சமூகத்தில் பரவியுள்ள றமழான் தொடர்பான ஆதாரமற்ற ஹதீஸ்கள்

-ARM. ரிஸ்வான் (ஷர்கி)

இஸ்லாம் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட மார்க்கம். அதன் தனித்துவமும் அழகும் அதிலேதான் தங்கியிருக்கிறது. ஆதாரமற்ற, பலவீனமான, பொய்யான தகவல்கள், செய்திகள் இஸ்லாத்தின் கடமையொன்றை நிறுவவோ, சட்டமொன்றை இயற்றவோ தகுதியற்றவை.

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பலர் பல்வேறு நோக்கங்களுக்காக நபிகளார் சொல்லாத, செய்யாத அல்லது சொன்னதாக, செய்ததாக  உறுதிப்படுத்தப்படாத பல ஆயிரம் செய்திகளை இஸ்லாத்தின் தூதரின் பெயரிலேயே புகுத்தினார்கள். ஆனால் நபிகளாரின் பொன்மொழிகளை பாதுகாக்கவென்றே தமது வாழ்நாளை அர்ப்பணித்த பல மேதைகள், அறிஞர்கள் ஆதாரமற்ற செய்திகளை களைந்து ஸுன்னாவை பாதுகாத்தார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக. 

றமழான் தொடர்பாக சமூகத்தில் பரவியுள்ள பல நூறு ஆதாரமற்ற, அமல்படுத்த தகுதியற்ற செய்திகளுள் ஒரு சில : 

1) றமழான் முதல் பத்து றஹ்மத், இரண்டாம் பத்து பாவ மன்னிப்பு, மூன்றாம் பத்து நரக  விடுதலையாகும்.

- இது 'முன்கர்' தரத்திலான மிக பலவீனமான செய்தியாகும்.

பார்க்க: 
1.கிதாபுழ் ழுஅபாஃ : இமாம் உகைலி (162/2).
2.இலலுல் ஹதீஸ் : இமாம் இப்னு அபீஹாதிம் (249/1).
3.அல் காமில் : இமாம் இப்னு அதீ (165/1).
4.ஸில்ஸிலதுல் அஹாதீஸ் : இமாம் அல்பானி (262/2).

2) நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.

- இது பலவீனமான செய்தியாகும்.

பார்க்க : 
1.தஹ்ரீஜு இஹ்யா உலூமித்தீன் : ஹாபிழ் இராகி (75/3).
2.அல்காமில் : இமாம் இப்னு அதீ (357/2).
3.அல்பவாஇத் அல்மஜ்மூஆ : இமாம் ஷவ்கானி (259/1).
4.அல்மகாஸிதுல் ஹஸனா : ஹாபிழ் ஸஹாவீ (549/1).

3) தகுந்த காரணமோ, நோயோ இன்றி யார் ஒரு நோன்பை நோற்காமல் விடுகிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அதை கழா செய்தவராகமாட்டார்.

-பலவீனமான செய்தி.

பார்க்க: 
1.பத்ஹுல் பாரீ : ஹாபிழ் இப்னு ஹஜர் (161/4).
2.அல்இலல் : இமாம் தாரகுத்னீ 
3.மிஷ்காதுல் மஸாபீஹ் (தஹ்கீக்): இமாம் அல்பானி (626/1).

4) ஒவ்வொரு நாளும் நோன்பு துறக்கும் போது அல்லாஹ் பலரை நரகிலிருந்து விடுதலை செய்கிறான்.

- பலவீனமான செய்தி.

பார்க்க : 
1.தன்ஸீஹுஷ் ஷரீஆ : இமாம் கினானி (155/2).
2.அல்பவாஇத் அல்மஜ்மூஆ : இமாம் ஷவ்கானி (257/1).
3.ஷுஃபுல் ஈமான் : இமாம் பைஹகி (304/3).
4.அல்காமில் : இமாம் இப்னு அதீ (455/2).

5) றமழானிலுள்ள நன்மைகளை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுதும் றமழானாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.

- மிக பலவீனமான செய்தி.

பார்க்க : 
1.அல் மவ்ழூஆத் : இமாம் இப்னுல் ஜவ்ஸி (188/2).
2.மஜ்மஉஸ் ஸவாஇத் : இமாம் ஹைதமீ (141/3).
3.தன்ஸீஹுஷ் ஷரீஆ : இமாம் கினானி (153/2).

6) யாஅல்லாஹ் றஜபிலும் ஷஃபானிலும் எங்களுக்கு பறகத் செய்வாயாக. றமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக என்று நபியவர்கள் பிரார்த்திப்பார்கள்.

- பலவீனமான ஹதீஸ்.

பார்க்க :
1.அல்அத்கார் : இமாம் நவவி 
2.மீஸானுல் இஃதிதால் : ஹாபிழ் தஹபி (96/3).
3.மஜ்மஉஸ் ஸவாஇத் : இமாம் ஹைதமி (165/2).

7) நபியவர்கள் நோன்பு துறக்கும் போது 'அல்லாஹும்ம லக ஸும்து வஅலா றிஸ்கிக அப்தர்து' என்ற துஆவை ஓதுவார்கள்.

- பலவீனமான ஹதீஸ்.

பார்க்க : 
1.அல்பத்ருல் முனீர் : இமாம் இப்னுல் முலக்கின் (327/1).
2. அத் தல்கீஸுல் ஹபீர் : ஹாபிழ் இப்னு ஹஜர் (202/2).
3. அல் அத்கார் : இமாம் நவவி (பக்:172).
4. மஜ்மஉஸ் ஸவாஇத் : இமாம் ஹைதமி (156/3).

8. றமழான் வந்துவிட்டால் நபியவர்கள் பின்வருமாறு கூறுவார்கள் : ' மக்களே! கண்ணியமிக்க மாதம் உங்களை வந்தடைந்துள்ளது... ஒருவர் இம்மாதத்தில் ஸுன்னத்தான நற்காரியம் ஒன்றை செய்தால் ஒரு பர்ழை செய்தவர் போலாவார். ஒரு பர்ழை செய்தால் எழுபது பர்ழுகளை செய்தவர் போலாவார்'

- மிக பலவீனமான செய்தி.

பார்க்க :  
1.  அத்தல்ஹீஸுல் ஹபீர் : ஹாபிழ் இப்னு ஹஜர்
2. அஸ்ஸில்ஸிலா : இமாம் அல்பானி (1/871).

9. 'நோன்பாளியின் தூக்கமும் வணக்கமாகும்' 

- மிக பலவீனமான செய்தி என இமாம்களான இராகி, பைஹகி, ஸுயூத்தி ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

பார்க்க : 
'இத்ஹாபுஸ் ஸாதஹ்' , 4/322.

10. றமழான் மாதம் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கிகொண்டிருக்கும். ஸகாதுல் பித்ரை நிறைவேற்றும் போதே அல்லாஹ் அதை வானுலகுக்கு உயர்த்துவான்' 

- மிக பலவீனமான செய்தி.

பார்க்க : 
1. இமாம் முனாவி : ' அத்தய்ஸீர்', 1/79
2. இமாம் இப்னுல் ஜவ்ஸீ : 'அல்வாஹியாத்'

11. 'இரு பெருநாள் இரவுகளிலும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து யார் நின்று வணங்குகிறாரோ அவரது உள்ளம் ஏனைய உள்ளங்களெல்லாம் மரணித்துபோகும் நாளில் மரணிக்காது'

- இட்டுக்கட்டப்பட்ட அல்லது மிக பலவீனமான செய்தி.

பார்க்க :
1. இமாம் நவவி : 'அல்அத்கார்'
2. இமாம் இப்னு ஹஜர் : 'அல்புதூஹாதுர் ரப்பானிய்யா' , 4/235
3. இமாம் அல்பானி : அஸ்ஸில்ஸிலா

ஆதாரமற்ற, பொய்யான, பலவீனமான ஹதீஸ்களை பேசுவதை, எழுதுவதை, பகிர்வதை முற்றாக தவிர்ப்போம். ஏனெனில் நபிகளார் கூறினார்கள் : 'நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக யார் கூறுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்' ( ஸஹீஹுல் புஹாரி).

நன்றி :
1. முல்தகா அஹ்லில் ஹதீஸ்
2. ஸைதுல் பவாஇத்
3. ஸஹாப் அஸ்ஸலபிய்யா
4. இஸ்லாம் வெப்
5. அல்அலூகா
أحدث أقدم