அல்குர்ஆனோ, ஸுன்னாவோ விஞ்ஞானத்துக்கு முரண்பட்டால் என்ன செய்வது?

அல்குர்ஆனிலோ நபிமொழியிலோ இடம்பெறும் ஒரு விடயத்துக்கு மாற்றமாக விஞ்ஞானத்தில் ஏதாவது ஒரு கருத்து இடம்பெற்றால் ஒரு முஸ்லிம் வஹியில் உள்ளதையே நம்ப வேண்டும். 

இதனை அல்குர்ஆனுடைய விடயத்தில் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். அல்லது எப்படியாவது விஞ்ஞானத்துக்கு முரணின்றி விளக்கம் வழங்க முனைகின்றனர். 

ஆனால் நபிமொழியுடைய விடயத்தில் கவனயீனமாக நடந்துகொள்கின்றனர். ஆனால் நம்பகமான அறிவிப்பாளர்களுடாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களில் தவறு இடம்பெறுவதை விட குறித்த விஞ்ஞான ஆய்வில் தவறு நிகழ்வதற்கான வாய்ப்பே அதிகம். 

விஞ்ஞானத்துடன் முரண்பட்டாலும் வஹியில் இடம்பெற்றவற்றையே முற்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறையையே இஸ்லாமிய அறிஞர்கள் காலாகாலமாக பின்பற்றி வந்துள்ளனர்  என்பதற்கு பின்வரும் உதாரணத்தைப் பாருங்கள். 

கடந்த பல நூற்றாண்டுகளாக தாயின் கருவறையில் சிசு உருவாக்கம் மற்றும் சிசு வளர்ச்சி பற்றிய பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்துள்ளன.

1- Aristotle, Galan என்போர் “பெண்ணின் மாதவிடாய் இரத்தம் கர்ப்பப்பையில் உறைவதனூடாகவே சிசு உருவாகின்றது” என்றனர். இக்கருத்து கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை ஆதிக்கம் செலுத்தியது.

2- 1694 இல் நுணுக்குக்காட்டி கண்டுபிடிக்கப்பட்டதும் மனிதன் முழு வடிவத்தில் சிறிய அமைப்பில்  விந்தினுள் காணப்படுகின்றான் என்ற கருத்து உருவானது. இதனைச் சித்தரிக்கும் விதத்தில் Hartsoeker என்பவர் ஒரு வரை படத்தையும் வரைந்து வெளியிட்டார். இதன்மூலம் மனித உருவாக்கத்தில் ஆணின் பங்கு மட்டுமே உள்ளது என்ற வாதம் நிலவியது.

3- 1727 இல் பெண்ணின் சினை முட்டை கண்டுபிடிக்கப்பட்டதும் குழந்தை உருவாக்கத்தில் பெண் மட்டுமே பங்களிப்புச் செய்கிறாள் என்ற வாதம் உருவானது. ஆணின் விந்தினுள் மனிதன் எவ்வாறு சிரிய அமைப்பில் காணப்படுகின்றானோ அதே வடிவில்தான் பெண்ணின் சினை முட்டையிலும் மனிதன் காணப்படுகின்றான் என்ற கருத்து உருவாகி 1775ஆம் ஆண்டுவரைக்கும் நீடித்தது.

சிசு உருவாக்கம் பற்றிய அல்குர்ஆனின் கருத்துக்கள் :

நாம் மேலே பார்த்த கற்பனைக் கருத்துக்களுக்கு மாற்றமான விஞ்ஞானபூர்வமான ஒரு கருத்தை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. மனித உருவாக்கத்திற்கு ஒரு ஆணினது விந்தணுவும் பெண்ணினது சினை முட்டையும் கட்டாயம் அவசியம் என்பதே அக்கருத்தாகும்.  14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆன் கூறிய இக்கருத்தையே இன்றைய விஞ்ஞானமும் நிரூபித்துள்ளது.

குறித்த கருத்தைக் கூறும் அல்குர்ஆன் வசனங்கள்.

﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ 
“நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2)
﴿ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى  
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.” (49:13)

 ﴿خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ . يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ﴾
“குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.” (86:6,7)

நபிமொழி ஆதாரம்

“ஒருமுறை யூத மதத்தைப் பின்பற்றும் ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “ ஏ முஹம்மதே! மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “ஓ யூதனே! மனிதன் ஆணினதும் பெண்ணினதும் கலப்புத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான்” என்றார்கள். உடனே அந்த யூதர் “முன் வந்த நபிமார்களும் இவ்வாறுதான் கூறினார்கள்” என்றார்.” (முஸ்னத் அஹ்மத்)

படிப்பினை

குர்ஆன் சுன்னாவின் திட்டவட்டமான முடிவுகளுக்கு விஞ்ஞான முடிவுகள் முரண்படும் போது நாம் மார்க்க ஆதாரங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். கி. மு 4 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து 18ம் நூற்றாண்டு வரை குழந்தை ஆணின் விந்திலிருந்து அல்லது பெண்ணிலிருந்து மாத்திரமே உருவாவதாக நம்பி வந்தனர். 

ஆனால் இப்னு ஹஜர் இப்னுல் கைய்யிம் போன்ற அறிஞர்கள் அது ஆதாரங்களுக்கு முரண்படுவதால் ஏற்க முடியாத கருத்து எனக் கூறினர். 

இந்த நடைமுறையே நமது மதநம்பிக்கைக்கும் நபிமொழி பாதுகாப்புக்கும் உத்தரவாதமளிப்பதாக அமைந்துள்ளது.

- அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
Previous Post Next Post