முஆவியா (ரழி) அவர்களுக்கும் அப்துல்லாஹ் பின் ஸுபைருக்கும் (ரழி) அவர்களுக்கும் மத்தியில் விவசாய நிலத் தொடர்பான ஒரு சர்ச்சை

- உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

கலீஃபா முஆவியா பின் அபீ ஸுஃப்யானுக்கும், அப்துல்லாஹ் பின் ஸுபைருக்கும் ரலியல்லாஹு அன்ஹும் மத்தியில் விவசாய நிலத் தொடர்பான ஒரு சர்ச்சை ஏற்பட்டது என்று கீழ்க்காணும் சம்பவம் வலைதளங்களில் பரவி வருகின்றது, இதன் உண்மை நிலை என்ன ?

*****************************************
கலீஃபா முஆவியா (ரலி) அவர்களுடைய நிலத்துக்கு அருகே மதீனாவில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஒரு விவசாய நிலம் இருந்தது.

முஆவியா (ரலி) அவர்களுடைய விவசாயிகள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடைய விளைநிலத்தில் அனுமதியின்றி அடிக்கடி நுழைவது வாடிக்கையாக இருந்தது.

ஒருநாள் அவ்வாறு அவர்கள் நுழைவதைக் கண்ட அப்துல்லாஹ் (ரலி)க்கு கோபம் வந்தது. (ஏற்கனவே இருவருக்கிடையே மனஸ்தாபம் இருந்தது).

உடனே டமாஸ்கஸில் இருக்கும் கலீஃபாவுக்கு அப்துல்லாஹ் (ரலி) கடிதம் எழுதினார் இவ்வாறு:

"ஈரக் குலையைக் கடித்துத் துப்பிய ஹின்த்-ன் மகன் முஆவியாவுக்கு, (கலீஃபா என்றல்ல..) அப்துல்லாஹ் பின் ஸுபைர் எழுதுவது…
உமது பணியாளர்கள் எனது விளைநிலத்தில் எப்போதும் நுழைகின்றனர். இனிமேல் நுழையக் கூடாது என்று உடனடியாக அவர்களுக்கு உத்தரவிடுங்கள். 
இல்லையெனில் அல்லாஹ் மீது ஆணை! உமக்கும் எனக்கும் இடையே பெரும் பிரச்சினை ஏற்படும். எச்சரிக்கிறேன்”.

முஆவியா (ரலி) யாரும் நினைத்துப் பார்க்க இயலா பொறுமைசாலி. கடிதம் படித்தார். 
உடனே தன் மகன் யஸீதை அழைத்து, "அப்துல்லாஹ் என்னை எச்சரித்து கடிதம் எழுதியுள்ளார். உன் கருத்து என்ன?” என்று கேட்டார்.

மகன்: "மதீனாவுக்கு உடனே ஒரு படையை அனுப்புங்கள். அதன் முதல் வீரன் மதீனாவிலும் கடைசி வீரன் இங்கும் இருக்கட்டும். அப்துல்லாஹ்வின் தலையை உங்களிடம் கொண்டுவருமாறு ஆணையிடுங்கள் தந்தையே!”.

முஆவியா (ரலி): "வேண்டாம். அதைவிட 
மிகச் சிறந்த ஓர் ஆலோசனை என்னிடம் உள்ளது”.

பின்னர் அப்துல்லாஹ்வுக்கு (ரலி) கடிதம் எழுதினார் இவ்வாறு:
"தாதுந் நிதாகைன் அஸ்மா (ரலி) அவர்களின் (ஹிஜ்ரத்தின்போது நபிகளார் வழங்கிய பட்டப் பெயர்) புதல்வர் அப்துல்லாஹ்வுக்கு, அபூ ஸுஃப்யானுடைய மகன் முஆவியா (கலீஃபா என்றல்ல..) எழுதுவது…

அல்லாஹ் மீது ஆணை! உமக்கும் எனக்குமிடையே உலகம் குறுக்கே வந்து, முழு உலகும் எனக்கே சொந்தமாக இருந்தால்கூட முழு உலகையும் உமக்கே தந்திருப்பேன். மதீனாவிலிருந்து டமஸ்கஸ் வரை எனக்கு விளைநிலம் இருந்தால்கூட அனைத்தையும் உமக்கே வழங்கியிருப்பேன். எனது இந்தக் கடிதம் கிடைத்தால்… மதீனாவில் இருக்கும் உமது நிலத்துடன் சேர்த்து எனது நிலமும் உமக்கே சொந்தம். இன்று முதல் எனது பணியாளர்கள் அனைவரும் உமக்குச் சொந்தம். அனைத்தையும்விட விசாலமானது அல்லாஹ்வின் சுவனம் அல்லவா..?”

கடிதம் படித்த அப்துல்லாஹ் (ரலி) தாடி நனையும் அளவுக்கு அழுதார். முஆவியாவை (ரலி) சந்திக்க உடனே டமஸ்கஸ் புறப்பட்டார்.

சந்தித்தார். முஆவியாவின் (ரலி) தலையில் முத்தமிட்டார். அப்போதும் அழுதார். 

கூறினார்: "குறைஷிகளிலேயே உம்மைப் போன்ற பொறுமைசாலியைக் காண்பது அரிது. உமது நன்னடத்தையால் மனித உள்ளங்களை எப்போதும் நீர் வென்றெடுத்துக் கொண்டே இருக்கிறீர்”.

*****************************************
கலீஃபா முஆவியா பின் அபீ ஸுஃப்யானும் ,அப்துல்லாஹ் பின் ஸுபைரும் ரலியல்லாஹு அன்ஹும்
தலைசிறந்த நபித்தோழர்களில் உள்ளவர்கள் என்பதும் இருவரும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சிறந்த முறையில் நட்புடன் இருந்து வந்தார்கள் என்பதும் ஆதாரமிக்க வரலாற்று செய்திகளின் ஊடாக நாம் அறியும் உண்மை.

இதன் காரணமாகத்தான் மஃஆவியா ரழியல்லாஹீ அன்ஹு அவர்களின் கிலாஃபத் காலத்தில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 45 ல் ஆஃபிரிக்காவின் போரிலும், ஹிஜ்ரி 49 ல் குஸ்துன்தீனியா (கான்ஸ்டண்டினோபில்) போரிலும் கலந்து கொண்டார்கள்,

முஆவியா ரழியல்லாஹீ அன்ஹு அவர்களின் காலத்திற்கு பின்பு அவர்களின் மகனார் யஷீத் பின் முஆவியா அவர்களின் ஆட்சிக்கு எதிராக பைய்அத்து செய்யாமல் அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிர்த்தார்கள் என்பதுதான் உண்மையான வரலாறு.

நபித் தோழர்களைப் பற்றிய எத்தனையோ ஆதாரம் மிக்க சம்பவங்கள் இருந்தும் இதுபோன்ற ஆதாரமற்ற சம்பவங்களை மக்களுக்கு மத்தியில் பரப்புவதினால் என்ன நன்மை கிடைத்து விடப்போகிறது!!!!

வலைத்தளத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்த சம்பவம் ஆதாரமற்றது , இந்த சம்பவம் உண்மையானதாக இருந்தால் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகளைக் கூறும் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் , மெய்யாகவே முஆவியா அவர்கள் சகிப்புத்தன்மைக்கு ஒரு உதாரணமாகத் தான் திகழ்ந்தார்கள்,
விவேகமுள்ள நான்கு அரபுகளில் ஒருவராகவும் முஆவியா அவர்கள் கருதப்படுகிறார் என்று இப்னு அஸாகிர் அவர்கள் தங்களின்
"தாரீக்-تاريخ " என்ற புத்தகத்தில் கூறுகின்றார்கள்

மேலும் இந்த கருத்தை சவுதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்ஷேக் 
அப்துர்ரஹ்மான் ஸுஹைம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் ஃபத்வாவில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
மீது இட்டுக்கட்டப் படும் செய்தி இதை பரப்புவது அனுமதி இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த அஹ்மத் ஷாமி அபூ அம்ரு தஹபி என்ற சமகால அறிஞர் மக்களுக்கு மத்தியில் பரவி வரும் ஆதாரமற்ற தகவல்கள் என்ற புத்தகத்தில் 
(سلسلة ما إنتشر بين الناس ولا يثبت 1/35) 
இந்த சம்பவம் ஆதாரமற்றது என்று குறிப்பிடுகிறார்.

இந்த சம்பவத்தை சில அரபு உலமாக்களான
அஷ்ஷேக் முஹம்மத் ராதிப் நாபுலுஸி, ஆயிழ் அல்கர்னி,அம்ரு காலித் போன்றவர்கள் கூறி இருப்பதை வைத்து சிலர் ஆதாரமாக கருதுகிறார்கள்.

இந்த சம்பவத்தில் கூறப்பட்டிருக்கும்
///ஈரக் குலையைக் கடித்துத் துப்பிய ஹின்த்-ன் மகன் முஆவியாவுக்கு///

ஹிந்த் பின்தி உத்பா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் அறியாமை காலத்து இந்த சம்பவம்
முஸ்னத் அஹ்மதில் வரும் இந்த அறிவிப்பை அஹமத் ஷாகிர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மட்டுமே ஸஹீஹ் என்று கூறியிருக்கிறார்கள்,

இந்த சம்பவத்தின் உண்மைநிலை தான் என்ன  ?

 இமாம் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ் அத்துர்ருல் மன்தூரிலும்,இப்னு இஸ்ஹாக் ஸீராவிலும் முர்ஸலான ரிவாயத்தை பதிவு செய்திருக்கிறார்கள் , 

டாக்டர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அவ்ஷன் தனது புத்தகமாகிய
(ما شاع ولم يثبت في السيرة النبوية )
(நபியவர்கள் வாழ்க்கை வரலாற்றில் ஆதாரமற்று பரவி வரும் செய்திகள்)
என்ற புத்தகத்தில் கீழ்காணும் தகவலை பதிவு செய்கிறார்....

இந்த சம்பவம் தொடர்பாக இமாம் அஹ்மத் பின் ஹம்பல் தனது தஃபுர்ருதான அறிவிப்பை கூறியிருப்பதாகவும் , அது பலவீனமான செய்தி என்று இமாம் இப்னு கஸீர் அவர்கள் பிதாயாவில் குறிப்பிடுகிறார்கள், 

ஸஹாபாக்களை பற்றிய தவறான எண்ணங்களை முஸ்லிம்களின் உள்ளங்களில் விதைப்பதற்காக இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது என்று பாலஸ்தீன வரலாற்று ஆசிரியர்
ஜிஹாத் அத்துர்பானி தனது புத்தகமான 100 இஸ்லாமிய ஆளுமைகள் என்பதில் குறிப்பிடுகிறார்.

அல்லாஹு அஃலம் பிஸ்ஸவாப்.
Previous Post Next Post