இமாம் ஷாதிபி (ரஹ்) அவர்களின்
"பித்அத்" பற்றிய நிலைப்பாட்டை "அல்-இ'திஸாம்" எனும் பெறுமதியான நூலினூடாக புரிவதற்கு முயற்சி செய்தால் நிச்சயமாக பித்அத் தொடர்பான பூரணமான தெளிவு கிடைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
அந்தவகையில் நானும் இயன்றவரை
அதைப் பின்வருமாறு விளக்க முயற்சிக்கிறேன்.
முதலாவது: பித்அத்தின் துல்லியமான இஸ்லாமிய வரைவிலக்கணம்:
ஷாதிபி (ரஹ்) அவர்கள், பித்அத் (முன்னுதாரணம் இல்லாத புதுமை) என்பதற்கான பரந்த மொழியியல் வரையறையை ஒரு பெரும் பொருட்டாகக் கருதாமல் மொழியியல் ரீதியாக சில விளக்கங்களைச் சுட்டிக் காட்டி விட்டு பின்னர் அதை இஸ்லாமிய சட்டவழக்கு அடிப்படையில் கீழ்வருமாறு வரைவிலக்கணப் படுத்துகிறார்கள். "மார்க்க விஷயங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை; இது ஷரீஅத்தின் (சட்டத்தின்) வழிமுறைகளைப் போல் தோற்றமளிக்கும்; இவ்வழிமுறையில் நடப்பதன் மூலம் அல்லாஹ்வை வழிபடுவதில் மிகைப்பு (முபால்கா) காட்டுவதே நோக்கமாக இருக்கும்"
இந்த வரையறையானது, பித்அத் மார்க்க விடயத்தில் இருக்க வேண்டுமே தவிர உலகியல் பழக்கவழக்கங்களில் அல்ல, ஷரீஅத்தில் அதற்கு அடிப்படை எதுவும் இல்லாத ஒரு புதுமையாக இருக்க வேண்டும், அது வழிபாட்டு வழிமுறையாக நோக்கப்பட வேண்டும், மேலும் அது ஷரீஅத்தின் வழிமுறையைப் போல் தோற்றமளித்து அதன் இடத்தைப் பிடிக்கவோ அல்லது அதனுடன் போராட்டமோ செய்ய வேண்டும் என்பனவற்றை இவ்வரையறை கட்டாயப்படுத்துகிறது.
இரண்டாவது: பித்அத் ஐந்து வகைகளாக பிரியும் எனும் கருத்துக்கான அவர்களது நிலைப்பாடு
பித்அத்தை ஷரீஆ சட்ட வழக்கில் கட்டாயம் (வாஜிப்), பரிந்துரைக்கப்பட்டது (மந்தூப்), அனுமதிக்கப்பட்டது (முபாஹ்), வெறுக்கப்பட்டது (மக்ரூஹ்), தடைசெய்யப்பட்டது (ஹராம்) என ஐந்து வகைகளாகப் பிரிக்கும் கருத்தை ஷாதிபி (ரஹ்) அவர்கள் முற்றிலும் மறுத்து, அதன் அர்த்தத்தைத் தெளிவு படுத்துகிறார்கள். இந்தப் பிரிவு, இமாம் இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாம் (ரஹ்) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஷாதிபி (ரஹ்) அவர்கள், இந்தப் பிரிவினை இஸ்லாமிய சட்டத்தில் கண்டிக்கப்பட்ட (மத்மூம்) அர்த்தத்தில் உள்ள பித்அத்தின் உண்மையான பிரிவு அல்ல என்று தீர்மானிக்கிறார்கள். மாறாக, இது உண்மையில் "மஸ்லஹா முர்ஸலா" (மூல அடிப்படை வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத மற்றும் அவற்றிக்கு இணக்கமான அமைப்பில் காணப்படும் பொது நன்மை)களின் பிரிவினை ஆகும். "கட்டாய பித்அத்" என்று அழைக்கப்படும் விஷயங்கள் ( அறிவை எழுத்துருவில் கொண்டுவருதல்) அல்லது "பரிந்துரைக்கப்பட்ட பித்ஆத்" என்று அழைக்கப்படும் விஷயங்கள் (பாடசாலைகள் கட்டுதல்) ஆகியவை உண்மையில் மஸ்லஹா முர்ஸலாக்களாகும்.
இவை குர்ஆன், ஹதீஸ்களின் பொதுவான அறிவுறுத்தல்கள் மற்றும் இஸ்லாமியச் சட்டத்தின் மொத்த விதிகளின் கீழ் வரும். இவை கண்டிக்கப்படும் பித்ஆக்கள் அல்ல.
சில அறிஞர்கள் அவர்களது காலத்தில் இல்லாத புதிய விஷயங்கள் என்பதால் இவை "பித்அத்" என்று மஜாஸ் (அடிப்படை அர்த்தத்தில் இல்லாமல் உருவக அணி) ரீதியாக அழைக்கப்படுகின்றன. ஆனால் இவை ஷரீஅத்தின் எந்த அடிப்படை விதியுடனும் மோதுவதில்லை. மாறாக, இவை தீர்மானிக்கப்பட்ட நன்மையை (மஸ்லஹா) நிறைவேற்றி, ஷரீஅத்தின் பொதுவான விதிகளின் கீழ் வருகின்றன. எனவே, இங்கு பெயரிடுதல் என்பது சொல்லளவில் (லஃப்ழி) மட்டுமே, உண்மையான (ஹகீகி) அர்த்தத்தில் அல்ல.
மூன்றாவது: ஷரீஅத்தின் அடிப்படை விதிகளுக்கு முரண்படுதல் மற்றும் இணக்கப்படுதல் தொடர்பான அளவுகோல்:
கண்டிக்கப்படும் பித்ஆத் மற்றும் மஸ்லஹா முர்ஸலா ஆகியவற்றுக்கிடையே வேறுபடுத்திக் காட்டும் தீர்க்கமான அளவுகோலை ஷாதிபி (ரஹ்) அவர்கள் வகுக்கிறார்கள். அந்த அளவுகோல் என்னவென்றால், ஷரீஅத்தின் அடிப்படை விதிகள், அதன் மொத்த விதிகள் மற்றும் பொதுவான ஆதாரங்கள் ஆகியவற்றுடன் ஒத்துப்போதல் அல்லது முரண்படுதல் ஆகும்.
• ஷரீஅத்தின் அடிப்படை விதிகளில் எதற்கும் முரண்படாத, ஷரீஅத்தின் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொது நலனைக் (மஸ்லஹா) கொண்டிருக்கும் ஒவ்வொரு புது விஷயமும், மஸ்லஹா முர்ஸலா வகையைச் சேர்ந்ததாகவும், அனுமதிக்கப்பட்டதாகவும் (மஷ்ரூஃ) கருதப்படும். இதற்கு ஏற்ப அதற்கு தீர்ப்பு வழங்கப்படும் (கட்டாயம், பரிந்துரைக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது) போன்றவை.
• ஷரீஅத்தின் ஒரு அடிப்படை விதிக்கும் அல்லது விதிகளுக்கும் முரண்படும் ஒவ்வொரு புது விஷயமும், முழுமையாக தடைசெய்யப்பட்ட (ஹராம்) கண்டிக்கப்படும் பித்ஆத் ஆகும். இதையே நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட விஷயங்களில் இருந்து விலகியிருங்கள். ஏனெனில், ஒவ்வொரு புது விஷயமும் பித்அத் ஆகும். மேலும் ஒவ்வொரு பித்அத்தும் வழிதவறல் (ழலாலத்) ஆகும்" எனும் குறிப்பிட்டார்கள்.
ஆகவே, இமாம் ஷாதிபி (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு என்பது ஒரு சீரான மற்றும் நேர்த்தியான நிலைப்பாடாகும். ஒருபுறம் பித்அத் என்றால் என்ன, மஸ்லஹா முர்ஸலா என்றால் என்ன என்பதை அவர்கள் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். மறுபுறம், பித்அத்தின் ஐந்து வகைப் பிரிவு என்பது மொழியியல் அடிப்படையிலான பிரிவு மட்டுமே, அது உண்மையில் மஸ்லஹா முர்ஸலாக்களே என்று விளக்குகிறார்கள். அதே நேரத்தில், மார்க்க விஷயங்களில் செய்யப்படும் பித்அத்தின் கண்டனத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். எனவே, அவர்களின் அணுகுமுறை,ஒரு விடயத்தின் உண்மையான நிலையை ஆராய்தல் மற்றும் புது விஷயங்களை ஷரீஅத்தின் அடிப்படை விதிகள் மற்றும் மொத்த பொது விதிகள் எனும் அளவுகோலால் அளந்து பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது.
எனவே, அந்த விதிகளுடன் ஒத்துப்போகிற மற்றும் ஷரீஅத்தின் ஏதேனும் பொதுவான அடிப்படையால் ஆதரிக்கப்படும் ஒவ்வொன்றும் ஷரீஅத்தின்படி அனுமதிக்கப்பட்டதாகும் (மஷ்ரூஃ).
அவற்றுக்கு முரண்படும் ஒவ்வொன்றும் வழிதவறிய பித்அத் (பித்அத் ழலாலத்) ஆகும். என்று மிகக் கச்சிதமாக முன்னோர்களின் புரிதலில் நின்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்
ஆக இமாம் ஷாதிபி ரஹ் அவர்கள் பித்அத்தை ஷரீஆ வழக்கில் மாத்திரமே பிரயோகித்து அது கண்டிக்கப்பட வேண்டியது என்று கூறுவது மாத்திரம் இன்றி பித்அத்தை பல வைகைகளாகப் பிரித்து நோக்கப்பட்ட முறைகள் அனைத்துமே மொழியியல் அடிப்படையில் தான், மேலும் அவை மஸ்லஹா முர்ஸலா எனவும் அடையாளப் படுத்துகிறார்கள்.
தொகுப்பு: Ahsan Asman Muhajiri