உபரியான நோன்புகள் அட்டவணை



உபரியான நோன்புகள் அட்டவணை

1 ஷவ்வால் நோன்பு
2 அரஃபா நோன்பு
3 முஹர்ரம் மாத நோன்பு
4 ஷஃபான் மாத நோன்பு
5 ரஜப் மாத நோன்பு
6 மாதத்தில் மூன்று நோன்புகள்
7 தாவூத்(அலை) அவர்களின் நோன்பு
8 வாலிபர் திருமணம் முடிப்பதற்கு முன்
9 அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்
10 வெள்ளிக்கிழமை
11 சனிக்கிழமை
12 அரஃபாவில் இருக்கும் ஹாஜிகள்
13 இருபெருநாட்கள்
14 குர்பானி பெருநாளுக்கு பின்தீயமூன்று நோன்புகள்
15 தொடர் நோன்பு கூடாது
16 இஸ்லாத்தின் கடமையை வரம்பை தவறியவர்கள் நோன்பு நோற்பது


உபரியான நோன்புகள்

உபரியான வணக்கங்களில் தொழுகைக்கு பிறகு நோன்பை இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது. நபிகளார் முஹம்மது(ஸல்) அவர்கள் உபரியான நோன்புகளை பன்னிரெண்டு மாதங்களில் எந்ததந்த மாதங்களில் எத்தனை நோன்புகள், அதை எந்த நாட்களில் நோற்றால் மேலானது என்பதை பட்டியலிட்டு விவரித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் உபரியான நோன்புகளை அறிமுகப்படுத்தி அதை செய்தும் காட்டியுள்ளார்கள். குறிப்பாக உபரியான நோன்புகளை அறிமுகப்படுத்தும்போது அதனுடைய சிறப்பியலையும் வழங்கியுள்ளார்கள்.


1. ஷவ்வால் மாத நோன்பு

யார் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை தொடர்ந்து வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப்(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றவர்கள் அடுத்து வரக்கூடிய ஷவ்வால் மாத ஆரம்பத்தில் ஆறு நோன்புகளை வைக்க முயலவேண்டும், இந்த ஆறு நோன்புகளை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலும் முதியோர்கள், தாய்மார்கள் தான் நோற்பதை பார்க்கிறோம். இளைஞர்கள், நடுவயது வர்கத்தினர் இதைவிட்டும் பாராமுகமாகவே இருக்கின்றனர். எனவே அவர்களும் ஆறு நோன்பின் மாண்பை அறிந்த பிறகு நோன்பை நோன்பு முயலவேண்டும்.


2. அரஃபா நாள் நோன்பு

தில்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும். அதாவது ஹஜ்யாத்திரிகள் ஹஜ்ம்ரியைகளை முடித்துவிட்டு அரஃபா மைதானத்தில் கூடும் நாளாகும், இந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ''அது கடந்தவருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

அரஃபா நோன்பை ஹஜ் செய்யாதவர்கள் மட்டும் தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்பதை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழும்பியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயீ

நபி(ஸல்) அவர்கள் தில்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹ்மத்

அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்கு மாறாக முஸ்லிம்களில் சிலர் தில்ஹஜ் ஆரம்ப பத்து நாட்கள் முழுவதும் நோன்பு நோற்கிறார்கள் காரணம் இந்நாட்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

அல்லாஹ்விடத்தில் தில்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களை விட வேறெந்த நாள்களும் இல்லை, அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் போரிடுவதை விடவா? என்று வினவ ஆம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விட என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லையெனில் அது மிகவும் சிறந்த செயலே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

இந்த பத்து நாட்களின் சிறப்பை கருதி நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள் இதை மறுக்கிறார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களை (இந்த) பத்து நாட்களில் நோன்பு நோற்றதாக அறவே பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

நபி(ஸல்) அவர்கள் தில்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதுப்பற்றி அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அறிவித்தாக செய்திகளில்லை. எனவே இந்த அரஃப நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது. மற்ற நாட்களை விட இந்த நாட்களில் அல்லாஹ்வை துதிபாடுவதில் முயற்சிக்கவேண்டும்.


3. முஹர்ரம் மாத நோன்பு

முஹர்ரம் மாதத்தில் ஆஷீரா நாளில் கொடியவன் ஃபிர்அவனை விட்டும் மூஸா(அலை) அவர்களை காப்பாற்றியதற்காக நோன்பு நோற்கப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது (முஹர்ரம் மாதம்) ஆஷீராநாளில் யூதர்கள் நோன்பிருக்க கண்டார்கள். நீங்கள் நோன்பிருக்கின்ற நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வினவிய போது, அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா(அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா(அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விட தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

ரமளானிற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். கடமையான தொழுகைக்கு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ

நபி(ஸல்) அவர்களிடம் ஆஷுரா நாளின் நோன்பை பற்றி வினவப்பட்டதற்கு அது கடந்த வருடத்தின் பாவங்களை போக்கிவிடும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக அஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம்

முஹர்ரம் மாதத்தில் ஒன்பதாம், பத்தாம் நாள் நோன்பு நோற்கலாம் முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்க விரும்புவோர் ஒருநாள் நோற்று விட்டு மற்றொரு நாளை புறக்கணிக்க கூடாது. இரண்டு நாள்களும் நோன்பு நோற்க வேண்டும். ஏனெனில் ஒன்பதாம் நாள் நோற்பதற்குண்டான காரணம் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றமாக இருக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


4. ஷஃபான் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள், மேலும் (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஅஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றத்தை நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. மேலும் உங்களால் இயன்றளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் நமைகளை வழங்குவதை நிறுத்தமாட்டான் என்று கூறுவார்கள். மேலும் தொடர்ந்து தொழும் தொழுகையே நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதை தொடர்ந்து தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத்

மேற்கண்ட இரு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிகமான (உபரியான) நோன்பு நோற்க கூடியவர்களாக பார்த்ததில்லையே! என்று கேட்டேன் அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த மாதம் ரஜம் மற்றும் ரமளான் மாதத்திற்கு மத்தியில் உள்ளது. இந்த மாதத்தின் மம்மையை பற்றி மக்கள் பாராமுகமாகவே உள்ளனர். இதில் தான் நற்செயல்கள் அனைத்தும் இறைவனின் பால் உயர்த்தபடுகின்றன. எனவே நான் நோன்பாளியாகவே இருக்கும் நிலையில் என்னுடைய நற்செயல்கள் உயர்த்தபடவேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். நூல்: நஸயீ

முப்பது நாளும் நோன்பு நோற்கக் கூடிய கண்ணியமிக்க மாதம் தான் ரமலான், இந்த மாதத்திற்கு முந்திய மாதம் தான் ஷஅபான் மற்ற மாதங்களில் சாதாரணமாக நோன்பு நோற்பதை போல் நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் சற்று அதிகமாகவே நோற்றுள்ளார்கள், காரணத்தை கூறும்பொழுது அம்மாதத்தில் தான் நற்காரியங்கள் இறைவன் பால் உயர்த்தி காட்டப்படுகின்றன என்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் ஷஅபான் நோன்பை பற்றி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் இரண்டுவிதமான அறிவிப்புகள் ஒன்று ஷஅபான் மாதத்தில் அதிகமான நோன்புகள் நோற்றார்கள் எனவும் இரண்டு, ஷஅபான் மாதத்தில் குறைவாகவே நோன்பு நோற்றார்கள் எனவும் புகாரி, முஸ்லிம் போன்ற ம்ரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. இதே செய்தியை உஸாமாபின் ஜைத்(ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள், அன்னை உம்முஸலமா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பார்கள். அவைகள் ஷஅபான், ரமளான் என்று அறிவித்துள்ளார்கள்.

அதேபோல நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்க ஷஅபான் மாதம் மற்ற மாதங்களை மிகவும் விருப்பமானதாக இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் அனைத்தும் ஸஹீஹான ஹதீஸ்களாக இருப்பதால் இவைகளைத்தும் இணைத்துமே நாம் முடிவெடுக்க வேண்டும், மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் முடிந்தளவு (உபரியான) நோன்புகளை) அதிகமாகவே நோற்கலாம் என்பது தெளிவாகிறது. இதில் கருத்து வேறுபாடு இல்லை.


ரமளானில் விடப்பட்ட நோன்பை....!

மேலும் ரமலான் மாதத்தில் பயணம் மற்று நோய், போன்ற காரணங்களினால் நோன்பு விடுபடுமாயின், அதை ஷஅ போன்ற காரணங்களினால் நோன்பு விடுபடுமாயின அதை ஷஅபான், மாதத்தில் நிறைவேற்றலாம். இதுப்பற்றி அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும் அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார்கள். நூல்: புகாரி

ரமலானின் நோன்பை மற்ற மாதங்களில் வைக்க முடியவில்லையென்றால் ஷஅபானின் அதை பூர்த்தி செய்யலாம்.


5. ரஜப் மாத நோன்பு

நாங்கள் ரஜப் மாதத்தில் இருந்தபோது ரஜப்(மாத) நோன்பைப் பற்றி ஸயீத் பின் ஜுபைர்(ரலி) அவர்களிடம் வினவினேன். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நாங்கள் என்ன நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்களா என்று கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள், அதேப்போல் என்ன நபி(ஸல்) அவர்கள் (இனி) நோன்பு நோற்கமாட்டார்களா என்று கூறுமளவுக்கு விட்டுவிடுவார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்:உஸ்மான் பின் ஹகீம்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

ஷவ்வால், தில்ஹஜ், முஹர்ரம், ஷஅபான், போன்ற மாதங்களின் நோன்பை பற்றி சிறப்பித்து பெருமானார்(ஸல்) அவர்கள் ரஜப்மாத நோன்பை பற்றி குறிப்பிடவில்லை. நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் மற்ற மாதங்களைப் போன்று இந்த நோன்பு நோற்பார்கள் விட்டு விடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே மற்ற மாதங்களில் எவ்வாறு மூன்று நோன்பு நோற்கிறோமே அவ்வாறே இந்த மாதத்திலும் நோன்பு நோற்க வேண்டும் என்றாலும் தில்க அதா, திஹ்ஜ் முஹர்ரம், ரஜம், ஆகிய புனித மிக்க நான்கு மாதங்களாகும். இந்த மாதங்களில் நோன்பு நோற்குமாறு ஒரு நபித்தோழருக்கு நபி(ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

முஜிபதுல் பாஹிலியா என்ற நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தபோது அவருடைய (முந்திய) தோற்றம் மாறியிருந்தது. நீர் கம்பீரான தோற்றம் உடையவராக இருந்தீரே உம்முடைய தோற்றம் மாறுவதின் காரணமென்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே நான் உங்களை சந்தித்த பிறகிலிருந்து இரவில் மட்டும் தான் உணவு உண்பேன் என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நீர் உம்மையே வருத்திக் கொண்டிர் எனவே ரமலானில் நோன்பு நோற்பீராக! மேலும் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பீராக. அதற்கு அந்நபி தோழர் அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஆற்றல் இருக்கிறது. இன்னும் (எனக்கு நோன்பு நோற்க) அதிகமாக்குவீராக! என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று குறிப்பிட்டுள்ளார்கள். அந்நபித்தோழர் இன்னும் அதிகப்படுத்துவீராக என்று வினவினார். நபி(ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பீராக என்று குறிப்பிட்டுள்ளார்கள். அந்நபித்தோழர் மீண்டும் அதிகப்படுத்துவீராக என்று வினவினார். நபி(ஸல்) அவர்கள் வருடத்தில் புனித மிக்க மாதங்களில் (தில்கஅதா, தில்ஹஜ், முஹர்ரம், ரஜப்) நோன்பு நோற்பீராக, (மற்ற மாதங்களில்) விட்டுவீடுவிராக என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு அந்நபித்தோழரை அனுப்பி வைத்தார்கள். நூல்: அபூதாவூத்

ரஜப்மாதத்தில் நோன்பு நோற்பதைப்பற்றி இரண்டாவது ஹதீஸ் விளக்கமாக அமைந்துள்ளது. புனித மிக்க மாதங்களில் ரஜப்வும் சேருவதனால் அதற்கு கண்ணியம் சேர்கிறது.


6. மாதத்தில் மூன்று நோன்புகள்

இதுவரை ஐந்து மாதங்களில் நோன்பு நோற்கவேண்டிய அவசியத்தைப்பற்றி அதனுடைய மாண்பை நபி(ஸல்) அவர்கள் கூறியதை அறிந்தோம். இந்த நோன்பையும் நோற்று இனிகாலமெல்லாம் நோன்பு நோற்கவேண்டும். ஸஹாபாக்களில் சிலர் லட்சியம் கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களின் காதுக்கு எட்டிய போது அவ்வாறு காலமெல்லாம் நோன்பு நோற்று உடம்பை வருத்திக் கொள்ள கூடாது என்று கண்டித்து இத்தகையோறுக்கு மாதத்தில் மூன்று நாள் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ருபின் ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் வாழுமெல்லாம் இரவெல்லாம் விழித்து தொழுவேன் என்பதையும், பகலெல்லாம் நோன்பு நோற்பேன் என்று முடிவெடுத்ததைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி என்னை அழைத்து விசாரித்தார்கள் அதற்கு நான்தான் கூறினேன் அல்லாஹ்வின தூதரே! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் அதற்கு சக்திபெற மாட்டீர், நோன்பு நோறும், விட்டுவிடும், இரவில் தூங்குவீராக (இரவின் பிற்பகுதியில்) எழுந்து தொழுவீராக! மேலும் மாதத்தில் மூன்று நாட்கள் (மட்டும்) நோன்பு நோற்பீராக! நன்மைகள் இறைவனிடத்தில் பத்துமடங்கு இரட்டிப்பாக்கப்படும். மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்கு சமமாகும் என்று கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், புகாரி, நஸயீ

நான் வாழும் காலமெல்லாம் மூன்று விஷயத்தை பேணுமாறு எனது சிநேம்தர்(ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள்.

அவையாவன மாதத்தில் மூன்று நோன்புகள், லுஹர் தொழுகை தூங்குவதற்கு முன் வித்ருத்தொழுகை என்று அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

நபி(ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகள் நோற்றதாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதத்தில் மூன்றுநாள் நோன்புகளை எப்போது நோற்கலாம் என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, ஹிப்னுஹிப்பான்

நபி(ஸல்) அவர்கள் பயணித்திலோ அல்லது ஊரிலோ இருந்தாலும் அய்யாமுல்பைள்(முழுநிலா பிரகாசிக்கும் 13, 14, 15 ஆகிய மூன்று இரவுகள்)யில் நோன்பை விட மாட்டார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்கள்: நஸயீ

ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகளை நோற்க விரும்புவோர் பெருமானார்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட பதிமூன்று, பதினான்கு பதினைந்து ஆகிய அய்யாமுல்பைன்யில் வைக்கலாம்.

இந்த மூன்று நோன்புகளின் சிறப்பு காலமெல்லாம் நோன்பு நோற்றதற்கு சமம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்கும் வேறுமுறையும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது வாரத்தில் குறிப்பிட்ட கிழமைகளில் நோன்பு நோற்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவாரர் திங்கட்கிழமை, அடுத்தவரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர்(ரலி) நூல்: நஸயீ

மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு மூன்று நாட்கள் நோன்புகளை முதல்வாரத்தில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, அடுத்துவாரத்தில் திங்கட்கிழமையும் நோற்பார்கள். நூல்: நஸயீ

மேற்கண்ட இரு ஹதீஸ்களின் அடிப்படையில் திங்கட்கிழமை வியாழக்கிழமைகளில் மாதத்தின் மூன்று நோன்புகளை நோற்கலாம். மற்ற கிழமைகைள விட்டுவிட்டு இந்த இரணடு கிழமைகளில் மட்டும் ஏன்நோன்பு நோற்கவேண்டும்? என்று வினா எழுப்பலாம் இவ்விருகிழமைகளைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பை பற்றி வினவப்பட்டதற்கு அந்நாளில் தான் நான் பிறந்தேன். அந்நாளில் தான் நான் தூதராக்கப்பட்டேன் (அல்லது) அந்நாளில் தான் எனக்கு வஹீ இறக்கியருளப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம்

திங்கட்கிழமை, வியாழக்கிழமை (விசுவாசிகளின்) நற்செயல்கள் பற்றி (இறைவனிடம்) எடுத்துகாட்டப்படுகின்றன, நான் நோன்பாளியாகயிருக்கும் நிலையில் என்னுடைய நற்செயல்கள் (இறைவனிடம்) எடுத்து காட்டப்படவேண்டுமென்று விரும்புகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி

மாதத்தின் மூன்று நோன்புகளை இருவழிமுறைகளில் ஒன்றை பின்பற்றி அல்லது இரண்டில் எது சுலபமாக தெரிகிறதோ அதை கையாண்டு (உபரியான) நோன்புகளை நோற்க முயற்சிப்போமாக.


7. தாவூத்(அலை) அவர்களின் நோன்பு

மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பீராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது! அந்நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! இதைவிட அதிகமான நோன்புகளை நோற்பதற்கு நான் சக்தியுள்ளவன் என்று கூற நபி(ஸல்) அவர்கள் ''ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடும்.

இது தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும், மேலும் நடுநிலையான நோன்பாகும் என்று குறிப்பிட்டார்கள். அந்நபித்தோழர் மீண்டும் அல்லாஹ்வின் தூதரே! இதைவிட அதிகமாக நோன்புகளை நோற்பதற்கு சக்திபெற்றுள்ளேன் என்று கூற நபி(ஸல்) அவர்கள் இதை விட மேன்மையான நோன்பு வேறெதும் கிடையாது என்று கூறினார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ருபின் ஆஸ்(ரலி) நூல்கள்: முஸ்லிம், புகாரி, திர்மிதி, அபூதாவூத்

தாவூத்(அலை) அவர்களின் நோன்பு ஒருநாள் நோன்பு நோற்பது, ஒருநாள் விட்டு விடுவது, அதாவது வருடத்தில் அரைவருட நோன்பாகும்.

தாவூத்(அலை) அவர்களின் நோன்பு பின் மாண்பையும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்விடத்தில் நோன்பில் மிகவிருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். மேலும அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும், தாவூத்(அலை) அவர்கள் இரவில் அரைப்பகுதி தூங்குவார்கள், இரவின் பிற்பகுதியில் எழுந்து தொழுவார்கள், பிறகு தூங்குவார்கள், அவ்வாறே ஒருநாள் நோன்பு நோற்பார்கள், ஒரு நாள் விட்டுவிடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

உபரியான வணக்கங்களில் உள்ளதுதான் நோன்பு. இந்த உபரியான நோன்பை எந்த மாதங்களில், எத்தனை நாட்கள், கிழமைகள் நோன்பு நோற்கலாம் என்பதை இதுவரை பார்த்தோம். உபரியான நோன்பிற்கு எல்லை தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும், அதற்குமேல் உபரியான நோன்பதே கிடையாது என்று குறிப்பிட்ட பெருமானார்(ஸல்) அவர்கள் காலமெல்லாம் நோன்பு நோற்பவர்களை கண்டித்துள்ளார்கள்.

காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரைப்போலாகமாட்டார் என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம்

உபரியான நோன்பை நோற்பவர் மேற்கண்ட பெருமானார்(ஸல்) அவர்களின் உபதேசத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.


8. வாலிபர் திருமணம் முடிப்பதற்கு முன்

ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு கட்டம் வருகிறது. அதில் அவன் ஆற்றலுள்ளவனாக நன்மையும், தீமையும் செய்வதற்குரிய நிலை தான் இளைய பருவம், இந்த பலமுள்ள பருவத்தில் இளைஞர்கள் வழிகெட்டு விடக்கூடாது என்பதற்காக பெருமானார்(ஸல்) அவர்கள் இளைமை பருவம் எய்தவுடன் திருமணம் முடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு யாரெனும் சக்திபெறவில்லையெனில் (திருமணம் முடிக்கும்வரை) நோன்பு நோற்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இளைய சமுதாயமே யார் உங்களில் திருமணத்திற்கு சக்தி பெற்றிருக்கிறார்களோ அவர் (உடன்) திருமணம் முடித்து கொள்ளட்டும், ஏனெனில் அது பார்வையை தாழ்த்தும் மரம் உருப்பை பாதுகாக்கும், எவர் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

''இளைய சமுதாயமே யார் உங்களில் திருமணத்திற்கு சக்தி பெற்றிருக்கிறார்களோ அவர் (உடன்) திருமணம் முடித்து கொள்ளட்டும், ஏனெனில் அது பார்வையை தாழ்த்தும் மரம் உருப்பை பாதுகாக்கும், எவர் சக்திபெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும், அது அவருக்கு (தீமையை விட்டும் பாதுகாக்கும்) திரையாக இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

வாலிபர்கள் இன்று சீர்கேடுகளில் சிக்கி தவிப்பது திருமணம் முடிக்காததினால் தான் எனவே விரைந்து திருமணம் முடிக்கவேண்டும்; அதற்கு சக்திபெறாதவர்கள் நோன்பு நோற்கட்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.


9. அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்

அல்லாஹ்வின பாதையில் நன்மைக்காக போராடுபவர் ஏகத்துவத்தை நிலைநாட்டவும், ஷரீக் எனும் இணைவைத்தலை தீமைகளை, ஒழிக்க முயற்சிப்பவர், நோன்பு நோற்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

''யார் அல்லாஹ்வின் பாதையில் (போராடும் நாளில்) நோன்பு நோற்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை நரகநெருப்பை விட்டும் எழுப்ப ஆண்டுகள் பல தூரமாக்கி விடுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்தில் குத்ரீ(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நஸயி, மற்றும் தப்ரானி ஆகிய கிரந்தங்களில் நூறாண்டுகள் நரக நெருப்பை விட்டும் தூரமாக்கப்படுகின்றனர் என்று ஹதீஸ் பதிவாம்யுள்ளன.

உபரியான நோன்புகளை எப்பொழுதெல்லாம் நோற்கலாம் என்று பட்டியலிட்ட இஸ்லாம். சில குறிப்பிட்ட கிழமைகள், நாட்கள், உபரியான நோன்புகளை நோற்பதை தவிர்க்குமாறு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


10. வெள்ளிக்கிழமை

நான் தோழர் ஜாபிர்(ரலி) அவர்களிடம் ஜும்ஆ நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பவர்:முஹம்மதுபின் உப்பாத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் அன்னை ஜுவைரியா(ரலி) அவர்களிடம் ஜும்ஆ நாளில் சென்றபோது அவர் நோன்பு நோற்றுயிருந்தார். நபி(ஸல்) அவர்கள் நீ நேற்று நோன்பு வைப்பாயா? என்ற வினவ இல்லை என்றார் அப்படியென்றால் ''இன்றைய நாளின் நோன்பை விட்டுவிடு'' என்று கூறினார்கள். நூல்கள்: புகாரி, அபூதாவூத்

இஸ்லாத்தின் அடிப்படையில் வாரத்தில் புனிதநாள் ஜும்ஆ தினமாகும். எனவே அந்நாளில் நோன்பு நோற்ககூடாது, ஏற்கனவே வியாழக்கிழமை முதல் வைத்தால் வெள்ளிக்கிழமையும் தொடராக நோற்கலாம் மாறாக வெள்ளிக்கிழமை மட்டும் என்று நோற்க கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் வரையறுத்துள்ளார்கள். ''உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கும் முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி ஜும்ஆவுக்கு மட்டும் நோன்பை குறிப்பாகக் வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


11. சனிக்கிழமை

யூதர்கள் சனிக்கிழமை புனிதநாளாக கருதுவதனால் அந்நாளில் மட்டும் என்று நோன்பு நோற்க கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்கவேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத்தொலி அல்லது மரக்குச்சியைத் தவிரவேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்

ஏற்கனவே வியாழன், அல்லது வெள்ளிக்கிழமை நோன்பு நோற்று சனிக்கிழமை நோற்றால் பரவாயில்லை மாறாக சனிக்கிழமை மட்டும் என்று குறிப்பாக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் சனி, ஞாயிறு நோன்பு நோற்றதாக இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் சனி, ஞாயிறு நோன்பு நோற்க கூடியவர்களாக இருந்தனர். இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டு நாட்களும் இணைவைப்பாளர்களுடைய பெருநாட்களாகும் நான் அவர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா(ரலி) நூல்கள்: நஸயீ, பைஹம், அஹ்மத்

சனிக்கிழமை நோன்பு நோற்பதை தடுத்திருக்க நபி(ஸல்) அவர்களே நோற்றுயிருக்கிறார்களே என்று கருதலாம் ஆனால் ஆரம்பத்தில் அந்த எண்ணம் இருந்தாலும் பிறகு மாற்றிக் கொண்டார்கள் என்றே கருத்தில் கொள்ளவேண்டும், மேலும் சனி, என்று மட்டும் இல்லாமல் சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களிலும் நோன்பு நோற்று இருக்கிறார்கள். இதே செய்தியை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும் அறிவித் ஹதீஸ் திர்மிதியில் பதிவாம்யுள்ளது.


12. அரஃபாவில் இருக்கும் ஹாஜிகள்

அரஃபாவில் குழும்பியிருப்போர் (ஹாஜிகள்) அரஃப நாளில் நோன்பு நோற்க கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா


13. இருபெருநாட்கள்

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதை தடைவிதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள் அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


14. குர்பானி பெருநாளுக்கு பிந்திய மூன்று நாட்கள்

அய்யாமுக்தஷ்ரீக் (குர்பானி பெருநாளுக்கு பிந்திய மூன்றுநாட்கள் உண்பதற்கும், குடிப்பதற்கும் உள்ள நாட்களாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நுபைஷதல்ஹுதல் நூல்: முஸ்லிம்

யாருக்கு குர்பானி கொடுக்க பலிப்பிராணி கிடைக்கவில்லையோ அவர்களை தவிர்த்து மற்றவர்கள் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கவில்லை, அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி


15. தொடர் நோன்பு கூடாது

தொடர் நோன்பு என்பது தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள், பருகாமல் உண்ணாமல் நோன்பு நோற்பதாகும். இதை இஸ்லாம் தடை விதித்துள்ளது.

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக

நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உண்ணாமல் பருகாமல் நோற்கும் நோன்புகள் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரித்தானவையாகும், இதனால் அல்லாஹ் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு விசேஷமாக உணவளிக்கிறான், இது மற்றவர்களுக்கு கிடையாது. இதனால் தொடர் நோன்புகள் நோற்கவேண்டாம் என்று தடை விதித்தார் மற்றும் கண்டித்தார்கள்.

''தொடர் நோன்பு நோற்பதை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் இரணடு முறை கூறினார்கள். மேலும் நீங்கள் நற்செயல்களை செய்வதில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று விடையளித்தார்கள்'' அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

தொடர் நோன்புகள் நோற்போர் ஸஹர் (அதிகாலை) வரை நோற்கலாம் என்றும் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். ''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள் அப்படி உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்பதாக இருந்தால் ஸஹர் வரை நோற்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

தொடர் நோன்புகள் நோற்காமல் பெருமானார்(ஸல்) அவர்கள் காட்டி தந்த அடிப்படையில் நடந்து உபரியான நோன்புகளை நோற்று இறைவனின் அருளை பெறுவோமாக!


16. இஸ்லாத்தின் கடமையை வரம்பை தவறியவர்கள் நோன்பு நோற்பது

கடமையான நோன்பு நோற்றல் பகல் நேரத்தில் மனைவியுடன் வீடு கூடக்கூடாது என்று இஸ்லாம் தடைவிதித்துள்ளது. மறதியாகவோ அல்லது இளமை ஊந்துதலின் காரணமாக ஒருவர் மனைவியுடன் வீடு கூடிவிட்டால் அவர் செய்த குற்றத்திற்கு பரிகாரம் காணுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அல்லாஹ்வின் தூதரே? நான் அழித்துவிட்டேன்!'' என்றார் நபி(ஸல்) அவர்கள் ''உமக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள் ''நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன் என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ''விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை இருக்கிறதா? என்று கேட்டார்கள் அவர் ''இல்லை'' என்றார் ''தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ''அரக்'' அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே?'' என்றார்கள். ''நான் தான்'' என்று அவர் கூறினார். ''இதைக் கொண்டு தர்மம் செய்வீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நோன்பு நோற்று இருக்கும் சமயத்தில் பகலில் வீடு கூடுவது குற்றமானது அதற்கு பரிகாரமாக மூன்று பரிகாரங்களில் ஒன்று இரண்டு மாதம் நோன்பு நோற்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.


ஹஜ்ஜின் போது ஏற்படும் குற்றங்களும் அதன் பரிகாரமும்

ஹஜ்ஜை நிறைவேற்றுவார். ஹஜ் கிரியைகளின் இடையிலேயே தலைமழித்துக் கொள்ள நேரிட்டால் அவர் அதற்கு (குற்றத்திற்கு) பரிகாரம் காணுமாறு நோற்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

''உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தாலோ அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன் பொடுகு அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் அணிந்த நிலையிலேயே அவர் தன் தலையை மழித்துக் கொள்ள நேரிட்டால் (அதற்குப் பரிகாரமாக) அவர் நோன்பு நோற்க வேண்டும் அல்லது தர்மம் செய்யவேண்டும் அல்லது குர்பானி கொடுக்கவேண்டும். (2:196)

நான் கஅபுபின் உஜ்ரா(ரலி) அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் வினவினேன் அதற்கு அவர்கள் ''என் விஷயமாகத்தான் இறங்கியது என்றாலும் அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். நபி(ஸல்) அவர்கள் ''உமக்கு இவ்வளவு அதிகமாக துன்பம் ஏற்பட்டிருக்கும் என்று நான் எண்ணவில்லை! உம்மிடம் ஒரு ஆடு இருக்கிறதா? என்று வினவினார்கள் நான் இல்லை என்றேன் நபி(ஸல்) அவர்கள் (தலையை மழித்துக் கொண்டு) மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் 'அரை ஸாவு' வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக என்று கூறினார் என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் மஃகல்(ரஹ்) நூல்: புகாரி

இஹ்ராம் அணிந்த துவக்கத்திலேயே நிர்பந்தத்தின் காரணமாக ஹஜ் செய்வோர் தலைமுடியை மழிக்க நேரிட்டால் அதற்கு பரிகாரமாக குர்பானி அடுத்து மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு கட்டளையிடுகிறது.


இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடுதல்

இஹ்ராம் அணிந்தவர் எப்பிராணியையும் வேட்டையாடுதல் கூடாது தவறுதலாக வேட்டையாடினால் அவர் அக்குற்றத்திற்கு பரிகாரம் காணுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது. இதைப் பற்றி வல்ல இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

''இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளை கொல்லாதீர்கள்! மேலும் உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணிகளை கொன்று விட்டால் அதற்கு பரிகாரமாக அவர் தான் கொன்ற பிராணிக்கு சமமான ஒரு பிராணியை கால்நடைகளிலிருந்து பலிகொடுக்க வேண்டும். உங்களில் நீதிமான்கள் இருவர் அதனைத் தீர்மானிக்க வேண்டும். அல்லது (அச்செயலுக்கு) குற்ற பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (அச்செயலுக்கு)குற்ற பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்கவேண்டும் அல்லது அதற்குச் சமமான அவர் நோன்பு நோற்க வேண்டும். (5:95,96)
இஹ்ராம் அணிந்தவர் தவறுதலாக வேட்டையாடிய குற்றத்திற்காக ஒரு பிராணியையோ அல்லது ஏழைகளுக்கு உணவளிப்பதோ அல்லது நோன்பு நோற்கவேண்டும் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான். குற்றத்திற்கு பரிகாரம் எத்தனை நோன்பு நோற்க வேண்டும் இங்கு குறிப்பிடவில்லை.


''ழிஹார் செய்தல்

ழிஹழர் என்றார் ஒருவர் தம் மனைவியை தாய் என்று கூறி வீடு கூடுதல் போன்றவற்றில் ஒதுக்கி விடுவதாகும் வல்ல அல்லாஹ் இதனை குற்றமாக அறிவிக்கிறான். இவ்வாறு ழிஹார் செய்தால் அவர் குற்றத்திற்கு பரிகாரம் காணுமாறு வல்ல அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மேலும் எவர் தம் மனைவியரைத்தாய் எனக் கூயி பின் (வருந்தி) தாம் கூறியதை விட்டு திரும்பி மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடிரனால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஒர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கிறான். ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ அவர் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் வேண்டும் (38:3,4)

மனைவியைத்தாய் எனக் கூறியவர் மீண்டும் இருவரும் கூடுவதற்கு முன் இரண்டு மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான். இவ்வாறு கூறியவர்களுக்கு மூன்று விதமான பரிகாரத்தை அறிமுகப்படுத்துகிறான். அதில் நோன்பை குறிப்பிடுவதிலிருந்து அதனுடைய மகத்துவம் புலப்படுகிறது.


சத்தியத்தை முறித்தல்

இன்ன இன்ன விஷயங்களை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தாலோ, அதற்காக அல்லாஹ்வின் மீது ஆணையிட்டாலோ அதனை கண்டிப்புடன் நிறைவேற்ற வேண்டும், சந்தர்ப்பச் சூழ்நிலையில் அதனை நிறைவேற்ற தவறினால் அதற்கு பரிகாரம் காணுமாறு வல்ல அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான் எனினும் (எதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான் (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்கு பரிகாரமாவது உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்கவேண்டும் அல்லது ஓர் அடிமை விடுதலை செய்ய வேண்டும் ஆனால் (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்துவிட்டால் அவற்றுக்குரிய பரிகாரம் இதுதான். (5:89)

சத்தியத்தை முறித்துவிட்டால் பத்து ஏழைகளுக்கு உணவளித்தல், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவித்தல் அல்லது ஓர்அடிமை விடுதலை செய்தல் வேண்டும் ஒருவர் இம்மூன்றிற்கும் சக்தி பெறாதவர்கள் அவர் மூன்று நாட்கள் நோற்க வேண்டும் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.


நேர்ச்சையை முறித்தல்

ஒருவர் எனக்கு இன்னனது நடந்துவிட்டால் வல்ல அல்லாஹ்வுக்காக இதை செய்வேன் என்று நேர்ச்சை செய்வதாகும். அவ்வாறு நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற இயலாதவர்கள் அதற்குப் பரிகாரம் காணுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சத்தியத்திற்குரிய பரிகாரமே
நேர்ச்சைக்குரிய பரிகாரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி) நூல்: முஸ்லிம்
Previous Post Next Post