மன்னிப்போம் மறப்போம்!:

1- பிறரை மன்னித்து இறை மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் தனக்கு அவதூறு கூறப்பட்ட விடயத்தைப் பற்றிக் கூறும் போது:

"என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை (இந்த வசனங்களை) அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிடமாட்டேன்” என்று கூறினார்கள்.

மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உற வினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்.

உடனே உயர்ந்தோன் அல்லாஹ், இன்னும், "உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் 24:22) என்பதுவரையிலான வசனத்தை அருளினான்.

அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு முன்பு தாம் செய்துவந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி (புஹாரி 2661).


2- மன்னிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்:

"எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்." (அல்குர்ஆன் 7: 199)


3- மன்னிப்பது இறையச்சமுடையவர்களின் பண்பாகும்:

"கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்." (அல்குர்ஆன் 3: 134).

'மன்னிப்பது பயபக்திக்கு மிக்க நெருக்கமானதாகும்." (அல்குர்ஆன் 2:237).


4- மன்னிப்பது நபிமார்களின் பண்பாகும்:

யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தனது சகோதரர்களை மன்னித்ததை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

"அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்." (அல்குர்ஆன் 12: 92)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக்கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. ‘‘அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத் தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, யிஇறைவா! என் சமுதாயத் தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 3477)


5- கணக்கின்றி கூலி கிடைக்கும் ஒரு நற்செயல்:

"இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது" (அல்குர்ஆன் 42: 40)


6- உறுதி மிக்க காரியங்களில் நின்றும் உள்ளது:

"ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்." (அல்குர்ஆன் 42:43).


7- மன்னிப்பின் மூலம் கண்ணியம் அதிகமாகும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை." இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5047).


-அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

Previous Post Next Post