ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையும், அதன்பக்கம் உம்மத்திற்கு இருக்கும் தேவையும்

- அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

புகழனைத்தும் அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே. அல்லாஹ்வுடைய ஸலாத்தும், ஸலாமும் நம்முடைய தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. 

அதைத் தொடர்ந்து வருவதாவது:

இந்த தலைப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாகும். அது நீங்கள் கேட்டதைப் போல, மேலும் அதைப்பற்றி அறிவிக்கப்பட்டும் உள்ளது: "ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையும், அதன்பக்கம் உம்மத்திற்கு இருக்கும் தேவையும்" 

‘அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ்’ என்பதைக் கொண்டு நாடப்படுவது: இந்த உம்மத்தின் முதல் தலைமுறையினரை ஆகும். அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய தோழர்களான முஹாஜிர்களும் அன்ஸார்களும் ஆவர்.

அல்லாஹ் ஜல்ல வ'அலா கூறியுள்ளான்:

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنْ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَداً (رضي الله عنهم ورضوا عنه) ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும், அவர்களை சரியான முறையில் பின்பற்றினார்களே அவர்களும், அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான், அவர்களும் அவனை பொருந்திக்கொண்டனர். இன்னும், சுவனபதிகளை அவர்களுக்கென அவன் தயாராக்கி வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அவற்றிலேயே நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள் (அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான், அவர்களும் அவனை பொருந்திக்கொண்டனர்). அதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9:100)

(மேலும் அல்லாஹ்) சுப்ஹானஹு கூறியுள்ளான்:

لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلاً مِنْ اللَّهِ وَرِضْوَاناً وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ هُمْ الصَّادِقُونَ

தங்கள் வீடுகளையும், தங்கள் செல்வங்களையும் விட்டு (அக்கிரமமாக மக்காவிலிருந்து) வெளியேற்றப்பட்டார்களே அத்தகைய ஏழை முஹாஜிர்களுக்கும் (அப்பொருளில் பங்குண்டு). அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பேரருளையும், (அவனுடய) பொருத்தத்தையும் தேடுகின்றனர். இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்கின்றனர். அவர்கள் தாம் (ஸாதிகூன் என்னும்) உண்மையாளர்கள். (அல்குர்ஆன் 59:8) 

இது முஹாஜிர்களின் விடயத்தில் ஆகும்.

பிறகு அன்ஸார்களின் விடயத்தில் கூறியுள்ளான்:

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمْ الْمُفْلِحُونَ

இன்னும் (முஹாஜிர்களாகிய) அவர்களுக்கு முன்பே (மதீனாவில்) வீட்டையும் (அல்லாஹ்வின் மீது) விசுவாசம்கொள்வதையும் (கலப்பற்றதாக்கிக்) கொண்டிருந்தார்களே அத்தகைய (அன்ஸார்களான)வர்கள், தம்பால் ஹிஜ்ரத் செய்து வந்தோரை நேசிப்பார்கள். மேலும் (ஹிஜ்ரத் செய்து வந்த) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் பற்றி தங்கள் நெஞ்சங்களில் காழ்ப்புணர்ச்சியைக் காணமாட்டார்கள். மேலும், தங்களுக்கு (கடும்) தேவையிருந்த போதிலும், தங்களைவிட (முஹாஜிர்களான அவர்களுக்கு) முன்னுரிமை கொடுப்பார்கள். இன்னும் எவர் தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்பட்டாரோ, அத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 59:9)

பின்னர், அவர்களுக்குப் பின் வருபவர்களின் விடயத்தில் கூறியுள்ளான்:

وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإِيمَانِ وَلا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلاًّ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

மேலும், அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசம் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் எந்தவொரு வெறுப்பையும் எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன்” என்று (பிரார்த்தனை செய்து) கூறுவார்கள். (அல்குர்ஆன் 59:10) 

பின்னர், அவர்களுக்கு (நபித்தோழர்களுக்கு) பிறகு வந்த, மேலும் அவர்களிடம் கல்வி பயின்ற சிறப்பிற்குரிய தலைமுறையினரான தாபி'ஊன்கள், அத்பா'உத் தாபி'ஈன்கள், மேலும் அவர்களுக்கு பின்வந்தவர்களின் விடயத்தில் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 

خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ

"உங்களிலே சிறந்தவர்கள் எனது தலைமுறையினர், பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள், பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள்”.

(இதன்) அறிவிப்பாளர் கூறினார்: "தனது தலைமுறைக்கு பின்னர் இரண்டு தலைமுறைகளை குறிப்பிட்டார்களா அல்லது மூன்று தலைமுறைகளை குறிப்பிட்டார்களா என்பது எனக்கு தெரியவில்லை".

அவர்களுடைய காலம் அவர்களுக்குப் பின் வந்தவர்களை விட தனித்துவம் வாய்ந்தது. அவர்களுடைய காலத்திற்கு 'சிறந்த தலைமுறையினர்களின் காலம்' என்று சொல்லப்படும். 

அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள், 

خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ 

"உங்களில் சிறந்தவர்கள் எனது தலைமுறையினர், பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள், பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று தனது வார்த்தைகளால் புகழ்ந்து கூறிய அவர்கள் தான் இந்த உம்மத்துடைய ஸலஃபுகள்.

எனவே, அவர்கள்தான் இந்த உம்மத்திற்கு முன்மாதிரிகள். மேலும், அவர்களுடைய மன்ஹஜ் தான், (இந்த உம்மத்தானது) அவர்களுடைய கொள்கையிலும், நடத்தைகளிலும், நற்குணங்களிலும், இன்னும் அவர்களுடைய எல்லா காரியங்களிலும் பயணிக்க வேண்டிய பாதையாகும்.

மேலும், அவர்களுடைய மன்ஹஜானது, அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாஹ்வில் இருந்து எடுக்கப்பட்டதாகும். (அது) அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுடன் அவர்களுக்கு இருந்த நெருக்கம், (அல்குர்ஆன்) இறக்கப்பட்ட காலத்துடனான நெருக்கம், மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களிடமிருந்து (நேரடியாக கல்வி பயின்ற) காரணத்தினாலுமாகும்.

எனவே, அவர்கள் தான் தலைமுறைகளிலேயே மிகச் சிறந்தவர்கள், மேலும் அவர்களின் வழிமுறையே வழிமுறைகளில் மிகச் சிறந்ததாகும். இதன் காரணமாகவே, முஸ்லிம்கள் அவர்களின் வழிமுறையை எடுத்து (நடப்பதற்காக) அதனை அறிந்து கொள்வதன் மீது ஆர்வம் கொள்கின்றனர். ஏனெனில், அவர்களின் வழிமுறையை அறிந்து கொள்ளாமலும், படிக்காமலும் மற்றும் அதன்படி அமல் செய்யாமலும், அதன் மீது பயணிப்பதென்பது இயலாத ஒன்றாகும்.

இதன் காரணமாகவே அல்லாஹு ஜல்ல வ'அலா கூறுகிறான்:

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنْ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ 

முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும், மேலும் அவர்களை இஹ்ஸானுடன் பின்பற்றினார்களே அவர்களும்

(இஹ்ஸானுடன்) அதாவது: சரியான முறையில் (பின்பற்றுவது). அவர்களின் மத்ஹபையும், வழிமுறையையும், அவர்கள் எதன் மீது பயணித்தார்களோ அதனையும் கற்றுக் கொள்ளாமல் அவர்களை சரியான முறையில் பின்பற்றுவது என்பது இயலாத ஒன்றாகும்.

ஸலஃபுகளின் வழிமுறையைப் பற்றி அறிந்து கொள்ளாமல் வெறுமனே ஸலஃபுகளுடனோ அல்லது ஸலஃபிய்யத்துடனோ தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வதைப் பொறுத்தவரையில், இது எந்தவொரு பயனையும் அளிக்காது; மாறாக அது (அவ்வாறு அறிவில்லாமல் தொடர்புபடுத்திக் கொள்வது) தீங்கு விளைவிக்கக் கூடும். (எனவே), ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையை அறிந்து கொள்வதென்பது கட்டாயமாகும்.

இதன் காரணமாகத்தான், இந்த உம்மத்தானது ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையை (தங்களுக்கு மத்தியில்) பயில்பவர்களாகவும், இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு (அதனைக்) கொண்டு சேர்த்து வரக்கூடியதாகவும் இருந்துள்ளது. 

(ஸலஃபுகளின் வழிமுறையானது) பள்ளிவாசல்களில் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் பள்ளிக்கூடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வந்தது.

இதுவே ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையாகும். மேலும், இதுவே அதனை அறிந்து கொள்வதற்கான வழியாகும்; நாம் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்தும், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய  ஸுன்னாஹ்விலிருந்தும் எடுக்கப்பட்ட தூய்மையான ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையை கற்றுக் கொள்ள வேண்டும். 

இந்த உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் என்று நபி ﷺ அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

அது, அன்னாருடைய வார்த்தையில் (வந்துள்ளது):

افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَافَترَّقَتِ النَّصَارَى عَلَى اثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَستَفْتَرِقُ هذه الأمة عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً كلها في النار إلا واحدة ، قيل: من هي يا رسول الله؟ قال: من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي

“யூதர்கள் எழுபத்தோரு கூட்டங்களாகப் பிரிந்தனர், கிறிஸ்துவர்கள் எழுபத்து இரண்டு கூட்டங்களாகப் பிரிந்தனர், மேலும் இந்த உம்மத் எழுபத்து மூன்று கூட்டங்களாகப் பிரியும். (அவற்றுள்) ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர மற்றவை யாவும் நரகத்தில் இருக்கும். "அல்லாஹ்வின் தூதரே! (பாதுகாப்புப் பெறும்) அந்த ஒரு கூட்டம் எது?" எனக் கேட்கப்பட்டது. (அதற்கு) "நானும் என் தோழர்களும் இன்றையத் தினம் எதன் மீது உள்ளோமோ, அது போன்றவற்றின் மீது இருப்பவர்கள்" என பதிலளித்தார்கள்.

இதுவே அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களும், அவர்களுடைய தோழர்களும், மேலும் அவர்களை சரியான முறையில்  பின்பற்றியவர்களும் இருந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையாகும்.  

அஸ்ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையை பற்றிப் பிடிப்பதற்காக அதை அறிந்திருப்பதன் பக்கம் கடுமையான தேவை இருக்கின்றது. ஏனெனில், அதுவே பாதுகாப்பிற்குரிய  வழியாகும்.

كلها في النار إلا واحدة 

"அவையனைத்தும் நரகத்தில், ஒன்றைத் தவிர"

அதுதான் பாதுகாப்பு பெற்றக் கூட்டம்; மேலும் அவர்கள் தான் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா'அஹ். 

‘ஒன்றைத் தவிர’ அதுதான் மனிதர்களானவர்கள் வேறுபட்டு, மத்ஹபுகள் பெருகும் பொழுது, இன்னும் பாதைகளும், கூட்டங்களும், இயக்கங்களும் பெருகும் பொழுது, அதுவே ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையின் மீது இருக்கும். தனது இறைவனை சந்திக்கும் வரை அதனைப் பற்றிப் பிடித்து, அதன் மீது பொறுமை காத்து இருக்கும். 

والنبي صلى الله عليه وسلم وعظ أصحابه في آخر حياته، موعظة بليغة، وعظهم موعظة بليغة؛ أثرت فيهم بكت منها العيون قالوا يا رسول الله: كأنها موعظة مودِّع فأوصنا

நபியவர்கள் ﷺ தன்னுடைய வாழ்க்கையின் கடைசி காலத்தில், தனது தோழர்களுக்கு தெளிவான அறிவுரை ஒன்றை வழங்கினார்கள். அது அவர்களின் (உள்ளத்தில்) தாக்கத்தை ஏற்படுத்தியது, அதனால் கண்கள் கலங்கியது. "அல்லாஹ்வுடைய தூதரே! இது ஒரு விடைபெறுபவரின் அறிவுரையைப் போன்று உள்ளதே! எனவே, எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்" என்று அவர்கள் கேட்டார்கள்.

قال: أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ السمع والطاعة لمن؟ لولاة أمور المسلمين، 

அவர்கள் ﷺ கூறினார்கள்: தக்வாவைக் கொண்டும், இன்னும் கீழ்ப்படிதல் மற்றும் கட்டுப்பட்டு நடத்தலைக் கொண்டும் உங்களுக்கு நான் உபதேசம் செய்கின்றேன். 

கீழ்ப்படிதலும் கட்டுப்பட்டு நடத்தலும் யாருக்கு? முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்களுக்கு ஆகும். 

وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ تأمر عليكم عَبْد فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلاَفًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ من بعدي تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ، كُلَّ ضَلاَلَةٍ فِي النَّارِ 

ஒரு அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக ஆனாலும், செவிமடுத்தல் மற்றும் கட்டுப்படுதலைக் கொண்டு (உங்களுக்கு நான் உபதேசம் செய்கின்றேன்). ஏனெனில், நிச்சயமாக (எனக்கு பின்பு) உங்களில் வாழ்பவர் அதிகமான கருத்து முரண்பாடுகளைக் காண்பார். எனவே, என்னுடைய ஸுன்னத்தையும், எனக்குப் பின் வரும் நேர்வழிபெற்ற ஃகலீஃபாக்களுடைய ஸுன்னத்தையும் பற்றிப் பிடிப்பது உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அவற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள், மேலும் அவற்றை உங்களுடைய கடவாய்ப் பற்களால் பற்றிக் கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதுமையான விடயங்களை குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நிச்சயமாக ஒவ்வொரு புதுமையான விடயமும் பித்ஃஅத்தாகும். ஒவ்வொரு பித்ஃஅத்தும் வழிகேடாகும். மேலும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச் செல்லும்.  

இதுவே, நபி ﷺ அவர்கள் தனது உம்மத்திற்கு அளித்த உபதேசமாகும். அதாவது, அஸ்ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையின் மீது பயணிப்பது; ஏனெனில், அதுவே பாதுகாப்பிற்கான வழியாகும்.

இது அல்லாஹ் ஜல்ல வ'அலாவுடைய கூற்றிலுள்ளது போன்றாகும்:

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيماً فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இன்னும், “நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும். ஆகவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள்; அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகுவதற்காக இவற்றை (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு ஏவுகிறான்” (என்று கூறுவீராக!). (அல்குர்ஆன் 6:153)

(மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகுவதற்காக இவற்றை அவன் உங்களுக்கு ஏவுகிறான். 

நரக நெருப்பை விட்டும் (உங்களை) காத்துக் கொள்ள, வழிகேட்டை விட்டும் காத்துக் கொள்ள, மேலும் வழிகேடான கூட்டங்களை விட்டும் மாறுபட்டு நடந்து கொள்ள, உங்களுடைய நபி ﷺ அவர்கள், அண்ணாருடைய தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்களுடன் நீங்கள் சேர்ந்து கொள்வதற்காக சரியான வழிமுறையின் மீது பயணியுங்கள்.

எவரொருவர் இதனைப் பற்றி பிடிப்பாரோ - அதுவும் குறிப்பாக கடைசி காலக் கட்டங்களில் - அவர் மக்களிடமிருந்தும், அவருடன் முரண்படக் கூடியவர்களிடமிருந்தும் கஷ்டங்களை சந்திப்பார். (இன்னும்) கடுமையான நிந்தனைகளையும், மிரட்டல்களையும் சந்திப்பார். எனவே, அவருக்கு பொறுமை தேவை. இந்த வழியில் இருந்து திருப்புவதற்கு, வழிகெட்ட கூட்டங்கள் மற்றும் வழிதவறிய போக்குகளிடமிருந்து வசீகரமான விடயங்களையும், மிரட்டல்களையும், ஆசை வார்த்தைகளையும், பயமுறுத்தல்களையும் சந்திப்பார். (எனவே), அவருக்கு பொறுமை தேவை.

இதன் காரணமாகவே நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 

بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا كَمَا بَدَأَ فَطُوبَى لِلْغُرَبَاءِ ، قيل: ومن الغرباء يا رسول الله؟ قال: الَّذِينَ يصلُحون إِذَا فَسَدَ النَّاس وفي رواية: الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاس 

இஸ்லாம் அன்னியமான ஒன்றாக ஆரம்பித்தது. மேலும் அது ஆரம்பித்தவாரே மீண்டும் அன்னியமான நிலைக்கு திரும்பும். எனவே, அன்னியர்களுக்கு தூபா உண்டு. அல்லாஹ்வின் தூதரே, "அன்னியர்கள் யார்"? என்று கேட்கப்பட்டது. "மக்கள் சீர்கெடும் பொழுது அவர்கள் சீராகுவார்கள்". மற்றொரு (அறிவிப்பில்), "மக்கள் சீர்கெடுத்ததை அவர்கள் சீர்செய்வார்கள்" என்று கூறியதாக வந்துள்ளது. 

எனவே, இந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் பாதையில் பயணித்தவரைத் தவிர வேறு எவரும் உலகில் வழிகேட்டில் இருந்தும், மறுமையில் நரகை விட்டும் பாதுகாப்பு பெற மாட்டார்.

இவர்களின் விடயத்திலேயே  அல்லாஹ் கூறியுள்ளான்:

وَمَنْ يُطِعْ اللَّهَ وَالرَّسُولَ فَأُوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُوْلَئِكَ رَفِيقاً ذَلِكَ الْفَضْلُ مِنْ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيماً

மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ, அவர்கள் நபிமார்கள், சத்தியவான்கள், ஷஹீதுகள், நல்லடியார்கள் ஆகியோர்களிலிருந்து எவர்கள் மீது அல்லாஹ் அருள் செய்திருக்கிறானோ அத்தகையோருடன் (சுவனத்தில்) இருப்பார்கள். அவர்கள் தோழமைக்கு எவ்வளவு அழகானவர்கள்! இப்பேரருள் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். இன்னும், (அவர்களின் செயல்களை) நன்கறிகிறவனாக இருக்க அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:69,70)

இதன் காரணமாகவே, நம்முடைய வாஜிபான மற்றும் நஃபிலான தொழுகைகளில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஃபாத்திஹா ஓதுவதை நம்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதன் இறுதியில் இந்த மகத்தான து'ஆவானது உள்ளது:

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1:6)

நேரான பாதை; ஏனெனில், (அதல்லாத) வழிகேடான ஏமாற்றக்கூடிய பாதைகளும் உள்ளன. எனவே, இந்த பாதைகளை விட்டு உன்னை தூரப்படுத்துமாறும், (நேரான) பாதையின் பக்கம் உன்னை வழிநடத்துமாறும் நீ அல்லாஹ்விடத்தில் கேட்கின்றாய். அதாவது, இந்த து'ஆவுடைய முக்கியத்துவம் காரணமாக ஒவ்வொரு ரக்'அத்திலும், உன்னை நேரான பாதையின் பக்கம் வழிகாட்டுமாறும், மேலும் அதில் உன்னை உறுதிப்படுத்துமாறும் (நீ அல்லாஹ்விடத்தில் கேட்கின்றாய்).

"அஸ்ஸிராத்துல் முஸ்தகீம்" எனும் அதன் பொருளை சிந்தித்துப் பார்.

அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் மீது பயணிக்கும் அத்தகையவர்கள் யார்? அவர்கள் எத்தகையோரெனில் அல்லாஹ் அருள்புரிந்தவர்கள் ஆவர். 

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி} (அல்குர்ஆன் 1:7)

அல்லாஹ் அருள்புரிந்த அத்தகையவர்கள் யார்? 

مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُوْلَئِكَ رَفِيقاً


{நபிமார்கள், சத்தியவான்கள், ஷஹீதுகள், நல்லடியார்களிலிருந்து உள்ளவர்கள். அவர்கள் தோழமைக்கு எவ்வளவு அழகானவர்கள்!}. (4:69)

இந்த (நேரான) பாதைக்கு அல்லாஹ் உன்னை வழிநடத்த வேண்டும் என்று நீ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் பொழுது, வழிகேடான மற்றும் வழிதவறிய பாதைகளை விட்டும் அல்லாஹ் உன்னை தூரப்படுத்த வேண்டும் என்றும் நீ பிரார்த்தனை செய்கின்றாய்.

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ

எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழியானது உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையது அல்ல. (அல்குர்ஆன் 1:7)

غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ

கோபத்திற்கு உள்ளானவர்களுடையது அல்ல.

அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான். அவர்களே யஹுதிகள்; சத்தியத்தை அறிந்திருந்தார்கள், எனினும் அதன்படி அமல் செய்யவில்லை. மேலும் இந்த உம்மத்திலிருந்து யஹுதிகளின் வழியில் பயணித்த ஒவ்வொருவரும் (அதில் அடங்குவர்). சத்தியத்தை அறிந்து கொண்டு, அதன்படி அமல் செய்யாத ஒவ்வொருவரும் யஹுதிகளின் வழியில் உள்ளவராவார், (அல்லாஹ்வின்) கோபத்திற்கு உள்ளானவர்களுடைய வழியில் உள்ளவராவார்.

ஏனெனில், அவர் சத்தியத்தை அறிந்து கொண்டு அதன்படி செயல்படவில்லை; கல்வியை எடுத்துவிட்டு, அமலை விட்டு விட்டார். தனது கல்வியைக் கொண்டு அமல் செய்யாத ஒவ்வொரு ஆலிமும், (அல்லாஹ்வின்) கோபத்திற்கு உள்ளானவர்களிலிருந்து  உள்ளவராவார்.

وَلا الضَّالِّينَ

{வழி தவறியவர்களுடையதும் அல்ல}. (அல்குர்ஆன் 1:7) 

அவர்கள் எத்தகையவர்களெனில் அறியாமை மற்றும் வழிகேட்டின் மீது அல்லாஹ்வை வணங்குபவர்கள். 

அல்லாஹ்வை வணங்குவார்கள், அவனிடத்தில் நெருக்கத்தைத்  தேடுவார்கள். எனினும், அவர்கள் சரியான வழி மற்றும் சீரான பாதையின் மீதல்லாமல், குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்விலிருந்துள்ள ஆதாரத்தின் மீதல்லாமல், பித்அத்தின் மீது (அல்லாஹ்வை வணங்குவார்கள்). 

وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ

மேலும் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.

கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்கள் வழியில் சென்றவர்கள் இருப்பதைப் போன்றாகும். (எனவே, அவர்களைப் பின்பற்றி) சரியான வழி மற்றும் சீரான பாதையின் மீதல்லாமல் அல்லாஹ்வை வணங்குகின்ற ஒவ்வொருவரும் வழிகேடராவார்; (சரியான) பாதையிலிருந்து தொலைந்தவராவார், மேலும் அவருடைய அமலானது வீணானதாகும்.

இது நாம் நம்முடைய தொழுகைகளில் ஒவ்வொரு ரக்'அத்திலும் திரும்பத் திரும்பத் ஓதுகின்ற (பல அர்த்தங்களை அதனுள்) அடக்கியுள்ள ஒரு து'ஆ ஆகும். எனவே, அதனுடைய அர்த்தத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் நமக்கு பதில் அளிக்கப்படுவதற்காக (பொடுபோக்காக அன்றி) உள்ளம்  கவனம் கொண்டுள்ள நிலையில், அதன் அர்த்தத்தைப் புரிந்த நிலையில் அதனைக் கொண்டு து'ஆ செய்ய வேண்டும். அல்ஃபாத்திஹாவிற்கு பிறகு 'ஆமீன்' என்று சொல்லப்படும்.

 'ஆமீன்' அதனுடைய பொருளாவது: யா அல்லாஹ்! பதிலளிப்பாயாக என்பதாகும். எனவே, இதனைச் சிந்தித்துப் பார்ப்பவருக்கு இது ஒரு மகத்தான துஆ (என்பது தெரிய வரும்) . 

நாம் (முன்னர்) குறிப்பிட்டதைப் போன்று நிஃமத் செய்யப்பட்டவர்களின் வழியில் பயணிக்கக்கூடியவர், சோதிக்கப்படுவார், நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார், இழிவுபடுத்தப்படுவார், வழிகேடர் என பழிசுமத்தப்படுவார், இன்னும்  பயமுறுத்தப்படுவார். (எனவே), அவருக்கு பொறுமை தேவை.

இதன் காரணமாகவே, "இறுதி காலத்தில்  தனது மார்க்கத்தை பற்றிப் பிடிப்பவர் நெருப்புக் கங்கினை (கையில்) பிடித்துக் கொண்டிருப்பவரைப் போலாவார்" என்று ஹதீஸ்களில் வந்துள்ளது. "நெருப்புக் கங்கினை (கையில்) பிடித்துக் கொண்டிருப்பவர் (போலாவார்)". ஏனெனில் அவர் நோவினையைச் சந்திப்பார், மக்களிடமிருந்து தீங்கினைச் சந்திப்பார். எனவே, (அவருக்கு) பொறுமை தேவை.

"நெருப்புக் கங்கினை (கையில்) பிடித்துக் கொண்டிருப்பவரைப் போலாவார்". இது (மார்க்கத்தைப் பற்றி பிடிப்பது) - அவர்கள் கூறுவது போன்று - ரோஜா மலர்கள் தூவப்பட்டு இருக்காது. இது அவ்வாறல்ல; (மாறாக) இதிலே சிரமம் இருக்கும். மேலும் இதிலே மக்களிடமிருந்து நோவினை இருக்கும். 

(ஆகவே) நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, உலகில் வழிகேட்டிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, (இன்னும்) மறுமையில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, அதன் மீது (மார்க்கத்தின் மீது) இருந்த நிலையில் நீங்கள் உங்களது இறைவனைச் சந்திக்கும் வரை உங்களுக்கு அதன் மீது பொறுமை மற்றும் உறுதி வேண்டும். 

இதைத் தவிர வேறொரு பாதை இல்லை. மேலும் இதில் பயணிப்பதைக் கொண்டேயே தவிர எந்தவொரு பாதுகாப்பும் இல்லை.

தற்பொழுது நாளிதழ்கள், பத்திரிக்கைகள், மற்றும் புத்தகங்களில் (தவறாக சித்தரித்து) ஸலஃப் மன்ஹஜை விட்டும் புறக்கணிக்கும்படி செய்கின்றார்கள். உண்மையான ஸலஃபிகளான அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா'அத்தினரை தரக்குறைவாக பேசுகின்றார்கள். "அவர்கள் கடினப் போக்குடையவர்கள், அவர்கள் 'தக்ஃபீரிகள்' (மக்களை தகுந்த காரணமின்றி காஃபிர்கள் என்று கூறுபவர்கள்), அவர்கள் (இவ்வாறு) அவர்கள் (அவ்வாறு)" என்று தரக்குறைவாக பேசுகின்றார்கள்.

என்றாலும், இது (அவர்களுக்கு) தீங்கை ஏற்படுத்தாது. எனினும் பொறுமை, வலிமை (மற்றும்) மனவுறுதி இல்லாத மனிதரின் மீது இது பாதிப்பை ஏற்படுத்தும்; இது அவரை பாதிக்கக்கூடும்.

அவர்களில் சிலர் "ஸலஃப் என்றால் யார்"?! ஸலஃபுகள், அவர்கள் மற்ற கூட்டங்களைப் போல் ஒரு கூட்டமே, மற்ற பிரிவுகளைப் போல் ஒரு பிரிவே, மற்ற இயக்கங்களைப் போல் ஒரு இயக்கமே, அவர்களுக்கென்று எந்தவொரு தனிச்சிறப்பும் கிடையாது!" என்று கூறுவோறும் உண்டு. இவ்வாறே அவர்களில் சிலர் கூறுகின்றனர்.

"ஸலஃபுகளுக்கென்று எந்தவொரு தனிச்சிறப்பும் கிடையாது, மற்ற பிரிவுகள் மற்றும் இயக்கங்களைப் போன்று அவர்களும் ஒரு பிரிவே, ஒரு இயக்கமே!". இதிலிருந்து (இவ்வாறு கூறுவதிலிருந்து) நம்முடைய கைகளை மன்ஹஜுஸ் ஸலஃபிலிருந்து விலகிச் சென்றிட நாடுகின்றார்கள்.

மேலும் "நாங்கள் ஸலஃபுகளின் புரிதல் மற்றும் ஸலஃபுகளின் கல்வியைக் கொண்டு பணிக்கப்பட்டவர்கள் அல்லர், நாங்கள் (அதனைக் கொண்டு) பணிக்கப்பட்டவர்கள் அல்லர். எங்களுடைய பாதையை நாங்களே அமைத்துக் கொள்வோம்! புதிதாக எடுத்துக் கொள்வோம், (மார்க்க ஆதாரங்களிலிருந்து) புதிதாக சட்டங்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களுக்கென புதிய புரிதலை நாங்கள் உருவாக்கிக்கொள்வோம். இது ஒரு பழைய புரிதலாகும், ஸலஃபுகளின் புரிதல் ஒரு பழைய புரிதலாகும்!" என்று கூறுவோரும் அவர்களில் உள்ளனர்.

மேலும் "(அவர்களுடைய புரிதலானது) இந்த (நவீன) காலத்திற்கு பொருந்தாது, அது அவர்களது காலத்திற்கு பொருந்தும், நமது காலம் மாறிவிட்டது!" எனக் கூறுகின்றனர். (இதன்மூலம்) ஸலஃபுகளுடைய புரிதலை (மக்கள்) புறக்கணிக்கும்படி செய்கின்றனர். மேலும் புதிய புரிதலின் பக்கம் அழைப்பு விடுக்கின்றனர். (முறையான கல்வியில்லாத) எழுத்தாளர்கள், மற்றும் வழிதவறியர்ளிடமிருந்து வரும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகளில் இது அதிகமாகிவிட்டது.

நம்முடைய கைகளை ஸலஃபுகளின் வழிமுறையிலிருந்து விலகி சென்றுவிட விரும்புகிறார்கள். ஏனெனில், மத்ஹபுஸ் ஸலஃபைப் பற்றி நமக்கு தெரியவில்லையெனில், அதனை புறக்கணித்து விட்டோமெனில், மேலும் அதனைப் படிக்கவில்லையெனில் (வழிதவறி விடுவோம்). ஏனெனில், அவ்வழிமுறையைப் பற்றி அறிவு இல்லாமல், தெளிவான ஞானம் இல்லாமல் ஸலஃபுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்வது என்பது நிச்சயமாக போதாது. 

இதையே நம்மிடமிருந்து அவர்கள் விரும்புகிறார்கள். ஸலஃபுகளுடைய மத்ஹபை, ஸலஃபுகளுடைய பிஃக்ஹை, ஸலஃபுகளுடைய அறிவை நாம் விட்டுவிட்டு, அவர்கள் கூறுவது போன்று இந்த காலத்திற்கு ஏற்றவாறு புதுமையான பிஃக்ஹை - அது பொய்யான ஒன்றாக இருக்கும் நிலையில் - உண்டு பண்ணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். 

மேலும், இஸ்லாத்துடைய சட்டங்களோ மறுமை நாள் நிகழும் வரைக்கும் ஒவ்வொரு காலத்திற்கும், இடத்திற்கும் பொருந்தக்கூடியதாகும். 

எனவே, மன்ஹஜுஸ் ஸலஃபும் ஒவ்வொரு காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்தக்கூடியதாகும். (அது) அல்லாஹ் அஸ்ஸ வஜல்லிடமிருந்து வந்த ஒளியாகும். இந்த நன்மைக்கு தடைக்கல்லாக இருக்கக்கூடியவர்களின் பேச்சு அல்லது இந்த வழிதவறியவர்களின் பேச்சு உன்னை அதை விட்டும் புறக்கணிக்கச் செய்திட வேண்டாம்; உன்னை அதை விட்டும் புறக்கணிக்கச் செய்திட வேண்டாம்.

அல்இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "இந்த உம்மத்தின் முதல் பகுதியை எது சீராக்கியதோ, அது தவிர வேறொன்றும் அதன் கடைசிப் பகுதியை சீராக்காது." 

அதன் முதல் பகுதியை சீராக்கியது எது?!

அது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாஹ்வும், அல்லாஹ்வின் தூதர்  ﷺ அவர்களைப் பின்பற்றியதுமே; அல்குர்ஆனைக் கொண்டு அமல் செய்வது, அஸ்ஸுன்னாஹ்வைக் கொண்டு அமல் செய்வது, இதுவே இந்த உம்மத்தின் முதல் பகுதியை சீராக்கியது. (எனவே), இந்த உம்மத்தின் முதல் பகுதியை எது சீராக்கியதோ அது தவிர வேறொன்றும் அதன் கடைசிப் பகுதியை சீராக்காது.

எனவே, எவரொருவர் பாதுகாப்பைப் விரும்புவாரோ, அவர் மீது மத்ஹபுஸ் ஸலஃபை அறிந்து கொள்வது, அதனைப் பற்றிப் பிடிப்பது, மேலும் அதன் பக்கம் (மக்களை) அழைப்பது ஆகியன கடமையாக இருக்கின்றது. 

அதுவே வெற்றியின் பாதை. அது நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கப்பலைப் (போன்றதாகும்). எவர் அதில் ஏறிக்கொள்வாரா, அவர் பாதுகாப்பு பெறுவார். மேலும் எவர் அதனை விட்டு விடுவாரோ அவர் அழிந்து விடுவார், வழிகேட்டில் மூழ்கி விடுவார்.

மத்ஹபுஸ் ஸலஃபைக் கொண்டே தவிர நமக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. மேலும் கற்றுக்கொள்வதன் மூலமே தவிர நம்மால் மத்ஹபுஸ் ஸலஃபைப் பற்றி அறிந்து கொள்ள இயலாது. 

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

"நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவர்களின் மீது நீ நிஃமத் செய்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக)" என்று அல்லாஹ்விடத்தில் கேட்பதோடு அதனைக் கற்றுக் கொள்வது, அதனைக் கற்றுக் கொடுப்பது மற்றும் பயில்வதைக் கொண்டே (தவிர நம்மால் அதனை அறிந்து கொள்ள இயலாது).  

அதற்காக நமக்கு தவ்ஃபீக் செய்யுமாறும், மேலும் அதன் மீது நம்மை உறுதிப்படுத்துமாறும் அல்லாஹ்விடத்தில் நாம் து'ஆ செய்ய வேண்டும். இது கண்டிப்பாக இருத்தல் வேண்டும். இவ்விடயம் (வெறுமனே) உரிமைக்கோறும் விடயமல்ல. உரிமைக்கோரல்கள் என்பது அதற்கு ஆதாரங்களை நிலைநாட்டவில்லையெனில், அதனுடைய மக்கள் (தங்களுக்கு உரிமையில்லாத ஒன்றை வெறுமனே) உரிமைக்கோரியவர்கள் ஆவர். இவ்விடயமானது (வெறுமனே) தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. 

அல்லாஹ் ஜல்ல வ'அலா கூறுகின்றான்:

وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ

இஹ்ஸானுடன் அவர்களை (முஹாஜிர்களையும், அன்ஸார்களையும்) பின்பற்றினார்களே அவர்களும் (அல்குர்ஆன் 9:100) 

அதாவது, சரியான முறையில் (பின்பற்றுவது).  

மத்ஹபுஸ் ஸலஃபை சரியான முறையில் உன்னால் பின்பற்ற இயலாது, அதனை நீ அறிந்து, அதனை நீ கற்றுக் கொண்டாலே தவிர. மேலும் அதனை உன்னால் பற்றிப்பிடிக்க இயலாது, அதன் மீது நீ பொறுமையாக இருந்தாலேயே தவிர. வழிகெடுக்கக்கூடிய, அதனை விட்டு திருப்பக்கூடிய மற்றும் அதனை விட்டும் புறக்கணிக்கும்படி செய்யக்கூடிய பிரச்சாரங்களுக்கு செவிமடுக்காதே.

இதுவே சரியான பாதையாகும்; பாதுகாப்புடைய பாதையாகும். 

“ஒரு (கூட்டத்தைத்) தவிர மற்றவை யாவும் நரகத்தில் இருக்கும். அல்லாஹ்வின் தூதரே, அது எந்தக் கூட்டம்?" எனக் கேட்கப்பட்டது. (அதற்கு) "இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எதன்மீது இருக்கின்றோமோ அது போன்றதின் மீது இருப்பவர்கள்" என்று கூறினார்கள். 

இதுவே மன்ஹஜுஸ் ஸலஃப் ஆகும். மேலும் இதுவே சுவனத்திற்குக் கொண்டு சேர்க்கும் பாதுகாப்பின் பாதையாகும். இதுவல்லாது வேறு எந்தவொரு பாதையும் இல்லை; இதல்லாத மற்ற அனைத்து பாதைகளும் வழிகெட்டதாகும்.

وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌

இன்னும், மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். (அல்குர்ஆன் 6:153)

அதுவே அல்லாஹ்வுடைய பாதையாகும், மேலும் அதல்லாத (மற்றவை) வழிகெடுக்கக்கூடிய பாதைளாகும், வழிதவறிய பாதைகளாகும்; அவற்றிலிருந்துள்ள ஒவ்வொரு பாதையின் மீதும் ஷைத்தான் இருந்து கொண்டு மக்களை அதன்பால் அழைக்கின்றான்.

இந்த வழிகேட்டை நோக்கி அழைக்கக்கூடிய அழைப்பாளர்களிடமிருந்து நபி ﷺ அவர்கள் (தனது உம்மத்தின் விடயத்தில்) பயந்துள்ளார்கள். அவர்கள் எத்தகையவர்களெனில், மக்களை மன்ஹஜுஸ் ஸலஃபை விட்டும் திசை திருப்ப நாடுகின்றார்கள். 

மேலும், "அவர்கள் நரகின் வாயில்களில் நின்று கொண்டிருக்கும் அழைப்பாளர்கள். எவர்கள் அவர்களுக்கு கீழ்ப்படிவார்களோ, அவர்களை அதில் வீசிவிடுவார்கள்" எனவும் அறிவித்தார்கள். எனவே, இவர்களைக் குறித்தான எச்சரிக்கை கடுமையானதாகும். 

இன்னும், எப்பொழுதெல்லாம் காலம் பின் நோக்கி செல்லுமோ அப்பொழுதெல்லாம் (சத்தியம்) அன்னியமாக இருப்பது கடுமையாகும், மேலும் ஃபித்னாக்கள் அதிகரிக்கும். ஆகவே, முஸ்லிம்கள் மன்ஹஜுஸ் ஸலஃபில் இன்னும் அதிகமான கவனம் செலுத்துவதற்கான தேவை இருக்கும்.

"மக்கள் அனைவருமே முஸ்லிம்கள் (தான்), அனைவருமே முஸ்லிம்கள் (தான்)" எனக் கூறுவோரும் இந்த வழிகெடுப்பவர்களில் உள்ளனர். முஸ்லிம்கள் (தான்), ஆனால் எந்த வழியின் மீது இருப்பவர்கள்?!" ரஸூல் ﷺ அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் வழியின் மீது உள்ளவர்கள் (என்றால்) ஆம், மனமுவப்புடன் ஏற்றுக் கொள்வோம் அல்லது வழிதவறிய பாதைகளின் மீது இருந்து கொண்டு, இன்னார், அன்னாருடைய வழிமுறையின் மீது இருக்கின்ற பெயரளவில் (மட்டும்) உள்ள முஸ்லிம்களா? (அப்படியெனில்) அவர்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதைகளின் மீதுள்ள வழிதவறியவர்கள் ஆவார்கள்.

(இங்கு) விடயமென்பது இஸ்லாத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது மட்டுமல்ல, (மாறாக) தொடர்புபடுத்திக் கொள்வது மற்றும் உண்மையாகவே (அதன்மீது பயணிப்பது என இரண்டும் ஆகும்). பயனுள்ள கல்வி மற்றும் பயில்வதில் கவனம் செலுத்துவதைக் கொண்டே தவிர இது சாத்தியமில்லை. 

இதன் காரணமாகவே, உலமாக்கள் அகீதா, அதன் பாடங்கள், அதன் பிரிவுகள் மற்றும் அதனுடைய மஸாயில்கள் ஆகியவற்றிற்கு கவனம் கொடுப்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும் ஸலஃபுடைய வழிமுறையைப் படிப்பது மற்றும் அதிலே கவனம் கொள்வதற்காக, அது விடயத்தில் சுருக்கமான மற்றும் விரிவான நூற்களைத் தொகுத்தார்கள். (இது மக்கள்) அதனைப் பற்றிப் பிடிப்பதற்காக, மேலும் அதன் மீது பயணிப்பதற்காக ஆகும். 

எனவே, இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதிலும் குறிப்பாக இருளும் வழிகேடும் வேரூன்றி இருக்கும் பொழுது, ஒரு முஸ்லிமிற்கு ஒளியின் பக்கம் தேவை உள்ளது. அதனைக் கொண்டு அவர் வழிகேடுகள் மற்றும் அறியாமையின் இருள்களில் பயணிப்பார். 

(தங்களை) அறிஞர்களைப் போல் காட்டிக் கொள்பவர்கள், இன்னும் கல்வியும், அறிவும் இருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் இந்த காலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள். அவரோ கல்வியை அதன் மூல ஆதாரங்கள் மற்றும் அதன் அடிப்படைகளில் இருந்து எடுக்கவில்லை.

தன்னைப் போன்றோரிடமிருந்து அல்லது (வெறுமனே) புத்தகங்களிலிருந்து அல்லது - அவர்கள் கூறுவது போல - கலாச்சாரங்களில் இருந்து எடுத்துக் கொள்கின்றார். இது நலவின் பக்கமோ, சரியான பாதையின் பக்கமோ கொண்டு சேர்க்காது. மன்ஹஜுஸ் ஸலஃபைப் பற்றிப் பிடித்திடவும், அதன்மீது பயணிக்கவும் அதனை சரியாகப் பயில்வதென்பது கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

அதன் பாதையில் (பயணிக்கும் பொழுது) உனக்கு ஏற்படுகின்ற பழி, அவமதிப்பு மற்றும் அதுவல்லாததன் மீது பொறுமையாக இருத்தல் கட்டாயமாகும்.

ஸலஃபுடைய பாதையைப் பற்றிப்பிடிப்பவருக்கு ஏற்படும் அவமதிப்பு மற்றும் குறை கூறுதலை தற்போது நீங்கள் செவியுறுகிறீர்கள். “இவன் ஒரு பிற்போக்குவாதி, இவனொரு, இவனொரு…” என்று கூறுகிறார்கள். இதுபோன்ற முட்டாள்தனமான மற்றும் அசத்தியமான (பேச்சுகள்) உன்னை சத்தியத்தை விட்டும் புறக்கணிக்கச் செய்திட வேண்டாம். இந்த சரியான வழிமுறையைப் பற்றிப்பிடித்துக்கொள். ஏனெனில், அதுவே பாதுகாப்புடைய பாதையாகும்.

ولهذا قال: عَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ من بعدي تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، إِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلاَفًا كَثِيرًا 

இதன் காரணமாகவே (அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்) கூறினார்கள்: "என்னுடைய ஸுன்னத்தையும், எனக்குப் பின்வரும் அல்குலஃபா அர்ராஷீதீன் அல்மஹ்தீயீன் (நேர்வழிப்பெற்ற கஃலீபாக்களுடைய) ஸுன்னத்தையும் பற்றிப் பிடிப்பது உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அதனைப் பற்றிப் பிடியுங்கள், மேலும் உங்களுடைய கடவாய்ப் பற்களால் பற்றிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக (எனக்கு பின்பு) உங்களில் வாழ்பவர் அநேக கருத்து வேறுபாடுகளைக் காண்பார்." 

கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது “என்னுடைய ஸுன்னத்தை(ப் பற்றிப் பிடிப்பது) உங்கள் மீது கடமையாக இருக்கின்றது”. ரசூல் ﷺ அவர்களுடைய ஸுன்னாஹ்வையும், அவர்களுடைய நேர்வழிப்பெற்ற கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும் பற்றிப் பிடிப்பதைத் தவிர வேறு (எதுவும்) பாதுகாக்காது. இதுவே (நரகத்திலிருந்து) தப்பிப்பதற்குரிய பாதையாகும், இதுவே பாதுகாப்புடைய பாதையாகும். (மேலும் இதுவே) சுவனத்தின் பாதையாகும்.

எனவே, மத்ஹபுஸ் ஸலஃபில் நாம் அக்கறை கொள்வோமாக! அதனைக் குறைவாக மதிப்பிடுவோர் அல்லது அதனை இழிவான வர்ணனைகளைக் கொண்டு வர்ணிப்போர் நம்மை அதை விட்டும் புறக்கணிக்கச் செய்திட வேண்டாம். நம்முடைய உள்ளங்களில் அதனை குறைத்து மதிப்பிடுமாறு செய்திட வேண்டாம். 

மாறாக, இது நம்முடைய உள்ளங்களில் (அதன் அந்தஸ்தை) அதிகரிக்கவே செய்கின்றது. ஏனெனில், அது சத்தியப் பாதை என்பதற்காகவே தவிர அவர்கள் அதனுடன் போர் செய்யவில்லை, மேலும் அவர்களோ வழிகேட்டை நாடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! இவர்களை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். வெறுமனே (ஸலஃப் மன்ஹஜுடன்) தொடர்புபடுத்திக் கொள்வதுடன் போதுமாக்கிக் கொள்ளாதீர்கள்.  (உலமாக்களிடத்தில்) கல்வி பயிலாமல் சுயமாக படிப்பதைக் கொண்டு மட்டும் போதுமாக்கிக் கொள்ளாதீர்கள். கல்வியைக் கொண்டு அறியப்படுகின்ற, மேலும் சரியான பாதையின் மீது நிலைப்பெற்று இருக்கின்ற உலமாக்களிடமிருந்து கல்வியை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் எச்சரித்திருக்கின்ற இந்த வழிதவறிய பாதைகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.

 وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌  

இன்னும், மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். (அல்குர்ஆன் : 6:153) (இந்த ஆயத்தில் வந்துள்ள அந்த ஒரு பாதையே) அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவுடைய பாதையாகும், அல்லாஹ்வுடைய வழியாகும். 

ஆகவே, இதன் பக்கம் நமக்கு கடுமையான தேவை இருக்கின்றது. அதிலும் குறிப்பாக தற்போது ஃபித்னாக்கள் கடுமையாகுவது, வழிகேட்டின் (பக்கம் அழைக்கும்) அழைப்பாளர்கள் அதிகமாக இருப்பது, இன்னும் மக்களுக்கு மத்தியில் தீமையைப் பரப்புகின்ற ஊடகங்கள் அதிகமாக இருப்பதுடனால் ஆகும்.

தீமையின் ஊடகங்கள் மணித்துளியில் மக்களை, அவர்களின் வீடுகளிலும், அவர்களின் படுக்கைகளிலும் சென்றடைகின்றது. அவை வழிகேட்டை நோக்கி அழைக்கின்றன, ஆபாசப் படங்களை நோக்கி அழைக்கின்றன, ஹராமான மனோ இச்சைகளின் பால் அழைக்கின்றன, (மேலும்) வழிதவறிய சிந்தனைகளின் பால் அழைக்கின்றன.

இதற்கு ‘பரந்த மனப்பான்மை’, ‘பரந்த கலாச்சாரம்’ என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர். “இறுகிய உள்ளம் கொண்டவனாக இருக்காதே, கடுமை காட்டுபவனாக இருக்காதே” (என்றும் கூறுகின்றனர்). இது ஸலஃபுடைய வழிமுறை, ஸலஃபுடைய மத்ஹப் மற்றும் ஸலஃபுடைய கல்வியை விட்டும் ஒரு முஸ்லிமை புறக்கணிக்கச் செய்திடாது.

ஸலஃபுகளின் பாதையானது ஃகலஃபுகளின் (பின்வந்தவர்களின்) பாதையை விட மிகவும் பாதுகாப்பானதும், மிகவும் கல்விமிக்கதும், மிகவும் ஞானமிக்கதும் ஆகும்.  

ஸலஃபுகளுடைய கல்வியானது அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்விலிருந்து (பெறப்பட்ட) தூய்மையான ஒன்றாகும். மேலும், ஃகலஃபுகளின் கல்வியோ அதில் சேர்மானம் உள்ளது, அதில் கலப்படம் அதிகமாக உள்ளது, தூய்மையற்றது. ஆனால் ஸலஃபுகளின் கல்வியைப் பொருத்தமட்டில், அது தூய்மையானது.

இதன் காரணமாகவே ஸலஃபுகளின் புத்தகங்களை, எந்தளவிற்கு அவை பழைமையானதாக இருக்கின்றதோ, அந்தளவிற்கு அவற்றை மிகவும் தூய்மையானதாக, சிரமத்தில் குறைந்ததாக (எளிதானதாக) நீங்கள் கண்டு கொள்வீர்கள்.  

இதன் காரணமாகவே அல்அல்லாமாஹ் இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஃபத்லு இல்மிஸ் ஸலஃப் அலா இல்மில் ஃகலப்” என்ற தன்னுடைய நூலில் கூறுகின்றார்கள்: “ஸலஃபுகள், அவர்களுடைய பேச்சானது குறைவானதாக இருக்கும், அவர்களுடைய கல்வியோ அதிகமானதாக இருக்கும். மேலும் ஃகலஃபுகள் (பின்வந்தவர்கள்), அவர்களுடைய பேச்சானது அதிகமானதாக இருக்கும், அவர்களுடைய கல்வியோ குறைவானதாக இருக்கும்”.


எனவே, இந்த விடயத்திற்கு நாம் கவனம் கொடுக்க வேண்டும். இதுவே மன்ஹஜுஸ் ஸலஃப் ஆகும். அது எத்தகையதெனில் அதனை அறிந்து, அதனை போலியாக மற்றும் குழப்பமான (வழியில்) அல்லாமல், சரியான வழியில் பயின்ற பின்னர், அதன்மீது பொறுமையாக இருந்து, அதன் மீது பயணிப்பதின் மூலமே தவிர நமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. 

அதில் சில விடயங்கள் ஸலஃபுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது; அவையோ அசத்தியமானவையாகும், ஸலஃபுகளுடைய பாதையிலிருந்து உள்ளதன்று. இதிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். 

இவை இத்தலைப்பில் (பேசப்பட்ட) எளிமையான வார்த்தைகள் ஆகும். என்னால் இதனை அதன் எல்லா கோணங்களிலும் முழுமையாகக் கவர இயலாது. 

எனினும், அல்லாஹ் ஜல்ல வஅலா கூறுகின்றான்:

وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏

மேலும் (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனென்றால், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்குப் பயனளிக்கும். (அல்குர்ஆன் 51:55)

فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰى‏ سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ‏

ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்குமாயின் நீர் (உபதேசித்து) நினைவுபடுத்துவீராக! (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றவர் (அதனைக்கொண்டு) உபதேசம் பெறுவார். (அல்குர்ஆன் 87:9,10)

நற்செயல்கள் மற்றும் நல்ல பேச்சுகளுக்கு எமக்கும் உங்களுக்கும் ஈடேற்றம் அளித்திடவும், எம்மையும் உங்களையும் சத்தியத்தின் மீது உறுதிப்படுத்திடவும், அதன்மீது பயணிக்கவும், அதில் ஏற்படக்கூடிய நோவினைகள் மீது பொறுமையாக இருந்திடவும் அல்லாஹ் அஸ்ஸ வஜல்லிடம் (பிரார்த்தித்து) கேட்கின்றோம்.

அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் நமது நபி முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.


- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.

Previous Post Next Post