பார்வையைத் தாழ்த்தலின் மற்றொரு பகுதி

“பார்வையைத் தாழ்த்துதல்” என்பது அல்குர்ஆன் விடுக்கும் ஒரு கட்டளை. ஆனால், இது நாம் நினைப்பது போல், அந்நியப் பெண்களை விட்டும் மாத்திரமல்ல. 

நிரகாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உலக அலங்காரங்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தவேண்டாமென நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் அல்குர்ஆனின் இரு இடங்களில் கட்டளையிட்டுள்ளான். 

அந்நியப் பெண்களை நோக்கி அடிக்கடி பார்வையைச் செலுத்துவது உள்ளத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைப் போன்ற அல்லது அதை விட அதிகமாக இப்பார்வை பாதிப்பை ஏற்படுத்தும். 

அல்குர்ஆன் கூறுவது போன்று, நிராகரிப்பாளர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்கரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நினைத்த விதத்தில் அதனை அனுபவிக்கின்றார்கள். ஆனால், ஒரு முஃமின் அவ்வாறு அனுபவிக்கமுடியாது. இவ்வுலக வாழ்க்கை பற்றிய அவனது பார்வை வேறுபட்டது. இவ்வுலகில் அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அம்சங்களும் வேறுபட்டவை. சில கட்டுப்பாடுகளோடே இங்கு அவன் வாழவேண்டியுள்ளது. 

இந்நிலையில், இன்றைய சமூக ஊடகங்கள் மேற்கூறியவற்றை அவனுக்கு மறக்கடிக்கச் செய்கின்றன. இவை இவ்வுலக அலங்காரங்களை அவன் கண்முன்னே கொண்டுவந்து அவனுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன. போதாக்குறைக்கு, அனுபவிப்பவர்களும் படம்பிடித்துக் காட்சிப்படுத்துகின்றார்கள். 

இவை அவனது உள்ளத்தை மாசுபடுத்துகின்றன. சாத்தியமே இல்லாத ஒரு வாழ்க்கை முறையை நோக்கி அவனைத் தூண்டுகின்றன. ஆடை, வீடு, கையடக்கத் தொலைபேசிகள், வாகனம் என்பவற்றைத் தேவைக்காக பயன்படுத்துதல் என்பதை மறந்து, அவற்றில் மிகப் புதிய,  விலையுயர்ந்ததை தன்னகப்படுத்திக்கொள்ளவும், அவற்றை வைத்துப் பெருமிதப் பட்டுக்கொள்ளவும் அதிக சிரமப்பட்டுக்கொள்கின்றான். விளைவாக, அவை அவனது உள்ளத்தில் மிதமிஞ்சிய உலக ஆசையை ஏற்படுத்தி, அதனை மாசுபடுத்துகின்றன. 

நிராகரிப்பாளர்களுக்கே இவ்வுலகு “ஆசைக்கேற்ப” வாழ்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முஃமினுக்கு சுவர்க்கமே ஆசைக்கேற்ப வாழ்வதற்கான இடம். அவனது பார்வையில் இவ்வுலக வாழ்க்கை என்பது, சுவர்க்க வாழ்க்கைக்கு தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்கான தற்காலிகமான இடம். இங்கு ஆசைக்கேற்ப வாழ்ந்து விட்டு மறுமை வாழ்க்கையைப் பாழாக்கிவிடுவது எவ்வளவு பெரிய மடமை. 

ஏனையோர் அனுபவிக்கும், இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களில் பார்வையைச் செலுத்துவது தன்னிடமிருக்கும் விலைமதிக்கமுடியாத பாக்கியங்களையெல்லாம் பெறுமதியற்றதாக்க் காட்டிவிடும். பிறகு ஏக்கம் மாத்திரமே எஞ்சியிருக்கும். 

எல்லாவிதமான அலங்காரங்களை விட்டும் பார்வையைத் தாழ்த்திக்கொள்வது நிம்மதியான வாழ்க்கைக்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று. 


Previous Post Next Post