில் பயன் படுத்தப்படும் வேதியியல் பொருட்களால் சுற்றுச் சூழல் மற்றும் காற்று மாசுபடுகிறது. இதனால் மனித உடல்உறுப்புக்கள் குறிப்பாக சுவாசக் கோளாறு போன்ற பாதிப்புகளும் சில நேரங்களில் உடல் உறுப்புகளில் காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதற்கு யார் பொறுப்பு
3) மனிதன் வாழ்வதற்கு மட்டுமல்ல இப்பூமி.
ஏனைய ஜீவராசிகளின் புகழிடமாகவும் பூமி விளங்குகிறது.
அத்தகைய ஜீவராசிகளுக்கு கேடு ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஒரு சில கிராமங்களில் பல ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதில்லை .
காரணம் பட்டாசு வெடிப்பதினால் பறவைகள் மற்றும் இதர ஜீவராசிகளுக்கு தொந்தரவாகவும் அவைகளின் வாழ்வாதாரம் கெடுகிறது என்றும் சொல்கிறார்கள்.
பூனைக்கு சாப்பாடு போடாமல் கட்டி வைத்த ஒரு பெண் நரகம் சென்றாள்
தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டிய ஒரு தீய குணம் பெண் சொர்க்கம் சென்றாள் என்கிறது இஸ்லாம்.
எனவே எல்லோருக்கும் நன்மை பயக்கும் முஸ்லிமாகவும் யாருக்கும் தீமை நாடாத முஸ்லிமாகவும் வாழ்வோம்.
அபூ அதீப் ஃபிர்தௌஸி