நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிவதன்‌ அவசியமும்‌ அவர்களை பின்பற்றுவதும்‌

அஷ் ஷெய்க் ஸாலிஹ் இப்னு பெளஸான் அல் பெளஸான்

நபி (ஸல்) அவர்களின்‌ கட்டளைகளை செயல்படுத்தியும்‌, அவர்கள்‌ தடுத்தவைகளை விட்டு விலகியும்‌ இருந்து அவர்களுக்கு கீழ்ப்படிவது கட்டாயமாகும்‌. இதுவே அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதுராக இருக்கிறார்‌ என்று சாட்சி கூறிய கலிமாவின்‌ பொருளாகும்‌. 

நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்‌ என்று அல்லாஹ்வே அல்குர்‌ஆனின்‌ பல வசனங்களில்‌ கட்டளையிடுகிறான்‌. சில இடங்களில்‌ அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதோடு நபி (ஸல்) அவர்களுக்கும்‌ கீழ்ப்படிய வேண்டும்‌ என்று இரண்டையும்‌ சேர்த்து கூறுகிறான்‌.

விசுவாசங்கொண்டோரோ! நீங்கள்‌ அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்‌. (அவனது) தூதருக்கும்‌ கீழ்ப்படியுங்கள்‌. (4:59)

சில இடங்களில்‌ நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்‌ என்று தனியாக குறிப்பிட்டு கட்டளையிடுகிறான்‌.

எவர்‌ (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்‌) கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர்‌ நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கீழ்ப்படிந்துவிட்டார்‌. (4:80)

மேலும்‌ (அல்லாஹ்வின்‌) தூதருக்கு கீழ்ப்படியுங்கள்‌. (அவற்றின்‌ மூலம்‌) நீங்கள்‌ அருள்‌ செய்யப்படுவீர்கள்‌. (24:56)

சில இடங்களில்‌ நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்பவர்களை எச்சரித்து கூறுகிறான்‌.

(நம்‌) தூதராகிய அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே அத்தகையவர்கள்‌ (உலகில்)‌ தங்களுக்கு யாதொரு துன்பம்‌ பிடித்துவிடுவதையோ அல்லது துன்புறுத்தும்‌ வேதனை பிடித்துவிடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்‌. (24:63)

இந்த வசனத்தில்‌ உள்ள துன்பம்‌ பிடித்துவிடுவது என்பது அவர்களின்‌ இதயங்களில்‌ இறைநிராகரிப்பு அல்லது நயவஞ்சகத்தனம்‌ அல்லது பித்‌அத்‌ ஏற்படுவதையோ அல்லது இவ்வுலகிலேயே கடுமையான வேதனையை அளித்துக்‌ கொல்லப்படுவதையோ அல்லது குற்றவியல்‌ சட்டங்களின்‌ அடிப்படையில்‌ தண்டனை வழங்கப்படுவதையோ அல்லது சிறையில்‌ அடைக்கப்படுவதையோ அல்லது ஏதேனும்‌ அவசரமாக நிகழும்‌ வேதனையைப்‌ பற்றியே குறிக்கிறது.

அடியார்கள்‌ அல்லாஹ்வின்‌ நேசத்தைப்‌ பெறுவதற்கும்‌, தங்களது பாவங்களுக்கு மன்னிப்பைப்‌ பெறுவதற்கும்‌ நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிந்து, அவர்களைப்‌ பின்பற்றி நடப்பதை அல்லாஹ்‌ காரணமாக ஆக்கியிருக்கிறான்‌. (3:31)

(நபியே) மனிதர்களிடம்‌! நீர்‌ கூறுவீராக, நீங்கள்‌ அல்லாஹ்வை நேசிப்பவர்‌களாக இருந்தால்‌, என்னை நீங்கள்‌ பின்பற்றுங்கள்‌. (அவ்வாறு நீங்கள்‌ செய்தால்)‌ உங்களை அல்லாஹ்‌ நேசிப்பான்‌. உங்கள்‌ பாவங்களையும்‌ உங்களுக்காக அவன்‌ மன்னித்துவிடுவான்‌. (3:31)

அல்லாஹ்‌ நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிவதை நேர்வழியாகவும்‌, அவர்களுக்கு மாறு செய்வதை வழிகேடாகவும்‌ ஆக்கியுள்ளான்‌.

மேலும்‌ நீங்கள்‌ அவருக்கு கீழ்ப்படிந்து நடந்தால்‌ நீங்கள்‌ நேர்வழியை அடைந்துவிடுவீர்கள்‌. (24:54)

(பின்னர்‌) உமக்கவர்கள்‌ பதில்‌ கூறவில்லையானால்‌, நிச்சயமாக அவர்கள்‌ பின்பற்றுவதெல்லாம்‌ தங்களின்‌ மனோ இச்சைகளைத்தான்‌ என்று உறுதியாக நீர்‌ அறிந்துகொள்வீராக! அல்லாஹ்விடமிருந்துள்ள நேர்வழியை அன்றி தன்னுடைய மனோஇச்சையைப்‌ பின்பற்றியவனை விடவும்‌ மிக வழிகெட்டவன்‌ யார்‌? நிச்சயமாக அல்லாஹ்‌ (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில்‌ செலுத்தமாட்டான்‌. (28:50)

மேலும்‌, அந்த நபியிடத்தில்‌ அழகிய முன்மாதிரி உள்ளதாக அந்த நபியின்‌ சமுதாயத்திற்கு அறிவிக்கிறான்‌. (33:21)

(உங்களில்)‌ அல்லாஹ்வையும்‌, மறுமை நாளையும்‌ ஆதரவு வைத்து அல்லாஹ்வையும்‌ அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின்‌ தூதரில்‌ திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (33:21)

இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: இந்த வசனம்‌ நபி (ஸல்) அவர்களின்‌ சொல்‌, செயல்‌ மற்றும்‌ அவர்களின்‌ நடவடிக்கைகளை முன்மாதிரியாக எடுப்பதற்கு முக்கியமான அடிப்படையாகும்‌. ஆகவேதான்‌ அல்லாஹ்‌ அகழ்‌ போர்‌ நாளன்று நபி (ஸல்) அவர்களைப்போல்‌ பொறுமையுடனும்‌, உறுதியுடனும்‌, போர்‌ குணத்துடனும்‌, முயற்சியுடனும்‌ மற்றும்‌ அல்லாஹ்வின்‌ புறத்திலிருந்து வெற்றியை எதிர்ப்பார்த்து இருந்ததைப்‌ போன்ற அழகிய முன்மாதிரிகளை முஸ்லிம்கள்‌ தன்‌ வாழ்வில்‌ பின்பற்ற வேண்டும்‌ என கட்டடையிடுகிறான்‌. நபி (ஸல்) அவர்கள்‌ மீது அல்லாஹ்வின்‌ அருளும்‌, சாந்தியும்‌ என்றென்றும்‌ உண்டாகட்டுமாக!

அல்லாஹ்‌, அல்குர்‌ஆனிலே நாற்பது இடங்களில்‌ நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்‌, அவர்களைப்‌ பின்பற்ற வேண்டும்‌ எனக்‌ கூறுகிறான்‌. நபி (ஸல்) அவர்கள்‌ கொண்டுவந்த அல்குர்‌ஆன்‌, சுன்னாவை அறிவது, உணவு, பானத்தைவிட மனிதர்களுக்கு மிக மிக அவசியமானதாகும்‌.

ஏனெனில்‌, ஒருவருக்கு உணவும்‌ பானமும்‌ கிடைக்காமல்‌ போய்விட்டால்‌ இவ்வுலகில்‌ அதிகப்படியாக அவருக்கு மரணம்‌ மட்டுமே சம்பவிக்கும்‌. ஆனால்‌, ஒருவர்‌ நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படியாமலும்‌, அவர்களை பின்பற்றாமலும்‌ போய்விட்டால்‌ அவருக்கு நரகில்‌ கடுமையான வேதனையும்‌, நிரந்தரமான இழிவும்‌ ஏற்படும்‌.

நபி (ஸல்) அவர்கள்‌ வணக்க வழிபாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்‌ என்ற வழிகாட்டுதலை பெறுவதற்கு தன்னைப்‌ பின்பற்ற வேண்டும்‌ எனக்‌ கட்டளையிட்டுள்ளார்கள்‌.

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌: என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும்‌ தொழுங்கள்‌. (புகாரி - 631)

ஹஜ்‌ வழிபாட்டு முறையை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்‌. (அஹமத்‌: 14793, முஸ்லிம்)‌

எவர்‌ நமது மார்க்கத்தில்‌ இல்லாத புதிய செயலைச்‌ செய்கிறாரோ, அந்த புதிய செயல்‌ நிராகரிக்கப்பட்டதாகும்‌. (முஸ்லிம்‌)

எவர்‌ எனது சுன்னத்தை அலட்சியப்படுத்துகிறாரோ அவர்‌ என்னை சார்ந்தவரல்ல. (புகாரி - 5063) 

இவ்வாறான பல ஆதாரங்கள்‌ நபி (ஸல்) அவர்களைப்‌ பின்பற்றுவது அவசியமானது என்றும்‌ அவர்களுக்கு மாறு செய்யக்‌ கூடாது என்றும்‌ குறிப்பிட்டு வந்துள்ளன.

أحدث أقدم