வஹாப் வாதம் அல்லது வஹாபிஸம் என்றால் என்ன?


வஹ்ஹாப்வாதம் அல்லது வஹ்ஹாபிஸம் என்றால் என்ன?

- அபூ மலிக்


அறிமுகம்:
.
இன்று இஸ்லாத்துக்கு எதிராக உலகெங்கும் நடைபெறும் பிரச்சாரங்களில் முஸ்லிம் அல்லாதோருக்கு அறிமுகமற்ற பல புதுப் பதங்கள் அடிக்கடி பிரயோகிக்கப் படுவதைப் பார்க்கலாம்.
.
இந்த வரிசையில் “வஹ்ஹாப் வாதம்”, “ஸலஃப் வாதம்” போன்ற பதங்கள் இன்று பிரபல்யம் அடைந்துள்ளன.
.
இஸ்லாம் குறித்து முறையாக அறியாத பலர் இப்பதங்களை இன்று வெறுப்போடு பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதற்குக் காரணம், இஸ்லாத்தின் பெயரில் உலகெங்கும் நடக்கும் பயங்கரவாதத்தோடு இப்பதங்களைக் கோர்த்து ஊடகங்கள் பரப்புரை செய்வது தான்.
.
ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது போல் வஹ்ஹாப் வாதம் தான் தீவிரவாதம் உருவாகக் காரணமா?
.
அப்படியாயின், இஸ்லாமிய வரலாற்றில் இது எப்போது, எங்கு ஆரம்பித்தது?
.
பாரம்பரிய முஸ்லிம்கள் என்போர் யார்?
.
ஸலஃப் வாதம் என்பது என்ன?
.
இது போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு வரலாற்றின் அடிப்படையில் தெளிவான, எளிமையான பதில்களை வழங்கும் விதமாகவே இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
.
இஸ்லாம் என்றால் என்னவென்று ஒரு சுருக்கமான அறிமுகமாவது இல்லாமல், வஹ்ஹாப் வாதம் என்றால் என்னவென்று ஒருவர் புரிந்து கொள்ள முடியாது.
.
எனவே, இஸ்லாத்தின் ஆரம்பம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தோடு இந்த வரலாற்றுக் கட்டுரையை ஆரம்பிக்கலாம்:

இஸ்லாத்தின் ஆரம்பம்:
.
இற்றைக்கு 1449 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவில் ஒரு மனிதர் பிறந்தார். அவரது பெயர் நபி முஹம்மத் (ஸல்).
.
சிறு வயது முதல் சமூகத்தில் அனைவரிடமும் நம்பிக்கைக்குரியவர், உண்மையாளர், நீதியானவர் போன்ற நற்பெயர்களைப் பெற்றிருந்த இவர், தனது நாற்பதாவது வயதில் இறைத்தூதராகப் பரிணமித்தார்.
.
ஓரிறைக் கோட்பாடு முதல் தனி மனித / குடும்ப வாழ்வு வரை மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் நெறிப்படுத்தும் ஒரு முழுமையான வாழ்க்கை நெறியை இவர் உலகுக்கு வழங்கினார்.
.
இந்த வாழ்க்கை நெறியின் பெயர் இஸ்லாம்.
.
இந்த வாழ்க்கை நெறியை நபியவர்கள் இரண்டு வடிவங்களில் மக்களுக்குக் கற்பித்தார்.
.
வடிவம் 1: வேத வசனங்கள்:
மனனம் செய்ய இலகுவான, கருத்துச் செறிவு மிக்க, கவிதை நடையில் அமைந்த 6236 வேத வசனங்களே இவை. இறைவனின் நேரடிக் கட்டளைகளாக இறங்கிய இந்த வசனங்களின் தொகுப்பே குர்ஆன் எனும் நூல்.
.
வடிவம் 2: வேத வியாக்கியானங்கள்:
மேற்கூறப்பட்ட கருத்துச் செறிவு மிக்க வேத வசனங்களை மட்டும் வைத்து ஒருவர் இஸ்லாத்தைப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியாது. இவ்வசனங்களை உதாரணங்கள் சகிதம் விரிவாக மக்களுக்கு விளங்கப் படுத்த ஓர் ஆசான் அவசியம். அந்த ஆசான் தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். ஒவ்வொரு வேத வசனத்தினதும் சரியான அர்த்தம் என்னவென்பதை வெறும் பேச்சு வடிவில் மட்டும் விளக்குவதோடு இந்த ஆசான் நின்று விடவில்லை; செயல் வடிவிலும் செய்து காட்டினார். இதற்காகத் தனது முழு வாழ்வையும் அவர் முன்னுதாரணமாக்கி, ஒரு முஸ்லிம் இப்படித் தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டினார்.
.
குர்ஆனின் விளக்கவுரையாக இந்த ஆசான் வாழ்ந்து காட்டிய முன்னுதாரண வாழ்க்கை தான் “ஹதீஸ்” எனும் நபியின் வாழ்க்கை வரலாறு.
.
குர்ஆன் + ஹதீஸ் ஆகிய இந்த இரண்டும் இணைந்த முழு வடிவம் தான் இஸ்லாம். இந்த முழு வடிவத்தையும் எந்தக் கூட்டல் / குறைத்தலும் இல்லாமல் யார் பின்பற்றுகிறாரோ, அவர் மட்டுமே உண்மையான முஸ்லிம்.
.
இதுவே இஸ்லாத்தின் அடிப்படை.
.
இந்த அடிப்படைகளை முஸ்லிம்கள் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என்பதற்காக இரண்டு பிரதான விடயங்கள் குறித்து நபியவர்கள் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.
.
நபியின் எச்சரிக்கை 1:
----------------------------------
.
வணங்கி வழிபடவும், பிரார்த்திக்கவும் தகுதியானவன் ஏக இறைவன் மட்டுமே.
.
அந்த இறைவனை வணங்குவது போல் அவனது படைப்புகளில் எதையும் வணங்கக் கூடாது. அவனிடம் பிரார்த்தனை செய்வது போல், அவனது படைப்புகளில் யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது. அப்படிச் செய்வது “ஷிர்க்” (இணைவைப்பு) எனும் கொடிய பாவமாகும்.
.
மலையளவு பாவங்களைச் செய்த ஒரு மனிதனைக் கூட மன்னிக்கத் தயங்காத கருணையுள்ளம் கொண்ட இறைவன், இணைவைப்பு எனும் கொடிய பாவத்தைச் செய்யும் போது மட்டும் கடும் கோபம் கொள்கிறான்.
.
எனவே, இணைவைப்பிலிருந்து ஒரு முஸ்லிம் முற்றாக விலகியிருக்க வேண்டும்.
.
இந்த எச்சரிக்கையின் வெளிப்பாடாகவே ஒரு முஸ்லிம் ஒருபோதும் சிலைகள், இறந்தவர்களது அடக்கத்தளங்கள், மகான்கள், தலைவர்கள், சூரியன், சந்திரன், விலங்குகள் போன்ற எந்தப் படைப்புகள் முன்னாலும் மண்டியிடக் கூடாது; அவற்றிடம் பிரார்த்திக்கவும் கூடாது என்று நபியவர்கள் கடுமையான தடை விதித்துள்ளார்கள்.
.
“இறைவனின் தூதராக இருக்கும் என்னைக் கூட நீங்கள் ஒருபோதும் வணங்கி விடக் கூடாது. என் மீது உங்களுக்கிருக்கும் மரியாதையே, நாளடைவில் என்னை வணங்கும் நிலைக்கு மாறி விடவும் கூடாது. நான் ஒரு சபைக்குள் நுழையும் போது எனக்காக யாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவும் கூடாது. எனது ஞாபகார்த்தமாக இருக்கட்டுமென்று எனது உருவத்தைக் கூட யாரும் வரைந்து வைத்துக் கொள்ளக் கூடாது. என் மீதுள்ள பாசத்தின் விளைவாகப் பிற்கால மக்கள் என்னை வணங்கும் ஒரு நிலை உருவாவதற்கு இது போன்ற செயல்கள் காரணமாக அமைந்து விட வாய்ப்புண்டு. எனவே தான், அதற்கான வாசல்கள் அனைத்தையும் முன்கூட்டியே அடைத்து விட்டேன்” என்று நபியவர்கள் அன்றே பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள்.
.
இணைவைப்பு எனும் கொடிய பாவம் தப்பித் தவறியேனும் இஸ்லாத்தினுள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறெல்லாம் நபி எச்சரித்தார்கள்.
.
ஏக இறைவனைத் தவிர வேறு யாரிடமும் மண்டியிடவோ, பிரார்த்திக்கவோ கூடாது எனும் இந்த எச்சரிக்கைக்கு இஸ்லாம் வழங்கியுள்ள சுருக்கமான பெயர் “தவ்ஹீத்” (ஏக தெய்வக் கோட்பாடு) என்பதாகும்.
.
இந்தக் கொள்கைக்கு நேர் எதிரான கோட்பாடுகள் அனைத்தும் “ஷிர்க்” எனும் இணைவைப்பின் வாயிலாகவே எப்போதும் உருவாகின்றன.
.
இது தான் நபியவர்களது பிரதான எச்சரிக்கைகளுள் முதன்மையானது.
.
�.
நபியின் எச்சரிக்கை 2:
-----------------------------------
.
இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நபியவர்கள் உயிரோடிருக்கும் போதே முறையாகவும், முழுமையாகவும் கற்பித்து விட்டார்கள். அவர் மரணித்த பின் பிற்காலத்தில் வேறு இறைத்தூதர்கள் வரப் போவதும் இல்லை.
.
நபிக்குப் பிறகு வரும் காலங்களில் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்ள மக்களுக்காக நபி விட்டுச் சென்றிருப்பது இரண்டு விடயங்களை மட்டும் தான். ஒன்று குர்ஆன்; மற்றது “ஹதீஸ்” எனும் நபியின் வாழ்க்கை வரலாறு.
.
இந்த இரண்டிலும் என்ன சொல்லப் பட்டுள்ளதோ, அது மட்டுமே இஸ்லாம். அதை மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும்.
.
இந்த இரண்டிலும் சொல்லப்படாத புதுக் கருத்துக்களை இஸ்லாத்தின் பெயரில் பிற்காலத்தில் யார் போதித்தாலும், அதைப் போதிப்பவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், அதை ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ளவே கூடாது. ஏனெனில், அது இஸ்லாம் கிடையாது.
.
எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் பூரண வாழ்க்கை நெறியாகவே இஸ்லாத்தை இறைவன் வடிவமைத்துள்ளான். காலத்துக்கேற்ற புதுப்பித்தல் எனும் அடிப்படையிலோ, அல்லது பிற்கால மகான்கள் சொன்ன நல்ல போதனைகள் எனும் அடிப்படையிலோ புது அம்சங்களை இஸ்லாத்தினுள் கலப்படம் செய்ய எந்த முஸ்லிமுக்கும் அனுமதி கிடையாது.
.
இப்படிக் கலப்படம் செய்வது ஒரு முஸ்லிமை இஸ்லாத்திலிருந்து வழிதவறச் செய்து விடும். இது “பித்அத்” எனும் பாவ காரியமாகும்.
.
“நல்ல விடயங்கள் தானே” என்று புதுக் கருத்துக்களையும் தம் வேதநூல்களில் பிற்கால மதகுருக்கள் கலப்படம் செய்ய ஆரம்பித்ததன் விளைவாகவே “தவ்ராத்” (யூத பைபிள்), மற்றும் “இன்ஜீல்” (கிறித்தவ பைபிள்) போன்ற முந்திய வேதங்கள் நாளடைவில் மாசடைந்து உருமாறிப் போயின. அதே நிலைமை இறுதி வேதம் இஸ்லாத்துக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் நபியவர்கள் அதிகம் கண்டிப்பாக இருந்துள்ளார்கள்.
.
எனவே தான், குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் அல்லாத வேறு எதையும் இஸ்லாத்தின் பெயரில் பின்பற்றாமல் ஒரு முஸ்லிம் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் அழுத்தமாக எச்சரித்துள்ளார்கள்.
.
நபியின் இந்த இரண்டு எச்சரிக்கைகளும் மிகவும் அழுத்தம் திருத்தமானவையாக இருந்தும், பிற்கால முஸ்லிம்களில் ஒரு சாரார் இவற்றைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
.
இதன் விளைவாக, நபியவர்கள் காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமான புது வழிமுறைகள் இஸ்லாத்தினுள் ஊடுறுவ ஆரம்பித்தன.
.
இவ்வாறு புதிதாக ஊடுறுவிய புது வழிமுறைகள் ஆரம்பத்தில் வெளிப் பார்வைக்கு நல்லவை போல் இருந்த போதும், காலப்போக்கில் அவையே இணைவைப்பு எனும் கொடிய பாவத்தின் பக்கம் அனேக முஸ்லிம்களை வழிதவறச் செய்தன.
.
இந்த உண்மையை சில வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்:
.
“இது தான் இஸ்லாம்” என்று நபியவர்கள் மக்களுக்கு எதைப் போதித்தார்களோ, அது மட்டுமே உண்மையான இஸ்லாம். அது மட்டுமே பாரம்பரிய இஸ்லாம்.
.
இதை இன்னொரு விதத்தில் சொன்னால், குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டிலும் பதிவு செய்யப் பட்டிருக்கும் நபியின் நேரடிப் போதனைகள் மட்டுமே உண்மையான பாரம்பரிய இஸ்லாம். நபியின் மரணத்துக்கு பிறகு பிற்காலங்களில் இஸ்லாத்தின் பெயரில் ஏனைய மனிதர்கள் போதித்த எந்தச் சித்தாந்தமும் உண்மையான பாரம்பரிய இஸ்லாத்துக்குச் சொந்தமானவை அல்ல.
.
இந்த அடிப்படையில், நபியவர்கள் வாழ்ந்து, மரணித்த 7ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் பரவத் தொடங்கிய இஸ்லாம் எதுவோ, அது மட்டுமே பாரம்பரிய இஸ்லாம்.
.
இந்தப் பாரம்பரிய இஸ்லாம் தான் நபியவர்கள் வாழ்ந்து, மரணித்த அதே 7ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் வாயிலாக இலங்கையிலும் பரவியது. இக்காலப் பகுதியில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கைவாழ் மக்கள் தான் இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம்கள்.
.
இது தான் வரலாறு கூறும் உண்மை.
.
நபியவர்கள் மரணித்து இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஏற்பட்ட சில அரசியல் முரண்பாடுகள் காரணமாக இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒரு சிறு பகுதியினர், தமக்கென்று தனியாக ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்திக் கொண்டு, முஸ்லிம் சமூகத்திலிருந்து வேறாகப் பிரிந்து சென்று விட்டார்கள்.
.
இப்படிப் பிரிந்து சென்றவர்கள் தான் “ஷீயா” எனும் பிரிவினர்கள். ஷீயாக்கள் விலகிச் சென்ற பின், முஸ்லிம் சமூகத்தில் எஞ்சிய பெரும்பான்மைத் தரப்பினரே “ஸுன்னி” முஸ்லிம்கள் என்று அழைக்கப் பட்டனர்.
.
இந்த உண்மையை இரண்டு பிரிவினரின் பெயர்களில் இருந்தே இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். “ஷீயா” எனும் சொல்லின் அர்த்தம் “தனிக் கட்சி” என்பதாகும். “ஸுன்னி” எனும் சொல்லின் அர்த்தம், “நபியின் வழிமுறையைப் பின்பற்றுவோர்” என்பதாகும்.
.
அதாவது, நபியின் வழிமுறையை மட்டும் அதுவரை பின்பற்றி வந்த முஸ்லிம் சமூகத்திலிருந்து தனியாக ஒரு புது அரசியல் கட்சியை உருவாக்கிக் கொண்டு ஷீயாக்கள் பிரிந்து சென்று விட்டார்கள் என்பது தான் இதன் சுருக்கமான அர்த்தம்.
.
முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட இந்தப் பிளவு, ஆரம்பத்தில் வெறும் அரசியல் பிளவாக மட்டுமே இருந்தது. நபிகளார் போதித்த அதே பாரம்பரிய இஸ்லாத்தைத் தான் இரு தரப்பினரும் ஆரம்பத்தில் பின்பற்றி வந்தார்கள்.
.
ஆனால், இந்த அரசியல் பிளவு பிற்காலத்தில் மதப் பிளவாகவும் உருவெடுத்தது.
.
ஸுன்னி முஸ்லிம்களிடமிருந்து தம்மை எல்லா விதங்களிலும் வேறுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று ஷீயாக்கள் தொடர்ந்தும் தீவிரமாக இருந்ததன் விளைவாக, நாளடைவில் அவர்கள் பின்பற்றி வந்த இஸ்லாத்தையும் தமக்கு ஏற்றாற்போல் அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்.
.
இதன் விளைவாக ஷீயாக்களது இறைநம்பிக்கைக் கோட்பாட்டில் புதிதாக ஒரு சித்தாந்தம் உருவானது.
.
தமது தலைவர்களை மகான்களாக்கி, அவர்கள் இறந்த பின், அவர்களது கல்லறையில் பிரார்த்தனை செய்யும் ஒரு புது வழிமுறை தான் ஷீயாக்கள் உருவாக்கிய புதிய சித்தாந்தம். இதையே ஷீயாக்கள் தமது மதத்தின் பிரதான அங்கமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.
.
இதன் விளைவாக, இஸ்லாம் எனும் பெயரில் ஷீயாக்கள் பின்பற்றிய சித்தாந்தம், நபி போதித்த பாரம்பரிய இஸ்லாத்திலிருந்து முற்றாகவே மாறிப் போனது.
.
இவ்வாறு மாறிய புதிய சித்தாந்தத்தையே இன்று நாம் ”ஷீயா இஸ்லாம்” என்று கூறுகிறோம்.
.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை மையப் படுத்தியே நபிகளார் கற்பித்த பாரம்பரிய இஸ்லாம் கட்டியெழுப்பப் பட்டுள்ளது.
.
இதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு வடிவத்திலேயே ஷீயாக்களது இறைநம்பிக்கைக் கோட்பாடு உருவாகியுள்ளது.
.
இறைத்தூதருக்குப் பதிலாக, “இமாம்கள்” என்று அழைக்கப்படும் சில தலைவர்களது வம்சாவழியை மையமாக வைத்தே ஷீயாக்களின் மதம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோட்பாட்டை சுருக்கமாக “இமாமத்” கோட்பாடு என்று கூறுவார்கள்.
.
ஷீயாக்களது இமாமத் கோட்பாடு, நபிகளார் போதித்த பாரம்பரிய இஸ்லாத்துக்கு நேர் எதிராக இருந்ததால், “ஸுன்னி” பிரிவினரைச் சேர்ந்த பாரம்பரிய முஸ்லிம் அறிஞர்களுள் அனேகமானோர் “ஷீயாக்கள் முஸ்லிம்கள் அல்ல” என்று பகிரங்கமாகவே பிரகடனம் செய்துள்ளார்கள்.
.
“எனக்குப் பிறகு யாரும் இஸ்லாத்தினுள் புது விடயங்களைக் கலப்படம் செய்ய வேண்டாம்” என்று நபி விடுத்திருந்த எச்சரிக்கையை ஷீயாக்கள் அடியோடு புறக்கணித்ததன் விளைவாகவே அவர்கள் இஸ்லாத்திலிருந்து விலகி, வேறொரு திசையில் வழிமாறிச் செல்ல நேர்ந்தது.
.
இஸ்லாத்தின் பெயரில் ஷீயாக்கள் உருவாக்கிய “இமாமத்” கொள்கையானது, நபி வாழ்ந்த நூற்றாண்டுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகே (9ஆம் நூற்றாண்டு) முழு வடிவம் பெற ஆரம்பித்தது.
.
சுருக்கமாகக் கூறினால், இஸ்லாம் எனும் பெயரில் ஷீயாக்கள் பின்பற்றும் சித்தாந்தம் நபி போதித்த பாரம்பரிய இஸ்லாம் அல்ல; அது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு தனி மதம்.
.
நபி கற்பித்த இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியினுள் பிற்கால மனிதர்களது கருத்துக்களையும், பிற மத அனுஷ்டானங்களையும் தேவைக்கேற்ப நுழைவித்ததன் மூலம் இஸ்லாத்தின் பெயரில் புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்கியதோடு மட்டும் ஷீயாக்கள் நின்று விடவில்லை.

இறைவனிடம் பிரார்த்திப்பது போல் மனிதர்களிடமும் பிரார்த்திப்பதை ஊக்குவிக்கும் தமது சித்தாந்தம் ஸுன்னி முஸ்லிம்கள் மத்தியிலும் ஊடுறுவ வேண்டும் என்பதற்காக ஷீயாக்கள், தமது “இமாமத்” கொள்கையையே வேறு வடிவத்தில் ஸுன்னி முஸ்லிம்கள் மத்தியிலும் பரப்ப ஆரம்பித்தார்கள்.
.
இதன் விளைவாக நாளடைவில் ஸுன்னி முஸ்லிம்கள் மத்தியிலும் “இமாமத்” கொள்கைக்கு நிகரானதொரு புது சித்தாந்தம் வேறொரு பெயரில் உருவானது.
�நபியின் மரணத்துக்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு இணைவைப்பை மையமாகக் கொண்டு உருவான ஷீயாக்களின் “இமாமத்” கொள்கை ஸுன்னி முஸ்லிம் சமூகத்திலும் பிற்காலத்தில் விதைக்கப் பட்டது.
.
ஷீயாக்களின் சித்தாந்தத்தை அதே வடிவத்தில் ஸுன்னிகளிடம் பிரச்சாரம் செய்தால் அது எடுபடாது என்பதால், அதை வேறு பெயரிலும், வடிவத்திலும் ஸுன்னி சமூகத்தில் பரப்பினர்கள்.
.
பெயர் மாற்றம், வேறு வடிவம் என்பவற்றின் விளைவாக, ஸுன்னிகளிடம் பரப்பப்பட்ட இமாமத் சித்தாந்தம், ஷீயாக்களுக்கு சம்பந்தமில்லாத வேறொரு நல்ல வாழ்க்கை நெறி போலவே வெளிப் பார்வைக்குக் காட்சியளித்தது.
.
இந்த வெளி வேஷத்தில் ஏமாந்த ஸுன்னி சமூகத்தின் ஒரு பிரிவினர் நாளடைவில் இந்தப் புது வாழ்க்கை நெறியைத் தமது பாரம்பரிய இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
.
இந்தப் புது சித்தாந்தமே “ஸூஃபி வாழ்க்கை நெறி” எனும் பெயரில் பிரபல்யம் அடைய ஆரம்பித்தது.
.
ஸூஃபி சித்தாந்தமும், ஷீயாக்களின் இமாமத் சித்தாந்தமும் வெளிப் பார்வைக்கு வெவ்வேறான வாழ்க்கை நெறிகள் போலவே இருக்கும்.
.
ஆனால், இரண்டு சித்தாந்தங்களினதும் அத்திவாரம் ஒன்று தான். இந்த உண்மையை அவர்களது கோட்பாடுகளின் அடிப்படையை வைத்தே இலகுவாகப் புரியலாம்.
.
இஸ்லாம் எனும் பெயரில் ஷீயாக்களும், ஸூஃபிகளும் கடைப்பிடிக்கும் வாழ்க்கை நெறியின் அடிப்படைக் கோட்பாடு பின்வருமாறு தான் இருக்கும்:
.
கோட்பாட்டின் அடிப்படை:
-----------------------------------------
.
இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி இரண்டு வகையான ஞானங்களைக் கொண்டது. ஒன்று வெளிப்படையான ஞானம்; மற்றது மறைவான ஞானம் அல்லது மறைபொருள் ஞானம்.
.
இஸ்லாத்தை ஒரு பழமாகக் கற்பனை செய்தால், அதன் வெளிப்படையான ஞானம் என்பது, பழத்தின் வெளித் தோலைப் போன்றது மட்டுமே.
.
மறைபொருள் என்பது பழத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் சதை, மற்றும் விதையைப் போன்றது. இங்கு தான் பழத்தின் பழத்தின் சுவையும், சத்தும் அடங்கியுள்ளன.
.
இஸ்லாத்தைப் போதிக்க வந்த நபியவர்கள் உண்மையில் இரண்டு வகையான பாத்திரங்களைக் கொண்டவர். ஒன்று, இறைத்தூதர் எனும் பாத்திரம்; மற்றது, ஆன்மீகத் தலைவர் / மகான் எனும் பாத்திரம்.
.
இதில் இறைத்தூதர் எனும் பாத்திரத்தை விட, ஆன்மீகத் தலைவர் / மகான் எனும் பாத்திரமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
.
இறைத்தூதர் எனும் பாத்திரத்தின் வாயிலாகப் பொதுமக்களுக்கு நபி கற்பித்தது வெளிப்படையான ஞானத்தை மட்டும் தான். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டிலும் இருப்பது இந்த வெளிப்படையான ஞானம் மட்டும் தான். இது பழத்தின் தோல் மட்டுமே.
.
பழத்தின் பிரதான பாகமாக இருக்கும் மறைபொருள் ஞானத்தை நபியவர்கள் ஆன்மீகத் தலைவர் எனும் பாத்திரத்தின் வாயிலாக மட்டுமே கற்பித்தார்கள்.
.
இந்த மறைபொருள் ஞானத்தை அனைவருக்கும் பகிரங்கத்தில் நபி கற்றுக் கொடுக்கவில்லை. நெருங்கிய குடும்ப அங்கத்தவரான தனது மருமகன், அலீ (ரழி) அவர்களுக்கு மட்டுமே இந்த ஞானத்தை மிகவும் இரகசியமாகக் கற்றுக் கொடுத்தார்கள்.
.
பிறகு அலீ (ரழி) இந்த ஞானத்தைத் தனது சந்ததிகளுக்குக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் தம் சந்ததிக்குக் கற்பித்தார்கள். இப்படி இந்த மறைபொருள் ஞானம் நபிக்கு மிகவும் நெருக்கமான ஒருசிலரது வம்சாவழிகள் வாயிலாக மட்டுமே இன்று வரை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
.
மிகவும் பெறுமதி வாய்ந்த இந்த மறைபொருள் ஞானத்தைக் கற்கும் தகுதி எல்லா மனிதர்களுக்கும் இல்லை; ஒருசில விசேட பிறவிகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி உண்டு. இதனால் தான் இதை அனைவருக்கும் கற்பிக்காமல், அலீ (ரழி) போன்ற மிகவும் தகுதி வாய்ந்த தனது சீடருக்கு மட்டும் நபி கற்பித்தார்.
.
இந்த ஞானம் உடையோருக்கு மட்டுமே இறைவனோடு நேரடித் தொடர்பு வைத்துக்கொள்ள முடியும். இந்தத் தொடர்பானது, அந்தரங்கமான காதல் போன்றதோர் உறவாகும்.
.
இந்த உறவின் விளைவாக, இறைவனிடம் இந்த மகான்கள் எதைக் கேட்டாலும் உடனே அவன் கொடுத்து விடுவான்; வேறொரு மனிதனுக்காக இந்த மகான்கள் இறைவனிடம் சிபாரிசு செய்தால், உடனே அவன் அதை ஏற்றுக் கொள்வான்; ஒருபோதும் மறுக்க மாட்டான்.
.
இதேபோல், இறைவனின் அன்பைப் பெறவோ, அல்லது தனது தேவைகளை இறைவனிடம் கேட்கவோ ஒரு சாதாரண முஸ்லிம் ஆசைப்பட்டால், அதை அவர் நேரடியாக இறைவனிடம் பிரார்த்திப்பதை விடவும், மறைபொருள் ஞானம் கொண்ட ஒரு மகான் வாயிலாகப் பிரார்த்திப்பதையே இறைவன் விரும்புகிறான்.
.
உதாரணத்துக்கு, ஒரு முஸ்லிம் இறைவனைத் தொழுது, அவனிடம் கையேந்தித் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்தித்தால், சில வேளை இறைவன் அதைக் கொடுக்கலாம்; சில வேளை கொடுக்காமலும் விடலாம்.
.
அதே நேரம், அதே தேவையை அவர் ஒரு மகானின் கல்லறைக்குச் சென்று, அந்தக் கல்லறையிடம் பிரார்த்தித்தால், உள்ளே அடங்கியிருக்கும் மகான் அந்த மனிதர் சார்பாக இறைவனிடம் சிபாரிசு செய்து, அவரது தேவையை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.
.
இதே போல் இறைவனின் விசேட அன்பைப் பெற ஒரு மனிதன் ஆசைப்பட்டால், நேரடியாக இறைவனை வணங்குவதால் மட்டும் அதைப் பெற்று விட முடியாது.
.
மாறாக, அவர் ஒரு மகானிடம் சென்று, தன்னை முழுமையாக ஒப்படைத்து அவரிடம் சரணடைய வேண்டும். அதன் பிறகு அம்மனிதனுக்காக அந்த மகான் இறைவனிடம் வேண்டுகோள் விடுத்து, இறைவனின் ஆசீர்வாதத்தை அம்மனிதனுக்கு வாங்கிக் கொடுப்பார்.
.
சுருங்கக் கூறினால், இறைவனுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் இடையில் செயல்படும் இடைத்தரகர்களே மகான்கள். இறைவனை நெருங்க யார் விரும்பினாலும், அவர் ஏதாவதொரு மகான் வாயிலாக மட்டுமே நெருங்க முடியும்; நேரடியாக நெருங்க முடியாது.
.
இது தான் ஸூஃபி, மற்றும் ஷீயா சித்தாந்தங்களின் அடிப்படைத் தத்துவம். இரண்டு பிரிவினரினதும் அனுஷ்டானங்களும், சடங்குகளும் வெளிப் பார்வைக்கு வெவ்வேறு வடிவங்களிலும், பெயர்களிலும் இருந்தாலும், இரு சாராரின் வணக்க வழிபாடுகளும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. இந்த ஒருமைப்பாட்டை சில உதாரணங்கள் வாயிலாக அடையாளம் காணலாம்.
.
உதாரணம் 1:
ஒரு மனிதன் தனது தேவைகளை எப்போதும் நேரடியாக இறைவனிடம் தான் பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்பதே நபியின் போதனை.
.
ஆனால், ஷீயா / ஸூஃபி ஆகிய இரு பிரிவினரும் இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தனை செய்வதை விரும்ப மாட்டார்கள். மாறாக, ஓர் ஆத்மீகத் தலைவர் / மகான் வாயிலாகவே வேண்டுதல் செய்வார்கள்.
.
உதாரணம் 2:
நபியின் வழிமுறையைப் பின்பற்றும் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு இறைவனிடம் ஏதாவது தேவைப்பட்டால், அவர்கள் தொழுது, இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி இறைவனிடம் அதைக் கேட்டு மன்றாடுவார்கள்.
.
இதற்கு மாற்றமாக, ஷீயா / ஸூஃபி ஆகிய இரு தரப்பினரும் மகான்களுக்குக் காணிக்கை செலுத்தியும், நேர்த்திக்கடன் நிறைவேற்றியுமே தமது தேவைகளைக் கேட்பார்கள்.
.
உதாரணம் 3:
நபியின் பாரம்பரிய இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தளங்களுக்குள் உருவங்களோ, இறந்தவர்களது கல்லறைகளோ ஒருபோதும் இருக்காது.
.
ஆனால், ஷீயா / ஸூஃபி ஆகிய இரு பிரிவினரதும் வணக்கத் தளங்களில் அனேகமானவை மகான்களின் கல்லறைகளை மையமாக வைத்தே கட்டப்பட்டிருக்கும்.
.
உதாரணம் 4:
பாரம்பரிய முஸ்லிம்கள் நபியைத் தமது ஆசானாகவும், நல்ல மனிதராகவும், உடன் பிறப்பாகவும் நினைத்தே அவரை நேசிப்பார்கள். ஓர் அதிசயப் பிறவி எனும் அடிப்படையில் அவரை ஒருபோதும் அவர்கள் கொண்டாட மாட்டார்கள். நபியின் போதனைகளை மட்டுமே அவர்கள் தலை மேல் வைத்துப் போற்றுவார்கள்.
.
ஆனால், ஷீயா / ஸூஃபி ஆகிய இரு சாராரும் நபியை ஒரு மகானாகப் போற்றி, அவரைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுவார்கள். இந்த உலகத்தையே இறைவன் படைத்தது அந்த மகானுக்காகத் தான் என்று கூறுவார்கள். நபியின் நினைவு நாட்களைத் திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். 
.
இவ்வளவு தூரத்துக்கு நபி மீது பாச மழை பொழியும் இவர்கள், அந்த நபி எதைப் போதிப்பதற்காக 23 ஆண்டுகள் கஷ்டப் பட்டாரோ, அந்தப் போதனைகளைக் கண்டும் காணாதது போல் புறக்கணிப்பார்கள்.
.
இது போன்ற ஆயிரக்கணக்கான ஒருமைப்பாடுகள் ஷீயா / ஸூஃபி ஆகிய இரு பிரிவினரின் வாழ்க்கை நெறிகளிலும் நிறைந்துள்ளன.
.
அதே நேரம், இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் வெளித் தோற்றத்தில் பல வேறுபாடுகளும் உள்ளன. ஆனால், அந்த வேறுபாடுகளுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு வகையில் பொதுவான ஒருமைப்பாடுகளே ஒளிந்திருக்கும். இதைப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம்:
.
வேறுபாடு 1:
ஷீயா கோட்பாட்டில் அரசியல் சாயல் சற்று தூக்கலாக இருக்கும். அதே நேரம் ஸூஃபி கோட்பாட்டில் துறவறத்தின் சாயல் சற்று தூக்கலாக இருக்கும்.
.
வேறுபாடு 2:
ஷீயாக்கள் தமது ஆன்மீகத் தலைவர்களை “இமாம்” (தலைவர்) என்று அழைப்பார்கள். ஆனால், ஸூஃபிகள் தம் ஆன்மீகத் தலைவர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களை “ஷெய்ஃக்” என்றும், இறந்த பின் “அவுலியா” (இறைநேசர்) என்றும் அழைப்பார்கள்.
.
வேறுபாடு 3:
ஷீயாக்களது நம்பிக்கைப் பிரகாரம், “அஹ்லுல் பைத்” எனும் நபியின் குடும்ப அங்கத்தவர் வாரிசுகள் வாயிலாக மட்டுமே “இமாம்கள்” தோன்ற முடியும். ஆனால், ஸூஃபிகளைப் பொருத்தவரை, நபியின் நெருங்கிய சீடர்களது தலைமுறைகள் வாயிலாகவும் “ஷெய்ஃக்” / “அவுலியா” எனும் மகான்கள் தோன்ற முடியும்.
.
வேறுபாடு 4:
ஷீயாக்களுக்குள் இருக்கும் பல்வேறு உட்பிரிவுகளதும் இமாம் தலைமுறைச் சங்கிலி அலீ (ரழி)யின் மகன் ஹுஸைனிடம் இருந்தே எப்போதும் ஆரம்பிக்கும். ஹுஸைனுக்குப் பிறகு, ஜெய்னுல் ஆபிதீன் > பாக்கிர் > ஜாஃபர் அல் ஸாதிக் என்பவர் வரை சங்கிலி அனைவருக்கும் பொதுவாக இருக்கும். ஜாஃபருக்குப் பிறகு ஒவ்வோர் உட்பிரிவின் சங்கிலியும் வேறுபடும்.
.
ஸூஃபிகளைப் பொருத்தவரை, அவர்களுக்குள் நூற்றுக் கணக்கான உட்பிரிவுகள் உண்டு. இந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தரீக்காக்கள் என்று அழைக்கப் படும்.
.
ஒவ்வொரு தரீக்காவுக்கும் ஒரு தனித்துவமான அவுலியாக்களின் தலைமுறைச் சங்கிலி இருக்கும். பொதுவாக இந்தச் சங்கிலிகள் நபியிடமிருந்து ஆரம்பித்து, அலீ வாயிலாக ஹஸன் வரை அனேகமான தரீக்காக்களுக்குப் பொதுவாக இருக்கும் (ஓரிரு தரீக்காக்களைத் தவிர). ஹஸனுக்கு அடுத்த தலைமுறயிலிருந்து சங்கிலி ஒவ்வொரு தரீக்காவுக்கும் தனித்துவமானதாக இருக்கும். சில உதாரணங்கள் மூலம் இதை விளங்கலாம்:
.
காதிரியா தரீக்காவின் சங்கிலி:
நபி > அலீ > ஹஸன் > ........ > அப்துல் காதிர் ஜீலானி
.
ஷாதுலியா தரீக்காவின் சங்கிலி:
நபி > அலீ > ஹஸன் > ......... > அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் > அபுல் ஹஸன் ஷாதுலி
.
சிஸ்தியா தரீக்காவின் சங்கிலி:
நபி > அலீ > ஹஸன் பஸ்ரி > ......... > முஈனுதீன் சிஸ்தி
.
நக்‌ஷபந்தி தரீக்காவின் சங்கிலி:
நபி > அலீ > ஸல்மான் ஃபாரிஸ் > ........ > பஹாஉத்தீன் நக்‌ஷபந்த்
.
ஷீயாக்களுக்கும் ஸூஃபிகளுக்கும் இடையிலுள்ள இந்த வேறுபாடுகளெல்லாம் பெயரளவிலான வெளிப்படை வேறுபாடுகள் மட்டுமே. பெயர்களை நீக்கி விட்டு, கொள்கையின் கட்டமைப்பை ஊன்றிக் கவனித்தால், இரண்டும் ஒரே சித்தாந்தம் தான் எனும் உண்மை பளிச்சென்று புலப்படும்.
.
ஸூஃபி கோட்பாட்டின் ஆரம்பத்துக்கு ஷீயா கோட்பாடு தான் காரணம் என்றாலும், பிற்காலத்தில் ஷீயா கோட்பாடுகளையும் மிஞ்சும் அளவுக்கு ஸூஃபி கோட்பாடுகள் அதிகம் விருத்தியடந்து உலகெங்கும் வியாபித்தன.
.
இதன் விளைவாக உலக முஸ்லிம் சனத்தொகையில் பெரும்பாலான பகுதியையே இந்த ஸூஃபி சித்தாந்தம் பிற்காலத்தில் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
���இரண்டு வகையான ஞானங்களை நபி கற்பித்தார்கள் என்றும், அதில் மறைபொருள் ஞானத்தை நபியவர்கள் அனைவருக்கும் கற்பிக்காமல், தனக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டுமே இரகசியமாகக் கற்பித்தார் என்றும் ஷீயா / ஸூஃபி இரு பிரிவினரும் ஆழமாக நம்புகிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
.
உண்மையில், இரகசிய ஞானம் பற்றிய இந்த நம்பிக்கைக்கும், நபி போதித்த பாரம்பரிய இஸ்லாத்துக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. மறைபொருள் ஞானம் என்பது பிற்காலத்தில் சிலர் நபியின் பெயரில் இட்டுக்கட்டிய ஒரு சித்தாந்தம் தவிர வேறில்லை.
.
அதிலும் குறிப்பாக ஸூஃபி நெறியின் கட்டமைப்பானது பண்டைய கிரேக்க சமூகங்கள் கடைப்பிடித்த Mysticism எனும் பூடகக் கோட்பாட்டை முன்மாதிரியாக வைத்தே வடிவமைக்கப் பட்டுள்ளது.
.
மக்காவிலும், மதீனாவிலும் 23 வருடங்களாக நபியவர்கள் போதித்தது குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் தான்.
.
இந்த இரண்டையும் தவிர வேறெந்தக் கோட்பாட்டையும் நபி போதித்ததற்கான எந்த சான்றுகளும் ஆதாரபூர்வமான வரலாற்றுப் பதிவுகளில் அறவே இல்லை.
.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர்ஆன் / ஹதீஸ் ஆகிய இரண்டிலும் இருக்கும் நபியின் போதனைகள் அனைத்தும் மறைபொருள் ஞானம் எனும் பூடகக் கோட்பாட்டைப் பெரும்பாலும் நிராகரிப்பதாகவே உள்ளன.
.
நபியின் போதனைகள் அனைத்தும் ஒளிவு மறைவு அற்ற, வெளிப்படையான, அனைவரும் புரிவதற்கு இலகுவான எளிய போதனைகளாகவே எப்போதும் இருந்தன.
.
மனிதர்களுக்குள் உயர் ஜாதி / தாழ்ந்த ஜாதி என்று பாகுபாடில்லாமல், சமத்துவத்தையும், அனைவருக்கும் சமநீதியையும் பேணும் ஒரு வாழ்க்கை நெறியாக மட்டுமே நபியின் பாரம்பரிய இஸ்லாம் இருந்தது.
.
“ஒரு சராசரி மனிதன் திருடினால், அவனுக்கு இஸ்லாத்தில் என்ன தண்டனையோ, அதே தண்டனையைத் தான் எனது மகள் ஃபாத்திமா திடினால், அவளுக்கும் கொடுப்பேன்” என்று கூறி சமநீதியை நிலை நாட்டியவரே நபியவர்கள்.
.
தனக்குக் கிடைக்கும் அதே சுவர்க்கம் ஏனையோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இறைவன் தனக்குக் கற்பித்த அனைத்தையும் ஒன்று விடாமல் தனது சீடர்கள் அனைவருக்கும் பாகுபாடு காட்டாமல் கற்றுக் கொடுப்பதற்காகவே நபியவர்கள் அயராது உழைத்தார்கள்.
.
ஹதீஸ் எனும் நபியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போதே இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
.
நபியின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தனது ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் மக்காவுக்குச் சென்றிருந்தார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் சீடர்கள் அன்று அவரைச் சுற்றிக் குழும்பியிருந்தார்கள்.
.
தான் உலகுக்கு வந்த நோக்கம் ஏற்கனவே நிறைவேறி விட்டதையும், தனது மரணம் நெருங்கி விட்டதையும் ஏற்கனவே உணர்ந்திருந்த நபியவர்கள், தான் கஷ்டப்பட்டு வார்த்தெடுத்த அந்த சமூகத்துக்கு அன்று இறுதியாக ஓர் உபதேசம் செய்ய எழுந்து நின்றார்.
.
இஸ்லாத்தின் மொத்தப் போதனைகளையும் சாறு பிழிந்து கொடுத்தது போல் அன்று நபி நிகழ்த்திய அந்த இறுதி உபதேசத்தில், ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் மறக்கவே கூடாத அம்சங்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார்கள்.
.
இந்த இறுதி உபதேசத்தை நிறைவு செய்யும் தருணத்தில் தன் எதிரில் குழுமியிருந்த அந்த மாபெரும் கூட்டத்தைப் பார்த்து நபியவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள்.
.
“இறைவன் எனக்குக் கற்பித்த ஞானங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல், எதையும் மறைக்காமல் உங்களுக்கு நான் கற்றுக் கொடுத்து விட்டேனா? எனது கடமையை எந்தக் குறையும் இல்லாமல் நான் நிறைவேற்றி விட்டேனா?”
.
நபி கேட்ட இந்தக் கேள்விக்கு, அங்கிருந்த அத்தனை முஸ்லிம்களும் ஏக காலத்தில், “ஆம் இறைத்தூதரே! இறைவன் உங்களுக்குக் கற்பித்த போதனைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் நீங்கள் எமக்குப் போதித்து விட்டீர்கள். இதற்கு நாம் அனைவரும் சாட்சி.” என்று ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.
.
உடனே நபியவர்கள் வானத்தை நோக்கிக் கைகளை ஏந்தியவாறு, “இறைவா, எனது கடமையை நான் நிறைவேற்றி விட்டேன் என்பதற்கு இதோ இந்த மக்கள் அனைவரும் சாட்சி கூறி விட்டார்கள். நீயும் இதற்கு சாட்சியாக இருந்து கொள்.” என்று பிரார்த்தித்தார்கள்.
.
மேலும் தனது பிரசங்கத்தின் போது நபியவர்கள் இன்னோர் உபதேசமும் செய்தார்கள்.
.
“வெள்ளை வெளேரென்று வெளிச்சம் நிறைந்த, ஒளிவு மறைவில்லாத, தெளிவான ஒரு பாதையிலேயே உங்களை நான் விட்டுச் செல்கிறேன். இந்தப் பாதையில் எந்த இடத்திலும் இருளான பகுதியென்று எதுவுமே கிடையாது. எனது மரணத்துக்குப் பிறகு நீங்கள் தடம்புறளாமல் இருக்க வேண்டுமென்றால், இந்தப் பாதையில் மட்டுமே பயணியுங்கள்; அதை விட்டு ஒருபோதும் விலகி விடாதீர்கள்.” என்பது தான் நபியின் அந்த இறுதி உபதேசம்.
.
நபி உலகுக்குப் போதித்த பாரம்பரிய இஸ்லாம் மிகவும் வெளிப்படையானது; ஒளிவு மறைவு அற்றது; அனைவருக்கும் பொதுவானது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள நபியின் இந்த இறுதி வாக்குமூலமே போதுமான சான்று.
.
இவ்வளவு வெளிப்படையான நபியின் இஸ்லாத்துக்கு முற்றிலும் தலைகீழானதொரு வடிவத்திலேயே, மர்மங்களும், இரகசியங்களும் நிறைந்த ஸூஃபிகளின் புது மதம் அமைந்துள்ளது.
.
பிற்காலத்தில் இஸ்லாத்தின் பெயரில் யாரோ இட்டுக்கட்டிய ஒரு புது சித்தாந்தம் தான் ஸூஃபி மதம் என்பதை இந்தத் தலைகீழ் வித்தியாசம் கூட உணர்த்துகிறது.
.
ஒரு வாதத்துக்கு, ஸூஃபிகள் சொல்வது போல், மறைபொருள் ஞானத்தை நபி தான் இரகசியமாகத் தனது மருமகனுக்கு மட்டும் கற்பித்தார் எனும் கதையை யாராவது உண்மையென்று நம்பினால், “நபி ஓர் அநியாயக் காரன்” எனும் ஓர் அபிப்பிராயத்தையே அவர் தனது உள்ளத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
.
அதாவது, ஷீயா / ஸூஃபிகளின் வாதப்படி பார்த்தால், மக்களுக்கிடையில் நபியவர்கள் நீதியாக நடக்கவில்லையென்றே பொருள்படும்.
.
மனிதர்களிடையே பாரபட்சம் பார்த்துத் தான் நபி இஸ்லாத்தைக் கற்றுக் கொடுத்தார் என்றும், ஊருக்கெல்லாம் ஒரு ஞானத்தைக் கற்பித்த நபி, தனது குடும்பத்துக்கு மட்டும் வேறொரு ஞானத்தை இரகசியமாகக் கற்பித்தார் என்றும் சொல்லாமல் சொல்வதன் மூலம் நபியை ஒரு நடிகனாகவும், சுயநலவாதியாகவுமே ஸூஃபி சித்தாந்தம் சித்தரிக்க முனைகிறது.
.
சமநீதிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த நபியையே இரட்டை வேடம் போட்ட சுயநலவாதி போல் அவதூறாகச் சித்தரிக்கும் ஸூஃபி சித்தாந்தத்துக்கும், நபி போதித்த பாரம்பரிய இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
.
ஸூஃபி நெறி என்பது ஒரு நூதனக் கோட்பாடு என்பதைப் பின்வரும் உதாரணங்கள் வாயிலாக இன்னும் தெளிவாகப் புரியலாம்:

உதாரணம் 1:
“இறைவனை நெருங்க விரும்புபவர் யாராக இருந்தாலும், அவர் வாழ்வில்  நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் இலகுவாக நெருங்கலாம்; இதற்கென்று பிரத்தியேகமாக எந்தத் தகைமையும் அவசியமில்லை” என்பதே நபியின் போதனை.
.
இதற்கு நேர்முரணாக, “இறைவனை நெருங்குவது லேசான காரியம் அல்ல; மகான்களின் அனுசரனை இருந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று கூறும் ஸூஃபி சித்தாந்தம் நபி போதித்த இஸ்லாம் அல்ல.
.
உதாரணம் 2:
“மறைவானவை பற்றிய பூரண ஞானம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. அந்த ஞானத்தின் இரகசியங்களை அவன் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. தனது பேரன்புக்குப் பாத்திரமான நபிக்குக் கூட மறைவான ஞானத்தை அறியும் ஆற்றல்களை இறைவன் வழங்கியதில்லை. இறைவன் கற்பித்த இறைத் தூது ஞானத்தைத் தவிர, ஏனைய எல்லா விதங்களிலும் நபியவர்களும் ஏனையோரைப் போன்ற ஒரு சாதாரன மனிதர் மட்டுமே” என்பது தான் நபியின் பாரம்பரிய இஸ்லாம் கூறும் செய்தி.
.
இதற்கு முற்றிலும் மாற்றமாக, “மறைவான ஞானங்களை அறியும் ஆற்றல் மகான்களுக்கு இருக்கிறது” என்று கூறும் ஸூஃபி சித்தாந்தம், பாரம்பரிய இஸ்லாத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நூதனக் கோட்பாடு மட்டுமே.
.
உதாரணம் 3:
“வணங்கும் போதும், பிரார்த்திக்கும் போதும், இறைவனுக்கும், வணங்கும் மனிதனுக்கும் இடையில் எந்த இடைத் தரகரும் இருக்கக் கூடாது” என்பது தான் நபியின் பாரம்பரிய இஸ்லாம் கூறும் ஆணித்தரமான கருத்து.
.
இதற்கு நேர்மாற்றமாக, “மகான்கள் எனும் இடைத்தரகர் மூலமாகவே இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்” என்று வலியுறுத்தும் ஸூஃபி நெறி, நபியின் இஸ்லாத்தை அழிப்பதற்காகவே களம் இறங்கிய ஒரு சித்தாந்தம் போலவே தெரிகிறது.
.
உதாரணம் 4:
“இஸ்லாம் என்பது இலகுவான, வெளிப்படையான ஒரு வாழ்க்கை நெறி. படித்தவன், பாமரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இஸ்லாத்தை அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். இதைப் புரிவதற்குத் தனியாக ஒரு ஞானம் அவசியம் இல்லை” எனும் கருத்தை மட்டுமே நபியின் பாரம்பரிய இஸ்லாம் கூறுகிறது. இதை நிரூபிப்பது போலவே நபியின் வாழ்க்கையும் அமைந்திருந்தது.
.
உலகுக்கே இஸ்லாத்தை அறிமுகப் படுத்திய நபியவர்களே எழுத, வாசிக்கக் கூட தெரியாத ஓர் எளிமையான மனிதராகவே இருந்தார். அவரிடம் முதலில் பாடம் கற்ற ஆரம்ப கால சீடர்கள் கூட அறிஞர்களாக இருக்கவில்லை. மிக எளிமையான மக்களாகவே அவர்களும் இருந்தார்கள்.
.
இந்த யதார்த்தத்தை அடியோடு மறுப்பது போல தான் ஸூஃபி சித்தாந்தம் அமைந்துள்ளது. “எல்லோராலும் இஸ்லாத்தை முழுமையாகப் புரிய முடியாது; அதற்கென்று தனியான ஒரு மறைபொருள் ஞானம் வேண்டும். அந்த ஞானம் உடைய மகான்களுக்கு மட்டுமே இஸ்லாத்தின் நுணுக்கங்கள் தெரியும். எனவே, இந்த மகான்களைச் சார்ந்திருப்பது மட்டுமே சராசரி மனிதர்களுக்கு இருக்கும் ஒரே வழி.” என்று கூறும் ஸூஃபி சித்தாந்தம் நபியின் பாரம்பரிய இஸ்லாத்தைப் பொய்ப்பிக்கும் ஒரு கோட்பாடு மட்டுமே.
.
இது போன்ற வித்தியாசங்கள் அனைத்துமே ஷீயா / ஸூஃபி நெறிகள், நபி போதித்த பாரம்பரிய இஸ்லாம் அல்ல; பிற்காலத்தில் உருவான நூதனக் கோட்பாடுகள் என்பதை உறுதிப் படுத்துகின்றன.
.
உண்மையில் இது போன்ற நூதனக் கோட்பாடுகளை இஸ்லாத்தினுள் கலப்படம் செய்யக் கூடாது என்று தான் நபி கடுமையாக எச்சரித்தார்கள்.
.
“இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது” என்றும், “நபிக்குப் பிறகு இஸ்லாத்தினுள் நூதனங்களைக் கலப்படம் செய்யக் கூடாது” என்றும் இரண்டு எச்சரிக்கைகளை நபியவர்கள் விடுத்திருந்தார்கள் என்பதை இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நாம் பார்த்தோம்.
.
அந்த இரண்டு எச்சரிக்கைகளுள் ஒன்றை மீறி, நூதன சித்தாந்தத்தை உருவாக்கிய ஸூஃபிகள், நாளடைவில் “இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது” எனும் நபியின் இரண்டாவது எச்சரிக்கையையும் மீறினார்கள்.
.
இதன் விளைவாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டே ஸூஃபிகள் நாளடைவில் வெளியேறி விட்டார்கள்.
.
நபி போதித்த மெய்யான இஸ்லாத்திலிருந்து நாசுக்காக வெளியேறிய ஸூஃபிகள், “பாரம்பரிய இஸ்லாம்” எனும் பெயரை மட்டும் பாரம்பரிய முஸ்லிம்களிடமிருந்து பறித்தெடுத்துத் தமதாக்கிக் கொண்டே வெளியேறினார்கள்.
.
துருக்கியை மையமாகக் கொண்ட பிற்கால முஸ்லிம் அரசுகள் அனைத்தும் ஸூஃபி சித்தாந்தத்தால் மாசடைந்து போயிருந்ததால், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஸூஃபிகளாக மாறி விட்டார்கள்.
.
அரச அனுசரனையோடு பெரும்பான்மை வைத்தது தான் சட்டம் எனும் அடிப்படையில் “பாரம்பரிய முஸ்லிம்கள்” எனும் பெயரைத் தமக்கு மட்டுமே சொந்தமான பெயராக ஸூஃபிகள் ஆக்கிக் கொண்டார்கள். அதுவே உலகின் வழமையாகவும் நாளடைவில் மாறி விட்டது.
.
இஸ்லாத்தின் பெயரில் ஸூஃபிகள் அரங்கேற்றிய இது போன்ற பொய்களை மக்களுக்குத் தோலுரித்துக் காட்டும் அளவுக்குக் கூட பலம் அற்ற நிலையிலேயே நபியின் பாரம்பரிய இஸ்லாம் அன்று துருக்கியர்களால் நசுக்கப் பட்டிருந்தது.
.
ஸூஃபி சித்தாந்தத்தின் மௌட்டீகங்களை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அவரது குரல்வளை நசுக்கப்படும் அபாயம் துருக்கி உஸ்மானிய பேரரசில் இருந்ததன் விளைவாக, அவர்களது ஆளுகையின் கீழ் வாழ்ந்த நபியின் இஸ்லாத்தைப் பின்பற்றும் சிறுபான்மைச் சமூகம் பேசா மடந்தைகளாகவே பல நூற்றாண்டுகளைக் கழிக்க நேர்ந்தது.
.
நபியின் போதனைகள் அடங்கிய குர்ஆனும், ஹதீஸ்களும் கற்க நாதியில்லாமல், வீட்டுப் பரண்களில் தூசு படிந்து போயிருக்க, முஸ்லிம் பெயர் தாங்கிய மக்களோ பள்ளிவாசல்களில் இறைவனைத் தொழுவதற்குப் பதிலாக “ஹழ்றா” என்ற பெயரில் குதித்து நடனமாடிக் கொண்டிருக்க...
.
இஸ்லாத்தின் பெயரில் அறியாமை மட்டுமே கோலோச்சிய ஒரு காலமாகவே துருக்கி உஸ்மானியர்களது ஆட்சிக் காலம் அன்று இருந்தது.
.
இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பது போல், நபியின் பாரம்பரிய இஸ்லாத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதைப் பகிரங்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சி 18ம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் ஒரு மனிதர் மூலம் ஆரம்பித்தது.
.
�.
18 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் முஸ்லிம் உலகம் மூன்று பிரதான கூறுகளாகப் பிரிந்திருந்தது. உலகெங்கும் பரவி வாழ்ந்த முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மூன்று சாம்ராஜ்ஜியங்களின் ஆளுகைக்குக் கீழேயே அன்று வாழ்ந்து வந்தனர்.
.
1. ஸஃபவி சாம்ராஜ்ஜியம்
2. முகலாய சாம்ராஜ்ஜியம்
3. உஸ்மானிய சாம்ராஜ்ஜியம்
.
இந்த மூன்று சாம்ராஜ்ஜியங்களதும் ஆளுகையில் வாழ்ந்த முஸ்லிம்கள் பின்பற்றிய இஸ்லாம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொண்டால், “வஹ்ஹாபிசம்” எனும் கோட்பாடு உருவானதன் பின்னணியைத் தெளிவாகப் புரியலாம்.
.
ஸஃபவி சாம்ராஜ்ஜியம்:
--------------------------------------
.
இன்று நாம் ஈரான் என்று அழைக்கும் அன்றைய பாரசீக நிலப்பரப்பை 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையான இருநூறு வருட காலப்பகுதியில் ஒரு தனி ராஜ்ஜியம் ஆண்டு வந்தது.
.
இந்த சாம்ராஜ்ஜியம் ஸஃபவி எனும் பெயரில் அன்று அழைக்கப்பட்டது.
.
இறுதி இஸ்லாமிய கிலாஃபத் என்று பெயரளவுக்கு அனேகரால் அழைக்கப்பட்ட துருக்கி உஸ்மானிய பேரரசோடு சேராமல், ஒரு தனி நாடாகவே ஸஃபவி ராஜ்ஜியம் அன்று இருந்தது.
.
ஸஃபவிகளின் மதக் கோட்பாடுகள் உஸ்மானியப் பேரரசின் கோட்பாடுகளுக்கு ஒத்துவராதவையாக இருந்ததன் காரணமாகவே அவர்கள் தனி ஆட்சியாட்சியாகப் பிரிந்திருந்தார்கள்.
.
குர்திஷ் இனத்தைச் சேர்ந்த ஸூஃபி மகான் என்று அறியப்படும், ஸஃபீயுத்தீன் அர்தாபிலி என்பவரால் புதிதாக ஒரு ஸூஃபி தரீக்கா 13ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. “ஸஃபவிய்யா”எனும் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஸூஃபி தரீக்காவை அடிப்படையாகக் கொண்டே ஸஃபவி சாம்ராஜ்ஜியம் தோற்றம் பெற்றது.
.
ஸஃபவி சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கத்துக்கு ஆரம்பத்தில் வித்திட்டது ஸூஃபி தரீக்காவாக இருந்தாலும், பிற்காலாத்தில் ஸஃபீயுத்தீனின் பேரப் பிள்ளைகள் ஸூஃபி அவுலியாக்களை விடவும், ஷீயா இமாம்களை அதிகம் விரும்ப ஆரம்பித்தனர்.
.
இதன் விளைவாக, சூஃபி அரசாக இருந்த ஸஃபவி சாம்ராஜ்ஜியம், ஷீயாக்களின் இமாமத் கொள்கையைப் பின்பற்றும் ஷீயா தேசமாகப் பரிணமித்தது.
.
இப்படி உருவான ஸஃபவிகளின் ஷீயா சாம்ராஜ்ஜியம் தான் பிற்காலத்தில் ஈரான் எனும் நாடாகப் பெயர் மாற்றம் பெற்றது.
.
சுருக்கமாகக் கூறினால், 18 ஆம் நூற்றாண்டில் ஸஃபவி தேசத்து மக்கள் இஸ்லாத்தின் பெயரில் பின்பற்றியதெல்லாம் ஷீயாக்களின் இமாமத் சித்தாந்தத்தை மட்டும் தான். நபிகளார் போதித்த பாரம்பரிய இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் யாரும் ஸஃபவி சாம்ராஜ்யத்தில் இருக்கவில்லை.
.
முகலாய சாம்ராஜ்ஜியம்:
----------------------------------------
.
அப்பாஸியர்களது பக்தாத் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகப் படையெடுத்த மொங்கோலியர்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையில் பிற்காலத்தில் ஏற்பட்ட இனக்கலப்பின் விளைவாக உருவானவர்களே முகலாயர்கள்.
.
முகலாய வம்சத்தின் ஆதிபிதாவாகக் கருதப்படும் மொங்கோலிய மன்னன் “தைமூர்” கட்டியெழுப்பிய பலம் மிக்க தைமூரி சாம்ராஜ்ஜியம், தைமூரின் மரணத்தின் பிறகு துண்டு துண்டாக சிதறிப் போனது.
.
சிதறிய சாம்ராஜ்ஜியத்தின் எஞ்சிய ஒரு பகுதியை ஆண்டு வந்த, தைமூரின் கொள்ளுப் பேரன் பாபர், 16 ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக் கண்டத்தின் மீது படையெடுத்தார்.
.
13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை “தில்லி சுல்தானகம்” என்று அழைக்கப்பட்ட ஸுன்னி முஸ்லிம் சாம்ராஜ்ஜியமே இந்திய துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆண்டு வந்தது.
.
மம்லூக், கல்ஜிஸ், துக்ளக், செய்யித், லோடி ஆகிய ஐந்து அரச வம்சங்கள் வாயிலாக முன்னூறு ஆண்டுகளாக இந்திய துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகம் ஆட்சி செய்தது.
.
தில்லி சுல்தானகத்தின் இறுதி சுல்தானாக இருந்த இப்றாஹிம் லோடிக்கு எதிராக 16ஆம் நூற்றாண்டில் போர் தொடுத்த பாபர், பானிபட் யுத்தத்தில் சுல்தானைத் தோற்கடித்த பின் இந்திய துணைக் கண்டத்தினுள் வெற்றி வீரனாக நுழைந்தார்.
.
பாபரின் வருகை தொடக்கம் இந்திய துணைக் கண்டத்தில் ஆரம்பித்த முகலாயர் ஆட்சி 19 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.
.
முகலாயர்களது சமயக் கோட்பாடுகளைப் பொருத்தவரை, ஆட்சி செய்த மன்னர்கள் தொடக்கம், சாதாரண குடிமக்கள் வரை அனேகமானோர் ஸூஃபிகளாகவே இருந்தார்கள்.
.
நபிகளார் போதித்த பாரம்பரிய இஸ்லாமிய நெறிகள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலை தான் முகலாயர் ஆட்சியிலும் நிலவியது.
.
குறிப்பாக பல மதங்களின் கூட்டுச் சேர்க்கையாக முகலாய மன்னன் அக்பர் உருவாக்கிய “தீன் இலாஹி” எனும் நூதன சித்தாந்தமானது, நபியின் பாரம்பரிய இஸ்லாத்தை அடியோடு புறக்கணிக்கும் ஒரு வழிமுறையையே முகலாய தேசத்தில் உருவாக்கியிருந்தது.
.
சுருங்கக் கூறினால், ஷீயா கோட்பாடுகளது ஆதிக்கத்தின் விளைவாக ஸஃபவி சாம்ராஜ்ஜியத்தில் நபியின் பாரம்பரிய இஸ்லாம் அடியோடு மறக்கடிக்கப் பட்டது போல், ஸூஃபி, மற்றும் தீன் இலாஹி சித்தாந்தங்களது ஆதிக்கத்தின் விளைவாக முகலாய சாம்ராஜ்ஜியத்திலும் பாரம்பரிய இஸ்லாம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டிருந்தது.
.
உஸ்மானிய பேரரசு:
--------------------------------
.
துருக்கியை மையமாக வைத்து 14 ஆம் நூற்றாண்டு ஆரம்பித்த உஸ்மானிய பேரரசு, 20 ஆம் நூற்றாண்டு வரை முஸ்லிம் உலகின் கணிசமான பகுதியை ஆட்சி செய்து வந்தது.
.
இறுதி இஸ்லாமிய கிலாஃபத் என்று பலராலும் அழைக்கப்பட்ட இந்த உஸ்மானிய பேரரசில் கூட நபி போதித்த பாரம்பரிய இஸ்லாம் அடியோடு உருக்குலைந்து போயிருந்தது.
.
இஸ்லாமிய கிலாஃபத் என்பதன் அடிப்படை வரைவிலக்கணமே, அதன் அரசியல் சாசணம் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது தான்.
.
இதற்கமையவே நபிகளார் மதீனாவில் உருவாக்கிய கிலாஃபத் எனும் ஆட்சிக் கட்டமைப்பு நிறுவப் பட்டிருந்தது.
.
இந்த வரைவிலக்கணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதோர் அரசியல் கட்டமைப்பே உஸ்மானிய பேரரசில் காணப்பட்டது.
.
இஸ்லாம் எனும் பெயரில் துருக்கி உஸ்மானியர்கள் கடைப்பிடித்த சமயக் கோட்பாடுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஸூஃபி சித்தாந்தங்களாகவே இருந்தன.
.
துருக்கித் தொப்பிக் கலாச்சாரம், “தர்வீஷ்” எனும் ஸூஃபி வாழ்க்கை நெறி போன்ற பல்வேறு ஸூஃபி சமய / கலாச்சார அடையாளங்கள் உஸ்மானிய பேரரசிலிருந்தே உலகெங்கும் பரவின.
.
சுருங்கக் கூறினால், உஸ்மானிய பேரரசில் கூட நபிகளார் போதித்த பாரம்பரிய இஸ்லாம் அடியோடு காணாமல் போயிருந்தது.
.
உஸ்மானிய பேரரசின் ஆளுகை துருக்கி, தென் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்தியகிழக்கு, அரபு தீபகற்பத்தின் மேற்குக் கரை போன்ற பிராந்தியங்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்த போதும், அவர்களது கலாச்சார ஆதிக்கம் உலகெங்கும் வியாபித்திருந்தது.
.
இந்தக் கலாச்சார ஆதிக்கத்தின் விளைவாக இலங்கையில் வாழ்ந்து வந்த பாரம்பரிய முஸ்லிம்கள் மத்தியிலும் நாளடைவில் ஸூஃபி தரீக்காக்கள் அறிமுகமாகத் தொடங்கின.
.
ஸூஃபி கலாச்சாரத்தின் புது அறிமுகத்தால் கவரப்பட்ட இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலோர் நாளடைவில் பாரம்பரிய இஸ்லாத்தைக் கைவிட்டு, ஸூஃபிகளாக மாறினர்.
.
இந்த மாற்றத்தின் விளைவாக “இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம்கள்” எனும் பெயரும் ஸூஃபிகளுக்கே சொந்தமாகிப் போனது.
.
ஆகமொத்தத்தில், 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய பேரரசுகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட மூன்று பேரரசுகளும் நபிகளார் போதித்த பாரம்பரிய இஸ்லாத்தை அடியோடு மறந்து போயிருந்தன.
.
இஸ்லாமியர் உலகில் எங்கு பார்த்தாலும் ஏக இறைவனை வணங்கும் பள்ளிவாசல்களுக்குப் பதிலாக, மகான்களை வணங்கி வழிபடும் தர்காக்களே நிறைந்து காணப்பட்டன.
.
நபியின் போதனைகளை அடியோடு மறந்து போன முஸ்லிம் சமூகங்கள், தமது தேவைகளை இறைவனிடம் பிரார்த்திப்பதற்குப் பதிலாக, மகான்களின் கல்லறைகளில் பிரார்த்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தன.
.
இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், “இறைவனைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது” என்றும், “இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியினுள் புது சித்தாந்தங்களைக் கலப்படம் செய்யக் கூடாது” என்றும் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகளார் எச்சரித்த இரண்டு எச்சரிக்கைகளையும் அடியோடு நிராகரித்த ஒரு முஸ்லிம் சமூகத்தையே 18 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் காண முடிந்தது.
.
முழு முஸ்லிம் உலகையும் ஸூஃபி / ஷீயா கோட்பாடுகள் ஆட்சி செய்து கொண்டிருந்த 18 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில், அரேபிய தீபகற்பத்தின் மத்திய பகுதியில், ஒரு கிராமத்தில் ஒரு புது மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
.
18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரேபிய தீபகற்பமானது அரசியல் மற்றும் சமயக் கோட்பாடுகளின் அடிப்படைகளில் நான்கு பாகங்களாகப் பிரிந்திருந்தது.
.
1. ஹிஜாஸ்
2. யெமன்
3. கிழக்குக் கரை
4. நஜ்த்
.
செங்கடலை ஒட்டிய அரபு தீபகற்பத்தின் மேற்குக் கரையோமே “ஹிஜாஸ்” என்று அழைக்கப் பட்டது. முஸ்லிம்களின் புனித நகரங்களாகக் கருதப்படும் மக்கா, மதீனா ஆகிய இரண்டு நகரங்களையும் உள்ளடக்கிய இப்பிராந்தியம் அன்று உஸ்மானிய பேரரசின் ஆளுகைக்குக் கீழேயே இருந்தது.
.
இதன் காரணமாக அன்றைய ஹிஜாஸ் மக்களில் பெரும்பாலானோர் ஸூஃபிகளாகவே இருந்தனர். இன்னும் சில சாரார், நபியின் பாரம்பரிய இஸ்லாத்துக்கு ஓரளவு நெருக்கமான நெறிமுறைகளாகக் கருதப்படும் “மத்ஹப்” எனும் நெறிமுறைகளைப் பின்பற்றுவோராக இருந்தனர்.
.
சுருங்கக் கூறினால், இஸ்லாத்தின் அத்திவாரமாக நபி காலத்தில் திகழ்ந்த மக்கா, மதீனா எனும் புனித நகரங்களில் கூட நபியின் பாரம்பரிய இஸ்லாம் அன்று பெருமளவில் கைவிடப்பட்டிருந்தது.
.
அரபு தீபகற்பத்தின் தெற்குக் கரையோரப் பகுதி யெமன் எனும் தனி நாடாகப் பிரிந்திருந்தது. ஷீயா, ஸூஃபி ஆகிய இரு சித்தாந்தங்களதும் ஆதிக்கம் யெமனில் சம அளவில் கலந்திருந்ததால், யெமன் வாசிகளில் ஒரு சாரார் ஷீயாக்களாகவும், இன்னொரு சாரார் ஸூஃபிகளாகவும் இருந்தார்கள்.
.
அரபு தீபகற்பத்தின் கிழக்குக் கரையைப் பொருத்தவரை, பாரசீக வளைகுடா வாயிலாக ஸஃபவி ஈரானோடு அவர்களுக்கு நேரடித் தொடர்புகள் அதிகம் இருந்தன. இதன் விளைவாக கிழக்குக் கரை மக்களில் பெரும்பாலானோர் ஷீயாக்களாகவே இருந்தனர்.
.
ஆக மொத்தத்தில் ஹிஜாஸ், யெமன், கிழக்குக் கரை ஆகிய மூன்று பிராந்தியங்களும் ஸூஃபி உஸ்மானியர்களதும், ஷீயா ஸஃபவிகளதும் ஆதிக்கங்களுக்கு உட்பட்டவையாகவே அன்று இருந்தன.
.
இந்த மூன்று மாநிலங்களிலிருந்தும் தனியாகப் பிரிந்து, வெளியுலகோடு அதிகம் தொடர்புகள் அற்றதொரு பிராந்தியமாகவே அரபு தீபகற்பத்தின் மத்திய நிலப்பரப்பு அன்று இருந்தது. இப்பிராந்தியம் “நஜ்த்” என்று அழைக்கப் பட்டது.
.
இயற்கை வளங்கள் எதுவுமற்ற வெறும் பாலைவனப் பொட்டல் வெளியாக இருந்த நஜ்த் பிராந்தியத்துக்கு அரசியல் / பொருளாதார ரீதியில் அன்று எந்தப் பெறுமதியும் இருக்கவில்லை.
.
இதனால், நஜ்த் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதற்கோ, ஆட்சி செய்வதற்கோ அன்றிருந்த எந்த முஸ்லிம் சாம்ராஜ்ஜியங்களும் முன்வரவில்லை.
.
இதன் விளைவாக யாருமே கண்டுகொள்ளாத ஒரு புறம்போக்கு நிலப்பரப்பாகவே நஜ்த் பிரதேசம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது.
.
எந்தவோர் அரசினதும் சட்ட ஒழுங்குகள் இல்லாமலும், கேட்பாரற்ற நிலையிலும் காணப்பட்ட நஜ்த் பிரதேசத்தில் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமலே பல நூற்றாண்டுகள் வாழ்ந்து பழகிப் போன மக்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு, நாகரீகம், பண்பாடு எதுவும் அறியாத காட்டரபிகளாகவே இருந்தார்கள். இவர்களுள் அனேகமானோர் கொலை, கொள்ளை போன்ற வன்முறைகளைத் தவிர வேறெதுவும் அறியாத முரடர்களாகவே இருந்தார்கள்.
.
நஜ்த் வாசிகளின் சமயக் கோட்பாடுகளைப் பொருத்தவரை மூன்று வகையான மக்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். இதில் ஒரு சாரார் ஸூஃபி சித்தாந்தங்களை ஆதரிப்போராக இருந்தனர். இன்னொரு சாரார் நபிகளாருக்கு முன்னர் வாழ்ந்த அரேபியர்களைப் போல் அறியாமையில் ஊறிய சமூகத்தவராக இருந்தனர்.
.
இந்த இரண்டு தரப்பினரையும் சாராத இன்னொரு தரப்பினர், நபியின் பாரம்பரிய இஸ்லாத்துக்கு நெருக்கமான வாழ்க்கை நெறியாகக் கருதப்பட்ட “ஹன்பலி மத்ஹப்” எனும் வழிமுறையைப் பின்பற்றி வந்தனர்.
.
இவ்வாறு பல்வேறு சித்தாந்தங்களுக்கு நடுவில் காட்டுவாசிகளுக்கு நிகரான முரடர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த “நஜ்த்” எனும் இந்தப் பாலைவனப் பொட்டல் வெளியில் தான் வஹ்ஹாப் வாதத்தின் கதை ஆரம்பமானது.
.
திர்ரிய்யா அமீரகம்:
------------------------------
.
ஸஊதி அரேபியாவின் தற்போதைய தலைநகரம் ரியாத், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பெருநகரமாக இருக்கவில்லை; நஜ்தின் மத்தியில் அமைந்திருந்த ஒரு பொட்டல் வெளியாக மட்டுமே இருந்தது.
.
இந்தப் பொட்டல் வெளியை அண்டி விளைந்திருந்த பேரீச்சமரத் தோட்டம் ஒன்றில் ஸஊத் இப்னு முஹம்மத் இப்னு முக்ரின் என்பவரின் மூதாதையர்கள் 16 ஆம் நூற்றாண்டளவில் குடியேறினார்கள்.
.
இவர்களது குடியேற்றத்தின் விளைவாக நாளடைவில் இந்தத் தோட்டத்தைச் சூழவுள்ள நிலப்பரப்பு ஸஊத் குடும்பத்தவர்களது சொந்தக் கிராமமாக வளர்ச்சியடைந்தது. இந்தக் கிராமம் திர்ரியா எனும் பெயரில் அன்று அழைக்கப் பட்டது.
.
ஸஊத் இப்னு முஹம்மத் இப்னு முக்ரின் மரணித்த பின், அவரது மகன் முஹம்மத் இப்னு ஸஊத் என்பவர் ஸஊத் கோத்திரத்துக்கும், திர்ரியாவுக்கும் தலைவராக 1725 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
.
இதே காலப்பகுதியில் திர்ரிய்யாவுக்கு சற்று தொலைவில் அமைந்திருந்த “உயைனா” எனும் இன்னோர் ஊரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்.
.
1703 ஆம் ஆண்டு உயைனாவில் பிறந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப், “ஹன்பலி மத்ஹப்” எனும் இஸ்லாமிய நெறியைப் பின்பற்றும் ஒரு குடும்பத்திலேயே பிறந்தார்.
.
அப்துல் வஹ்ஹாபின் குடும்பத்தவர்கள் இஸ்லாமிய ஷரீயா நீதிமன்றத்தின் “காதி” நீதிபதிகளாக அன்று இருந்ததால், சிறு வயதிலேயே நபியின் பாரம்பரிய இஸ்லாம் குறித்த அறிவு அப்துல் வஹ்ஹாபுக்கு ஓரளவு இருந்தது.
.
தனது சிறு பிராயம் முதல் நபிகளார் போதித்த பாரம்பரிய இஸ்லாத்தைக் கற்பதில் அதிக ஈடுபாடு காட்டி வந்த அப்துல் வஹ்ஹாப் வளர்ந்த பிறகு மேல் படிப்புக்காக ஈராக் நோக்கி பிரயாணமானார்.
.
ஈராக்கில் அப்துல் வஹ்ஹாப் கண்ட காட்சிகள் அவரை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கின.
.
நபியின் போதனைகளை அடியோடு மறந்து, ஸூஃபி / ஷீயா சித்தாந்தங்களில் மூழ்கிப் போன ஈராக் வாசிகள், ஏக இறைவனை வணங்குவதற்குப் பதிலாக, கண்ட கல்லறைகளையெல்லாம் வணங்கி வழிபடுவதைப் பார்த்த அப்துல் வஹ்ஹாபின் உள்ளத்தில் புதிதாக ஓர் எண்ணம் தோன்றியது.
.
“இறைவனுக்கு இணை கற்பிக்கும் “ஷிர்க்” எனும் கொடிய பாவத்தையும், நூதனக் கோட்பாடுகளை இஸ்லாத்தினுள் கலப்படம் செய்யும் “பித்அத்” எனும் பாவத்தையும் ஒருபோதும் செய்ய வேண்டாம்” எனும் நபியின் இரண்டு எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தை விட்டு இவ்வளவு தூரம் வழி தவறியிருக்கிறது எனும் உண்மையை அப்போது அப்துல் வஹ்ஹாப் உணர்ந்தார்.
.
முஸ்லிம் சமூகத்தினுள் நுழைந்திருக்கும் “ஷிர்க்” (இணைவைப்பு) மற்றும் “பித்அத்” (நூதனக் கோட்பாடுகள்) எனும் இரண்டு அனாச்சாரங்களையும் ஒழிக்காமல் இப்படியே விட்டால், நபி போதித்த பாரம்பரிய இஸ்லாம் உலகில் அடியோடு அழிந்து போய் விடும் என்று அஞ்சினார்.
.
இதன் விளைவாக, “ஷிர்க்” / “பித்அத்” ஆகிய இரண்டு பாவங்களையும் தனது சமூகத்திலிருந்து களைவது மட்டுமே தனது வாழ்வின் ஒரே லட்சியம் எனும் உறுதியான முடிவோடு அப்துல் வஹ்ஹாப் ஊருக்குத் திரும்பினார்.
.
திரும்பி வந்த அப்துல் வஹ்ஹாப், இணைவைப்பு, நூதனம் ஆகிய இரண்டு பாவங்களுக்கும் எதிரான நபியின் இரண்டு எச்சரிக்கைகளையும் அடிப்படையாக வைத்துத் தனது ஊரில் மக்களிடையே பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.
.
“ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது; இறைவனைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது; நபி கற்றுத் தராத புது சித்தாந்தங்கள் எதையும் பின்பற்றக் கூடாது; மகான்களின் கல்லறைகளில் வேண்டுதல் செய்யக் கூடாது” எனும் செய்திகளைக் கருப்பொருளாக வைத்து மட்டுமே அப்துல் வஹ்ஹாபின் பிரச்சாரங்கள் அனைத்தும் அமைந்திருந்தன.
.
அப்துல் வஹ்ஹாப் பிரச்சாரம் செய்த கருத்துக்கள் ஊர்வாசிகளுக்கு ஆரம்பத்தில் சற்று புதுமையாக இருந்தாலும், நாளடைவில் அதில் இருந்த உண்மைகளை மக்கள் உணர ஆரம்பித்தனர்.
.
இதன் விளைவாக, ஊர் மக்களில் அனேகர் அதுவரை பின்பற்றி வந்த நூதன சித்தாங்களைக் கைவிட்டு, நபியின் பாரம்பரிய இஸ்லாத்துக்கு மீளத் தொடங்கினார்கள்.
.
அப்துல் வஹ்ஹாபின் பிரச்சாரத்தின் விளைவாக ஸூஃபி / ஷீயா சித்தாங்களைக் கைவிட்டுப் பாரம்பரிய இஸ்லாத்தை மீண்டும் பின்பற்றத் தொடங்கிய அரபிகள், தம்மைப் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று அன்று கூறிக் கொள்ளவில்லை. மாறாகத் தம்மைத் “தவ்ஹீத் வாதிகள்” / “ஸலஃபிகள்” என்றே கூறிக் கொண்டார்கள். இப்படி அவர்கள் தம்மை அடையாளப் படுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு.
.
“தவ்ஹீத்” எனும் சொல்லின் அர்த்தம் ஏக இறைவனை மட்டுமே வணங்குதல் என்பதாகும். இதனடிப்படையில், “தவ்ஹீத் வாதி” என்பதன் அர்த்தம், ஸூஃபிகளைப் போல் மகான்களின் கல்லறைகளை வணங்காமல், இறைவனை மட்டுமே வணங்குபவர் என்பது தான்.
.
இதே போல், “ஸலஃப்” எனும் சொல்லின் அர்த்தம் முன்னோர் என்பதாகும். இந்தச் சொல்லிலிருந்து உருவான “ஸலஃபி” எனும் பதத்தின் விரிவான அர்த்தம் “முன்னோர் வழிமுறையைப் பின்பற்றுபவர்” என்பது தான்.
.
அதாவது, “நபியின் காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் நபியிடம் அன்று எந்த இஸ்லாத்தைக் கற்றார்களோ, அது மட்டுமே உண்மையான இஸ்லாம். அந்த முன்னோர்கள் (ஸலஃபுகள்) இஸ்லாத்தைக் கடைப்பிடித்த அதே வழியில் தான் நாமும் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; பிற்கால நூதன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது.” எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர்களே “ஸலஃபி” என்று அன்று அறியப் பட்டனர்.
.
இந்த அடிப்படையில் அப்துல் வஹ்ஹாப் அன்று போதித்த கோட்பாடு, “ஸலஃப் கொள்கை” என்றும், அதைப் பின்பற்றியோர் “ஸலஃபிகள்” என்றும் பரவலாக அறியப்பட்டனர்.
.
அப்துல் வஹ்ஹாபின் “ஸலஃப்” கோட்பாட்டினால் கவரப்பட்டு, பாரம்பரிய இஸ்லாத்துக்கு மீள்வோர் எண்ணிக்கை அவரது ஊரில் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல், சுற்றியிருந்த ஊர்களிலும் அது பரவத் தொடங்கியது.
.
இதன் விளைவாக, மகான்களின் கல்லறைகளை வணங்கும் ஸூஃபி / ஷீயா சித்தாந்தகளின் ஆதிக்கம் உயைனாவைச் சூழவுள்ள பகுதிகளில் குறையத் தொடங்கியது.
.
நிலைமை தமக்குப் பாதகமாக மாறுவதை உணர்ந்த ஸூஃபிகளும், ஷீயாக்களும் அப்துல் வஹ்ஹாபின் பிரச்சாரத்தை உடனடியாக முடக்க முடிவெடுத்தனர்.
.
“அப்துல் வஹ்ஹாப் எனும் குழப்பவாதியின் பேச்சைக் கேட்டு வழிகெட்டுப் போனவர்கள், காலாகாலமாக எமது ஊர்களில் நாம் பாதுகாக்கும் மகான்களின் கல்லறைகளையெல்லாம் உடைக்கிறார்கள். இதற்கு உடனே ஒரு முடிவு கட்ட வேண்டும். ஒன்று, அப்துல் வஹ்ஹாபைக் கொல்ல வேண்டும். அல்லது எங்காவது கண்காணாத தொலைவுக்கு அவரைத் துரத்தியடிக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை உயைனா ஊர்த் தலைவர்கள் உடனே செய்யாவிட்டால், சுற்றியிருக்கும் எல்லா ஊர்களும் இணைந்து உயைனா மீது படையெடுத்து, உங்கள் ஊரையே தடம் தெரியாமல் அழித்து விடுவோம்” என்று அப்துல் வஹ்ஹாபின் ஊர்த் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டது.
.
இந்த அச்சுறுத்தலுக்குப் பயந்த ஊர்த் தலைவர்கள் அப்துல் வஹ்ஹாபை உடனடியாக ஊரிலிருந்து விரட்டியடித்தார்கள்.
.
சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்ட அப்துல் வஹ்ஹாப், ஊர் ஊராய் அலைந்து, இறுதியில் திர்ரியா எனும் கிராமத்திலிருந்த ஒரு பள்ளிவாசலில் அகதியாக அடைக்கலம் புகுந்தார். அங்கேயே ஓர் ஓரமாக உண்டு உறங்கி வந்தார்.
.
போக்கிடமற்ற அகதியாக இருந்த நிலையிலும் அப்துல் வஹ்ஹாப் தனது பிரச்சாரப் பணியைக் கைவிடவில்லை. அவர் தங்கியிருந்த பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வரும் மக்களிடமெல்லாம் பாரம்பரிய இஸ்லாத்தைப் போதிக்கும் “ஸலஃப்” கோட்பாட்டைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
.
இந்தப் பள்ளிவாசலுக்கு வழமையாகத் தொழ வரும் ஓர் இளைஞனை அப்துல் வஹ்ஹாபின் பிரச்சாரங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. இந்த இளைஞன் வேறு யாருமல்ல; திர்ரிய்யா ஊர்த் தலைவர் முஹம்மத் இப்னு ஸஊதின் மகனே இவர்.
.
அப்துல் வஹ்ஹாபின் ஸலஃப் கோட்பாட்டின் வாயிலாக நபியின் பாரம்பரிய இஸ்லாத்தைத் தனது ஊரில் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென்ற ஆசை இப்னு ஸஊதின் மகனுக்குள் அதிகரித்தது.
.
இதன் விளைவாக ஊர்த் தலைவராக இருந்த தனது தந்தையிடம், அப்துல் வஹ்ஹாபைச் சந்தித்துப் பேசுமாறு தனது தாய் வாயிலாக இந்த இளைனர் வற்புறுத்தினார்.
.
மகனின் வற்புறுத்தலுக்கு இணங்கிய இப்னு ஸஊத், பள்ளிவாசலில் தங்கியிருந்த அப்துல் வஹ்ஹாபைச் சந்தித்து உரையாடினார். அவரது பிரச்சாரத்தின் பின்னணி என்னவென்பதை விசாரித்த போது, ஸூஃபி நூதன சித்தாந்தகளின் விளைவாக நபி போதித்த உண்மையான பாரம்பரிய இஸ்லாம் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதை இப்னு ஸஊத் உணர்ந்தார்.
.
ஓர் ஊரின் தலைவர் எனும் அடிப்படையில் நபியின் பாரம்பரிய இஸ்லாத்தை உயிர்ப்பிக்கும் இந்தப் பணியில் தனக்கும் ஒரு கடமை இருப்பதை உணர்ந்த இப்னு ஸஊத், அப்துல் வஹ்ஹாபின் பிரச்சாரத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முன்வந்தார்.
.
இதன் விளைவாக, 1744 ஆம் ஆண்டு இப்னு ஸஊதுக்கும் அப்துல் வஹ்ஹாபுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது. இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வரும் கருத்திலேயே இருந்தது:
.
“இன்று முதல் இந்த ஊர், திர்ரிய்யா அமீரகம் என்றே அழைக்கப்படும். குர்ஆனும், ஹதீஸும் மட்டுமே இனிமேல் திர்ரிய்யாவின் அரசியல் சாசணமாக இருக்கும். திர்ரியா அமீரகத்தின் தலைவராக முஹம்மத் இப்னு ஸஊத், மற்றும் அவரது வாரிசுகளே ஆட்சி புரிவார்கள். அதே நேரம் இந்த அமீரகத்தின் உண்மையான ஆட்சியாளர் குர்ஆன் என்பதால், இங்கு அமுல்படுத்தப்படும் ஷரீயா சட்டதிட்டங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் பிரதான பொறுப்பாளராக அப்துல் வஹ்ஹாப் தான் என்றும் இருப்பார். இப்னு ஸஊத், அப்துல் வஹ்ஹாப் ஆகிய இருவரதும் கூட்டணியில் உருவான இந்த அமீரகத்தின் பிரதான நோக்கம், தூய பாரம்பரிய இஸ்லாத்தை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்வது தான். எனவே, எல்லா வகையிலும் அப்துல் வஹ்ஹாபையும், அவர் போதிக்கும் ஸலஃபு கோட்பாட்டையும் பாதுகாப்பது இந்த அமீரகத்தின் கடமை. இதற்காக யாரோடு யுத்தம் செய்ய நேர்ந்தாலும், அதற்கும் இந்த அமீரகம் தயார்.”
.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்துல் வஹ்ஹாப், இப்னு ஸஊத் ஆகிய இருவரதும் கூட்டணியில் அன்று உருவான திர்ரிய்யா அமீரகம் தான் பிற்காலத்தில் ஸஊதி அரேபியா எனும் நாடாக உருவெடுத்தது.
.
�திர்ரியாவின் வளர்ச்சி:
-----------------------------------
.
அப்துல் வஹ்ஹாப் மற்றும் இப்னு ஸஊத் ஆகிய இருவரதும் கூட்டணியின் விளைவாக, நபியின் பாரம்பரிய இஸ்லாத்தை அரசியல் சாசணமாகக் கொண்டு உருவான திர்ரியா அமீரகம் குறுகிய காலத்திலேயே அதீத வளர்ச்சி காண ஆரம்பித்தது.
.
நபியின் பாரம்பரிய இஸ்லாத்தை முஸ்லிம்களிடம் மீண்டும் அறிமுகம் செய்வதும், நூதனக் கோட்பாடுகள் வாயிலாக இஸ்லாத்தினுள் நுழைந்த “கல்லறை வணக்கம்” எனும் இணைவைப்பை முஸ்லிம் சமூகத்திலிருந்து துடைத்தெறிவதுமே திர்ரியா அமீரகத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் திர்ரியாவைச் சூழவுள்ள ஊர்களுக்கெல்லாம் அப்துல் வஹ்ஹாபின் மாணவர்கள் தவ்ஹீத் பிரச்சாரத்தை எடுத்துச் சென்றார்கள். இதன் விளைவாக ஒவ்வோர் ஊரிலும் ஏகத்துவ மறுமலர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.
.
சமூகத்தில் சீர்திருத்தங்கள் தலைதூக்கும் போது அதற்கு எதிர்ப்புகளும் அதிகரிப்பது தான் உலக வழமை.
.
இந்த அடிப்படையில், அப்துல் வஹ்ஹாபின் இஸ்லாமிய சீர்திருத்தத்துக்கும் நாலாபுறமும் எதிர்ப்புகள் ஆரம்பமாயின. இதன் உச்ச கட்டமாக சுற்றியிருந்த பல ஸூஃபி / ஷீயா ஊர்கள் திர்ரியா மீது போர்ப் பிரகடனம் செய்ய ஆரம்பித்தன.
.
உயிரே போனாலும் நபியின் ஏகத்துவக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்வதைக் கைவிடப் போவதில்லையென்று ஏற்கனவே திடசங்கற்பம் பூண்டிருந்த திர்ரியா அமீரகமும் சூழ்ந்து வந்த போர்களைக் கண்டு அஞ்சாமல் யுத்த களத்தில் குதித்தது. இதன் விளைவாகப் பல போர்கள் நடந்தன.
.
இக்காலப் பகுதியில் நடந்த தொடர் யுத்தங்கள் அனைத்திலும் திர்ரியா வெற்றி பெற்றதன் காரணமாக அரபு தீபகற்பத்தின் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பகுதிகள் திர்ரியாவின் ஆளுகையின் கீழ் சரணடைந்தன.
.
இந்த அசுர வளர்ச்சியின் இறுதிக் கட்டமாக மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களை உள்ளடக்கிய ஹிஜாஸ் மாநிலமும், ஷீயாக்களின் கோட்டையாகத் திகழ்ந்த ஈராக்கின் கர்பலா நகரமும் ஸலஃபி படைகளால் கைப்பற்றப்பட்டன.
.
ஹிஜாஸ், மற்றும் ஈராக்கை வெற்றி கொண்ட ஸலஃபிகள், அப்பிரதேசங்களில் மகான்களை வணங்குவதற்காக ஸூஃபிகளும், ஷீயாக்களும் கட்டியிருந்த கல்லறை வழிபாட்டுத் தளங்களையெல்லாம் தகர்த்தெரிந்தார்கள்.
.
ஏற்கனவே ஸலஃபிகளின் அபார வளர்ச்சியால் கடுப்பேறியிருந்த துருக்கி உஸ்மானிய தலைமையகத்தினால் மக்கா, மதீனா, கர்பலா ஆகிய நகரங்கள் பறிபோனதைச் சகிக்க முடியவில்லை. ஸலஃபிகளை அடியோடு அழித்தொழிக்க வேண்டுமென்ற வெறியோடு உஸ்மானிய பேரரசு பொங்கியெழுந்தது
.
இதன் விளைவாக, ஸலஃபிகள் மீது உஸ்மானிய பேரரசு படையெடுத்தது. 1811 முதல் 1818 வரை தொடர்ந்த இந்தப் படையெடுப்புகள் “வஹ்ஹாபி யுத்தம்”என்று வரலாற்றில் அறியப் படுகின்றன.
.
பல உக்கிரமான சமர்களின் இறுதியில் ஹிஜாஸ் மாநிலத்தை ஸலஃபிகளிடமிருந்து மீட்டெடுத்த உஸ்மானியர்கள், அத்தோடு நின்று விடவில்லை.
.
ஸலஃபிகளை உயிரோடு விட்டு வைப்பது தமது ஆட்சிக்கும், ஸூஃபி மதத்தின் இருப்புக்கும் எதிர்காலத்தில் ஆபத்தாகலாம் என்று கருதிய உஸ்மானிய அரசு திர்ரிய்யா அமீரகத்தையே அடியோடு அழிக்க முடிவு செய்தது.
.
உஸ்மானியர்களது இந்த முடிவுக்கு, அன்று அவர்களது இரகசிய நண்பனாக இருந்த பிரித்தானியாவின் ஆதரவும் இருந்ததால், ஸலஃபிகளை அழிக்கும் படலத்தைத் தயங்காமல் அவர்கள் ஆரம்பித்தார்கள்.
.
உஸ்மானியர் சார்பாக அன்று எகிப்தின் சக்திமிக்க ஆளுனராக இருந்த முஹம்மத் அலி பாஷா, தனது மகன் இப்றாஹீம் பாஷா தலைமையில் பிரத்தியேகமாக ஒரு பெரும் படையை திர்ரிய்யா நோக்கி அனுப்பி வைத்தார்.
.
பல சிரமங்களுக்கு மத்தியில் திர்ரியாவை வந்தடைந்த இப்றாஹீம் பாஷாவின் படையோடு கடுமையாகப் போராடிய ஸலஃபிகள் இறுதியில் தோல்வியைத் தழுவினார்கள்.
.
வெற்றி பெற்ற இப்றாஹீம் பாஷாவின் படை திர்ரிய்யா நகரத்தையே தடம் தெரியாமல் தரைமட்டமாக்கியது. அமீரகத்தின் அப்போதைய ஆட்சியாளர் அப்துல்லாஹ் இப்னு ஸஊத் உட்பட அரச குடும்பத்தின் முக்கிய புள்ளிகளை இஸ்தான்புல் நகருக்குக் கைதிகளாக அழைத்துச் சென்ற உஸ்மானியர்கள், அங்கு அவர்களைக் கொன்றார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸஊதின் தலையை வெட்டி, பொஸ்பொரஸ் நதியில் வீசியெறிந்தார்கள்.
.
இந்த அழிவுப் படலத்தோடு “முதலாவது ஸஊதி இராச்சியம்” என்று அறியப்படும் திர்ரிய்யா அமீரகத்தின் அத்தியாயம் நிறைவு பெற்றது. அத்தோடு ஸலஃபிகளின் தொல்லை தீர்ந்ததென்று உஸ்மானியப் பேரரசு விட்ட நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் அந்த நிம்மதி அதிக நாள் நீடிக்கவில்லை.
.
எஞ்சிய ஸஊத் கோத்திரத்தவர்கள் ஒருசில ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு சக்தியாக உருவெடுத்தார்கள். துருக்கியால் தரைமட்டமாக்கப்பட்ட திர்ரிய்யாவை மீண்டும் கட்டியெழுப்பி, மீண்டும் ஒரு ஸலஃபி ஆட்சியை நிறுவினார்கள். இது “இரண்டாம் ஸஊதி இராச்சியம்” / “நஜ்த் அமீரகம்” எனும் பெயர்களில் வரலாற்றில் அழைக்கப் பட்டது.
.
ஆனால், இந்த இரண்டாவது அமீரகத்தின் ஆயுளும் அதிக நாள் நீடிக்கவில்லை.
.
அரபு தீபகற்பத்தின் வடமத்திய பகுதியில் உஸ்மானியர்களது அனுசரனையோடு “ஹைல் அமீரகம்” எனும் பெயரில் தனி ஆட்சியொன்றை நிறுவிக் கொண்ட “ராஷிதி” வம்சத்தவர்களது படையெடுப்பின் காரணமாக நஜ்த் அமீரகமும் இறுதியில் அழிந்து போனது. திர்ரிய்யா நகரம் மீண்டும் தரைமட்டமாக்கப் பட்டது.
.
இந்த அழிவுப் படலத்தில் உயிர் பிழைத்த எஞ்சிய ஸஊத் குடும்பத்தவர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி, இறுதியில் குவைத்தில் தஞ்சம் புகுந்தனர்.
.
ஸஊத் குடும்பத்தவருக்கு அன்று ஆபத்தில் உதவி, அடைக்கலம் கொடுத்தவர்கள் குவைத் வாசிகள் என்பதுவும் ஸஊதி அரேபியாவுக்கும் குவைத்துக்கும் இடையில் இன்றும் ஆழமான நட்பு நிலவுவதற்கு ஒரு காரணம்.
.
ஸலஃபி ஸஊத் கூட்டத்தின் தொல்லை மொத்தமாகவே தீர்ந்து விட்டதென்று இரண்டாவது தடவையும் உஸ்மானியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்த போது தான் ஸஊத் குடும்பத்தின் மூன்றாவது எழுச்சி ஒரு பேரதிர்ச்சியாக உஸ்மானியர்களை ஆட்டம் காணச் செய்தது.
.
1902 ஆம் ஆண்டு ஒருசில வீரர்களை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு ரியாத் கோட்டை மீது அதிர்ச்சித் தாக்குதல் நடத்திய ஸஊத் குடும்பத்தின் அரச வாரிசு அப்துல் அஸீஸ் இப்னு அப்துர் ரஹ்மான் யாரும் எதிர்பாராத வேகத்தில் கோட்டையைக் கைப்பற்றினார்.
.
இரண்டாம் “இப்னு ஸஊத்” என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்த அப்துல் அஸீஸ் அன்று கைப்பற்றிய ரியாத் கோட்டை தான் இன்றைய ஸஊதி அரேபியாவின் அத்திவாரம்.
.
மிகுந்த தைரியமும், அஜானுபாகுவான உடல் தோற்றமும், அரசாள்வதற்குத் தேவையான மதிநுட்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அப்துஸ் அஸீஸ், குறுகிய காலத்தினுள்ளேயே இன்றிருக்கும் ஸஊதி அரேபியாவின் முழு நிலப் பரப்பையும் தனது ஆளுகைக்குக் கீழ் ஒருங்கிணைத்து, அதற்கு ஸஊதி அரேபியா என்று பெயரும் வைத்தார்.
.
அன்று முதல் இன்று வரை அப்துல் அஸீஸின் புதல்வர்களே ஸஊதி அரேபியாவை ஆண்டு வருகிறார்கள். இது தான் ஸஊதி அரேபியா உருவான வரலாறு,
.
வஹ்ஹாபி எனும் பெயர்:
----------------------------------------
.
ஸலஃபிகளை உலகிலிருந்து அடியோடு துடைத்தெறிய வேண்டுமென்று முடிவெடுத்த உஸ்மானியர்கள், ஸலஃபிகள் மீது இரண்டு விதமான யுத்தங்களை அன்று தொடுத்தார்கள்.
.
ஸலஃபிகளின் அரசியல் ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கில் ஒருபுறம் ஆயுத யுத்தம் தொடுத்த அதே வேளை, மறுபுறம் ஸலஃப் கோட்பாட்டை முழு உலமும் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதற்காக அதற்கெதிரான ஒரு கலாச்சார யுத்தத்தையும் உஸ்மானியர்கள் தொடுத்தார்கள்.
.
இந்தக் கலாச்சார யுத்தத்தின் ஒரு பகுதியாகவே “வஹ்ஹாபிகள்” எனும் பதம் அன்றைய உலகில் புழக்கத்துக்கு வந்தது.
.
அப்துல் வஹ்ஹாப் உருவாக்கிய கூட்டத்தை தவ்ஹீத் வாதிகள் என்றோ, ஸலஃபிகள் என்றோ உலகுக்கு அடையாளப் படுத்தினால், நபியின் போதனைகளை நேசிக்கும் முஸ்லிம்கள் அதில் கவரப்படும் வாய்ப்புகள் அதிகம்.
.
இதை அறிந்திருந்த உஸ்மானியர்கள், ஸலஃபிகள் மீது முஸ்லிம்கள் உள்ளத்தில் ஒரு வெறுப்புணர்வை விதைப்பதற்காக, இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாத ஒரு தனி மனித சித்தாந்தமாக தவ்ஹீத் கோட்பாட்டைச் சித்தரிக்க முடிவெடுத்தார்கள்.
.
இதன் அடிப்படையில், நவீன தவ்ஹீத் கோட்பாட்டின் தந்தையாக இருந்த அப்துல் வஹ்ஹாபின் பெயரையே திரித்து, ஸலஃபிகளை “வஹ்ஹாபிகள்” என்றும், அவர்களது கொள்கையை “வஹ்ஹாப் வாதம்” என்றும் உஸ்மானியர்கள் பரப்புரை செய்ய ஆரம்பித்தனர்.
.
தந்திரங்கள் வாயிலாகவும், ஊடகப் பரப்புரைகள் வாயிலாகவும் எதிரிகளைப் பலவீனப்படுத்தித் தோற்கடிப்பதில் என்றும் கைதேர்ந்தவர்களாக இருந்து வரும் பிரித்தானியாவின் உதவியும் இந்த விசயத்தில் உஸ்மானியர்களுக்கு இருந்ததால், ஸலஃபிகளுக்கு எதிரான இந்தக் கலாச்சார யுத்தம் நாளடைவில் அமோக வெற்றியடைந்தது.
.
இதன் விளைவாக, உலக மக்களில் பெரும்பாலானோர் அப்துல் வஹ்ஹாப் உயிர்ப்பித்த பாரம்பரிய இஸ்லாத்தை “வஹ்ஹாப் வாதம்” என்று வெறுப்புக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த வெறுப்புணர்வு இன்று வரை தொடர்கிறது.
.
இது தான் வஹ்ஹாப் வாதத்தின் உண்மையான கதை.
.
இன்றைய சர்வதேச ஊடகங்களது வஹ்ஹாப் வாதம் குறித்த பரப்புரைகளுள் தொன்னூறு வீதத்துக்கும் அதிகமானவை உண்மைக்குப் புறம்பானவை. பிரித்தானிய + உஸ்மானிய கூட்டணியினால் அன்று உருவாக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தின் விருத்தியடைந்த வடிவங்கள் மட்டுமே இவை.
.
உண்மையில், வஹ்ஹாப் வாதம் என்பது, அப்துல் வஹ்ஹாப் உருவாக்கிய ஒரு புது சித்தாந்தம் அல்ல. “ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது; இஸ்லாத்தினுள் நூதனங்களைக் கலப்படம் செய்யக் கூடாது” எனும் நபியின் இரண்டு எச்சரிக்கைகளையும் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டும் ஒரு பிரச்சாரம் மட்டுமே வஹ்ஹாப் வாதம்.
.
இந்த வஹ்ஹாப் வாதத்துக்கும், இன்று உலகில் பரவலாக நடக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் இல்லை.
.
உலகில் தோன்றிய எல்லா அரசுகளும் ஏதோ ஒரு கட்டத்தில் தனது இருப்புக்காக யுத்தங்கள் செய்யாமல் இருந்ததில்லை. இந்த அடிப்படையில் வஹ்ஹாபி அரசும் பல யுத்தங்கள் செய்துள்ளது. ஆனால், அப்பாவிப் பொதுமக்களைக் மக்களைக் கொல்வதை ஊக்குவிக்கும் பயங்கரவாதத்தை வஹ்ஹாப் வாதம் ஒருபோதும் போதித்ததுமில்லை; ஆதரித்ததுமில்லை. வரலாற்றை நிதானமாக ஆய்வு செய்தால் இந்த உண்மை பளிச்சென்று தெரியும்.
.
“என்ன தான் காரணம் சொன்னாலும், இன்று உலகெங்கும் இஸ்லாத்தின் பெயரில் பரவியிருக்கும் பயங்கரவாத வலைப்பின்னலோடு சம்பந்தப்பட்டிருக்கும் அனைவருமே வஹ்ஹாபிகள் தானே? அப்படியிருக்கும் போது, வஹ்ஹாப் வாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் சம்பந்தமே இல்லையென்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?”
.
இப்படியும் சிலர் இன்று கேள்வி கேட்பதுண்டு. வெளிப் பார்வைக்கு இந்தக் கேள்வி நியாயமாகத் தான் தெரியும். ஆனால், பயங்கரவாதத்தின் உண்மையான ஆணிவேர் பற்றிய தெளிவு இல்லாமையின் விளைவாகவே இது போன்ற கேள்விகள் எழுகின்றன.
.
�தீவிரவாதப் பட்டம்:
-------------------------------
.
“வஹ்ஹாப் வாதம்” எனும் பெயரில் அழைக்கப்படும் நபியின் பாரம்பரிய இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மீது இன்றைய உலகில் மூன்று வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுவது வழமை:
.
1. இவர்கள் அடிப்படைவாதிகள்
2. இவர்கள் தீவிரவாதிகள்
3. இவர்கள் பயங்கரவாதிகள்
.
இதில் முதலாவது குற்றச்சாட்டு ஒரு வகையில் உண்மையானது. நபியின் போதனைகளைப் பின்பற்றுவதில் வஹ்ஹாப் வாதிகள் அடிப்படை வாதிகள் தான் என்பதில் சந்தேகமில்லை.
.
ஒரு கொள்கையைப் பின்பற்றுவதில் ஒருவர் அடிப்படைவாதியாக இருப்பதை வைத்து அவர் தவறானவர் என்று முடிவு செய்வது சரியல்ல. அவர் பின்பற்றும் கொள்கை சரியானதா, தவறானதா என்பதைப் பொருத்தே அவரது அடிப்படைவாதம் சரியென்றோ, தவறென்றோ ஆகும்.
.
அடிப்படைவாதி எனும் பதத்தின் அர்த்தம், தனது கோட்பாட்டின் வெளிப்புறத் தோற்றத்தை விடவும், அதன் அத்திவாரத்தில் அதிகம் கவனம் செலுத்தும் ஒருவர் என்பது தான்.
.
இந்த அடிப்படையில், இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதன் மூலம் இன்று வரையறுக்கப் படுவது, இஸ்லாத்தின் அத்திவாரமாகத் திகழும் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் எனும் நிலைபாட்டில் உறுதியாக இருக்கும் ஒருவர் என்பது தான்.
.
இவ்வாறான ஓர் அடிப்படைவாதியை யாரும் தவறானவர் என்று கூற முடியாது. எந்த மதமாக இருந்தாலும் அதன் அடிப்படைகளை ஒருவர் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவர் உண்மையான பக்தனாக முடியும்.
.
உதாரணத்துக்கு பௌத்த மதத்தைப் பின்பற்றும் ஒருவர், அதன் அடிப்படைக் கோட்பாடுகளை விளங்கி, அதில் உறுதியாக இருந்தால் மட்டுமே அவரால் உண்மையான பௌத்த பக்தனாக முடியும்.
.
இதே போல், நபி போதித்த இஸ்லாத்தின் அடிப்படைகள் அனைத்தையும் உள்ளடக்கும் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் மட்டுமே பின்பற்றும் முஸ்லிம்களையே இன்றைய உலகம் “அடிப்படைவாதிகள்” என்று முத்திரை குத்தியுள்ளது.
.
ஆனால், இந்த முத்திரைக்குப் பின்னாலிருக்கும் வஹ்ஹாப் வாதிகளின் யதார்த்தம் சர்வதேச ஊடகங்கள் சித்தரிப்பது போல் இல்லை.
.
அடிப்படைவாதிகள் என்று அழைக்கப்படும் வஹ்ஹாபிகளின் அயராத முயற்சியின் விளைவாகவே ஸூஃபிகளாலும், ஷீயாக்களாலும் ஏற்கனவே குழி தோண்டிப் புதைக்கப் பட்டிருந்த நபியின் உண்மையான போதனைகள் மீண்டும் உலகில் உயிர்பெற்றன. வஹ்ஹாபிகளின் அடிப்படைவாதம் இல்லாதிருந்திருந்தால், நபி போதித்த உண்மையான இஸ்லாம் ஒருவேளை இன்று அழிந்து கூட போயிருக்கலாம்.
.
இஸ்லாத்தின் அடிப்படைகளை ஸூஃபிகளும், ஷீயாக்களும் புறக்கணித்ததன் விளைவாகவே, இஸ்லாத்தின் பெயரில் புதிதாக ஒரு மதத்தையே உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் வழிதவறிப் போனார்கள்.
.
அதே தவறை முஸ்லிம் சமூகம் மீண்டும் இழைத்து விடக் கூடாது என்பதற்காகவே இஸ்லாத்தின் அடிப்படைகளில் அதிகம் கவனம் செலுத்துவதை வஹ்ஹாபிகள் முற்படுத்தினார்கள்.
.
மேலும், இஸ்லாத்தை முறையாகப் பின்பற்ற விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனை வணங்கும் விடயத்தில் அடிப்படைவாதியாக இருக்க வேண்டும் என்பதே நபியின் போதனை.
.
அதே நேரம், அடிப்படைவாதம் எனும் பெயரில் ஒரு முஸ்லிம் அளவு கடந்து தீவிரமடையவும் கூடாது; நன்மையான காரியங்களில் கூட ஒரு முஸ்லிம் தீவிரமடையக் கூடாது; அனைத்து அம்சங்களிலும் யார் சமநிலை பேணுகிறாரோ, அவரே உண்மையான முஸ்லிம் என்றும் நபியவர்கள் மறுபுறம் எச்சரித்துள்ளார்கள்.
.
உதாரணத்துக்கு, “தினமும் இரவிலும், பகலிலும் இறைவனைத் தொழுங்கள்” என்பது நபியின் அடிப்படைக் கட்டளைகளுள் ஒன்று. இந்த அடிப்படையைக் கடைப்பிடிப்பதில் நபியின் சீடர்கள் சிலர் அன்று தீவிரம் அடைய ஆரம்பித்தார்கள். நாள் முழுவதையும் தொழுவதில் மட்டுமே கழித்த இவர்கள், தமது மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நபியவர்கள் இவ்வாறு வெறித்தனமாக தொழுகையில் ஈடுபட்டோரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். “இஸ்லாம் என்பது அனைத்திலும் நடுநிலை பேணும் வாழ்க்கை நெறியாகும். அனைத்துக்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரைமுறைகளையும் மீறி, யார் மார்க்கத்தில் தீவிரப் போக்கைக் கையாள்கிறாரோ, அவர் முஸ்லிம் அல்ல” என்று நபியவர்கள் எச்சரித்தார்கள்.
.
சுருங்கக் கூறினால், இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதில் ஒரு முஸ்லிம் உறுதியாக இருக்க வேண்டும்; அதே நேரம் அவர் அதில் அளவு கடந்து தீவிரமடையவும் கூடாது. இந்த இரண்டு கட்டளைகளுக்கும் சம அளவில் யார் கட்டுப்படுகிறாரோ, அவர் மட்டுமே உண்மையான முஸ்லிம் என்பது தான் நபியின் போதனை.
.
இரண்டில் ஒரு கட்டளைக்கு மட்டும் கட்டுப்பட்டு, மற்றதை நிராகரிப்பதன் மூலம் யார் தீவிரம் அடைகிறாரோ, அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுகிறார். இது தான் நபியின் வரம்பு.
.
இந்த வரம்பை மீறியோர் தான் இஸ்லாமிய வரலாற்றில் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் உருவெடுத்துள்ளார்கள்.
.
நடுநிலை பேணாமல், தீவிரப் போக்கைக் கையாளும் இது போன்ற தீவிரவாதிகளுள் அனேகரது பிரச்சாரங்கள் வெளிப் பார்வைக்கு வஹ்ஹாபிகளது பிரச்சாரங்களைப் போல தான் தெரியும்.
.
இதற்குக் காரணம், இவர்களும் வஹ்ஹாபிகளைப் போல் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறுவோராக இருப்பது தான்.
.
ஆனால், இதை வைத்து ஒருவர் “வஹ்ஹாபிகளும் தீவிரவாதிகளும் ஒன்று தான்” என்று கூறினால், அது அறியாமை.
.
ஒரே கூற்றை இரண்டு பேர் ஒரே வடிவத்தில் கூறுகிறார்கள் என்பதற்காக அந்த இரண்டு பேரும் ஒரே கொள்கையைச் சார்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை.
.
உதாரணத்துக்கு, “குர்ஆனை இறைவேதம் என்று நான் நம்ப மாட்டேன்” என்று ஒரு நாத்திகன் கூறுவது போலவே இஸ்லாத்தை விரும்பாத, ஹிந்து, பௌத்த, கிறித்தவ மதம் சார்ந்த வேறு பலரும் கூறுவது வழமை.
.
இதை வைத்து ஒருவர், “ஹிந்து, பௌத்த, கிறித்தவ மதத்தவர் அனைவருமே நாத்திகர்கள் தான்” என்று கூறினால், அது எவ்வளவு அறிவீனமோ, அதே போன்ற அறிவீனம் தான் அடிப்படைவாதத்தைக் காரணம் காட்டி வஹ்ஹாபிகளையும் தீவிரவாதிகள் என்று கூறுவதும்.
.
வஹ்ஹாபிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கடுமையாக எதிர்ப்பவர்கள். இது தான் உண்மை.
.
இந்த உண்மையை இன்றைய உலகின் நடைமுறை உதாரணங்களை வைத்தே நாம் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்:
.
நபியின் பாரம்பரிய இஸ்லாத்தைப் போதிக்கும் வஹ்ஹாப் வாதத்தின் பிறப்பிடமே ஸஊதி அரேபியா தான். அப்துல் வஹ்ஹாப் காலத்திலிருந்து இன்று வரை ஸஊதியின் அரசியல் சாசணம் வஹ்ஹாப் வாதத்தை மையமாக வைத்தே இருந்து வருகிறது.
.
சுருங்கக் கூறினால், வஹ்ஹாப் வாதத்தை அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாகக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு ஸஊதி அரேபியா தான்.
.
இஸ்லாத்தின் அடிப்படைகளில் உறுதியாக இருத்தல்; அதே நேரம் அதில் தீவிரத்தைத் தவிர்த்து நடுநிலை பேணுதல் ஆகிய நபியின் இரண்டு கட்டளைகளுக்கும் சம அளவில் கட்டுப்படும் ஒரே நாடு ஸஊதி அரேபியா தான்.
.
இந்த அடிப்படையில், இஸ்லாத்தின் அடிப்படைகளை ஸஊதி வஹ்ஹாபிகள் யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை. இந்த நிலைபாட்டுக்காகவே ஸஊதி அரசாங்கத்தை இன்று அனேகர் விமர்சிப்பதும் வழக்கம்.
.
இதை இன்னொரு விதத்தில் கூறினல், இஸ்லாத்தின் அடிப்படைகளைப் பின்பற்றுவதில் ஸஊதி அரேபியா ஓர் அடிப்படைவாதி. அதே நேரம், அதில் தீவிரம் அடைந்து நபியின் வரம்புகளைத் தாண்டாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் ஸஊதி அரேபியா நடுநிலைவாதி. அதே நேரம், நபியின் வரம்புகளையும் மீறி, தீவிரப் போக்கைக் கையாளும் பயங்கரவாதிகளுக்கு ஸஊதி அரேபியா பரம எதிரி. இது தான் யதார்த்தம்.
.
இந்த யதார்த்தத்தின் எதிரொலியாகவே, உலக முஸ்லிம் சமூகங்களில் வஹ்ஹாப் வாதத்தின் வளர்ச்சிக்காக ஒரு புறம் கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் சஊதி வஹ்ஹாபிகள், மறுபுறம் தமது தேசத்தில் தீவிரவாதத்தை விதைக்க முயற்சிக்கும் நூற்றுக் கணக்கான கடும்போக்காளர்களைச் சிறையில் அடைத்தும், தண்டித்தும் வருகிறார்கள்.
.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா?
.
“ஸஊதி அரேபியா தான் தீவிரவாதத்தைப் போதிக்கிறது” என்று ஒருபுறம் குற்றம் சாட்டும் அதே சர்வதேச ஊடகங்கள் தான், மறுபுறம் ஸஊதி தனது நாட்டுக்குள் தீவிரவாதம் தலைதூக்க விடாமல் கடும்போக்காளர்களைத் தண்டிக்கும் போது அவர்களை “காட்டுமிராண்டிகள்” என்றும் விமர்சனமும் செய்கின்றன.
.
ஊடகங்களின் இந்த இரட்டை வேஷத்திலிருந்தே, ஸஊதி மீது இவர்களுக்கு இருப்பது காழ்ப்புணர்ச்சி தான் என்பது தெரிகிறது.
.
ஸஊதியின் இந்த நடுநிலைப் போக்குக்கு எதிராக, தீவிரவாதத்தையே தமது கொள்கையாக ஆக்கிக் கொண்ட சில கடும்போக்காளர்களே இன்று உலகில் நடக்கும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்துக்கும் காரணம்.
.
இந்தக் கடும் போக்காளர்கள் யாரென்பது தெளிவாகத் தெரிந்து விட்டால், இஸ்லாத்தின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தின் வேர் எதுவென்பதும் தெரிந்து விடும். 

தீவிரவாதத்தின் ஆணிவேர்:
--------------------------------------------
.
இஸ்லாத்தைப் போதித்த நபியவர்கள் வெறும் இறைத்தூதராக மட்டும் இருக்கவில்லை; மதீனாவைத் தலை நகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துக்கு அரசராகவும் இருந்தார்கள்.
.
இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதில் மட்டுமல்லாமல், ஆட்சி செய்வதிலும் நபியவர்கள் தீவிரம் இல்லாத நடுநிலையையே பேணி வந்தார்கள்.
.
நபி மரணத்த பின்பு, நபி வகித்த ஆட்சிப் பொறுப்பை அபூபக்கர் (ரழி) ஏற்றார். அவரது மரணத்தின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை உமர் (ரழி) ஏற்றார். உமருக்குப் பின்னர் உஸ்மான் (ரழி) ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார்.
.
நபி (ஸல்) முதல் உமர் (ரழி) வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாகத் தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சியில், உஸ்மான் (ரழி) காலத்தில் சில அரசியல் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தன.
.
இந்த அரசியல் பிளவுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது முஸ்லிம்கள் மத்தியில் அன்று புதிதாக உருவான ஒரு தீவிரவாதக் கூட்டம் தான்.
.
நடுநிலை பேண வேண்டும் எனும் நபியின் போதனையைப் புறக்கணித்து, இஸ்லாத்தின் சில அடிப்படைகளை மட்டுமே தூக்கிப் பிடித்து, அதில் தீவிரமடையும் ஒரு கூட்டம் பிற்காலத்தில் உருவாவார்கள் என்றும், அவர்கள் இஸ்லாத்தின் பெயரில் முஸ்லிம்களையே அழிப்பார்கள் என்றும், இதன் மூலம் இஸ்லாத்தை விட்டே அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும் நபியவர்கள் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.
.
உஸ்மான் (ரழி) காலத்தில் உருவான இந்த வழிகெட்ட தீவிரவாதக் கூட்டத்தினர் “ஃகவாரிஜ் கூட்டம்” எனும் பெயரில் வரலாற்றில் அழைக்கப் பட்டார்கள்.
.
ஃகவாரிஜ் கூட்டத்தின் கோட்படுகள் மிகவும் கடுமையானவை; மனிதாபிமானம் அற்றவை; நபி போதித்த இஸ்லாத்துக்கு எதிரானவை.
.
“முஸ்லிம்களைத் தவிர வேறு யாரும் இந்த உலகை ஆளக் கூடாது; இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும்; காஃபிர்களோடு சமாதானமாக வாழும் முஸ்லிம்களையும் கொல்ல வேண்டும்; காஃபிர்களைச் சார்ந்த பொதுமக்களைக் கூட கொல்வது குற்றமில்லை” என்றெல்லாம் கடும் நியதிகளை இஸ்லாத்தின் பெயரில் தாமாக வகுத்துக் கொண்ட இவர்கள், நபியின் வரம்புகளையே மீறி இஸ்லாத்தை விட்டே வெளியேறியவர்கள்.
.
இவர்களது அளவு கடந்த அட்டகாசங்கள் தாங்க முடியாமல், அன்று இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக இருந்த நபியின் மருமன் அலீ (ரழி) அவர்கள் இந்த ஃகவாரிஜ் கூட்டத்துக்கு எதிராகப் போர் தொடுத்து, அவர்களை அடியோடு அழித்தார்கள்.
.
இஸ்லாமிய வரலாற்றில் இன்று வரை தோன்றிய எல்லாப் பயங்கரவாத அமைப்புகளதும் கோட்பாடுகள் இந்த ஃகவாரிஜ் கோட்பாட்டிலிருந்தே முளைத்துள்ளன.
.
அலீ (ரழி) அவர்களது காலத்தில் ஃகவாரிஜ் கூட்டத்தினர் அடியோடு அழிக்கப் பட்ட பின், அவர்களது தீவிரவாதக் கொள்கையும் இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட காலம் புதையுண்டு போயிருந்தது. குறிப்பிடும் அளவுக்குப் பெரிய தீவிரவாத அமைப்புகள் எதுவும் இஸ்லாமிய உலகில் அதன் பிறகு நீண்ட காலமாக முளைக்கவில்லை.
.
ஆனால், இந்த நிலை 19 ஆம் நூற்றாண்டின் பிறகு மாறத் தொடங்கியது.
.
துருக்கி உஸ்மானியர்களுக்கு ஸஊதி மேல் ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாகவும், முதலாம் உலகப் போர் முஸ்லிம் உலகில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் 20 ஆம் நூற்றாண்டில் ஃகவாரிஜ் தீவிரவாதம் மீண்டும் வேறு பெயர்களில் தலைதூக்க ஆரம்பித்தது.
.
ஸஊதி வஹ்ஹாபிகளைப் பொருத்தவரை அவர்களது அரசியல் இலக்கு மிகவும் எளிமையானது.
.
ஃகவாரிஜ் கூட்டத்தினரைப் போல், உலகிலுள்ள காஃபிர்கள் அனைவரையும் கொல்ல வேண்டுமென்ற கொடூரமான திட்டங்கள் எதுவும் ஸஊதி வஹ்ஹாபிகளிடம் என்றும் இருந்ததில்லை; அதை அவர்கள் ஒருபோதும் சரிகண்டதும் இல்லை.
.
அதே போல், முழு முஸ்லிம் உலகையும் தானே ஆள வேண்டும் எனும் பாரிய நோக்கத்தின் அடிப்படையிலான அரசியல் திட்டங்களோடு செயல்படுவதிலும் ஸஊதி வஹ்ஹாபிகள் முனைப்பாக இருந்ததில்லை.
.
ஸஊதி வஹ்ஹாபிகளின் எதிர்பார்ப்புகள் தெளிவானவை; சிக்கல்கள் அற்றவை.
.
வஹ்ஹாப் வாதத்தை முஸ்லிம் உலகம் முழுவதும் பரவச் செய்வதன் மூலம் ஸூஃபி, ஷீயா சித்தாந்தங்களால் சிதைவடைந்த பாரம்பரிய இஸ்லாத்தை உலகில் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். தமது இருப்பையும், முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இயன்ற வரை ஸ்தீரப் படுத்திக் கொள்ள வேண்டும்.
.
இந்த இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் மட்டுமே ஸஊதி வஹ்ஹாபிகள் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளார்கள். அவர்கள் செய்த யுத்தங்கள் கூட இந்த நோக்கங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
.
ஆனால், இதற்கு நேர்மாறானதொரு மன நிலையிலேயே ஷீயா ஈரானியர்களும், துருக்கி உஸ்மானியர்களும் அன்று முதல் இயங்கி வந்துள்ளனர்.
.
நபியின் உண்மையான போதனைகளை முஸ்லிம்களிடம் எத்தி வைப்பதிலோ, அவற்றைப் பாதுகாப்பதிலோ இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருந்ததில்லை. மாறாக, முழு உலகிலும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்வதிலேயே இவ்விரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளனர். தமது அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக இஸ்லாத்தை ஒரு கருவியாக மட்டுமே இவர்கள் பயன்படுத்துவதி வந்தார்கள்.
.
ஸஊதி வஹ்ஹாப் வாதத்தின் வளர்ச்சியை ஆயுதங்கள் மூலம் அழித்தொழிக்க ஏற்கனவே பல தடவை முயற்சித்த துருக்கி உஸ்மானிய பேரரசு, அந்த முயற்சியில் தொடர்ந்தும் தோல்வியையே தழுவியது. எவ்வளவு அடித்த போதும் வஹ்ஹாப் வாதம் வளர்ந்து கொண்டே சென்றது.
.
ஓர் எதிரியை அடித்து ஒழிக்க முடியாது எனும் நிலை ஏற்பட்டு விட்டால், அவனது சக்தியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் எனும் அரசியல் உத்தியை உஸ்மானியர்களும் இறுதியில் கையாளத் தொடங்கினர்.
.
ஸலஃபிய்யா இயக்கம்:
------------------------------------
.
வஹ்ஹாப் வாதப் பிரச்சாரங்களெல்லாம் நபியின் பிரச்சாரங்களை அச்சொட்டாகப் பிரதிபலித்ததன் காரணமாக, உலகெங்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் வஹ்ஹாப் வாதத்துக்கு வரவேற்பு அதிகரிக்க ஆரம்பித்தது. இந்தியா போன்ற நாடுகளில் கூட வஹ்ஹாப் வாதத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியது.
.
வஹ்ஹாப் வாதத்தின் வளர்ச்சியானது வெறும் ஆன்மீக வளர்ச்சியாக மட்டுமே இருந்தாலும், அதுவே நாளடைவில் உலக முஸ்லிம்கள் உள்ளத்தில் ஸஊதியை மானசீகத் தலைமையகமாகக் கருத வழி வகுக்கலாம். அப்படி நடந்தால், முஸ்லிம் உலகின் மீது தனக்கிருக்கும் அரசியல் ஆதிக்கம் பறிபோய், அது ஸஊதி வசம் சேர்ந்து விடலாம் என்று துருக்கி உஸ்மானியர்கள் அஞ்சினர்.
.
இந்த அச்ச உணர்வின் காரணத்தால், வஹ்ஹாப் வாதத்தின் தலைமை பீடத்தையும் திரை மறைவில் தாமே கைப்பற்றிக் கொள்ள உஸ்மானிய துருக்கி ஒரு தந்திரம் செய்தது. அந்தத் தந்திரம் இது தான்:
.
உஸ்மானிய துருக்கியின் மேற்பார்வையின் கீழ் புதிதாக ஓர் இஸ்லாமியப் பிரச்சார இயக்கம் உருவாக வேண்டும். வெளிப் பார்வைக்கு அது ஒரு வஹ்ஹாபி இயக்கமாகம் போலவே இருக்கும். ஆனால், உள்ளுக்குள் அதன் கொள்கை வஹ்ஹாப் வாதமாக இருக்காது. முஸ்லிம் உலகின் அரசியல் தலைமைபீடம் ஸஊதியிடம் ஒருபோதும் சென்று விடாமல் தடுப்பதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கும். ஆனால், இந்த உண்மை முஸ்லிம் பொது மக்களுக்குத் தெரியக் கூடாது.
.
இப்படி ஆரம்பிக்கப்படும் இந்த இயக்கத்தின் பிரச்சாரங்கள் அனைத்தும் வஹ்ஹாப் வாதத்தின் பெயரிலேயே முஸ்லிம் உலகம் முழுவதும் பரப்பப்படும்.
.
இப்படிச் செய்யும் போது, வஹ்ஹாப் வாதத்தை விரும்பும் உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்தப் புது இயக்கத்தில் வந்து சேருவார்கள். இதன் விளைவாக ஸஊதியிடம் இருக்கும் வஹ்ஹாப் வாதத்தின் தலைமை பீடத்தை இந்த இயக்கத்தின் வாயிலாகவே பிறகு துருக்கியிடம் கைமாற்ற முடியும்.
.
இந்தத் தந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஒரு நாடகம் ஆரம்பமானது.
.
துருக்கி உஸ்மானிய பேரரசின் 34வது சுல்தான் என்றும், இறுதி சுல்தான் என்றும் அறியப்படும் இரண்டாம் அப்துல் ஹமீத் என்பவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ஒரு ஷீயா அரசியல் ஆர்வலரை இஸ்தான்புல் நகருக்கு அழைத்து, அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தார்.
.
“முஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள கொள்கை வேறுபாடுகளையெல்லாம் ஒருபுறம் வைத்து விட்டு, உலக முஸ்லிம் ஐக்கியத்தை மட்டுமே முன்னிறுத்தி ஒரே தலைமைத்துவத்தின் கீழ் அனைவரும் ஒன்று பட வேண்டும்” எனும் கருத்தை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதன் மூலம் முஸ்லிம்கள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் கீழ் இந்த அரசியல் ஆர்வலர் ஒன்றிணைக்க வேண்டும்.
.
இப்படி ஒன்றிணைப்பதற்காகப் புதிதாக ஓர் இஸ்லாமிய இயக்கத்தை இந்த அரசியல் ஆர்வலர் ஆரம்பிக்க வேண்டும். இந்த இயக்கத்தின் பெயரில் ஸூஃபி / ஷீயா / துருக்கி போன்ற எந்தச் சொற்களும் இருக்கக் கூடாது. மாறாக, வஹ்ஹாபிகளின் ஸலஃபி கோட்பாட்டின் பெயரிலேயே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
.
இப்படிச் செய்வதன் மூலம், முஸ்லிம் உலகில் மீண்டும் ஓர் இஸ்லாமிய எழுச்சி ஏற்படுவது போன்றதொரு பிரமையை இந்த இயக்கத்தின் வாயிலாக முஸ்லிம்கள் மத்தியில் தோற்றுவிக்கலாம். இந்தப் பிரமையின் விளைவாக அனைவரும் இந்த இயக்கத்தினுள் இணைவார்கள். அப்படி இணைந்த பின், இந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் முழு முஸ்லிம் உலகையுமே கட்டுப்படுத்தலாம்.
.
இது தான் சுல்தான் அப்துல் ஹமீத் அந்த அரசியல் ஆர்வலரிடம் ஒப்படைத்த பணி. இந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குக் கூலியாக துருக்கியில் ஒரு சொந்த வீடும், சம்பளமும் இந்த அரசியல் ஆர்வலருக்கு சுல்தான் மூலம் வழங்கப் பட்டன. இந்த அரசியல் ஆர்வலரின் பெயர் ஜமாலுதீன் ஆஃப்கானி.
.
யார் இந்த ஜமலுதீன் ஆஃப்கானி?
.
1838 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் அஸதாபாத் எனும் ஊரில் ஒரு ஷீயா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜமாலுதீன் ஆஃப்கானி, முஸ்லிம் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து பல புதுக் கோட்பாடுகளை விதைத்த ஒரு சர்ச்சைக்குரிய நபர். இவரது பூர்வீகமே பல சர்ச்சைகளைக் கொண்டது.
.
தனது உண்மையான ஷீயா பூர்வீகத்தை மூடி மறைப்பதற்காக ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் அஸதாபாத் எனும் ஊரில் பிறந்த ஒரு ஸுன்னி முஸ்லிமாகவே ஆஃப்கானி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.
.
தனது பூர்வீகம் பற்றிய உண்மைகளை மறைப்பதற்காக ஷீயாக்கள் கடைப்பிடிக்கும் “தகிய்யா” எனும் பொய் சொல்லும் கலையையும் ஆஃப்கானி அடிக்கடி உபயோகித்துள்ளார் என்றும் வரலாற்று ஆய்வாளர்களின் பதிவுகள் கூறுகின்றன.
.
இளமைக் காலம் முதல் ஈரானிலிருந்து இந்தியாவுக்கும், அங்கிருந்து மீண்டும் ஈரானுக்கும், அங்கிருந்து ஆஃப்கானிஸ்தானுக்கும், இடையிடையே துருக்கிக்கும், எகிப்துக்கும், பாரிஸுக்கும், லண்டனுக்கும், ரஷ்யாவுக்கும் என்று மாறி மாறிப் பிரயாணம் செய்வதிலேயே காலம் கழித்த இவர், ஆஃப்கானிஸ்தானில் குடியேறிய போது தன்னை ஒரு துருக்கி பிரஜையாகவே அறிமுகம் செய்து கொண்டார்.
.
சராசரி முஸ்லிம்களைப் போலல்லாமல், ஐரோப்பிய கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றிய ஆஃப்கானி, ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோற்கும் கட்டாய நோன்பைக் கூட நோற்காத ஒரு நபர் என்று இவர் பற்றி எழுதப்பட்ட ஆய்வறிக்கைகள் அன்றைய பிரித்தானிய அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டதுண்டு.
.
சுருக்கமாகக் கூறினால், பூர்வீகத்தில் ஷீயாவாகவும், வெளித் தோற்றத்தில் ஸுன்னி போலவும், இன்னொரு புறம் வஹ்ஹாபி போலவும், மற்றொரு புறம் ஐரோப்பிய முற்போக்குவாதியாகவும், இவை அனைத்துக்கும் நடுவில் இலுமினாட்டி (Illuminati) இரகசிய சமூகத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும் மாசோனி (Freemason) இயக்கத்தில் ஒரு க்ராண்ட் மாஸ்டர் (Grand Master) ஆகவும் பல்வேறு பாத்திரங்களை ஒரே நேரத்தில் நடித்த இந்த ஆஃப்கானி என்பவர் ஒரு மகா நடிகர்.
.
இந்த மகா நடிகரைத் தான் துருக்கி உஸ்மானிய சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத், தனது அரசியல் நாடகத்தின் பிரதான பாத்திரமாகத் தேர்ந்தெடுத்து, முஸ்லிம்களைத் தனது அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் பணியை ஒப்படைத்தார்.
.
இதற்கமைய இரண்டு பிரதான சித்தாந்தங்களை ஜமாலுதீன் ஆஃப்கானி முஸ்லிம் உலகில் விதைக்க ஆரம்பித்தார்.
.
1. Pan-Islamism (சர்வ இஸ்லாமியம்) எனும் பெயரில் அறியப்பட்ட ஐக்கியப்படுத்தல் சித்தாந்தம். “மத நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்கள் உள்ளுக்குள் எத்தனை பிரிவுகளாகவும் இருந்து விட்டுப் போகட்டும்; யார் என்ன கொள்கையைப் பின்பற்றினாலும் பரவாயில்லை. ஆனால், அனைத்து முஸ்லிம்களும் ஒரே அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று பட்டு இருந்தால் மட்டும் போதும்” என்பதே இந்த சித்தாந்தத்தின் கருப்பொருள்.
.
2. Islamic Modernism (இஸ்லாமிய நவீனத்துவம்) எனும் பெயரில் அறியப்பட்ட நவீனமயமாக்கல் சித்தாந்தம். “நபியின் காலத்து இஸ்லாமிய மரபுகளெல்லாம் இன்றைய நவீன உலகுக்குப் பொருந்தாது. எனவே, காலத்துக்கு ஏற்றவாறு இஸ்லாத்தின் போதனைகளையும், சட்டதிட்டங்களையும் நவீன மயப்படுத்த வேண்டும்” என்பதே இந்த சித்தாந்தத்தின் கருப்பொருள். இதன் அடிப்படையில் தேசியவாதம், ஜனநாயகம், சிவில் உரிமைகள், பகுத்தறிவு வாதம் போன்ற பல ஐரோப்பிய சித்தாந்தங்களை இஸ்லாத்தினுள் ஆஃப்கானி புதிதாகக் கலப்படம் செய்தார்.
.
இந்த இரண்டு சித்தாந்தங்களையும் உள்ளடக்கியதாகப் புதிதாக ஓர் இஸ்லாமிய பிரச்சார இயக்கத்தையும் ஆஃப்கானி தோற்றுவித்தார். இந்த இயக்கத்தின் பெயர் “ஸலஃபிய்யா” என்பதாகும்.
.
வெளிப் பார்வைக்கு ஒரு ஸஊதி வஹ்ஹாபி இயக்கம் போலவே தோற்றமளித்த இந்த ஸலஃபிய்யா இயக்கம், ஆஃப்கானியின் மரணத்துக்குப் பிறகு பல மாற்றங்களுக்கு உள்ளாகிப் புதுப் பரிணாமம் அடைந்து, இறுதியில் ஒரு மாபெரும் இஸ்லாமிய இயக்கமாக நவீன உலகில் உருவெடுத்தது.
.
ஸலஃபிய்யா முதல் குதுபி வரை:
----------------------------------------------------
.
முஸ்லிம் உலகின் அபிமானம் ஸஊதி வஹ்ஹாப் வாதத்தின் பக்கம் சென்று விடக் கூடாது என்பதற்காக, துருக்கி சுல்தான் அப்துல் ஹமீத் ஓர் அரசியல் திட்டம் தீட்டி, அதை செயல்படுத்தும் பணியை ஜமாலுதீன் ஆஃப்கானியிடம் ஒப்படைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
.
துருக்கி சுல்தான் ஒப்படைத்த பணியை நிறைவேற்றவும், அத்தோடு தனது சொந்தத் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளவும் “ஸலஃபிய்யா” எனும் பெயரில் ஓர் இஸ்லாமிய இயக்கத்தை ஆஃப்கானி உருவாக்கினார்.
.
வெளிப் பார்வைக்கு இந்த ஸலஃபிய்யா இயக்கம் ஸஊதி ஸலஃப் வாதம் போலிருந்தாலும், உள்ளுக்குள் முற்றிலும் வித்தியாசமானதொரு சித்தாந்தமாகவே இருந்தது. இரண்டுக்கும் இடையிலான சில பிரதான வித்தியாசங்களைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்:
.
வித்தியாசம் 1:
ஸஊதி ஸலஃப் வாதத்தின் அடிப்படை நோக்கம், ஸூஃபி / ஷீயா சித்தாந்தங்கள் வாயிலாக முஸ்லிம் உலகில் புரையோடியிருக்கும் இணைவைப்பு, மற்றும் நூதனம் ஆகிய இரு வழிகேடுகளையும் களைந்து, நபியின் பாரம்பரிய இஸ்லாத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது மட்டுமே. இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே ஸலஃபிகள் செய்த யுத்தங்கள் கூட அமைந்திருந்தன.
.
இதற்கு நேர்மாற்றமான நோக்கத்துடனேயே ஆஃப்கானி உருவாக்கிய ஸலஃபிய்யா இயக்கம் செயல்பட்டது. முழு முஸ்லிம் உலகையும் தமது அரசியல் தலைமையின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இஸ்லாத்தின் பெயரில் ஒரு வல்லரசு ஆட்சியை அமைப்பதே ஸலஃபிய்யாவின் பிரதான நோக்கமாக இருந்தது.
� ஸூஃபி / ஷீயாக்களால் உருவான வழிகேடுகளை முஸ்லிம் சமூகத்திலிருந்து களைவது போன்ற பணிகளெல்லாம் ஸலஃபிய்யாவின் பார்வையில் இரண்டாம் பட்சப் பணிகள் மட்டுமே.
.
சுருக்கமாகக் கூறினால், ஸஊதி ஸலஃபிகளின் பிரதான நோக்கம் இஸ்லாத்தை மறுசீரமைப்பது. ஆஃப்கானியின் ஸலஃபிய்யாவின் பிரதான நோக்கம் ஆட்சி அமைப்பது.
.
வித்தியாசம் 2:
ஸஊதி ஸலஃபிகள், தமது முன்னோரின் வழிமுறைகளையும், கலாச்சாரத்தையுமே அதிகம் விரும்பினர். நவீன மேற்கத்திய நாகரீகம் சார்ந்த சித்தாந்தங்களையும், அடையாளங்களையும் அவர்கள் விரும்பவில்லை.
.
இதற்கு நேர்மாற்றமாக, ஆஃப்கானியின் ஸலஃபிய்யா தரப்பினர், ஐரோப்பிய அறிவியல் மறுமலர்ச்சியினால் உருவான நவீன மேற்கத்திய சித்தாந்தங்களை இஸ்லாத்தினுள் நுழைப்பதன் மூலம் இஸ்லாத்தை நவீன மயப் படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். முன்னோர்களது கலாச்சாரங்களை அழிப்பதிலும், மேற்கத்திய கலாச்சாரத்தை அரவணைப்பதிலுமே இவர்கள் முனைப்பாக இருந்தார்கள்.
.
வித்தியாசம் 3:
ஸஊதி ஸலஃபிகள் அன்று முதல் இன்று வரை ஸூஃபிகளையும், ஷீயாக்களையும் எதிர்த்தே வந்துள்ளார்கள். நபியின் பாரம்பரிய இஸ்லாத்தை அழிக்கும் கூட்டமாக ஸூஃபி / ஷீயா தரப்பினரை ஸலஃபிகள் எப்போதும் பார்ப்பதே இதற்குக் காரணம்.
.
ஆனால், ஆஃப்கானியின் ஸலஃபிய்யா தரப்பினரோ ஸூஃபிகளையும், ஷீயாக்களையும் எதிரிகளாகப் பார்ப்பதில்லை; தம்மில் ஓர் அங்கமாகவே அவர்களைப் பார்த்தார்கள்.
.
வித்தியாசம் 4:
இஸ்லாத்தை அணுகுவதிலும், கடைப்பிடிப்பதிலும் அறிவியலை விடவும் நம்பிக்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே ஸஊதி ஸலஃபிகளது வாதம்.
.
மாறாக, இஸ்லாத்தை அணுகும் போது, நம்பிக்கையை விடவும் அறிவியலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே ஆஃப்கானி தோற்றுவித்த ஸலஃபிய்யாவின் வாதம்.
.
இது போன்ற பாரிய வித்தியாசங்களை அடிப்படையிலேயே தமக்கிடையில் கொண்டிருக்கும் ஸஊதி ஸலஃபிகளும், ஆஃப்கானியின் ஸலஃபிய்யாவும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் இரு கூட்டத்தவர்கள் என்பதே உண்மை.
.
இரு தரப்பினரதும் பெயரில் இருக்கும் ஸலஃபி எனும் வார்த்தையையும், ஸஊதி ஸலஃபிகளின் சாயலிலேயே ஸலஃபிய்யாவின் வெளித்தோற்ற நடவடிக்கைகள் இருப்பதையும் வைத்து, இருவரும் ஒரே அணியினர் தான் என்று மக்களில் அனேகர் அன்று நம்பி ஏமாந்தார்கள். இந்த ஏமாற்றத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகள் பிற்காலத்தில் முஸ்லிம் உலகையே உலுக்கும் அளவுக்குப் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்தன.
.
ஸலஃபிய்யாவின் பரிணாமம்:
-----------------------------------------------
.
ஸலஃபிய்யா இயக்கத்தை ஆரம்பித்த ஆஃப்கானி, அதை வளர்த்தெடுக்க உகந்த இடமாக எகிப்து நாட்டையே தேர்ந்தெடுத்தார். எகிப்தின் கெய்ரோ நகரில் தொடர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஆஃப்கானிக்கு இறுதியில் அங்கு ஒரு விசுவாசமான மாணவன் கிடைத்தார். இந்த மாணவன் பெயர் “முஹம்மது அப்துஹ்” என்பதாகும்.
.
ஆஃப்கானியின் மரணத்தின் பின்பு ஸலஃபிய்யா இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை முஹம்மது அப்துஹ் ஏற்றார். குருநாதர் ஆஃப்கானியின் வழிகாட்டல் பிரகாரமே ஸலஃபிய்யாவை அப்துஹ் வளர்க்கலானார்.
.
பகுத்தறிவைக் கொண்டு மட்டுமே இஸ்லாத்தை எடைபோடும் “நவீன முஃதஸிலா” எனும் சித்தாந்தத்தை நவீன உலகில் இஸ்லாத்தினுள் நுழைத்தது இந்த அப்துஹ் தான்.
.
“மேற்குலகுக்குச் சென்ற போது நான் அங்கு இஸ்லாத்தைக் கண்டேன்; ஆனால், முஸ்லிம்கள் எவரையும் காணவில்லை. கிழக்குலகுக்கு நான் திரும்பி வந்த போது முஸ்லிம்களைக் கண்டேன்; ஆனால், இஸ்லாத்தைக் காணவில்லை.” எனும் புகழ் பெற்ற மேற்கோள் வாக்கியத்தைச் சொன்னதும் இந்த அப்துஹ் தான்.
.
“ஐரோப்பியர் வசமிருக்கும் நவீன அறிவியல் தான் உண்மையான இஸ்லாம்; குர்ஆன், ஹதீஸ் எனும் பழைய நூல்கள் மட்டுமே போதும் என்று கிழக்குலகில் முடங்கிக் கிடக்கும் முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல” எனும் கருத்தையே இந்த மேற்கோள் மூலம் அப்துஹ் கூறினார்.
.
இதை உறுதிப் படுத்தும் விதமாக, “பழைய காலங்களில் எழுதப்பட்ட மார்க்க நூல்களை மட்டும் வைத்து இஸ்லாத்தைப் புரியக் கூடாது. மாறும் உலகுக்கேற்ப பகுத்தறிவைக் கொண்டு இஸ்லாத்துக்குப் புது விளக்கம் கொடுக்க வேண்டும்” எனும் வாதத்தையும் அப்துஹ் முன்வைத்தார். குருநாதர் ஆஃப்கானியைப் போலவே அப்துவும் “மாசோனி” (Freemason) எனும் இலுமினாட்டி சமூகத்தில் அங்கம் வகித்த ஒருவர்.
.
அறிவியலின் வெளிச்சத்திலேயே அனைத்தையும் அணுகும் புதுப் போக்கை ஸலஃபிய்யாவினுள் அறிமுகம் செய்ததன் மூலம் அதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு வித்திட்ட அப்துஹ், தனது இறுதிக் காலத்தில் “ரஷீத் ரிழா” எனும் தனது விருப்பத்துக்குரிய மாணவன் கையில் ஸலஃபிய்யாவை ஒப்படைத்தார்.
.
தனது குருநாதர்கள் இருவரும் விதைத்த நவீன இஸ்லாம் எனும் சித்தாந்தத்தை மேலும் விருத்தி செய்த ரஷீத் ரிழா, “இஸ்லாமிய ஆட்சி” எனும் கருப்பொருளில் பிற்காலத்தில் உருவான அரசியல் தத்துவத்துக்கு அத்திவாரமிட்டதன் மூலம் ஸலஃபிய்யாவின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
.
“குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான்” எனும் டார்வினின் கூர்ப்புக் கோட்பாட்டை உறுதியாக நம்பும் ஒருவராக இருந்த ரஷீத் ரிழா, முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்தது பற்றி குர்ஆன் கூறும் செய்தியைக் கட்டுக்கதை என்றே கூறி வந்தார்.
.
வட்டி வாங்குவது அறவே கூடாது எனும் குர்ஆனின் வன்மையான கட்டளைக்குப் புறம்பாக, “சில சமயங்களில் தேவைப்பட்டால் வட்டி வாங்கலாம்” எனும் ஒரு புதுக் கருத்தையும் ரஷீத் ரிழா கூறி வந்தார்.
.
இது மட்டுமல்லாமல், சிலைகளை வணங்குதல், செதுக்குதல், அதை ஊக்குவித்தல் போன்ற அனைத்தையும் குர்ஆன் வன்மையாகத் தடுக்கும் போது, இதற்கு நேர்மாற்றமாக, “தேவைப்பட்டால் சில சமயங்களில் சிலைகளைச் செதுக்குவது தவறில்லை” எனும் நூதனக் கருத்தையும் முன்வைத்தவரே ரஷீத் ரிழா.
.
தனது குருநாதர்களைப் போலவே ரஷீத் ரிழாவுக்கும் “மாசோனி” (Freemason) சமூகத்தோடும், “பஹாய் நம்பிக்கை” எனும் புது மதத்தோடும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன.
.
இது போன்ற பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரஷீத் ரிழா பரப்பிய போதும், “ஸலஃப் வாதம்” எனும் பெயரில் அவர் பிரச்சாரம் செய்த வெளிப்படையான கருத்துக்களுக்காகவும், யூத சியோனிச வாதிகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வந்ததற்காகவும் ஸஊதி ஸலஃபி அறிஞர்களான “நஸீருதீன் அல்பானி”, “ஷெய்ஃக் பின் பாஸ்” போன்றோர் கூட ரஷீத் ரிழாவை ஒரு நல்ல அறிஞராக அன்று மதித்தார்கள்.
.
ஒரு விதத்தில், ரஷீத் ரிழாவின் வெளிப்படையான கருத்துக்கள் நிரம்பிய ஸலஃபிய்யா இயக்கத்தின் வெளித் தோற்றத்தைப் பார்த்து, அதுவும் தமது ஸஊதி ஸலஃப் வாதத்தைப் போன்றதோர் அமைப்புத் தான் என்று ஸஊதி அறிஞர்கள் கூட அன்று நம்பி ஏமாந்தார்கள் என்று கூறினால், அது மிகையில்லை.
.
ஸலஃபிய்யாவை நம்பிய விடயத்தில் ஸஊதி ஸலஃபிகள் செய்த முதல் தவறு ரஷீத் ரிழாவை அதிகம் நம்பியது தான். இந்தத் தவறுக்காகப் பிற்காலத்தில் ஸஊதி ஸலஃபிகள் அனுபவித்த பின்விளைவுகள் ஏராளம்.
.
“அல் மனார்” எனும் மாதாந்த சஞ்சிகை வாயிலாகத் தனது கருத்துக்களைத் தனது மரணம் வரை ரஷீத் ரிழா உலகெங்கும் பரப்பி வந்தார். இவ்வாறு பரப்பப்பட்ட ரஷீத் ரிழாவின் கருத்துக்கள், ஏற்கனவே அப்துவின் கருத்துக்களால் கவரப் பட்டிருந்த ஓர் இளைஞரின் உள்ளத்தை வெகுவாக ஆட்கொண்டன.
.
இதன் விளைவாக, அப்துஹ், மற்றும் ரஷீத் ரிழா ஆகியோரது கருத்துக்களை உள்வாங்கி அந்த இளைஞர் ஒரு புது இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்த இளைஞரின் பெயர் “ஹஸனுல் பன்னா” என்பதாகும். அவர் உருவாக்கிய புது இயக்கத்தின் பெயர் “இஹ்வானுல் முஸ்லிமூன்” என்பதாகும்.
.
எகிப்தில் 1906 ஆம் ஆண்டு பிறந்த ஹஸனுல் பன்னாவைப் பொருத்தவரை, ரஷீத் ரிழா, அப்துஹ் ஆகியோரைப் போல், ஆஃப்கானியின் நேரடி மாணவர் வரிசையில் வந்த ஒருவர் அல்ல இவர்.
.
பிறப்பால் “ஹன்பலி” மத்ஹபைச் சேர்ந்த பன்னாவின் இளமைக் காலத்திலேயே அவரது உள்ளத்தில் இரண்டு பிரதான சித்தாந்தங்கள் ஆழப் பதிந்து விட்டன. அதில் ஒன்று ஸூஃபி சித்தாந்தம்; மற்றது ஆஃப்கானியிடமிருந்து ரஷீத் ரிழா வாயிலாகத் தன்னை வந்தடைந்த ஸலஃபிய்யா இயக்கத்தின் சித்தாந்தம்.
.
ஆக மொத்தத்தில் மூன்று சித்தாந்தங்களின் சங்கமத்தில் உருவான, விருத்தியடைந்த ஒரு புது சித்தாந்தமாகவே பன்னாவின் இஹ்வான் இயக்கத்தின் பிரதான கோட்பாடுகள் அமைந்திருந்தன.
.
முதலாம் உலகப் போரின் விளைவாக 1924 ஆம் ஆண்டு ஏற்பட்ட துருக்கி உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சி பன்னாவின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. இஸ்லாத்தை அழிப்பதற்கென்றே மேற்குலகம் திட்டமிட்டுச் செய்த ஒரு சதியாகவே இந்த நிகழ்வை பன்னா கருதினார்.
.
இந்த மனத்தாக்கத்தின் விளைவாக, சூயஸ் கால்வாய் கம்பெனிகளில் அன்று பணிபுரிந்த ஆறு முஸ்லிம்களைக் கொண்ட ஒரு சிறு குழுவாகவே இஹ்வான் இயக்கத்தை 1928 ஆம் ஆண்டில் பன்னா ஆரம்பித்தார்.
.
ஆறு பேரில் ஆரம்பித்த இந்த இயக்கம் ஒரு தசாப்தத்திலேயே 500,000 இற்கும் அதிகமான அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு மாபெரும் இயக்கமாகப் பரிணமித்தது.
.
இஹ்வான் இயக்கத்தைப் பொருத்தவரை, அது ரஷீத் ரிழாவின் ஸலஃபிய்யா இயக்கத்தின் அச்சொட்டான நேரடிப் பிரதியாக இருக்கவில்லை. மாறாக, Pan Islamism, மற்றும் நவீன இஸ்லாம் ஆகிய ஸலஃபிய்யாவின் இரண்டு பிரதான கோட்பாடுகளையும் உள்ளடக்கிய இஹ்வான் இயக்கத்தின் கொள்கையில் மேலும் பல அம்சங்கள் புதிதாகச் சேர்க்கப் பட்டிருந்தன.
.
உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியால் முஸ்லிம் உலகில் அன்று ஏற்பட்டிருந்த அரசியல் சவால்களை எதிர்நோக்கும் பல புதுத் திட்டங்களும் இஹ்வான் இயக்கத்தில் மேலதிகமாக இருந்தன.
.
இந்தக் கொள்கை மேம்படுத்தலின் விளைவாக, ரஷீத் ரிழாவின் ஸலஃபிய்யாவிலிருந்து சற்று வேறுபட்டதொரு புது இயக்கம் போலவே இஹ்வான் இயக்கம் தோற்றமளித்தது.
.
ஆஃப்கானியின் காலத்தில் Pan Islamism சித்தாந்தத்தைப் பரப்புவதற்கும், அப்துவின் காலத்தில் நவீன அறிவியலை இஸ்லாத்தினுள் புகுத்துவதற்கும், ரஷீத் ரிழாவின் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கும் எண்ணத்தை விதைப்பதற்கும் பயன்பட்டு வந்த ஸலஃபிய்யா இயக்கம், பன்னாவின் இஹ்வான் இயக்கமாக மாறிய பின் வேறொரு வடிவத்தை எடுத்தது.
.
மேற்குலகின் சதியால் தான் உஸ்மானியப் பேரரசு சிதைந்து போனதென்று பன்னா உறுதியாக நம்பியதால், மேற்குலகுக்கு எதிரான ஓர் உலகளாவிய முஸ்லிம் ஆட்சியை மீண்டும் நிறுவ வேண்டும் என்று பன்னா பிடிவாதமாக இருந்தார். இதற்கமைய, ஆட்சி அமைப்பதே இஹ்வான்களது பிரதான நோக்கமாக மாறியது.
.
இந்த மாற்றத்தின் விளைவாக, ஸலஃபிய்யா இயக்கத்தின் ஸ்தாபகர்களான ஆஃப்கானி, அப்துஹ் போன்றோரின் சில கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் பன்னாவிடம் உருவாக ஆரம்பித்தன.
.
உதாரணத்துக்கு, மேற்குலகின் நவீன நாகரீகத்தை ஆஃப்கானி, அப்துஹ் ஆகியோர் அதிகம் விரும்பியதற்கு மாற்றமாக, மேற்குலகக் கலாச்சாரத்தை பன்னா ஓரளவுக்கு வெறுக்க ஆரம்பித்தார். அதே நேரம், மேற்குலகின் நவீன அறிவியலை பன்னா தொடர்ந்தும் ஆதரித்து வந்தார். மறுபுறம், எகிப்தின் இஸ்லாமிய அறிஞர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பன்னா எதிர்த்தார்.
.
பன்னாவிடம் கடும் போக்கு வாதங்களோ, தீவிரவாத எண்ணங்களோ பெரிதாக இருக்கவில்லை. அவர் உருவாக்கிய இஹ்வான் இயக்கமும் ஜனநாயக ரீதியில் ஆட்சிக்காகப் போராடும் ஓர் அமைப்பாகவே இருந்தது.
.
மிதவாத ரீதியில் இஸ்லாமிய உலகில் படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வரவே பன்னா விரும்பினார். ஆயுதங்களால் செய்யும் ஜிஹாதை விட, உள்ளத்தால் செய்யும் ஜிஹாத் தான் சிறந்தது எனும் கருத்தையே பன்னா அதிகம் பிரச்சாரம் செய்தார்.
.
அதே நேரம் இன்னொரு புறம், இஹ்வான் இயக்கத்தினுள் ஓர் இரகசிய ஆயுதப் போராட்டக் குழுவையும் பன்னா உருவாக்கினார். இஸ்ரேலுக்கு எதிராக அரபுலகம் தொடுத்த யுத்தத்தில் கூட இந்த ஆயுதக் குழு பங்குபற்றியது.
.
நியாயமான உரிமைகளுக்காக நேர்மையாகப் போர் செய்யவென்று பன்னா உருவாக்கிய இந்த ஆயுதக் குழு, நாளடைவில் பன்னாவின் கட்டுப்பாட்டையும் மீறித் தறிகெட்டுப் பயணிக்க ஆரம்பித்தது.
.
பன்னாவின் இயக்கத்தினுள் திடீரென்று பிரபலமடைய ஆரம்பித்த ஒரு மனிதர் இஸ்லாத்தின் பெயரில் விதைத்த அதி தீவிரக் கருத்துக்களே பன்னாவின் இஹ்வான் இயக்கத்திலிருந்து புதிதாக ஒரு தீவிரவாதக் கும்பல் தனியாக உருவாகக் காரணமாக அமைந்தன. அந்த மனிதர் பெயர் “செய்யித் குதுப்” என்பதாகும்.
�செய்யித் குதுப்:
------------------------
.
எகிப்தில் வாழ்ந்த செய்யித் குதுப், புகழ் பெற்ற ஓர் எழுத்தாளர். சிறு வயது முதலே கல்வி கற்பதிலும், வாசிப்பிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்த செய்யித் குதுப், தனது இளமைக் காலங்களிலேயே அதீத திறமைகளை வெளிக்காட்டியவர். தனது பத்தாவது வயதிலேயே திருக் குர்ஆனை முழுமையாக மனனமிட்டிருந்தார்.
.
இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் மட்டுமே நிம்மதி அடைய முயற்சித்த செய்யித் குதுபிடம் அடக்கம், அமைதி, வெட்க சுபாவம் போன்ற உணர்வுகள் ஏனையோரை விடவும் அளவுக்கு அதிகமாகவே மிகைத்திருந்தன.
.
இது போன்ற சில குணாதிசயங்கள் மிகைப்பட்டதன் காரணமாக சமூகத்தில் ஏனையோருடன் சந்தோஷமாக மனம் திறந்து பழகும் தன்மை குதுபிடம் இருக்கவில்லை. மாறாக, உள்முகச் சிந்தனை, தனிமையுணர்வு, மன அழுத்தம், எப்போதும் நீங்காத மனக் கவலை போன்ற உணர்வுகளே செய்யித் குதுபை முழுமையாக ஆட்கொண்டிருந்தன.
.
உடலளவில் ஓர் ஆரோக்கியமான மனிதராகவும் குதுப் இருக்கவில்லை. நுரையீரல் நோய்களினால் அவதிப்பட்ட குதுபின் வெளித் தோற்றம் எப்போதும் களைப்படைந்த வடிவத்திலும், கண்கள் எப்போதும் சோர்வடைந்த நிலையிலுமே இருந்தன.
.
1948 ஆம் ஆண்டு மேற்கத்திய கல்வி முறை பற்றிப் படிப்பதற்காக அமெரிக்கா பயணமான செய்யித் குதுப், அங்கு இரண்டு வருடங்கள் தங்கிக் கல்வி பயின்றார்.
.
அமெரிக்காவில் தங்கியிருந்த இந்த இரண்டு வருடங்களுக்குள் செய்யித் குதுபின் உள்ளத்தில் ஒரு பாரிய திடீர் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்தின் தீவிரத் தன்மையே நவீன உலகில் இஸ்லாமிய பயங்கரவாதம் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாகவும் அமைந்தது.
.
அமெரிக்காவிலிருந்து திரும்பி எகிப்தை வந்தடைந்த செய்யித் குதுப் ஒரு புது மனிதனாகவே மாறியிருந்தார். மேற்குலகக் கலாச்சாரத்தைப் பகிரங்கமாக வெறுக்கும் ஒரு தீவிரப் பிரச்சாரகராகவே அவர் தன்னை மாற்றிக் கொண்டார்.
.
அமெரிக்காவிலிருந்து வந்த உடன், “நான் பார்த்த அமெரிக்கா” எனும் தலைப்பில் ஓர் ஆக்கத்தை எழுதி வெளியிட்ட குதுப், அதன் மூலம் மேற்குலகின் சடவாதம், கட்டற்ற சுதந்திரம், குத்துச்சண்டை, ஆண் / பெண் இனக்கலப்பு போன்ற அம்சங்களைக் கடுமையாகச் சாடும் வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
.
அத்தோடு, எகிப்தில் அப்போது இயங்கி வந்த பன்னாவின் இஹ்வான் இயக்கத்தில் உடனடியாக ஓர் அங்கத்தவனாகவும் இணைந்து கொண்டார். குதுபின் அதீத திறமையின் காரணமாக, இஹ்வான் இயக்கத்தில் அவருக்குத் தலைமைப் பத்திரிகை ஆசிரியர் பதவியும் வழங்கப் பட்டது.
.
இதில் விசித்திரம் என்னவென்றால், மேற்குலகக் கலாச்சாரத்தையும், சித்தாந்தங்களையும் வன்மையாக எதிர்த்தும், இஸ்லாமிய கலாச்சாரத்தை முன்மொழிந்தும் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வந்த குதுப், அதைத் தனது சொந்த வாழ்வில் அமுல் படுத்தவில்லை.
.
உதாரணத்துக்கு, இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரங்களைக் கடைப்பிடிக்கும் ஒருவராக செய்யித் குதுப் இருக்கவில்லை. மாறாக மேற்குலகக் கலாச்சார ஆடைகளையே அவர் அணிந்து வந்தார்.
.
மேலும், இஸ்லாமிய கலாச்சாரத்தின் சின்னமாகத் திகழும் தாடியை செய்யித் குதுப் தனது முகத்தில் வைத்திருக்கவில்லை. மாறாக அன்றைய மேற்குலகக் கலாச்சாரத்தின் அடையாளமான ஹிட்லர் மீசையே அவர் முகத்தில் இருந்தது.
.
இது மட்டுமல்லாமல், இஸ்லாமிய கலாச்சாரத்தில் இசை, சினிமா ஆகியவை வன்மையாகக் கண்டிக்கப்படும் அம்சங்கள். இதற்கு மாற்றமாக, மேற்குலக கலாச்சார ஆதிக்கத்தின் தூண்களாக இருந்த மேலைத்தேய இசை, மற்றும் ஹாலிவுட் சினிமா ஆகியவற்றின் தீவிர ரசிகனாகவே செய்யித் குதுப் இருந்துள்ளார்.
.
மேலும், டார்வின், ஐன்ஸ்டைன், ஷெல்லி போன்றோரின் நவீன கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டிருந்த குதுப், ஃப்ரெஞ்ச்சு இலக்கியங்களில் முற்றுமுழுதாக மூழ்கியிருந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
.
மொத்தத்தில், பொது வாழ்வில் மேற்குலகக் கலாச்சாரத்தை வன்மையாக எதிர்த்து வந்த செய்யித் குதுப், தனது தனிப்பட்ட சொந்த வாழ்வில் அதன் தீவிர அபிமானியாகவே இருந்து வந்துள்ளார். குதுபின் இந்த இரட்டை நிலைபாடு காரணமாகப் பலர் அவரது உள்நோக்கங்களைச் சந்தேகித்ததும் உண்டு.
.
நவீன இஸ்லாமிய உலகில் செய்யித் குதுப் தான் முதன் முதலில் ஜிஹாத் எனும் பெயரில் பயங்கரவாதத்தை விதைத்தார் என்பது தான் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களது ஏகோபித்த கருத்து.
.
அதிலும் குறிப்பாக, சில வரலாற்று ஆய்வாளர்களது கருத்துப் பிரகாரம், நபி மரணித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமிய உலகில் உருவாகி, அலீ (ரழி) அவர்களால் அழித்தொழிக்கப் பட்ட “ஃகவாரிஜ்” கூட்டத்தின் தீவிரவாத சித்தாந்தத்தை மீண்டும் 20 ஆம் நூற்றாண்டில் உயிர்ப்பித்து, அதனோடு ரஷீத் ரிழாவின் ஸலஃபியா இயக்கம் வாயிலாகப் பரப்பப்பட்ட ஆட்சி குறித்த கருத்துக்களையும், ஹஸனுல் பன்னாவின் அரசியல் கோட்பாடுகளையும் கலந்து, புதிதாக செய்யித் குதுப் வடிவமைத்த தீவிரவாத சித்தாந்தமே பிற்காலத்தில் உருவான எல்லா இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளதும் சாசனமாக உருவெடுத்தது.
.
செய்யித் குதுபுக்குப் பின்னர், அவரது சித்தாந்தம் தலைக்கேறிய தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தோர் அனைவருமே “குதுபி கூட்டம்” என்றே அறிஞர்கள் உலகில் அழைக்கப் படுகிறார்கள். இவர்களது கொள்கை “குதுப் வாதம்” என்றே அழைக்கப் பட்டது.
.
ஊடகங்கள் பரப்புரை செய்வது போல் குதுபி கூட்டத்தவர்கள் வஹ்ஹாபிகள் அல்ல. எல்லோரையும் எதிர்ப்பது போல் வஹ்ஹாபிகளையும் சேர்த்தே குதுபிகள் எதிர்க்கிறார்கள். குதுபிகளின் கண்மூடித்தனமான தீவிரவாதத்தை வஹ்ஹாபிகள் அடியோடு நிராகரிப்பதே இதற்குக் காரணம்.
.
குதுப் வாதத்தின் பரிணாமம்:
---------------------------------------------
.
1952 ஆம் ஆண்டு எகிப்தின் மன்னர் ஆட்சியைக் கவிழ்த்து, ஜமால் அப்துன் நாசர் நாட்டின் தலைமையைக் கைப்பற்றினார். எகிப்து மன்னர் ஆட்சியைக் கவிழ்க்க நாசருக்கு அதிகம் உறுதுணையாக இருந்தவர் செய்யித் குதுப். நாசரின் புரட்சிக்குத் தேவையான பல ஆலோசணைகளை இஹ்வான் சார்பாக குதுப் வழங்கி வந்தார்.
.
இந்த நெருங்கிய ஒத்துழைப்பின் விளைவாக நாசருக்கும், குதுபுக்கும் இடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்தது.
.
நாசருக்கு குதுப் உதவியதன் நோக்கம், மன்னரைக் கவிழ்த்த பின் பதவிக்கு வரும் நாசர், குதுப் எதிர்பார்த்தது போல் இஸ்லாமிய ஆட்சி செய்வார் எனும் நம்பிக்கை தான்.
.
ஆனால், பதவிக்கு வந்த நாசர், குதுபின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டது போல் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தனது ஆட்சியை அமைக்க ஆரம்பித்தார்.
.
நாசரின் இந்தச் செயலை நம்பிக்கைத் துரோகமாக குதுப் கருதியதன் விளைவாக இஹ்வான்களுக்கும் நாசரின் அரசுக்கும் இடையில் பாரிய பிணக்குகள் ஏற்பட ஆரம்பித்தன.
.
இந்தப் பிணக்கின் உச்ச கட்டமாக 1954 ஆம் ஆண்டு சில இஹ்வான் போராளிகள் சகிதம் நாசரைத் திட்டமிட்டுக் கொலை செய்ய குதுப் முயற்சி செய்தார்.
.
குதுபின் கொலை முயற்சியில் உயிர் தப்பிய நாசர், அதன் பிறகு இஹ்வான்களை ஒவ்வொருவராக வேட்டையாட ஆரம்பித்தார். அத்தோடு, ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக குதுப் சிறையில் அடைக்கப் பட்டார்.
.
பல வருடங்களைச் சிறையில் கழித்த செய்யித் குதுப், உள்ளே வெறுமனே இருக்கவில்லை. அவரது மிகப் பெரும் ஆக்கங்களாக இன்று வரை வரலாற்றில் கருதப்படும் இரண்டு பெரும் நூல்களை சிறையிலிருந்தவாறே குதுப் எழுதி வெளியிட்டார்.
.
இந்த இரண்டு நூற்களில் ஒன்று, “குர்ஆனின் நிழலில்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட குர்ஆன் விளக்கவுரை. மற்றது, “மைல் கற்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட, தீவிரவாதத்தைப் பகிரங்கமாகவே போதிக்கும் ஒரு நூல்.
.
இவ்விரு நூற்களும் இஸ்லாத்தின் பெயரில் சமூகத்தில் அன்று விதைத்த பயங்கரவாதக் கருத்துக்களே இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தின் பெயரில் அரங்கேறும் அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் மூல காரணம்.
.
குதுபின் இந்த இரண்டு நூல்களும் அன்று எகிப்தில் பயங்கரவாதம் உருவாகக் காரணமாக இருந்தன எனும் குற்றத்துக்காக, 1964 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்த குதுப் மீண்டும் எகிப்து அரசினால் கைது செய்யப் பட்டார்.
.
இரண்டாம் முறை சிறையில் அடைக்கப்பட்ட போது குதுப் மீது நீதிமன்றத்தில் அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டின் சாராம்சம், குதுப் தீவிரவாதத்தைப் பரப்புகிறார் என்பதாகவே இருந்தது.
.
இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக் கொண்ட நீதிமன்றம் குதுபுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து, 1966 ஆம் ஆண்டு அவர் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.
.
குதுபின் மரண தண்டனையைத் தொடர்ந்து எகிப்தில் இஹ்வான்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக ஏராளமான இஹ்வான் அங்கத்தவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடி, வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்தனர்.
.
இவ்வாறு நாட்டை விட்டுத் தப்பியோடிய இஹ்வான்களுள் செய்யித் குதுபின் சகோதரர் முஹம்மத் குதுப் என்பவரும் ஒருவர். எகிப்திலிருந்து அகதியாக வந்த முஹம்மத் குதுப் ஸஊதி அரேபியாவில் தஞ்சமடைந்தார்.
.
அக்கால வஹ்ஹாபி ஸஊதியில் ஒரு பாரிய குறைபாடு நிலவி வந்தது. ஸஊதியில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறையான இஸ்லாத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கப் போதிய வஹ்ஹாபி ஆசிரியர்கள் அன்று ஸஊதியில் இருக்கவில்லை.
.
எகிப்திலிருந்து அகதிகளாக ஸஊதியில் தஞ்சம் புகுந்த முஹம்மத் குதுப் போன்ற பல இஹ்வான்கள் இஸ்லாமியக் கல்வியைக் கற்ற அறிஞர்களாக இருந்ததாலும், அவர்களது வெளித் தோற்ற நடவடிக்கைகள் வஹ்ஹாபி முஸ்லிம்களைப் போல் இருந்ததாலும், முஹம்மத் குதுப் போன்றோரை வஹ்ஹாபி அறிஞர்கள் என்று ஸஊதி அரசு தவறாகப் புரிந்து விட்டது.
.
இதன் விளைவாக, முஹம்மத் குதுபுக்கு மரியாதையோடு அடைக்கலம் கொடுத்த ஸஊதி அரசாங்கம், அவரை மக்காவிலிருக்கும் “உம்மல் குரா” பல்கலைக் கழகத்திலும், ஜித்தா நகரிலிருக்கும் “அப்துல் அஸீஸ்” பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியமர்த்தியது.
.
ரஷீத் ரிழாவை வஹ்ஹாபி அறிஞரென்று நம்பியதற்கு அடுத்த படியாக ஸஊதி வஹ்ஹாபிகள் செய்த இரண்டாவது தவறு முஹம்மத் குதுபையும் வஹ்ஹாபி அறிஞர் என்று நம்பி ஏமாந்தது தான்.
.
இந்த இரண்டு தவறுகளின் பின்விளைவாகவே இன்று வரை ஸஊதி அரசாங்கம் பயங்கரவாதிகள் எனும் பட்டத்தை அபாண்டமாகச் சுமக்க நேர்ந்துள்ளது.
.
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்ற உடனேயே முஹம்மத் குதுப் தனது தீவிரவாதப் புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். அங்கு கல்வி பயின்ற மாணவர்களுக்கெல்லாம் இஸ்லாத்தின் பெயரில் செய்யித் குதுபின் தீவிரவாதக் கருத்துக்களைப் போதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஸஊதி அரசாங்கம் இந்த உண்மையை அடையாளம் கண்டுகொள்ளத் தவறி விட்டது.
.
காலப்போக்கில், யெமன் நாட்டுப் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு சஊதி பிரஜை இளைஞன் முஹம்மத் குதுபின் தீவிரவாதப் பிரச்சாரங்களால் பெரிதும் கவரப் பட்டார். முஹம்மத் குதுபின் விரிவுரைகளுக்குத் தவறாமல் சமூகம் தந்து, அவர் போதித்த தீவிரவாதக் கருத்துக்களை ஆசையோடு படிக்க ஆரம்பித்த இந்த ஸஊதி இளைஞர் பிற்காலத்தில் ஒரு மாபெரும் பயங்கரவாத இயக்கத்தின் தலைவராகப் பரிணமித்தார்.
.
இந்த இளைஞரது பெயர் “உஸாமா பின் லாதின்” என்பதாகும். இவர் தலைமை தாங்கிய அந்தத் தீவிரவாத இயக்கத்தின் பெயர் “அல்காயிதா” என்பதாகும்.
.
இதுபோக, எகிப்தில் செய்யித் குதுபின் கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டு இஹ்வான் இயக்கத்தில் இணைந்திருந்த இன்னோர் இளைஞர், குதுப் தூக்கிலிடப் பட்ட சம்பவத்தையொட்டி அதிகம் மனத் தாக்கத்துக்கு உள்ளானார்.
.
குதுபின் மரணத்துக்குப் பழிவாங்குவதற்காகவும், எகிப்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவும், குதுபின் கருத்துக்களை உலக அளவில் பரப்புவதற்காகவும் ஒருசில மாணவர்களைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு ஓர் இரகசியப் பயங்கரவாத இயக்கத்தை இந்த இளைஞர் தோற்றுவித்தார்.
.
இந்த இளைஞரின் பெயர் “அய்மன் அல் ஸவாஹிரி” என்பதாகும். உஸாமாவுக்குப் பின்னர் அல்காயிதா இயக்கத்தின் தலைவராக இவர் தான் இன்று வரை இருந்து வருகிறார்.
.
இஸ்லாத்தின் பெயரில் நவீன உலகில் பயங்கரவாதம் உருவான உண்மையான கதை இது தான்.
.
குதுபி கூட்டத்தவர்களால் உருவாக்கப்பட்ட அல்காயிதா, IS தீவிரவாத அமைப்பு போன்ற இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி எதிலும் ஸஊதி வஹ்ஹாபி அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
.
உண்மையில், உஸாமா போன்றோர் சர்வதேச அரங்கில் தீவிரவாதிகளாக என்று அறியப் பட்டார்களோ, அன்றே அவர்களது தொடர்புகளை அடியோடு துண்டித்த ஸஊதி அரசாங்கம், இன்று வரை அவர்களை எதிர்த்தே வருகிறது என்பது தான் உண்மை.
.
அதே போல், அன்று முஹம்மத் குதுபின் பிரச்சாரங்களால் தீவிரவாதம் உள்ளத்தில் விதைக்கப்பட்ட பல ஸஊதி மாணவர்கள் வாயிலாக பிற்காலத்தில் ஸஊதியினுள் அவ்வப்போது தீவிரவாதத்தைப் போதிக்கத் தலைப்பட்ட பல ஸஊதி மார்க்க அறிஞர்களைக் கூட ஸஊதி அரசாங்கம் சிறையில் அடைத்தும் வைத்துள்ளது.
.
அன்று எகிப்தில் ஆரம்பித்த குதுபி தீவிரவாதிகளின் சிஷ்யர்களே இன்று வரை உலகில் தீவிரவாதத்தில் ஈடுபடும் கூட்டத்தினர்.
.
நவீன இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தோற்றத்துக்கு யாரையாவது குற்றம் சாட்டுவதாக இருந்தால், இஹ்வான்களின் தலைவர் ஹஸனுல் பன்னாவின் கட்டுப்பாடுகளையும் மீறி இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதத்தை விதைத்த செய்யித் குதுபையே உலகம் குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
.
ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றமாக, உஸாமா போன்றோர் ஸஊதி பிரஜைகள் என்பதாலும், முஹம்மத் குதுபுக்கு ஸஊதி அடைக்கலம் கொடுத்ததை வைத்தும், ஆஃப்கானியின் ஸலஃபிய்யா இயக்கத்தில் “ஸலஃபி” எனும் பெயர் இருப்பதை வைத்தும் தீவிரவாதத்தின் பழி மொத்தத்தையும் ஸஊதி அரசின் தலையில் இன்று ஊடகம் சுமத்துவது தான் விசித்திரமான விடயம்.
.
இத்தோடு இந்தத் தொடர் நிறைவடைகிறது. இதன் நிறைகள் அனைத்தும் இறைவனைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். இறைவனே அனைத்தும் அறிந்தவன்.
.
(முற்றும்)
أحدث أقدم